Showing posts with label வேலூர். Show all posts
Showing posts with label வேலூர். Show all posts

Wednesday, September 16, 2020

கோவை மெஸ் - ஹோட்டல் ரோடுசைட், பாண்டமங்கலம், வேலூர் - ROADSIDE HOTEL, PANDAMANGALAM, VELUR, NAMAKKAL

 ROADSIDE HOTEL, PANDAMANGALAM, VELUR

                         நம்ம மாப்ள விவசாயி பாலு தோட்டத்திற்கு போன போது ஒரு கடையை பத்தி சொன்னாப்ல.நான்கு நண்பர்கள் சேர்ந்து ஒரு ஹோட்டல் நடத்துவதாகவும், அந்த ஏரியாவில் கொஞ்சம் டேஸ்ட்ல பிரபலம் ஆகிட்டு இருக்குன்னு சொன்னாப்ல..

                சரி..சொல்லு மாப்ள.. அந்தப்பக்கம் போலாமுனு சொன்னேன்.

            சரி.கிளம்பு ஒரு எட்டு போய்ட்டு வந்துடலாம்னு சொல்ல போன இடம் வேலூர் பக்கத்துல இருக்கிற பாண்ட மங்கலம்.

                இந்த ஏரியாவுல ஆட்டுக்கறி ரொம்ப பேமஸா இருந்தது.600 ரூபாய்க்கு விற்ற காலத்தில் 265 க்கு விற்ற ஊர்.ஆனா இப்பொழுது நார்மல் ரேட்டுக்கு வந்த ஊர்.பக்கத்தில் இருக்கும் ஜேடர்பாளையம் என்கிற ஊர் காட்டன் சேலைகளுக்கு பிரபலம். அந்த ஊர் செல்லும் வழியில் பாண்டமங்கலம்.

            அங்கே ரோட்சைடு ஹோட்டல் என்கிற பெயரில் புளிய மரத்தின் அடியிலே..(புஷ்பலதா மடியிலே).புளியமரம்னு சொன்னாலே நம்ம விஜய் டிவி தங்கதுரை ஞாபகம்தான் வருகிறது.


            கீற்று கொட்டகையில் மூங்கில் தட்டிகளை வைத்து மூன்று டேபிள்கள், இரண்டு கிச்சன்கள் என அமைத்து கொஞ்சம் விசாலமாக இந்த ஹோட்டலை அமைத்திருக்கின்றனர்.சீரியல் லைட் வெளிச்சத்தில் ஹோட்டல் மின்னிக் கொண்டிருக்க உள் நுழைந்தோம்.

                கஸ்டமர்கள் பார்சலுக்கு வெயிட் பண்ணி கொண்டிருக்க, அப்பொழுது தான் காலியான டேபிளில் அமர்ந்தோம்.கல்லில் வெந்து கொண்டிருந்த பொன்னிற புரோட்டோக்களை பார்க்க ஆசை அதிகமானது.புரோட்டாவையே சாப்பிடுவோம் என இலையை போட சொல்லி கொண்டு வரச்சொன்னோம்.


                            சுடச்சுட புரோட்டோ லேயர் லேயராய் பொன்னிறமாய் கல்லில் வெந்து, முறுகலான வாசனையில் பார்க்கவே பசியை தூண்டும் விதத்தில் இருந்த புரோட்டாவை பிய்த்து போட சொன்னோம்.


                            சூடான குருமாவை அதன்மேல் ஊத்தி பிசைந்து குழைந்து, ஒரு விள்ளலை எடுத்து வாயில் போட்டால் சொர்க்கம் பக்கத்தில் தெரிந்த நிலையை அடைந்தோம்.


            வாவ்..புரோட்டாவும் குருமாவும் ஒன்று சேர்ந்து செம சுவையை தந்தது.

                    பன் பரோட்டாவினை மாஸ்டர் நல்ல டேஸ்டியாக போடுவார் என சொல்ல அதில் இரண்டை ஆர்டர் செய்தோம்.குட்டியாய் அழகாய் வட்ட வடிவத்துடன் மொறுமொறுவுடன், பொன்னிறமாக புரோட்டா லேயர் லேயராக வர, அதில் சிக்கன் குருமாவினை ஊற்ற, அது அதனுடன் ஓபிஎஸ் இபிஎஸ் போல இணைந்து நல்ல சுவையை தந்தது.



                        புரோட்டா எப்பொழுது சாப்பிட்டாலும், அதனுடன் ஜோடி சேரும் குருமாவினை பொருத்தே அதன் சுவை தெரியவருகிறது.சிக்கன் குழம்பில் ஊற வைத்த புரோட்டா அப்படியே தொண்டையில் வழுக்கி கொண்டு போவது செம..சிக்கன் துண்டுகளும் நன்கு வெந்து அதன் சுவையை அதிகரிக்கிறது.

