Thursday, June 4, 2015

கோவை மெஸ் – அருள் வாத்துகடை & ஹோட்டல், வேலாயுதம்பாளையம், கரூர்

வாத்து...
     சிறுவயதில் இருந்தே வாத்துக்கும் நமக்கும் நிறைய பொருத்தம் இருக்கிறது.எனது பாட்டன் முப்பாட்டன் காலத்தில் வாத்து வளர்ப்பதுதான் குலத்தொழிலாக இருந்திருக்கிறது.எனது தந்தையும் சிறு வயதில் இருந்து அவர் ஆசிரியப்பணிக்கு சென்று சேர்வது வரைக்கும் இந்த தொழிலில் இருந்திருக்கிறார்.குலத்தொழில் அல்லவா....ஆனால் இப்போது இல்லை. எங்கள் ஊர்ப்பகுதியில் விவசாயம் செழித்து இருப்பதால் வாத்துக்கள் வளர்ப்பதும் அதிகமாக இருக்கும்.நீர் நிலைகள் வேறு இருக்கிற ஊர்.காவிரி கரையோரத்தில் வாழ்கின்ற மக்கள் மட்டும் அதுவும் குறிப்பிட்ட ஒரு இனத்தவர் மட்டும் இந்த வாத்து வளர்க்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
               தற்போது எங்கள் ஊரில் ஒரே ஒரு குடும்பம் மட்டும் வாத்து வளர்க்கும் தொழிலில் இன்னமும் ஈடுபட்டிருக்கிறது. ஊருக்குள் வந்து வாத்துக்காரங்க வீடு எது என்று கேட்டால் உடனே சொல்லி விடுவார்கள்....கிராமங்களில் இப்படித்தான் செய்கின்ற தொழிலை வைத்துத்தான் முகவரியே கேட்பார்கள்...ஊரில் நெல் அறுவடை முடிந்த வயற்காட்டில் தண்ணீர் பாய்ச்சப்பட்டு இருக்கும் அதில் வாத்துக்களை மேயவிடுவர்.வாத்துக்களுக்கென்று பண்ணை எதுவும் இருக்காது. ஒவ்வொரு வயற்காடாக, ஆறு குளம் குட்டைகளில் மேய விடுவர்.நன்கு மேய்ந்தவுடன் பட்டியில் போட்டு அடைத்து விடுவர்...பட்டி என்று பார்த்தால் கெட்டியான நாணல் புல்லில் வரிசையாக கட்டி ஒரு தடுப்பு போல மூன்றடி உயரத்திற்கு நட்டு வைத்து அதில் வாத்துக்களை அடைத்து விடுவார்கள்..
          வாத்துக்கள் மேயும் விதம் பார்க்க மிக பரவசமாக இருக்கும்.நீருக்குள் மூழ்கி அவ்வப்போது தலையை வெளியே நீட்டியும், உள்ளே முழுகியும், தலையைச் சிலுப்பிக்கொண்டு, அவ்வப்போது மண்ணைக்கிளறி புழு பூச்சிகளை கொத்தி திங்கிற காட்சி நன்றாக இருக்கும். நத்தை, தவளை முதல் சிறு பாம்புகள் வரை கொத்தித்திங்கும்.வாத்துக்கள் நடக்கும் விதம் பார்க்க சுவாராஸ்யமாக இருக்கும்.தனியாய் பிரிந்து செல்லாது...கூட்டமாகத்தான் மேயும், இரண்டு இரண்டு வாத்துகளாக வரிசை கட்டி விட்டால் அப்படியே செல்லும் நீண்ட தூரத்துக்கு....அதன் நடக்கும் விதம் பார்த்தால் லேசாய் இடுப்பை ஆட்டி ஆட்டி செல்லும்.ஓடும் போது இன்னும் வேகமாக ஆட்டிச்செல்லும்.குவாக்...குவாக்...குவாக்...என கத்தும் விதமும் கேட்க பரவசமூட்டும்...
                      சிறுவயதில் வயற்காட்டில் மேய்கின்ற வாத்துக்கள் மேயும் போதே முட்டையை போட்டுவிடும்..அதை எடுத்து வந்து பொரியல் செய்தும், வேக வைத்தும் சாப்பிடுவோம்.வாத்துமுட்டை உடலுக்கு நல்லது.சளிக்கு நல்ல மருந்து.என்ன...கொஞ்சம் கவிச்சி அதிகமாக அடிக்கும்.வெறும் புழு பூச்சிகளையே தின்பதால் முட்டையில் அந்த அளவுக்கு கவிச்சி அடிக்கும்.ஆனால் உடம்புக்கு நல்லது.இரண்டு கோழி முட்டைகளின் அளவில் வாத்துமுட்டை ஒன்று இருக்கும் அவ்ளோ பெரிதாக இருக்கும்.பெரும்பாலும் இரவு நேரங்களில் தான் முட்டையிடும்.ஆனால் அடை காக்காது.

