Sunday, August 4, 2013

கோவை மெஸ் - சாந்தி கேண்டீன், (SHANTHI SOCIAL SERVICES )சிங்கா நல்லூர், கோவை

ரொம்ப நாளா போகணும்னு இருந்த சாந்தி கேண்டீன் ஆசை இப்போது நிறைவேறி விட்டது.ஒரு மதிய நேரம்...திருச்சி சாலையில் சிங்காநல்லூர் டூ ஒண்டிப்புதூர் செல்லும்  போது இருக்கிற சாந்தி பெட்ரோல் பங்க் தாண்டி இடது புறம் கேண்டீன் என்கிற போர்டினை கண்டு உள் நுழைந்தோம்.உள்ளே செல்ல செல்ல பாத சாரிகளின் கூட்டம் வெளியேறிக்கொண்டிருந்தது அவர்களின் முகத்தில் ஒரு வித திருப்தியினை காண முடிந்தது.

          காரினை பார்க் செய்து விட்டு டோக்கன் வாங்க கியூவில் நிற்க ஆரம்பித்தோம்.கிட்டத்தட்ட ஒரு பெரிய நடிகரின் முதல் நாள் சினிமாவிற்கு நிற்கும் கூட்டம் போல இருக்கிறது.தினமும் இதே போன்ற கூட்டம் இருக்கிறது.முதலிலேயே 13 வகைகளுடன் கூடிய முழு சாப்பாடு போர்டு நம்மை வரவேற்கிறது.வரிசையாக உள்ளே நுழைந்தோம்.

டிஜிட்டல் மெனுக்கள் போர்டுகள் பச்சையாய் ஒளிர்ந்து இன்றைய உணவுப்பொருட்களை  சுமந்து கொண்டிருந்தன.மொத்தம் நாலு கவுண்டர்கள் இருக்கின்றன.ஒவ்வொரு வரிசைக்கும் ஒரு கவுண்டர்.25 ரூபாய் கொடுத்து டோக்கன் வாங்கி கொண்டு முன்னேறினோம்.டோக்கன் வாங்கும் இடத்தில் பிரிந்து மீண்டும் ஒரே வரிசையாக உள் நுழைந்தோம்.



          நீண்டு செல்கிற வரிசை ஓரிடத்தில் கை கழுவி விட்டு மீண்டும் வரிசையாகவே செல்கிறது.உணவுக்கூடத்திற்குள் நுழையும் போது ஒரு கல்யாண மண்டபம் போல் விரிந்து கிடக்கிற ஒரு ஹாலுக்குள் எங்கும் மனித தலைகளே.மெல்லிசையில் புரட்சித்தலைவரின் பாடல்கள் கீதமாய் ஒலித்துக் கொண்டிருக்க ஏசி அறையினுள் ஆற அமர்ந்து மன திருப்தியுடன் சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றனர்.

              எங்களின் வரிசை உணவு கொடுக்கும் இடத்திற்கு வந்தவுடன் “Service to Humanity is Service to God.”  ஒரு என்கிற வாசகம் பொருந்திய சீருடை அணிந்த சிப்பந்தி டோக்கனை வாங்கிகொள்ள, சாப்பாட்டுக்கூடத்தில் இருக்கிற பணியாட்கள் பரபரப்பாக பம்பரமாக வேலை செய்து ஒரு பெரிய தட்டினுள் ஒவ்வொரு உணவாய் பொரியல், கூட்டு, சாம்பார், ரசம், வடை, அப்பளம், சப்பாத்தி, குருமா, சாதம், தயிர் பாயசம், வாழைப்பழம் என எல்லாம் வைக்க தட்டினை நகர்த்திக்கொண்டே ஒவ்வொன்றாய் வாங்கிக்கொண்டு இடம் தேடி அமர்ந்தோம்.சாப்பிட்டவர்கள் வெளியேற அந்த இடம் புதியவர்களின் வருகையால் நிரம்பிக்கொண்டிருந்தது.

                   முருங்கை சாம்பாரின் மணம் மூக்கைத்துளைத்தது.சாப்பிட்டு பார்த்ததில் அருமையோ அருமை.அதுபோலவே மிருதுவான சப்பாத்தி அதற்கேற்றார் போல குருமா, ரசம் சான்சே இல்லை..அவ்ளோ சுவையுடன் இருக்கிறது.பொறுமையுடன் சாப்பிட்டுவிட்டு வாழைப்பழத்தினை கடைசியாக எடுத்துக்கொண்டு பின் பாயசம் சாப்பிட ஆகா...என்ன ருசி...

