Friday, January 24, 2020

கோவை மெஸ் - ஸ்ரீ சூர்யா ஹோட்டல், சேரன் நகர், கோவை

திருப்பூர் ஸ்ரீ சூர்யா ஹோட்டல், சேரன் நகர், கோவை
                     மதியம் சாப்பிட்ட பீஃப் இறைச்சியே மாலை வரை செரிக்காமலே இருந்தது.அதற்குள் இன்னொரு அழைப்பு.பேமிலி கெட் டுகதர்..சரி என்று எட்டு மணிக்கு வருவதாக சொல்லி விட்டு செரிப்பதற்குண்டான வழிகளை ஆராய ஆரம்பித்தேன்.நல்ல ஒரு இஞ்சி டீ நம்ம சேட்டா கடையில குடித்தால் கொஞ்சம் இளைப்பாறலாமே என்று அங்கு ஒரு டீயை போட்டு விட்டு அப்படியே ஆபிஸ் வந்ததில் தேவலாம் போலிருந்தது.பின் வண்டியை கிளப்பி வீடு வந்து சேர்ந்ததில் இரவு உணவுக்கு தயாராக இருந்தது வயிறு.வீட்டில் கொஞ்சம் அப்படி இப்படி அலைந்ததில் வயிறும் பசி எடுக்க ஆரம்பித்தது.எட்டு மணிக்கு ஆஜரானோம் சேரன்நகரில் உள்ள SRI SURYA ஹோட்டலில்.


                             நண்பர் குழாமும் வந்து சேர ஒவ்வொன்றாய் ஆர்டரிட்டோம்.சிக்கன் 888, சிக்கன் டைனமைட், இறால் சில்லி, சிக்கன் டிக்கா, கிரில் இப்படி பொரித்த உணவுகளை முதலில் வர வைத்தோம்.ஊர்க்கதை, உலக கதை, கூடவே நம் தலைவரின் தர்பார் கதையையும் ( கதையே இல்லையே ) பேசி முடிக்கையில் வந்து சேர்ந்தது உணவு அயிட்டங்கள் சுடச் சுட.ஒவ்வொன்றும் நல்ல தனித்துவமான சுவை.சிக்கன் சுவையுடன் நன்றாகவே இருக்கிறது.








                    குட்டீஸ்கள் விரும்பி சாப்பிட்டனர்.கிரில் சிக்கன் சுவை அதிரிபுதிரி.மிக மென்மையாய் நன்கு காரசாரமாய் இருக்கிறது.அடுத்து மெயின் கோர்ஸாய் மட்டன் பிரியாணி, நூடுல்ஸ், பட்டர் நான் என ஆர்டரிட்டோம்.
                       மட்டன் பிரியாணி சூடு இல்லை ஆனால் சுவையாய் இருந்தது.எலும்புகள் நிறைந்த துண்டுகளோடு பிரியாணியின் கறி நன்கு இதமாய் பதமாய் சுவையோடு இருந்தது.சீரக சம்பா அரிசி தான்.மணம், சுவை திடம் என பிரியாணி மென்மையாய் நன்றாக இருந்தது.ஆனாலும் வேணு பிரியாணியின் சுவையை அடித்துக் கொள்ள முடியாது.
                 டேபிளில் சிறு வாளியோடு எலும்பு குழம்பு வைத்திருக்க, அதில் மிதக்க மிதக்க கொழுப்பு இருக்க, கொஞ்சம் எடுத்து சுவைத்துப் பார்த்தால் செம டேஸ்ட்..வாளியில் துளாவி, இருக்கும் கொழுப்பு, கறிகளை எல்லாம் காலி செய்து விட்டு பார்த்தால் நாவில் இன்னமும் அதன் ருசி அகலாமல் இருக்க மனம் அலை பாய்ந்தது.வெயிட்டரை கூப்பிட்டு இந்த வாளியில் கொஞ்சம் கொழுப்பை போட்டு கொண்டு வாருங்கள் என சொல்ல அவரும் வாளியை எடுத்துக்கொண்டு போய் குழம்பை நிரம்பி வந்தார்.நாங்கள் கொழுப்பை தேடி பார்க்க குறைவாகவே இருந்தது.பின் என்ன நினைத்தாரோ தெரியவில்லை இன்னொரு வாளியை கொண்டு வந்தார்.பார்த்தால் அதில் கால்வாசிக்கும் அரைவாசிக்கும் நடுவில் ஒரு அளவில் கொழுப்பை அள்ளி போட்டு கொண்டு வந்திருந்தார்.அப்புறம் என்ன.அடுத்த ஐந்து நிமிடத்தில் அத்தனையும் காலி.இனி மீண்டும் கேட்டால் அவ்வளவுதான் நினைத்துக் கொண்டு மற்ற அயிட்டங்களை ஆற அமர சாப்பிட்டு வந்தோம்.
                          தாராளமாக சாப்பிட்டு பார்க்கலாம்.விலை.கொஞ்சம் அதிகமே.மெனுக்கள் அதிகமாகவே இருக்கின்றன.அப்புறம் அம்மணிகள் அவ்வப்போது அழகழகாய் வருகிறார்கள்.சேரன் நகர் ஏரியாவும் களை கட்டுகிறது இப்போதெல்லாம்.


நேசங்களுடன்
ஜீவானந்தம்



                                

2 comments:

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....