Sunday, January 25, 2015

கோவை மெஸ் – நிப்பட் என்கிற தட்டுவடை, போச்சம்பள்ளி, தருமபுரி மாவட்டம்

கன்னையா எண்ணைய்ப் பலகாரக்கடை                   
               பல வருடங்களுக்கு முன்னால் தருமபுரியில் இருந்து ஜோலார் பேட் சென்றிருந்த போது பஸ் எப்பவும் போல போச்சம்பள்ளி என்கிற ஊரின் பேருந்து நிலையத்தில் நுழைய நிறைய பேர் தட்டுவடையை விற்பதற்காக பயணிகளோடு போட்டி போட்டுக்கொண்டு ஏறி விற்பனை செய்தனர்.அப்போது வாங்கிச் சாப்பிட்ட ஞாபகம் நேற்று ஜோலார்பேட்டில் இருந்து தருமபுரி வந்துட்டு இருக்கும் போது  வந்தது.அதே போச்சம் பள்ளி பஸ்ஸ்டாண்ட்.ஆனால் இந்தமுறை நம்ம சிங்கத்தில்...கண்கள் இருபுறமும் யாராவது தட்டுவடை வைத்து இருப்பார்களா என துழாவிக்கொண்டு வர, எங்கும் அகப்படவில்லை. பஸ்ஸ்டாண்ட் தாண்டி ஒரு தள்ளுவண்டி கடையில் ஏகப்பட்ட கூட்டம்.நின்றபடியே தின்று கொண்டிருந்தார்கள்.வடையோ பஜ்ஜியோ என்று தான் நினைத்தேன்.கொஞ்சம் உற்றுப்பார்த்ததில் பாலீதீன் கவரில் போட்டு மூடிவைத்தபடி தட்டு வடை இருக்க, அட நம்ம அயிட்டம் என்று வண்டியை ஓரங்கட்டி கடைக்கு சென்றேன்.



                அண்ணே...ரெண்டு தட்டுவடை என்று கேட்க, நாலு பத்து ரூபாய் தான் என்றும் இதுக்கு பேரு நிப்பட்..இங்க அப்படித்தான் சொல்வார்கள்..வேறு ஊர்களில் தட்டுவடை என்பார்கள் என்று சொல்லியபடியே பழைய தினத்தந்தி பேப்பரில் மடித்து கொடுத்தார்.
கொஞ்சம் கரடு முரடாய் கெட்டியாக இருக்கிறது பார்க்க..ஆனால் கொஞ்சம் உடைத்து சாப்பிட மொறுக் மொறுக்கென சூப்பராய் இருக்கிறது.அவ்வபோது பல்லில் கடிபடும் வேர்க்கடலையும் பொட்டுக்கடலையும், ஒரு சில வெங்காய துண்டுகளும் சுவையைக்கூட்டி நம் எச்சிலை உற்பத்தி செய்கின்றன.நன்றாக இருக்கிறது.சாப்பிட சாப்பிட அதன் சுவை அதிகரித்து மென்மையாய் கரைகிறது.மணமும் சூப்பராய் இருக்கிறது.


