Friday, December 1, 2017

கோவை மெஸ் – ஹோட்டல் ஸ்ரீ ராம விலாஸ், நாராயணபாளையம், திருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம், KOVAI MESS - SHRI RAMAVILAS, NARAYANAPALAYAM, TRICHENGODE, NAMAKKAL

கோவை மெஸ் – ஹோட்டல் ஸ்ரீ ராம விலாஸ், நாராயணபாளையம்,, திருச்செங்கோடு
                  எப்பவோ ஒருமுறை நம்ம நண்பர் திருச்செங்கோட்டுல ஒரு கடையில் இட்லியும் குடல்கறியும் கிடைக்கும் என சொல்லியிருந்தார்.சமீபத்தில் ஒரு காலை நேரம் 7.30 மணி அளவில் சங்ககிரியில் இருந்து திருச்செங்கோடு வந்து கொண்டிருந்த போது இந்த கடை ஞாபகத்திற்கு வரவே அடுத்த நிமிடம் விசாரித்து அங்கே ஆஜரானேன்.


                   காலையிலேயே தயாராக இருந்தது ஹோட்டல்.சின்ன ஹோட்டல் தான். அரதப்பழசான மூன்று டேபிள்கள் தான் போடப்பட்டிருக்கின்றன.அக்மார்க் கிராமத்து ஓட்டு வீட்டு ஹோட்டல்.கைகழுவ, இலை போட வெளியே தொட்டிகள் வைக்கப்பட்டு இருக்கின்றன.அந்த காலை வேளையிலும் உள்ளே எனக்கு முன்பே ஒரு வாடிக்கையாளர் அமர்ந்து ருசித்துக்கொண்டிருந்தார். நானும் அதில் இணைந்து கொண்டேன்.
                     டேபிளில் அமர்ந்ததும் இலை வைக்கப்பட்டு சின்ன சொம்பில் தண்ணீர் வைக்கப்பட்டது.தண்ணீரை இலையில் தெளித்தவுடன், இட்லி வந்து சேர்ந்தது.குஷ்பு மாதிரி கும்மென்று இருக்கும் என்று நினைத்தால் இலியானா மாதிரி வத்தலாய் இருந்தது.கொஞ்சம் மிருதுத் தன்மை குறைவாக இருப்பது தெரிந்தது.இட்லி வைத்தவுடன், கூடவே ஒரு தட்டில் இருந்து குடல் குழம்பினை ஊற்றினர்.பார்க்க கரு கருவென இருக்க, கூட ரத்தம் சேர்த்து சமைக்கப்பட்டிருக்கிறது.இலியானாவின் இடுப்பு பிரதேசத்தினை ஒரு கிள்ளு கிள்ளி, குடல் குழம்பில் தொட்டு சுவைத்து பார்க்கவும், இனம் புரியாத சுவை ஒன்று நாக்கில் நாட்டியமாடியது.குடல் குழம்பின் சுவை கொஞ்சம் கொஞ்சமாய் நம்மை ஈர்க்க ஆரம்பித்தது.நாளைந்து விள்ளல்கள் தான் வருகின்றது ஒரு இட்லியில்.பிய்த்து, குழம்பில் தோய்த்து கொஞ்சம் குடல்கறியோடு சேர்த்து சாப்பிட அந்த குழம்பிற்கு நம்மை அடிமையாக்குகிறது.இட்லிக்கு தனியாக சால்னா தருகிறார்கள் அது தண்ணீர் மாதிரி இருக்கிறது,ஆனாலும் சுவையாக இருக்கிறது.
                சிக்கன் குழம்பும் கொஞ்சம் டேஸ்டுக்கு சாப்பிட்டு பார்த்தேன்.அதுவும் நல்ல சுவையுடன் இருக்கிறது.
                 எட்டு இட்லிகள் வரை சாப்பிட்டு விட்டு வெளியே வர ஒவ்வொருவராய் வர ஆரம்பிக்கின்றனர்.



            குழம்பின் ரகசியமும், இட்லியின் ரகசியமும் நம்மை ஆச்சர்யப் படுத்துகிறது.குடல் கறியோடு, தலைக்கறி, ரத்தம், சுத்துக்கொழுப்பு சேர்த்து சமைக்கின்றனர்.எண்ணைய் இல்லாது, மிளகாய் காரம், மசாலாப்பொடிகள் இல்லாது இந்த குடல் கறி குழம்பு தயாராகிறது.அதான் அனைத்து சுவைகளும் ஒன்று சேர்ந்து செமயான சுவையைத் தருகிறது.

                அதே போல் இட்லியும். உளுந்து சேர்க்காமல், வெறும் அரிசி, வெந்தயம் மட்டும் சேர்த்து அரைத்து இட்லி தயாரிக்கின்றனர்.அதான் இட்லி இலியானா போல் தட்டையாக இருக்கிறது.சாப்பிட்டவுடன் மீண்டும் பசியை தூண்டும் வகையில் இந்த இட்லி இருக்கிறது.
                        கடையை நிர்வகிப்பவர்கள்  கணவன் மனைவி இருவர் மட்டுமே.தந்தை காலத்திற்கு பின் இவர்கள் நடத்துகின்றனர். கிட்டத்தட்ட 70 வருடங்களுக்கும் மேலாக இந்த கடை செயல்பாட்டில் இருக்கிறதாம்..அவர்களுக்கென்று வாடிக்கையாளர்கள் இருக்கிறார்களாம். லாரி டிரைவர்கள் முதல், ரிக் தயாரிப்பாளர்கள், வேலை செய்பவர்கள் என பலரும் இருக்கின்றனராம்.கோவை, சேலம், ஈரோடு, நாமக்கல் வாடிக்கையாளர்கள் பலரும் இருக்கிறார்களாம்.
காலை 7.30 மணி முதல் மதியம் 3 மணி வரை.தான்.
               மதியம் சாப்பாடுக்கு கோழி சாறு செம டேஸ்ட்டாக இருக்குமாம்.வரச்சொல்லி இருக்கிறார் கடை ஓனர்.நேரம் வாய்க்கும் போது மதியம் முயற்சித்து பார்க்க வேண்டும்..
                விலை எப்பவும் போல குறைவுதான்.இட்லி 5 ரூபாய், குடல் 80 ரூபாய்.எப்பவாது அந்தப்பக்கம் போனீங்கன்னா முயற்சி செய்து பாருங்கள்..திருச்செங்கோட்டில் இருந்து சங்ககிரி செல்லும் ரோட்டில் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் நாராயணபாளையத்தில் இடது புறம் இருக்கிறது.
          திருச்செங்கோட்டில் நிறைய ஹோட்டல்கள் காலையிலேயே இட்லி குடல் குழம்பினை தருகின்றனர்.இங்கு மட்டும் குடலுக்கு அவ்வளவு டிமாண்ட்.கறிக்கடை காரர்களிடம் முன்பே சொல்லி வைத்து விட்டால் தான் குடல் கிடைக்குமாம்.கறிக்கடைக்கு வருபவர்கள்  முதலில் கேட்கும் கேள்வியே குடல் இருக்கிறதா என்பது தானாம்....விலையும் அது போல கிலோ ரூ.450 வரை போகிறதாம்.


நேசங்களுடன்

ஜீவானந்தம் 

No comments:

Post a Comment

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....