Saturday, January 25, 2020

கோவில் குளம் : ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் ஆலயம், திருப்பட்டூர், திருச்சி


திருப்பட்டூர் –
         பொங்கல் முடிந்தவுடன் கோவிலுக்கு செல்ல முடிவெடுத்து போனது திருச்சி மாவட்டத்தில் உள்ள திருப்பட்டூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீபிரம்ம சம்பத்கெளரி சமேத ஸ்ரீ பிரம்மபுரீஸ்வர் ஆலயம்.

         கோவிலின் ஆலயம் பழமை வாய்ந்ததாக இருக்கிறது.தூண்களில் சிற்பங்கள் மிக அருமையாய் செதுக்கப்பட்டிருக்கின்றன.


கோவில் தல வரலாறு : 
             கர்வம் கொண்ட பிரம்மன், சிவனுக்கு நிகராய் நானே என கர்வம் கொண்டதால், சிவபெருமான் புத்தி புகட்ட வேண்டி பிரம்மனது ஐந்து தலையில் ஒன்றை கொய்து, பின் அவரது படைப்புத் தொழிலையும் பிடிங்கி கொண்டார்.இதனால் பிரம்மனது அகங்காரம் ஒழிந்து, பிராயச்சித்தம் வேண்டி சிவனை நோக்கி கடுந்தவம் புரிந்தார்.இதனால் மீண்டும் இழந்ததை பெற்றார் பிரம்மன்.
            பிரம்மாவிற்கு சாபவிமோசனம் தரும் போது சிவன் தன் பக்தர்களுக்காக, தன் அடியவர்களுக்காக பிரம்மனிடம், இங்கே வருபவர்களுக்கு விதி கூட்டி அருள்வாயாக என சொல்லி அருளினார்.
                  பக்தி சிரத்தையாக திருப்பட்டூர் வந்து எவரொருவர் சிவ தரிசனம் செய்து, ப்ரம்மா சன்னதியில் மனமுருக வேண்டுதல் செய்கிறார்களோ அவர்களின் தலையெழுத்தினை திருத்தம் செய்து அருள்கிறார் ஸ்ரீபிரம்மா.
ஸ்ரீபிரம்மன் உருவாக்கிய பிரம்மதீர்த்த கிணறு மற்றும் அவர் ப்ரதிஷ்டை செய்து வழிபட்ட 12 லிங்கங்கள் இங்கே தனித்தனி சன்னதிகளாக இருக்கின்றன.ஸ்தல விருட்சமாக மகிழமரம் இருக்கிறது.


             திருப்பட்டூர் வந்தால் நல்லதொரு திருப்பம் நிகழும்.தேக நலம் கூடும்.ஆயுள் பலம் அதிகரிக்கும்.நடப்பவற்றுக்கெல்லாம் தானும் ஒரு சாட்சியாய் இருந்து அருளையும் பொருளையும் அள்ளித்தந்து வாழவைக்கிறார் ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர்.
                   பிரம்மன் பிரதிஷ்டை செய்த 12 லிங்கங்களுக்கு அபிஷேகம் செய்ய உருவாக்கிய கிணறுதான் பிரம்மதீர்த்த கிணறு.நான்கு பக்கமும் படித்துறைகள் உள்ள கிணறு இது.பிரகாரத்திலும், மேற்புறத்திலும் விழும் மழை நீரானது குளத்தில் சேருமாறு அமைக்கப்பட்டிருப்பது சிறப்பு.அந்தக்காலத்திலேயே மழை நீர் சேகரிப்பு முறையை செய்திருக்கின்றனர்.