                        இந்த கடையில் வாத்து வறுவல், குடல், சிக்கன் வறுவல் என அனைத்தும் கிடைக்கிறது. இன்னொரு சமயத்தில் அந்தபக்கம் போனால் அனைத்தையும் சுவைக்க வேண்டும் என்கிற ஆவலை தருகிறது.

                கடையில் புரோட்டாவிற்காக கூடும் கஸ்டமர்களே இதற்கு சாட்சி. அந்தப்பக்கம் போனீங்கன்னா சாப்பிட்டு பாருங்க.

                புரோட்டா ஏ ஒன்..மாஸ்டர் வேற காரைக்குடியை சேர்ந்தவராம்.பின்னி பிடல் எடுக்கிறார் சுவையில்..

                புரோட்டா ரூ.12ம், சிக்கன் வறுவல் ரூ.60 க்கும் கிடைக்கிறது.ஆர்டரின் பேரில் சைவம் அசைவம் இரண்டும் செய்து கொடுக்க தயாராக இருக்கிறார்கள்.

                        நண்பர்களில் ஒருவர் கேட்டரிங் முடித்து இருப்பதால் சுவையில் பல மாற்றங்களை அவ்வப்போது செய்கிறாராம்.கிராமம் போன்ற ஊரில் துணிந்து ஹோட்டலை ஆரம்பித்த அந்த நால்வருக்கு வாழ்த்துக்கள்.

நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Monday, May 25, 2015

கோவை மெஸ் - ஸ்டார் பிரியாணி, ஆம்பூர், வேலூர் மாவட்டம்

                        பெங்களூர் ஹைவேஸ் வழியா சென்னை செல்லும் போதெல்லாம் ஆம்பூர்ல ஸ்டார் பிரியாணி போர்டு பார்த்துட்டு போயிருக்கேன்.அதுமட்டுமல்ல ஆம்பூர்ல ஸ்டார் பிரியாணிதான் பேமஸ் என்று கேள்விப்பட்டு இருப்பதால் என்னிக்காவது போகனும் என்கிற ஆவலும் இருந்தது.அந்த ஆவல் போன வாரம் நிறைவேறியது.மதியம் இரண்டு மணிக்கு ஆஜராகிவிட்டேன்.ஆம்பூர் பைபாஸில் இரண்டு கிளைகள் இருக்கின்றன புதிதாக திறக்கப்பட்ட ஸ்டார் பிரியாணி ஹோட்டல், அப்புறம் தியேட்டர் அருகில் இருக்கிற பழைய கிளை ஸ்டார் பிரியாணி ஹோட்டல்..


                               ஆம்பூர்ல வண்டிய நிறுத்திட்டு காலாற நடந்து சென்று எதிர்ப்பட்ட லோக்கல் ஆட்களிடம் விசாரிக்க, ஸ்டார் பிரியாணிலாம் இப்போ டேஸ்ட் கம்மியாடுச்சி...ரொம்ப ஆடம்பரமா புதுசா கட்டி இருக்காங்க...விலையும் ஏத்திட்டாங்க....பேப்பர், டீவி பேஸ்புக்கு ன்னு விளம்பரம் படுத்திட்டு டேஸ்ட்டுல கோட்டை விட்டுட்டாங்க, எப்பவோ பேமஸ் ஆன ஸ்டார் பேரைத் தெரிஞ்சிகிட்டு வழியில வர்ற கார்வாசிகள் இந்தப்பக்கமும் பழைய கடையிலயும் அந்தப்பக்கம் புதுக்கடையிலயும் சாப்பிட்டுட்டு போறாங்க  என ஆதங்கத்தினை சொல்ல, பக்கென்றானது நமக்கு....
                         சரி..இவ்ளோ தூரம் வந்து இருக்கோம், ஒரு வாய் சாப்பிட்டு நம்ம கடமையை ஆத்துவோம் என்றெண்ணி பழைய கிளையில் உள்ளே புகுந்தோம்.கடைக்கு வெளியே நிறைய கார்கள் நின்று கொண்டிருந்தன.
ஸ்டார் பிரியாணி ஹோட்டல் என்பதால் என்னவோ கடையின் உட்புறங்கள் நட்சத்திரங்கள் கொண்டு வர்ணம் பூசப்பட்டிருந்தது.ஒரு சில டேபிள்களில் மட்டும் ஆட்கள் நிறைந்த படி இருக்க, மற்றவை காலியாக கிடந்தன...குடும்பம் சகிதமாக வந்தவர்கள் பிரியாணியை மற்றும் இன்ன பிற வஸ்துகளை உள்ளே தள்ளிக்கொண்டிருந்தனர்.


