Wednesday, January 9, 2019

கோவை மெஸ் - குழந்தை கடை, C.R பிரியாணி, டவுன்ஹால்,கோவை C.R BIRIYANI, TOWNHALL, KOVAI


C.R பிரியாணி
குழந்தை கடை, டவுன்ஹால்

நிறைய பேரு இந்த கடையப்பத்தி சொல்லி இருந்ததால் நேற்றைய மதியம் இங்கு போய் இருந்தோம்.கடைக்கு முன்னால் சிலர் நின்று கொண்டிருந்தனர்.கூட்டமா இருக்கும் போல என்று நினைத்தபடியே கடைக்குள்ளே எட்டிப் பார்த்தோம்.ரொம்ப சின்ன கடைதான்.நான்கு டேபிள்கள்.மொத்தம் பதினாறு பேர் அமர்ந்து சாப்பிடலாம்.முதல் பந்தி அப்பொழுது தான் ஆரம்பித்திருந்தது.அதனால் அடுத்த பதினாறில் நாங்களும் இருவராய் காத்திருக்க வேண்டியதாகி விட்டது.டேபிள்கள் ஒவ்வொன்றாய் காலி ஆக ஆக அடுத்த பதினாறும் ஆக்ரமித்தது அடுத்த பந்தியை.

                  வாழை இலை வைத்து பேப்பர் கப்பில் தண்ணீர் வைக்க, என்ன வேண்டும் என கேட்க பிரியாணி என சொல்ல, காலி ஆகிவிட்டது, பிளைன் தான் என சொல்ல, அதனுடன் வறுவல், குடல் குழம்பு கலக்கி என ஆர்டரிட்டோம்.ஒவ்வொன்றாய் வந்து சேர்ந்தது. பிளைன் பிரியாணி.சீரகசம்பாவின் குருணை அரிசிதான்.ரொம்ப சிறிதாக இருக்கிறது.சாப்பிட கொஞ்சம் சுவையாக இருக்கிறது.மற்றபடி கொஞ்சம் காரசாரமாய் இருக்கிறது.இதற்கு கொடுக்கப்படும் குழம்பு நல்ல காரம்.இரண்டும் காம்பினேசனில் மேட்ச் ஆகிறது.அளவாய் தான் மட்டன் மற்றும் சிக்கன் பிரியாணி இருக்கும் போல.
பிளைன் தான் அதிகமாக ஓடுகிறது.அடுத்த முறை மட்டன் பிரியாணியை சுவைத்துப் பார்க்க வேண்டும்.



                      மட்டன் வறுவல்..திக்கான வறுவல் எல்லாம் கிடையாது.வறுவல் நல்ல பதத்தில் இல்லை.எண்ணிப் பார்த்ததில் எட்டுதுண்டுகள் தான்.அளவும் பெரிதும் சிறிதுமாய் இல்லை.எல்லாம் ஒரே சைசில் இருக்கின்றன.வெங்காயம்தான் அதிகம் இருக்கின்றன.கறி கொஞ்சம் மென்மையாய் இருக்க, காரசாரமாக இருக்கிறது.
குடல் வறுவல்.இதுவும் அதே தான்.குழம்புடனே வந்து சேர்கிறது.வறுவலை இலையில் வைத்தால் குழம்பு ஆறாக ஓடக் கூடாது.திக்கான மசாலா ஆமையை விட மெதுவாய் நகரவேண்டும்.வெறும் மசாலா கலந்த எண்ணைய் தான் லைட்டாய் பிரிய வேண்டும்.அது தான் வறுவலுக்கு உண்டான பதம்.அப்படி இல்லை. குடலுடன் வெங்காயமும் போட்டி போடுகிறது.சுவையாக இருக்கிறது.

                                 குழம்பு கலக்கி சுமார்தான்.செக்க செவேல் என்று வருகிறது.குழம்பின் மணமும் இல்லை முட்டையின் மணமும் இல்லை.சரியான காம்பினேசனில் இரண்டும் இல்லை.மொத்தமாய் நாலைந்து முட்டையை உடைத்து ஊற்றி, குழம்பையும் சேர்த்து,ஒரே தடவையாய் கல்லில் ஊற்றி அங்கு அளவாய் பிரித்து இலைக்கு இலை தருகின்றனர்.அதில் தான் சுவை மிஸ் ஆகிறது. 

                             ஆட்டின் பெரும்பாலான பார்ட்ஸ்கள் இருக்கின்றன.மட்டன் சாப்ஸ், குடல் ஈரல், ரத்தப்பொறியல் என. மதுரை தவிர்த்து தேனி மாவட்டத்தில் கிடைக்கும் சுவை போலத் தான் இருக்கின்றன.ரொம்ப எதிர்ப்பார்ப்போடெல்லாம் செல்ல தேவையில்லை.முனியாண்டி விலாஸில் கிடைக்கும் ருசி தான்.காரசாரமாக கிடைக்கும்.பிரியாணி டேஸ்ட் நார்மல் தான்.சிட்டிக்குள் இருக்கும் ஒரு முனியாண்டி விலாஸ் தான் இது.விலை கோவைக்கு ஏற்றார் போல் இருக்கிறது.
மட்டன் பிரியாணி -120, குடல் -90 வறுவல் -110 ( இது வெறும் எட்டு துண்டுகள் தான்.) பிளைன் - 60 
                        
மதியம் ஒரு மணி சுமாருக்கு சென்றால் ரஷ் ஆக இருக்கும்.ஆற அமர சாப்பிடனும் என்றால் இரண்டரை மணிக்கு மேல் போனால் போதும்.

அமைவிடம் :
டவுன்ஹால் டூ வைசியாள் வீதி செல்லும் போது இடதுபுறம் அங்காளம்மன் கோவில் வீதி. அங்கே ஒரு ஜங்சன்.அதில் வலதுபுறம் இருக்கிறது இந்த கடை.மேலும் விவரங்களுக்கு 
கூகுள் மேப்பிடவும்.

நேசங்களுடன்
ஜீவானந்தம்

No comments:

Post a Comment

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....