              வாத்துக்கறி....வெறும் எலும்பும் சதையுமாகத்தான் இருக்கும்.ஆனால் டேஸ்ட்டில் இதை அடித்துக்கொள்ள முடியாது.நன்கு வறுக்கப்பட்ட வாத்துக்கறி செம டேஸ்டாக இருக்கும்.இட்லிக்கு செம காம்பினேசன்.இட்லியை பிய்த்து கொஞ்சம் குழம்பில் தொட்டு சாப்பிட்டால் தேவாமிர்தம் தான்...
                   கரூர் மாவட்டம், திருச்சி மாவட்டத்தில் பாய்கின்ற காவிரி கரையோரம் உள்ள இடங்களில் வாத்து விற்பனை அமோகமாக நடக்கிறது.அதில் முக்கிய இடம் வேலாயுதம் பாளையம்.கரூரில் இருந்து வேலூர் செல்லும் வழியில் இருக்கிறது இந்த ஊர்.ஆற்றங்கரை ஓரமாக இருக்கிற ஊர் இது.வாய்க்காலும் ஆறும் பாய்ந்து வயல்வெளிகளை பாசனப் பகுதியாக மாற்றிக் கொண்டிருக்கிறது இன்னமும்.அதனால் என்னவோ இங்கு வாத்துக்கறி பேமஸ்...பைபாஸ் ரோட்டு ஓரங்களில் இருபுறமும் நிறைய கடைகள் இருக்கின்றன.அங்கு இருக்கிற அத்தனை கடைகளிலும் சாப்பிட்டு இருக்கின்றேன்.ஆரம்பத்தில் கதிர்வேலு கடை ருசியில் நன்றாக இருந்தது.இப்போது சரியில்லை.வெறும் மல்லித்தூள் போட்டு கெட்டியாய் வைத்து வாத்துக் குழம்பிற்கு உண்டான டேஸ்ட்டை கெடுத்து விட்டனர்..
               இப்போது அதிகம் விரும்பி சாப்பிடும் கடையாய் மாறியிருக்கிறது அருள் வாத்துக்கறி உணவகம்.
                 கரூரில் இருந்து நாமக்கல் செல்லும் போதெல்லாம் இங்கு இரண்டு இட்லியும் அரைபிளேட் வாத்துக்கறியும் சாப்பிட்டு விட்டு செல்வது வாடிக்கையாய் இருக்கிறது.பஞ்சு போன்ற இட்லியை பிய்த்து கெட்டியான வறுவலில் தோய்த்து சாப்பிட செம டேஸ்ட்....
கறித்துண்டுகளை வாயில் போட்டு எலும்போடு மென்று சாறையும் சதையும் மட்டும் சாப்பிட என்னவொரு டேஸ்ட்....இந்த டேஸ்ட் அப்படியே இன்னும் ஆளை அமுக்கும்...இன்னும் இரண்டு இட்லி ஆட்டோமேட்டிக்காய் உள்ளே இறங்கும்...சாப்பிட சாப்பிட சொர்க்கமே பக்கத்தில் வந்தது போல் இருக்கும்..அவ்வளவு சுவை வாத்துக்கறியுடன் கூடிய இட்லியில்....
அது போலவே ஆம்லெட்...செமயாக இருக்கும்.....
அந்தப்பக்கம் வந்தீங்கன்னா கண்டிப்பா சாப்பிட்டு பாருங்க....செமயா இருக்கும்....
              பைபாஸ் ரோட்டில் இந்தப்பக்கம் கதிர்வேலு கடை...அந்தப்பக்கம் அருள் கடை...எல்லாம் சொந்தக்காரங்க தான்......

நம்ம குறிப்பு :
ஊருக்கு வந்தால் இங்கு நண்பர்களோடு மற்றும் நம்ம சொந்தங்களோடு வரும்போது ஒரு கிலோ வாத்தும் பத்து பதினைந்து இட்லியும் பார்சல் வாங்கிக்கொண்டு (கூடவே பகார்டியையும்) காவிரி ஆற்றுக்கு சென்று விடுவோம்..நடு ஆற்றில் உட்கார்ந்து கொண்டு சாப்பிட ஆஹா....என்ன சுவை....சாப்பிட்டு முடித்தவுடன் ஆற்றில் ஒரு குளியலைப்போட்டு விட்டு வர....

” சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா.....

நேசங்களுடன்
ஜீவானந்தம்

3 comments:

  1. ஐஐஐஐ!!! எங்க ஊரு! பழைய நெனப்பயெல்லா கிளரி விட்டுடீங்களெ. வாத்துக் கறி, இட்லி, ஆத்தங்கர, குளியல் ம்ம்ம்... நிச்சயமா டிவைன்.. எனக்கு கடைய விட அம்மா வைக்குற குளம்பும், வறுவலும் தா ரொம்ப பிடிக்கும்.

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....