நமக்கு தோதான இடத்தில் அமர்ந்து கொண்டு பிரியாணியை ஆர்டர் செய்தேன்.வாழையிலையில் சூடாய் வந்து விழுந்தது பிரியாணியும் சில சிக்கன் துண்டுகளும்.

               பிரியாணி.....பார்த்தவுடனே தெரிந்து விட்டது இது சுமார் தான் என்று...வெளியே விசாரித்தபோது உள்ளூர்க்காரர் சொன்னது உண்மைதான்... மசாலா மணமின்றி வெளிறிப்போய் கிடந்தது.நீர் கோர்த்தது போல சல சல என்றிருக்க, பிரியாணியின் தரம் அப்போதே தெரிந்து விட்டது.
பிரியாணி டேஸ்ட் சுத்தமாக பிடிக்கவே இல்லை.பிரியாணி மசாலா போட்ட தக்காளி சாதம் போன்று இருந்தது. அதற்கு காம்பினேசாக தரும் தாழ்ச்சா....சத்தியமாய் நன்றாகவே இல்லை...கத்தரிக்காய், கொஞ்சம் எலும்பு, மாங்காய் போட்டு, புளிப்பும் காரமும் நன்கு கெட்டியாக இருக்கும் தாழ்ச்சாவைத்தான் சாப்பிட்டு இருக்கிறேன்.ஆனால் இங்கோ சுத்தமாய் சரியில்லை...தயிர்ப்பச்சடி.....தயிர் மோராகி நன்றாக இல்லை..
           சிக்கன் நன்றாக வெந்து இருந்தது..அளவான உப்பிட்டு வேகவைத்து இருப்பார்கள் போல, நன்றாக இருந்தது.ஆனால் பிரியாணி கொஞ்சம் கூட ஒட்டவில்லை....எப்பவும் பிரியாணி கொஞ்சம் டேஸ்ட் பண்ணிவிட்டு அப்புறம் அதிகமாக சாப்பிட பிடிக்கும்..இங்கு டேஸ்ட் பண்ணியதும் குறைவாகவே சாப்பிட தோணுகிறது..
சீக்கிரமாகவே எழுந்து விட்டேன்...சர்வீஸ் வேறு சுத்தமாய் சரியில்லை..இரண்டே பேர்..பத்துக்கும் மேற்பட்ட டேபிள்களுக்கு....எப்படி கவனிக்க முடியும்...எது சொன்னாலும் லேட்டாக வருகிறது...இலையில் பரிமாறிவிட்டு நாம் கூப்பிடும் வரை நம் பக்கம் வருவதே இல்லை....திடம் மணம்  சுவை என்பது சுத்தமாய் இல்லை...
பில் கொடுக்கிறபோது ஏன் பிரியாணி நன்றாகவே இல்லை என கேட்க, அவரிடமிருந்து அப்படியா என்கிற ஆச்சர்யக்குறி மட்டும் வெளியேறியது.
ஒரு பிரியாணி மணம் சுவை எப்படி இருக்கவேண்டும் எனில், சாப்பிடும் போதும் அதன் சுவை நம் நாவில் அமர வேண்டும்.இன்னும் வேண்டும் வேண்டும் என வயிறு சொல்ல வேண்டும். சாப்பிட்டு முடித்தபின் கை கழுவியவுடன் ஒரு அரைமணி நேரம் கையில் பிரியாணி மணம் வீசிக்கொண்டிருக்க வேண்டும்.அது தான் பிரியாணி... 

எதுக்கும் அந்தப்பக்கமா போனீங்கன்னா சாப்பிட்டு பாருங்க...ஒரு வேளை அன்னிக்கு நல்லா இருந்தாலும் இருக்கும்....


நேசங்களுடன்
ஜீவானந்தம்




இன்னும் கொஞ்சம்...