            மறு சாதம் எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம்.ஆனால் முதல் தடவை வைக்கிற சாதமே வயிற்றினை நிரப்பி விடுகிறது.இந்த சாப்பாட்டினை வெளியில் எங்காவது ஹோட்டலில் சாப்பிட்டால் எப்படியும் 85 ரூபாய் இருக்கும்.ஆனால் விலை குறைவாக மக்களின் சேவைக்காக வெறும் 25 ரூபாய்க்கு வழங்குகின்றனர்.சுத்தமான சுகாதாரமான உணவினை இந்த விலைக்கு கொடுக்கின்றனர்.

          மேலும் கண்காணிக்க சீருடை அணிந்த ஆட்கள் நல்ல உபசரிப்புடன் அவ்வப்போது வழிகாட்டுகின்றனர்.மேலும் சாப்பிட்ட இடங்களை உடனடியாக சுத்தப்படுத்தி விடுகின்றனர் மற்றவர்கள் அமர்வதற்காக.சுத்தமான குடிநீரினை அவ்வப்போது சாப்பாட்டு டேபிளில் இருக்கிற ஜக்கினுள் நிரப்பிவிடுகின்றனர்.சாப்பிட்ட தட்டுக்களை உடனுக்குடன் வாங்கி கழுவதற்காக எடுத்துச்செல்லப்படுகின்றன.அதற்கென தனி இடம் வைத்திருக்கின்றனர்.
      பல்லாயிரக்கணக்கில் வரும் மக்களின் பசியினை தீர்க்கும் அட்சயபாத்திரமாக இருக்கிறது இந்த சாந்தி கேண்டீன்.மூன்று வேளையும் இங்கு உணவு குறைந்த விலையில் கிடைக்கிறது.மேலும் ஆதரவற்றோர் எளிய ஏழை மக்களுக்கு இலவச உணவு வழங்கும் இடமும் இருக்கிறது.கார் நிறுத்த பரந்து விரிந்த இடம், குழந்தைகள் விளையாட பார்க் ஏரியா என வசதிகள் அதிகமாக இருக்கின்றன.



இந்த உணவகம் மட்டுமல்லாமல், ரத்த தானம், மருந்துகள், மருத்துவ சேவை, மின்மயானம், ஆம்புலன்ஸ்  என பலவிதங்களில் மக்களுக்கு சேவை செய்கின்றனர்.எல்லாம் மிகக்குறைந்த விலையிலேயே சேவையினை வழங்குகின்றனர்.வெளி நபர்களிடம் இருந்து எந்த ஒரு நன்கொடையும் பெறாமல் இந்த அரும்பெரும் சேவையை நடத்திவரும் திரு சுப்ரமணியன் அவர்களும், அவர் தம் குடும்பத்தினரும் மென்மேலும் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.
       சாப்பிட்டு முடித்து கை கழுவிவிட்டு வெளியேறும் வாயிலில் ஆலோசனைப்பெட்டி இருக்கிறது.உங்களின் ஆலோசனைகளை எழுத ஒரு படிவமும் இருக்கிறது.மேலும் ரத்த தானம் செய்ய விரும்புவர்கள் நிரப்ப ஒரு படிவமும் இருக்கிறது.எங்கள் பங்கிற்கு நல்ல ஒரு நாலு வார்த்தைகளை வாழ்த்துக்களாய் எழுதிவிட்டு வந்தோம்.


சாந்தி கேண்டீன் மற்றும் இன்ன பிற சேவைகள் அனைத்தும் கோவைக்கு ஒரு வரப்பிரசாதம்.இது திருச்சி சாலை சிங்காநல்லூரில் இருக்கிறது.

வேலை நேரம் : 
காலை 7.00 மணி முதல் 11 மணி வரை
மதியம் 12.00 மணி முதல் 2.30 வரை
மாலை 5.00 மணி முதல் 9.30 வரை


கிசுகிசு : இதுவும் ஹோட்டல்தானே அப்படின்னு  போய் உட்கார்ந்து மணிக்கணக்கா கடலை போடலாம்னு நினைக்கிற ஜோடிகள் வேறெங்காவது போயிடுங்க...பிளீஸ் நல்ல நோக்கத்தினை பாழ் பண்ணாதீங்க..அப்புறம் இங்க அம்மணிகள் இருந்தாலும் நானும் எதுவும் சொல்லாமல் அமைதியாகிறேன்.(நல்லவேளை ...அம்மணிகள் இல்லையே இந்த பதிவில் அப்படின்னு யாரும் சொல்றதுக்குள்ள நானே சொல்லிட்டேன்..ஹிஹிஹி )

பதிவர் சந்திப்பு -  நாள் -1.9.2013, இடம் - சென்னை  - அனைவரும் வாரீர்


நேசங்களுடன்
ஜீவானந்தம்



17 comments:

  1. லாப நோக்குடன் செயல்படாத ஹோட்டல்... நல்ல விஷயங்களை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...