               ரசித்து ருசித்து கடித்து சாப்பிட எண்ணிக்கை நான்காகிப் போனது.கொஞ்சம் பெரிய சைசாக வேறு இருக்கிறது.அதிகமாய் ஒரே நேரத்தில் சாப்பிட முடியாததால் பயணத்தின் போது கொறித்துக்கொள்ளலாமே என அங்கு இருந்த அனைத்தும் பார்சல் ஆக்கிக்கொண்டேன்.ஐம்பதுக்கு இரண்டு குறைவாக இருந்தது.மொத்தமாய் வாங்கிக்கொண்டதில்அங்கு இருந்த பல பேருக்கு வருத்தம் அதிகமாகிப்போனது..
               நிப்பட் தீர்ந்ததால் என்னவோ கடைக்காரர் அடுத்த மெனுவாக உளுந்து வடை செய்ய ஆரம்பித்தார்.அரைமணிக்கும் மேலாகும் என்று சொல்ல, பக்கத்தில் இருந்த ஒருவர், இந்த வடையை சாப்பிட்டுப்பாருங்கள், சூப்பராய் இருக்கும் என சொல்ல, ஆசை அதிகமாகிப்போனது.சரி காத்திருக்கும் நேரத்தில் அவருக்கும் நமக்கும் பொழுது போகட்டுமே என்று பேச்சு கொடுக்க, மடை திறந்த வெள்ளமென கொட்டிவிட்டார். கடைக்காரர் பெயர் கன்னையா.45 வருடங்களாக நிப்பட் செய்து கொண்டிருக்கிறாராம்.ஐந்து பைசா காலத்தில் ஆரம்பித்த நிப்பட்.இப்போது 2.50 க்கு வந்து நிற்கிறது.உளுந்து மாவில் வெங்காயம் பச்சை மிளகாய் போட்டு பிசைந்து எண்ணையில் போட, டவுட்டாகி அவரிடம் உளுந்து வடையில் மிளகு காணோம்..ஓட்டையை காணோம்..ஏன் என கேட்க, அது உங்க ஊர் உளுந்து வடை...நம்ம ஊர் வடையில் உளுந்து மாவு, கடலை மாவு, மைதா மாவு வெங்காயம் இருக்கும்.இந்த வடை செம டேஸ்டாக இருக்கும் சாப்பிட்டுப்பாருங்கள் அப்பொழுது புரியும் என சொல்ல, எண்ணைய் சட்டியில் வெந்து கொண்டிருக்கும் வடை எப்பொழுது மேலே வரும் என எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன்.

             என்னைப்போலவே பலரும் கடையை சுத்திக் காத்துக் கொண்டிருந்தனர்.வெந்த வடைகளை எடுத்து தட்டில் போட, எங்கள் பங்குக்கு நான்கு வந்தது.சுடச்சுட பிய்த்து வாயில் போட சுவை அப்படியே அசத்தியது.வெங்காயம் கொஞ்சம் இனிப்பாய் காரத்துடன் கலந்து கட்டி அடிக்க மணமும் சுவையும் எங்களை எங்கோ கொண்டு சேர்த்தது.சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது கன்னையா அவர்கள், இன்னும் ஆறவிட்டு சாப்பிட்டால் அப்படியே பஞ்சுபோல் மென்மையாய் இருக்கும்.இன்னும் செம டேஸ்டாக இருக்கும் என்றார்.சரி என்று அந்த வடையிலும் 16 வாங்கிக்கொண்டோம் முன்னெச்சரிக்கையாக...


                தீர்ந்துவிட்டால் என்ன செய்வது...அதற்குள் கன்னையா அவர்கள் பிரேமிட்ட ஒரு சர்டிபிகேட் காட்டவும் ஆச்சரியத்தில் மூழ்கிப்போனோம்.முறையாய் உணவு பாதுகாப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்கிறார் அவரது கடையை...கன்னையா எண்ணைய் பலகார கடை என்று...ரோட்டோரத்தில் இருந்த கடையை ரோடு அகலப்படுத்துவதால் அகற்றி விட்டார்களாம்.அதனால் இப்போது வேறொரு கடையில் சாமான்களை வைத்துக்கொண்டு பிளாட்பார கடையாய் நடத்தி வருகிறார்.ஊராட்சிமன்ற அலுவலகம் முன்பு இவரது கடை இருக்கிறது.

போச்சம்பள்ளி சென்றால் நிப்பட் சாப்பிட மறந்து விடாதீர்கள்..

நேசங்களுடன்

ஜீவான்ந்தம்

6 comments:

  1. ஆமாம்.சூப்பர்தான் டேஸ்டில்

    ReplyDelete
  2. எல்லோருக்கும் இந்திய குடியரசு நாள் வாழ்த்துகள்!

    ReplyDelete
  3. இந்த வடைக்குப் பெயர் 'பருத்தித்துறை வடை.' யாழ்ப்பாணம் பனங்கள்ளுக்குப் பேர் போன இடம். பருத்தித்துறையிலுள்ள ஒரு கள்ளுக்கடையில் தான் காரமான இந்த தட்டைவடையை முதலில் செய்தார்களாம். :-)

    செய்முறை:
    http://tamilnanbargal.com/en/node/56647

    ReplyDelete
    Replies
    1. அங்கேயும் பேமஸா...பார்க்கிறேன்

      Delete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....