Sunday, April 19, 2015

கோவை மெஸ் – ஆட்டுக்கால் பாயா, திருப்பத்தூர், வேலூர் மாவட்டம்

              திருப்பத்தூரில் ஒரு ஹோட்டலில் மட்டும் ஆட்டுக்கால் பாயா கிடைக்கும், அதுவும் ஞாயிறு மட்டும் தான், அதுவும் காலைல 7.30ல இருந்து 9.30 மணி வரைதான்…மொத்தமா ஒரு ரெண்டு மணி நேரம் தான்…இல்லேனா தீர்ந்துடும்  என சொல்ல அந்த காலை ஞாயிறுக்காக காத்திருந்த நாளும் இன்று வந்தது.
                        என் நண்பர் இங்கு வக்கீலாக இருப்பதால் அவர் தான் திருப்பத்தூரில் எல்லா இடங்களுக்கும் அழைத்துச் செல்வார்.ஒரு நாள் என் விருப்பம் அறிந்து சொன்னது தான் மேலே இருக்கிற வரிகள். மேலும் அவர் காலேஜ் படித்தபோது அதிகாலை 5 மணிக்கே ஹாஸ்டலில் இருந்து கும்பலாய் வந்து விடுவார்களாம்.பக்கத்திலுள்ள வீட்டினைத் தட்டி பல் விளக்க பேஸ்ட் கேட்டு எழுப்புவார்களாம்..காலாங்காத்தாலேயே கூட்டமும் அள்ள ஆரம்பித்துவிடுமாம்…..ஆட்டுக்கால் பாயா அம்புட்டு டேஸ்ட் ……என அப்படி அவர் சொல்ல சொல்ல எனக்கும் எச்சில் ஊறியது…சும்மா இருக்க முடியுமா...... ஞாயிறு காலை எப்பவும் போல விடிய, முதல் போன் அவருக்குத்தான்….இன்னிக்கு சண்டே….போலாம் வாங்க…என சொல்ல, 7.30 மணிக்குத்தான்பா….அதுக்குள்ள கூப்பிட்டுட்ட என்றார் வக்கீல்..இல்ல…சும்மா ரிமைண்ட் பண்ணேன்..என சொல்லிவிட்டு ஆயத்தமானேன்..

                7 மணி வாக்கில் இருவரும் டூவீலரில் திருப்பத்தூர் எனும் சிறு நகரத்திற்குள் பயணமானோம்.ஞாயிற்றுக்கிழமை ஆதலால் ஊரே கொஞ்சம் வெறிச்சோடிக் கிடக்க, பேக்கரி கடைகளில் மட்டும் கொஞ்சம் கூட்டமிருந்தது. உடல் எடையைக் குறைக்கவும், சர்க்கரையின் அளவை குறைக்கவும் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்த மனிதர்களை கண்டதும் இன்னும் பத்து வருசத்துல நாமும் இப்படித்தான் நடை போட வேண்டி இருக்குமோ என எண்ணிக்கொண்டே அவர்களை கடந்து சென்றோம்.
                      திருப்பத்தூரில் கச்சேரி வீதி என்ற தெருவுக்குள் நுழைந்து ராஜன் சாலையில் சென்றபோது தொட்டி எனப்படும் ஆடு வெட்டும் இடம் இருந்தது.ஞாயிறு மதிய வேளையை மட்டன் மணத்தினால் வீட்டினையும் மட்டனால் வயிற்றையும்  நிறைக்க வேண்டும் என்கிற காரணத்தினால் அங்கு மட்டும் கொஞ்சம் கூட்டம் காத்துக் கொண்டிருந்தது காலிப்பைகளை கைகளில் ஏந்தியபடி…
                              ராஜன் சாலையின் இருபுறமும் இன்னமும் கடைகள் திறக்கப்படவே இல்லை..ஒருவேளை ஞாயிறு தினமாக கூட இருக்கலாம்.ராஜன் சாலையில் இருந்து இடது பக்கம் ஒரு சின்ன சந்தினுள் நுழைந்தோம்…சிறு சிறு கடைகள் மிக அதிகமாகவும் மிக நெருக்கமாகவும் இருந்தது..அந்த சின்ன சந்தின் பெயர் குப்பையர் வீதி.தங்க வெள்ளி பட்டறைகள் அதிகம் இருக்க கூடிய ஏரியாவில் ஒரு கடை முன்பாக செம கூட்டம்….எல்லா கடைகளும் பூட்டி இருக்க, இந்த ஒரு கடையில் தான் இவ்வளவு கூட்டம்.கூட்டம் என்றால் ஒரு பத்து பதினைந்து பேர்.வருவதும் போவதும் என நிறைய பேர்.கடைக்கு பெயரில்லை.இருட்டடைந்து இருக்கிற மாதிரி தோற்றம்.வண்டியை ஓரங்கட்டிவிட்டு உள்ளே நுழைய ஆரம்பித்தோம்.