    ReplyDelete
  2. இங்கு வரும் கூட்டம்...திருப்பதிக்கு இணையானது.
    தர்ம சிந்தனையுடன் இத்தகைய சேவையை சாந்தி கியர்ஸ் நிறுவனத்தார் செய்து வருவதை பாராட்ட வார்த்தைகளே இல்லை.

    ReplyDelete
  3. சூப்பர் பாஸ் ...! நான் நாலஞ்சு முறை போயிருக்கேன் .... ரெம்ப நல்லா நடத்திட்டு வராங்க . மதியச்சாப்பாடு அரைமணி நேரத்துல தீர்ந்துடுது . அதுக்கு மேல வர்றவங்களுக்கு வெரைட்டி மீல்ஸ் கொடுக்குறாங்க ....!


    மெடிக்கல்ல அனைத்து மருந்துகளுக்கும் பதினெட்டு சதவீதம் தள்ளுபடி தர்றாங்க . ப்ரீ டோர் டெலிவரி உண்டு .

    ReplyDelete
  4. பாராட்டுக்குரிய விஷயம்......

    செய்து வரும் குடும்பத்திற்கு பாராட்டுகள்......

    ReplyDelete
  5. நல்ல பதிவு, இதனால் இது சாத்தியமா என்றெண்ணுவோரும்,இம்மாதிரி சேவையைத் தொடர வாய்ப்புக்கள் உண்டு. இதனை பெருமுயற்சியுடன் நடத்திவரும் திரு. சுப்ரமணியம் அவர்களும், அவரது குடும்பமும், குழாமும், வாழ்க வளமுடன் என, மனம் நிறைந்து வாழ்த்துவோம்.

    ReplyDelete
  6. நல்லதொரு விசயத்தை பகிர்ந்தமைக்கு நன்றி ஜீவா! வாய்ப்பு கிடைப்பின் போய் வரலாம்.

    ReplyDelete
  7. நன்றி ஜீவா, படங்களுடன் அருமையாக விளக்கி இருக்கிறீர்கள்..... நானும் இதை பற்றி கேள்விபட்டிருக்கிறேன், ஆனால் பார்த்ததில்லை, இன்று உங்களின் பதிவின் மூலமாக பார்க்கிறேன் !

    ReplyDelete
  8. இதுவரை நான் படித்த கோவை மெஸ் பதிவுகளை கிண்டல் மட்டுமே செய்து வந்துள்ளேன். ஆனால் இந்த பதிவு .............. நீங்க எங்கேயோ போயிட்டீங்க. அருமையோ அருமை

    ReplyDelete
  9. உங்கள் பாணியில் இருந்து விலகி எழுதிய ஒரு அருமையான பதிவு! உணவகத்தின் சிறப்புக்களும் குறைந்த விலையில் அவர்கள் வழங்கும் சேவையும் பாராட்டத்தக்கது! மிக்க நன்றி! இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  10. sorry for Commenting in English,

    In Santhi canteen during morning hours for getting tiffin for school children you can show the id card of the child and get parcel.
    No parcel for others and also for lunch.

    I too tasted there and experience the service.

    ReplyDelete
  11. நான் சாப்பிட்டிருக்கேன் இந்த சாந்தி கேண்டின்ல... டோக்கன் வாங்கிக்கிட்டு நாமே போய் சாப்பாடு வாங்கிக்கொள்ள வேண்டும்.. அருமையா இருக்கிறது.. ருசி....

    நண்பர்கள் தின நல்வாழ்த்துகள்....

    ReplyDelete
  12. கோவையில் இருந்துகொண்டு இதை இப்போதாவது எழுத தோன்றியதர்க்கு வாழ்த்துக்கள் கோவை நேரம்
    பலரும் அறிந்துகொள்ள வேண்டிய ஒரு கேண்டீன்
    குறைந்த விலையில் நிறைந்த சேவை செய்யும்
    சாந்தி கேண்டீன் நிறுவனத்திற்கு என்னுடைய வாழ்த்துகளும்

    ReplyDelete
  13. பதிவைப் படித்ததும் வயிறு நிறைய சாப்பிட்டது போன்ற உணர்வு. நீங்க ஆச்சி மெஸ்ஸ பத்தி பதிவிட வேண்டுகிறேன்

    ReplyDelete
  14. இனிய தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி

    ReplyDelete
  15. மருத்துவ சேவைகள் மிக குறைந்த கட்டணத்தில் அனைவரும் பயன் பெறலாம் நண்பர்கள் அனைவருக்கும் கூறுங்கள்

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....