                 12 சன்னதிகளில் சிவபெருமான் லிங்க வடிவில் காட்சியளிக்கிறார்.இந்த ஒவ்வொரு சன்னதியும் ஒரு புண்ணிய ஸ்தலமாகும்.பாதாள ஈஸ்வரர், சுத்தரத்தினேஸ்வரர், தாயுமானவர், கயிலாசநாதர், திருவானைக்கா ஜம்புகேஸ்வரர், லால்குடி சப்தரிஷீஸ்வரர், திருவண்ணாமலை அண்ணாமலையார், பழமலைநாதர், பிரம்மபுரீஸ்வரர், காளத்தி நாதர், ஏகாம்பரேஸ்வரர், மண்டுநாதர் என 12 சிவலிங்கங்கள் சன்னதி இருக்கின்றன.
             ஒவ்வொன்றையும் நிதானமாக தரிசியுங்கள்.கயிலாசநாதர் கோவில் மட்டுமே பல்லவர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது என வரலாறு சொல்லுகிறது.எட்டாம் நூற்றாண்டை சேர்ந்தது என தெரிகிறது.கயிலாச நாதர் சன்னதிக்கு எதிரில் பிரம்மாண்ட நந்தி சிலை இருக்கிறது.
               இந்த ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் ஆலயம் 14ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளதாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
                  இந்த ஆலயத்தில் யோகம் மற்றும் தியானங்களை அருளிய பதஞ்சலி முனிவருக்கு என்று திருச்சமாதி இருக்கிறது.அங்கே அமர்ந்து தியானம் செய்தால் உங்கள் பிரச்சினைகள் அகலும்.பிரம்மபுரீஸ்வரையும், பிரம்மனையும் தரிசித்தபின் பதஞ்சலி முனிவரின் அதிஷ்டானத்தை தரிசிக்க வேண்டும்.
              அம்பாள் ஆன ஸ்ரீபிரம்மசம்பத்கெளரி க்கென்றே தனி சன்னதி இருக்கிறது.சிவனை வழிபட்டபின் அம்பாளை வணங்கி முறையிட்டால் வேண்டுவன நடக்கும்.
                  ப்ரணவத்தின் பொருள் கேட்டு பிரம்மாவுக்கும் தந்தை சிவனுக்கும், குருவாகி பொருள் சொன்ன முருகப்பெருமான் அற்புதமாக காட்சி அளிக்கிறார்.அவரையும் வணங்கி ஞானமும் செல்வமும் பெறலாம்.
சிவபெருமானையும், அம்பாளையும் பக்கவாட்டில் நின்று தரிசியுங்கள்.
              ஆனால் ஸ்ரீபிரம்மாவை நேருக்கு நேராக நின்று தரிசியுங்கள்.உங்கள் பாவம் பறந்தோடி விடும்.துக்கம் தூரப்போகும்.
கவலைகள் கரைந்துபோகும்.
இந்த கோவிலில் பிரதோஷ நாளில் இங்கு வந்து பிரதோஷை பூஜையை தரிசியுங்கள்.பங்குனி தேர் விசேசம் ஆண்டு தோறும் பங்குனி மாதத்தில் நடைபெறும்.திருவீதியுலாக்கள் இங்கே பிரசித்தி பெற்றவை.ஜாதக தோஷத்திற்கு மிகச் சிறந்த பரிகார தலம்.

வாழ்வில் ஒருமுறையாவது சென்று தரிசித்துவிட்டு வாருங்கள்.

நடை திறந்திருக்கும் நேரம் : காலை 7 மணி முதல் 12 மணி வரை
                           மாலை 4 மணி முதல் 8 மணி வரை
                     திருச்சியில் இருந்து சென்னை செல்லும் நெடுஞ்சாலையில் சிறுகனூர் என்கிற ஊரில் இருந்து இடப்பக்கம் சாலை பிரிகிறது.அங்கிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் திருப்பட்டூர் இருக்கிறது.அங்கே நடு நாயகமாக வீற்றிருக்கிறது ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் ஆலயம்.
நன்றி : திருப்பட்டூர் ஸ்தல மகிமை – வி.ராம்ஜி


நேசங்களுடன்
ஜீவானந்தம்


2 comments:

  1. நல்லதொரு கோவில். திருச்சிக்குச் செல்லும்போதெல்லாம் அங்கே செல்ல நினைப்பதுண்டு - ஆனால் இதுவரை செல்ல இயலவில்லை. பார்க்கலாம் எப்போது அழைப்பு வருகிறது என!

    தகவல்கள் சிறப்பு. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....