                          கடைக்கு போர்டு இல்லை.கடை பெரிதாகவும் இல்லை.ஆனால் நுழையக்கூட இடமின்றி  ஆட்களால் நிரம்பி இருந்தது ஹோட்டல்…
                மாஸ்டர் பரபரப்பாக தோசைக்கல்லில் புரோட்டா போட்டுக்கொண்டிருக்க, அவர் அருகில் ஒருவர் புரோட்டா மாவை விசிறிக் கொண்டிருந்தார்.கடைக்குள் நுழையும் முன்பே இடது புறம் ஒரு பிரியாணி குண்டா…அதில் மட்டன் மணம் முழுவதும் வெளியேறி அந்த இடத்தையே மணக்கச் செய்ய, ஒருவர் கிளறிக்கொண்டும் உள்ளே இருப்பவர்களுக்கு பிரியாணியை பிளேட்டில் போட்டும் அனுப்பிக் கொண்டிருந்தார்.கூடவே ஒருவர் பார்சலுக்கு……..உள்ளே இருந்த அத்தனை டேபிளும் ஆட்களால் நிரம்பி இருந்தது.சாப்பிட்ட ஆட்கள் வெளியேறவும், சாப்பிட ஆட்கள் உட்புகவும் ரொம்ப பிஸியாக இருந்தது.
                   எங்களுக்கு இடம் கிடைத்து அமர வக்கீல் நண்பர் உடனே அந்தக்கடையின் ஸ்பெசலான முட்டை ரொட்டியும் ஆட்டுக்கால் பாயாவும் ஆர்டர் செய்ய, கொஞ்ச நேரம் காத்திருக்க வேண்டியதாகிப் போனது.காத்திருந்த நேரத்தினை பயனுள்ளதாய் ஆக்க சுற்றும் முற்றும் பராக் பார்க்க, காலையிலேயே மட்டன் பிரியாணியையும் பாயாவையும் வெளுத்துக்கொண்டிருந்தனர் நம்மவர்கள். பார்சல் ஆர்டர்கள் பலதும் வெளியேறிக் கொண்டிருந்தது.அவ்வப்போது கேசியரிடமிருந்தும் பார்சல் கட்டிக்கொடுப்பவரிடமிருந்தும் பில்களின் பெரிய தொகை  சொல்லி சொல்லி ஏலம் போல் நீண்டு கொண்டிருந்தது.ஒவ்வொரு பில்லும் 450, 600, 800, 400 என ஏறியும் இறங்கியும் இருந்தது.குறைந்த பட்சத்தொகை என்று நூறுக்கும் கீழ் எதுவுமில்லை.எல்லா பார்சலும் பாயாவிற்குத்தான் என்பதால் எல்லாம் அதைத் தாண்டித்தான் போய்க்கொண்டிருந்தது.
                    கொஞ்ச நேரம்தான்..பிரியாணி வாசத்திலும் முட்டை ரொட்டியின் வாசத்திலும் மனம் வறுபட ஆரம்பிக்க, லேசாய் பசிக்க ஆரம்பித்தது.முதலில் சேமியா கொடுங்க, முட்டை ரொட்டியை அப்புறம் கொண்டு வாங்க….என சொல்லவும் இடியாப்பம் பாயா உடனே வந்தது.

இடியாப்பம் பூப்போல் மென்மையாய் இருக்க, அதன் மேல் பாயாவினை ஊற்ற மெதுவாய் இறங்கியது அந்த இடியாப்ப சிக்கலுக்குள்….ஒரு விள்ளல் எடுத்து வாயில் போட அமிர்தமாய் கரைந்து ஓடியது…ஆட்டுக்கால் பாயாவின் தேங்காய் மணம் மெல்லியதாய் நம் சுவையை ஆக்கிரமித்துக் கொள்ள, இடியாப்பம் சிக்கலின்றி காலியானது.பாயாவில் மிதக்கும் காரமிகுந்த எண்ணைய் ஒரு வித சுவையைக் கொடுக்க இதமாய் பதமாய் உள்ளிறங்கியது இடியாப்பம்..
                 ஆட்டுக்கால்…..ஒரு முழுக்காலே மொத்தமாய் வெந்து இருந்தது.பிய்க்க அப்படியே உரிந்து வந்தது.மென்மையாய் கறி இருக்க, கடினமாய் மெல்லுவதற்கு வாய்ப்பின்றி உள்ளே வழுவழுவென இறங்கியது.ஐந்து இன்ச்க்கும் மேலே இருந்த ஆட்டுக்காலின் எலும்பினை கடித்து உறிஞ்சி இழுக்க, உள்ளே இருந்த ஊனும் நன்றாய் உப்பு காரம் பிடித்து செமயாக இருக்க, சூப்பராய் இருந்தது.ரப்பர் போல இருக்கும் சதைப்பகுதி சாப்பிட டேஸ்டாக இருந்தது.

                வாயில் கவ்விய எலும்போடு சற்றே திரும்ப, எல்லா டேபிள்களிலும் யாராவது ஒருத்தர் ஆட்டுக்கால் எலும்போடு போட்டியிட்டுக் கொண்டிருக்க, நமக்குத் துணையாகவும் ஆட்கள் இருக்கிறார்களே என்ற எண்ணத்தில் மனம் உற்சாகமடைந்து இன்னும் அதிகமாய் எலும்பை உறிஞ்ச ஆரம்பித்தேன்.
                    முழுக்காலையும் முடித்தபின் பெரிதாய் ஒன்றும் ஏப்பம் வரவில்லை.பின் முட்டை ரொட்டி சூடாய் தட்டில் போடவும், அதைப்பார்த்த போது ஒரு பக்கத்தில் முட்டையும் அதன் மறு பக்கத்தில் புரோட்டோவுமாக இருக்கிறது, அதன் இருபுறமும் இப்படியும் அப்படியும் திருப்பி பாயா என்று சொல்லக்கூடிய சேர்வையை ஊற்றி ஊற வைக்க, அது சிறிது நேரத்தில் ஊறி விட்டது.கொஞ்சமாய் பிய்த்து வாயில் வைக்க செம டேஸ்டாக கரைந்தது.முட்டையும் புரோட்டாவும் சேர்வையும் மூன்றும் ஒன்று சேர்ந்து ஒரு தேவாமிர்தத்தை தந்தது.ஒவ்வொன்றின் சுவையும் நாக்கின் நரம்புகளை உசுப்பேற்றிவிட்டு வயிற்றுக்குள் தள்ளிக் கொண்டிருந்தது.


