Tuesday, May 7, 2019

அனுபவம் - இருசக்கர வாகன திருட்டு - புதுப்பேட்டை - கோவை

இருசக்கர வாகன திருட்டு - புதுப்பேட்டை - கோவை
  
                ஒரு மாதத்திற்கு முன் நம்மிடம் வேலை செய்யும் ஒருவரின் வண்டியை கவுண்டம்பாளையத்தில் இருக்கும் போது திருடி விட்டனர்.நமக்கு தெரிந்த சோர்ஸ் மூலம் விசாரித்த போது எங்காவது பார்க்கிங்கில் நிறுத்தி வைத்திருப்பர்.
                          ஓரிரு நாட்கள் கழிந்த பின் அவ்வண்டியை எடுப்பர் எனவும் குறிப்பிட்ட பார்க்கிங் பகுதிகளில் சென்று பாருங்கள் என சொல்ல, அந்த பார்க்கிங் ஏரியாக்களில் சோதனை இட வண்டி கிடைக்கவில்லை.ஏற்கனவே நண்பர் ஒருவரின் வண்டி திருடு போய் அது வடகோவை பார்க்கிங்கில் அனாமத்தாய் நிற்க, அதை மீட்டுக் கொண்டு வந்தனர்.
                      அதைப் போலவே வடகோவை ரயில்வே பார்க்கிங்கில் போய் தேடிவிட்டு வந்தனர் வண்டி அங்கேயும் இல்லை.இதற்கிடையில் கவுண்டம்பாளையம் ஏரியா துடியலூர் சர்க்கிளில் வருவதால் அங்குள்ள காவல் நிலையத்திலும் புகார் கொடுத்து விட்டு வந்தனர்.ஒரு வாரத்திற்குள் கோவையில் இருசக்கர வாகன திருடர்கள் இருவரை பிடித்து அவர்களிடமிருந்து 20 க்கும் மேற்பட்ட வண்டிகளை மேட்டுப்பாளையத்தில் வைத்து மீட்டனர்.இது குறித்து மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் இருந்து தகவல் வர அங்கு இருந்த வண்டிகளில் நம் தொழிலாளியின் வண்டியும் இல்லை.வண்டி கிடைக்காது இனி என்ற மனநிலையில் இருந்தார்.
                             தினமும் வேலைக்கு சென்று வர வண்டி இல்லாததால் மிக சல்லிசான விலையில் ஒரு செகண்ட் ஹேண்ட் வண்டி வாங்கி அதில் போய்க்கொண்டிருந்தார்.ஒரு மாதம் கழிந்தது.
               நேற்று மாலை அவருக்கு ஒரு போன் அழைப்பு புது எண்ணிடமிருந்து.ரயில்வே ஜங்சன் பார்க்கிங்கில் இருந்து அந்த உரிமையாளர் அழைத்திருந்தார், வண்டி ஒரு மாத காலமாக எடுக்காமல் இருக்கிறீர்கள் என்று.இவருக்கோ சந்தோசத்திலே ஒரு சந்தேகம்.எப்படி என் நம்பர் என்று..வண்டி பதிவு எண்ணை போட்டு உரிமையாளர் மொபைல் எண்ணை எடுத்து இவரை அழைத்திருக்கிறார்.
                            இவரும் உள்ளதை சொல்லி, புகார் கடிதம், ஆர்சி புக், மற்றொரு சாவி இவற்றை எடுத்துக் கொண்டு பார்க்கிங் போய் இருக்கிறார்.வண்டியை கண்டவுடன் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை.முதல் போன் எனக்கு பண்ணிவிட்டு, பின் துடியலூர் காவல் அதிகாரியை தொடர்பு கொண்டு, பார்க்கிங் உரிமையாளரிடம் பேசி வண்டியை எடுத்து கொண்டு வந்து விட்டார்.வண்டி கிடைத்த சந்தோசத்தில் பார்ட்டி வைப்பதாக சொல்லி விட்டார்.அநேகமாக இந்த வாரம் கனத்த பார்ட்டியை எதிர்பார்க்கலாம்.
                         வண்டி தொலைந்து விட்டாலோ, இல்லை திருடு போனாலோ உடனடியாக காவல் துறையை தொடர்பு கொள்ளுங்கள்.பின் கோவையில் உள்ள அத்துணை பார்க்கிங்கிலும் வண்டியை தேடுங்கள்.பொதுமக்கள் அதிகம் புழங்கும் இடத்தில் தான் வண்டியை நிறுத்தி வைப்பர் திருடர்கள்.இரண்டு மூன்று நாட்கள் கழித்து ஆற அமர வண்டியை கடத்துவார்கள்.எப்படியும் வண்டி மேட்டுப்பாளையம் தான் போகும்.அந்த ஊர்தான் கோவையின் புதுப்பேட்டை.

நேசங்களுடன்
ஜீவானந்தம்

1 comment:

  1. நல்ல தகவல்கள் நிறைந்த பதிவு

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....