Friday, April 10, 2015

மலரும் நினைவுகள் - சிம்னி விளக்கு

சிம்னி விளக்கு
            நாமக்கல் அருகே ஒரு கிராமத்திலுள்ள கோவிலுக்கு சென்றிருந்த போது அங்கே கடைவிரிக்கப்பட்டிருந்த பல பொருட்களில் இந்த சிம்னி விளக்கும் அடக்கம்.எப்பொழுதோ அடக்கமாகிவிட்ட சிம்னி விளக்கு இன்னும் உயிர்ப்புடன் இருப்பதை பார்த்தவுடன் பயங்கர ஆச்சர்யம்....இந்த விளக்கு இன்னும் உபயோகத்தில் இருக்கிறதா என்று...அந்த ஆச்சர்யம் முடிவதற்குள் ஒரு வயதான பாட்டி இந்த விளக்கின் விலை கேட்டு வர தமிழகத்தின் ஒரு சில பகுதிகள் இன்னும் இருண்ட பகுதியாகவும் மின்வெட்டின் துணை கொண்டு வாழ்ந்து வருகின்றனர் என்பதும் தெரியவருகிறது.
              சிம்னி விளக்கு.....பார்க்கவே மிக சின்னதாகவும், அதில் பொருத்தப்பட்டு இருக்கிற கண்ணாடி குடுவையானது மேலும் கீழும் சிறுத்து நடுவில் கொஞ்சம் பெரிதாய் அகண்டும் ஒரு அழகான அம்மணியின் மேனியழகை ஒப்ப இருக்கும் இந்த குடுவை, அதில் மிக சரியாய் பொருத்தப்பட்டும், ஒரு சின்ன தூண்டுகோல் திரியை ஏற்றுவதற்கும், அடிப்பாகத்தில் எண்ணைய் ஊற்ற உருண்டைப்பகுதியும் இவற்றையெல்லாம் தாங்க ஒரு சின்ன அடிப்பகுதியும் இருக்கிறது.மேலும் அதிக கனமில்லாமல் இருக்கிற ஒரு அற்புத விளக்கு இது.
           முன்பொரு காலத்தில் இரவு நேரத்தில் வீடானது மிகவும் இருட்டாக இருப்பதை தவிர்க்க ஒரு ஜீரோ வாட்ஸ் பல்பு போல உபயோகப்படுத்தப்பட்ட விளக்கு இது.200 மில்லி சீமண்ணைய் இருந்தால் போதும் விடிய விடிய எரியும்.மின் வசதி இல்லாத காலத்தில் இந்த விளக்கும் அரிக்கேன் விளக்கும் தான் துணை.இந்த விளக்கின் துணை கொண்டு எத்தனையோ பேர் படித்து இருக்கின்றனர்.நானும் சிறு வயதில் இந்தவிளக்கில் தான் படித்திருக்கிறேன். இருட்டின் பயத்தை போக்க தலைமாட்டுக்கு அருகில் வைத்துக்கொண்டு உறங்கியிருக்கிறேன்.அருகில் உள்ள அடுத்த அறைக்கு செல்லும் போது இந்த விளக்குதான் துணையாய் இருந்திருக்கிறது.
                   பள்ளி முடிந்து வந்தபின் இந்த விளக்கின் கண்ணாடியை எடுத்து விபூதி போட்டு பளிச்சென துடைத்து எண்ணைய் ஊற்றி வைப்பது தினமும் வழக்கப்படியாயிருந்தது.கரண்ட் வசதி வந்தபின்னும் இந்த விளக்கு சின்ன சின்ன உபயோகத்திற்கு பயன்பட்டு வந்தது.இரவு நேரங்களில் திடீரென்று மின்சாரம் போய்விட்டால் உடனடியாக பொருத்தி வைக்கிற விளக்கு இது தான்.கொசுவர்த்தி மேட் வந்தபின்பு இந்த சிம்னி விளக்கின் கண்ணாடியின் மேல் ஒரு பிளேடு வைத்து அதில் கொசு மேட் வைத்து சிறிதாக திரியை வைத்து மெலிதாய் எரியும் படி செய்து கொசுவிரட்டியாக பயன்படுத்தியது ஞாபகத்தில் இருக்கிறது.
                 மண்ணெண்ணைய் அதிகம் புழக்கத்தில் இருந்தபோது இந்த விளக்கு அத்தியாவசியமானதொன்றாக இருந்தது.எப்பொழுது மண்ணெண்னணெய் க்கு தட்டுப்பாடு வந்ததோ அதில் இருந்து இந்த அற்புத விளக்கு மறைய ஆரம்பித்தது.கரண்ட் வசதியும் வர சுத்தமாய் ஒழிந்து விட்டது.ஆனாலும் இன்னும் கரண்ட் வசதியில்லாத  எத்தனையோ வீடுகளில் ஒளிர்ந்து கொண்டுதான் இருக்கிறது. எதேச்சையாய் இதை எங்காவது காணும்போது நம் ஞாபகத்திலும்....

நேசங்களுடன்

ஜீவானந்தம்

4 comments:

  1. Hello , I am silent reader of your blog. your doing great job...thanks for this post. it will bring back to me my childhood.... Thanks again

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி பிரேம்குமார்..

      Delete
  2. அவ்வப்போது நாங்களும் பயன்படுத்துகிறோம்...

    ReplyDelete
  3. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....