      கேட்க கேட்க சேர்வையை வந்து ஊற்றுகிறார்கள்.கெட்டியாக இல்லாமல் நீர்த்துப்போய் தான் இருக்கிறது ஆனால் சுவை.
கொஞ்சம் கொஞ்சமாய் வயிறு நிறைய ஆரம்பிக்க, அடுத்த மெனுவாய் மட்டன் பிரியாணி வந்து சேர்ந்தது.அதிகமாய் சாப்பிட முடியாது என்பதால் ஆளுக்கொரு அரை பிளேட் மட்டும் சொன்னோம்.ஆனால் அதுவே புல் மீலாக இருந்தது எனலாம்.
                      சின்ன சின்ன அரிசியுடன் மட்டன் மணமும் சேர்ந்து மிக சுவையாக இருந்தது.பாசுமதி அரிசியில் தான் இந்த வேலூர் மாவட்டத்தில் பிரியாணி செய்வார்கள்.ஆனால் இங்கோ சின்ன அரிசியில் செய்திருந்தது மிக சுவையாக இருந்தது.சீரகசம்பா அரிசி இல்லை என்பது கூடுதல் தகவல்.ஆனால் அரிசியின் டேஸ்ட் சூப்பர்.சிறு சிறு துண்டுகளாக மட்டன் துண்டுகள்..நன்கு பஞ்சு போல் வெந்து இருந்தது.எலும்பும் கடிக்க மிருதுவாக இருந்தது.மட்டன் சுவையோடு பிரியாணியும் மிக அற்புதமாக இருந்தது.ஒரு பருக்கை விடாமல் சாப்பிட்டமுடித்தபின் தான் பேசாமல் புல் பிளேட் பிரியாணியே வாங்கியிருக்கலாமோ என எண்ண தோன்றியது.


                   அப்பாடா….இப்பொழுது தான் வயிறு நிறைந்த ஞாபகம் வர, கூடவே ஏப்பமும் வர திருப்தியாய் கை கழுவ வந்தோம்…இன்னமும் கூட்டம் கூடிக் கொண்டிருந்ததே தவிர குறையவில்லை..
எங்களின் பில்லாக ரூ 400 வர அதுவும் இருவர் மூலமாய் ஏலமாய் சொல்லித்தான் வாங்கி கல்லாவில் போட மீதி சில்லரையை வாங்கிவிட்டு கூட்டத்தினை ஒதுக்கிக் கொண்டு வெளியேறினோம்..



                    கடைக்கு முன் இருந்து திரும்ப ஒரு முறை பார்க்க எப்பவும் போல சலிக்காமல் புரோட்டா போட்டபடி மாஸ்டரும், உதவியாளரும் இருக்க, பெரிய குண்டாவிலே பிரியாணியை கிளறிவிட்டு பார்சல் பண்ணிக் கொண்டிருப்பவரும் தத்தம் வேலையிலே பிசியாக இருக்க, உள்ளேயிருந்து “ஆட்டுக்கால் பாயா ஒரு பிளேட்” என்ற சத்தம் வெளியேறிக்கொண்டிருந்தது.……..

கடை பற்றிய சிறு குறிப்புகள்…
இந்தக்கடை கிட்டத்தட்ட 75 வருடங்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.கடையின் ஓனர் பெயர் அன்சார்.
ஞாயிற்றுக்கிழமை மட்டும் தான் இதன் ஸ்பெசலான ஆட்டுக்கால் பாயாவும் முட்டை ரொட்டியும்..மற்றநாட்களில் இல்லை.
காலை 7 மணிக்கே பிரியாணி தயாராகிவிடும்
கடைக்கு போர்டு இல்லை
ஒரே ஒரு குறை மட்டுமே...இலைக்குப்பதில் பிளாஸ்டிக் பேப்பரை உபயோகப்படுத்தி வருகிறார்கள்.

முகவரி : குப்பையர் தெரு, ராஜன் சாலை

திருப்பத்தூர் வந்தீங்கன்னா ஒரு வாய் சாப்பிட்டுவிட்டு போங்க…..

நேசங்களுடன்
ஜீவானந்தம் 





இன்னும் கொஞ்சம்...

Thursday, March 19, 2015

கோவை மெஸ் - சிவா பீப் ஹோட்டல்( SIVA BEEF HOTEL), விருதம்பட்டு, வேலூர்

                                  இது கண்டிப்பா பீஃப் கறி சாப்பிடறவங்களுக்கு மட்டும்.....இப்படி எச்சரிக்கை போடற நாளும் வரப்போகுதுன்னு நினைக்கிறேன்....                    
                  ஒரு அவசர வேலையாக சென்னையில் இருந்து வாணியம்பாடி வரைக்கும் போக வேண்டி இருந்ததால் பூந்தமல்லியில் இருந்து வேலூர்க்கு பேருந்தில் சென்றேன்.பஸ் ஏறின டைம் கரெக்டாக ஒரு மணி...பசி இன்னும் ஆரம்பிக்க வில்லை.ஜன்னலோர இருக்கை என்பதால் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருந்தேன்.பஸ்ஸிலும் அம்மணிகள் என்பது அறவே இல்லாமல் இருந்தது.வெளியே இருந்த வெப்பத்தின் புழுக்கம் பேருந்தின் உள்ளுக்குள்ளும் இருந்தது.வேலூரில் சென்று சாப்பிட்டுக்கொள்ளலாம் என்று முடிவு பண்ணி பேருந்து வழக்கமாய் நிறுத்தும் மோட்டல்களில் கூட இறங்கவில்லை.

                கையில் வேறு புத்தகம் இருந்ததால் அதன் சுவாரஸ்யத்தில் பசியும் காணாமல் போய்விட்டிருந்தது.வெயில் வேறு அனல் பறத்திக்கொண்டிருக்க பேருந்து வறண்ட பாலைவனத்தில் செல்வது போல இருந்தது.இருபுறமும் பசுமையை தொலைத்த பைபாஸ் ரோட்டில் வேகமெடுத்த பேருந்து வெப்பத்தினை தாங்கிக்கொண்டு எங்களுக்கு குளிர்ச்சியை தந்து கொண்டிருக்க, பேருந்தினுள் அனைவரும் கண்கள் சொக்கியபடி உறங்கிக்கொண்டிருந்தனர் மூவரைத்தவிர......மதிய நேரத்தில் எங்காவது நெடுந்தூரப் பேருந்தில் பயணித்து பாருங்கள்..உறக்கம் கண்களைச்சுழட்டும்..பேருந்தின் வேகம் உங்களைத் தாலாட்டும்...
                மூன்று மணி நேர பயணத்தில் வேலூர் வந்தடைந்தேன்.வேலூரில் பதினைந்து வருடங்களாக தண்ணீர் வரத்தே இல்லாத பாலாறில் வெய்யிலாறு ஓடிக்கொண்டிருந்தது.ரோடுகளில் கானல் நீர் தெறித்து ஓடிக்கொண்டிருந்தது.எப்பவோ எனது பதிவுகளை படித்து பாராட்டிக்கொண்டிருந்த வேலூரைச் சேர்ந்த எழுத்தாளர் உஷா அன்பரசு அவர்கள் சொன்ன ஒரு ஹோட்டல் ஞாபகத்திற்கு வந்தது.அவர்கள் ஆபீஸ் செல்லும் வழியில் இருக்கிற ஒரு ஹோட்டல்.... சிவா பீப் ஹோட்டல், மாலை நேரம் தென்படுகிற கூட்டமும், அங்கே பரவுகின்ற ஒரு சுவையான மணமும், அதைப்பற்றி மற்றவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறார் என்றும் துரதிஷ்டவசமாக அவர்கள் மிகவும் ஆச்சாரமான சைவத்தினை சேர்ந்தவர் என்றும் அறியக்கேட்டிருக்கிறேன்.
              வேலூர் வந்திறங்கியவுடன் அவருக்கு போன் போட அட்ரசை வழிமொழிந்தார். பதிலுக்கு அவரை நான் சாப்பிடக்கூட அழைக்க வில்லை ...அவர் சுத்த சைவம் என்பதால்....
             நான்கு மணி ஆகிவிட்டதால் இருக்குமோ இருக்காதா என்கிற பயத்துடனே பேருந்து நிலையத்தில் இருந்து வெளிவந்தேன். ஷேர் ஆட்டோவினை கைகாட்டி நிறுத்தி விருதம்பட்டு சிவா ஹோட்டலில் நிறுத்த சொன்னேன்.பாலாறு பாலம் தாண்டி இருக்கிறது விருதம்பட்டு..அருகிலேயே கடை இருக்கிறது.
           கடையின் தோற்றம் பல சிலேட்களால் அலங்கரிக்கப்பட்டு, மெனுக்களால் நிரம்பி வழிகிறது.லாலிபாட், பிரியாணி, பீப் பக்கோடா, சேமியா, ஈரல் பிரை, மூளை ப்ரை, என சிலேட்கள் மெனுக்களைத் தாங்கி தொங்கிக்கொண்டிருக்கின்றன.
ஒரு பெரிய பிளக்ஸ் போர்டு சுவையின் தரத்தினை காட்டிக்கொண்டிருக்கிறது.


உள்ளே கடைசிக்கட்ட நேரத்திலும் பிரியாணி பரிமாறிக் கொண்டிருந்தனர். பார்சல் பிரியாணி தான்.நேரம் ஆகிவிட்டால் பிரியாணியை பார்சல் செய்து வைத்து விடுவார்களாம்.
நானும் போய் டேபிளில் அமர, மூன்று சிறு சிறு இலைகளால் பின்னப்பட்ட ( தேக்கு இலைன்னு நினைக்கிறேன்) இலையில் மடித்து வைக்கப்பட்ட பிரியாணி பார்சலை பிரித்து வைக்க மணம் நாசியை கவ்வியது.
பீப் பிரியாணிதான். சுவையான பாஸ்மதி அரிசியில் மட்டன் மணம் கலந்து சூப்பராக இருக்கிறது.உதிரி உதிரியாக இருக்கிறது.பிரியாணிக்கு கொடுத்த கத்தரிக்காய் தால்ச்சா செம அருமை.இரண்டும் ஒன்றுக்கொன்று செம காம்பினேசன்.


              சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது பீப் பக்கோடா கேட்டேன், அது மாலை ஐந்து மணிக்கு மேல் தான் கிடைக்கும் என்று சொல்லிவிட்டார்கள்.அந்த ஹோட்டல் ஸ்பெசல் பீப் பக்கோடா தானாம்.வாசனை தெருவுக்கு வருமாம்....பக்கோடா இல்லை என்று சொல்லவும் கொஞ்சம் மனம் வருத்தமாகிப்போனது.
           லாலிபாப் இருக்கிறது தரவா என கேட்க, சிக்கன் தானே என வினவ, இல்லை பீப் என்றதும் ஷாக்காகிப்போய்விட்டேன்.ஒரு மாட்டுக்காலையே கொண்டுவந்து வைப்பாரோ என அச்சத்தில் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.ஆனாலும் சிறிய பீஸாகத்தான் இருக்கிறது பக்கத்து டேபிளில் பூந்து விளையாடிக்கொண்டிருந்த ஒருவரது கையில் இருந்த லாலிப்பாப்பை பார்த்தவுடன்.
விலாஎலும்போடு கொஞ்சம் மட்டன் சேர்ந்து இருக்கிறது.நன்றாக மசாலாவில் ஊற வைக்கப்பட்டு எண்ணையில் பொறித்தால் லாலி பாப்....
ஆனாலும் கொஞ்சம் பயமாக இருந்தது.தனியாக வந்தால் சாப்பிடமுடியாது பக்கார்டியுடன் வந்திருந்தால் சாப்பிட்டு  இருக்கலாம் எனவும் தோன்றியது
               எண்ணையில் பொறிக்கிற மணம் நம் டேபிளுக்கு வருகிறது.சுவையாகத்தான் இருக்கிறது போலும் இன்னொரு நாள் வரலாம் என்று நாக்கை கட்டுப்படுத்திக்கொண்டு பிரியாணியை சாப்பிட்டு முடித்துவிட்டு கை கழுவினேன்.


                பிரியாணியின் மணம் மற்றும் சுவை சூப்பராக இருக்கிறது.தனித்தனி அரிசியுடன் மட்டன் கலந்து செமையாக இருக்கிறது.பீப் கறியும் நன்றாக வெந்து பஞ்சு போல் மென்மையாய் இருக்கிறது.உப்பும் உரைப்பும் நன்றாக இருக்கிறது,
மீண்டும் செல்லக்கூடிய ஆர்வத்தினை ஏற்படுத்தி இருக்கிறது சிவா ஹோட்டலின் லாலிபாப் மற்றும் பீப் பக்கோடா.
        அந்தப்பக்கம் போனீங்கன்னா போய் சாப்பிட்டு விட்டு வாங்க....சில்லி, பீப் பக்கோடா.. முதல் அத்தனை அயிட்டங்களும் இருக்கின்றன. 
சாப்பிட்டு முடித்துவிட்டு ஹோட்ட்லை விட்டு வெளியேறுகையில் திரும்பிப்பார்த்தேன்... இன்னொரு நாள் வரணும் என்கிற பார்வை அதில் இருந்தது.

இடம் : விருதம்பட்டு

நேசங்களுடன்
ஜீவானந்தம்



இன்னும் கொஞ்சம்...