Friday, August 11, 2017

கோவை மெஸ் - செல்லப்பா ஹோட்டல், பரமத்தி ரோடு, நாமக்கல்.

                 பகல்வேளையில் பகார்டியின் துணை கொண்டு சுற்றித் திரிந்ததாலும், மதிய வேளை முடிகின்ற தருவாயில் இருந்ததாலும், வயிற்றுக்கு உணவிட வேண்டுமே என்கிற அக்கறையினாலும், சாப்பிடுகின்ற உணவு நல்ல காரஞ்சாரமாக இருக்க வேண்டும், அதுவும் பகார்டிக்கு இன்னும் சாதகமாய் அமைய வேண்டும் என தெளிவாய் சொல்லிவிட்டதால் நம் சகலபாடிகள் செல்லப்பா ஹோட்டலுக்கு செல்லலாம், அங்கு செமயாக இருக்கும் என்று முடிவெடுத்ததால் பரமத்தி சாலையில் உள்ள செல்லப்பா ஹோட்டலுக்கு சென்றோம்.
                       ஹோட்டலானது மதிய நேர பரபரப்பில் இருந்து விலகி கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் வேளையில், அதே சமயத்தில் மாலை நேரத்திற்கான தயாரிப்புகள் பலமாய் இருக்கவும், அந்த நேரத்தில் நாங்கள் அங்கே உட்புகுந்தோம்.சின்ன ஹோட்டல் தான்.ஒரு சிறு ஊரில் வைக்கப்பட்டிருக்கும் ஹோட்டல் போலதான் எந்தவித ஆடம்பர விசயங்களும் இல்லாமல், ஒரே ஒரு பிளக்ஸ் போர்டு மட்டும் தான் இந்த ஹோட்டலின் அடையாளம்.
 ஓரிருவர் சாப்பிட்டுக்கொண்டிருக்க, நாங்களும் அங்கே ஆஜரானோம்.அனைத்து கறிக்குழம்புகளும் குண்டாக்களில் வைக்கப்பட்டு நம்மை வரவேற்றன, கூடவே மணமும்.புரோட்டாக்களும் ரெடியாகிக் கொண்டிருந்தன.


           கூட வந்தவர்கள் கொஞ்சம் அரசியல் பின்புலத்தில் இருப்பதால் என்னவோ அங்கே வழக்கம் போலவே கொஞ்சம்  கூடுதல் கவனிப்பு ஏற்பட்டது எங்களுக்கு.வந்து கேட்ட பணியாளரிடம் என்ன இருக்கு என்று வினவவும், வழக்கம் போலவே ஒப்புவித்தார்.சுடச்சுட தயாராகி இருக்கும் நாட்டுக்கோழி வறுவல், காடை வறுவல், புறா வறுவல் என அடுக்கவும், அனைத்திலும் ஒவ்வொரு பிளேட் என சொல்ல, அடுத்த பத்தாவது நிமிடத்தில் வந்து சேர்ந்தது.
                      மிளகு தூவி, நன்கு தோசைக்கல்லில் பிரட்டி சூடாய் வாழை இலையில் வைத்தபோது இலை பொசுங்கி நல் மணத்தினை தந்தது. ஒவ்வொன்றும் செம டேஸ்ட்.புறா மற்றும் காடைகளில் எலும்புதான் இருக்கும்.எங்காவது எலும்புகளில் கொஞ்சம் புஷ்டியாய் சதை இருக்கும்.ஆனால் நன்கு மசாலாவில் வெந்து, உப்பு, காரம் என அளவாய் இருக்கும் போதும், பின் தனியாய் தோசைக்கல்லில் வெங்காயம், கறிவேப்பிலை, கொஞ்சம் மிளகுத்தூள் சேர்த்து எண்ணெய்யோடு பிரட்டப்பட்டிருக்கும் போது அதன் சுவை தனித்து தெரியும்.எலும்போடு சதையை சுவைக்கும் போது செம ருசியாய் இருக்கும்.மெலிதான எலும்புகள் பற்களில் கடிபடும் போது ஏற்படுகிற சுவை இருக்கிறதே…ஆஹா அது தனி இன்பம்.

              காடை, புறா, நாட்டுக்கோழி என எதையும் மிச்சம் வைக்கவில்லை.அனைத்தின் ருசியும் எங்களை மயக்கி இருந்ததால் மீண்டுமொருமுறை வரிசையாய் ஆர்டர் செய்து காலி செய்தோம்.
புரோட்டா..நன்கு மொறுகலாக வேண்டும் என்று சொல்லிவிட்டதால், மொறு மொறு வென்று கொண்டு வைத்தனர்.செம டேஸ்ட்.அந்த புரோட்டாவுக்கு கொடுத்த திக்கான குழம்பு செம காம்பினேசன்.தேங்காய் போட்டு வைக்கப்பட்டிருந்த மட்டன் குழம்பு செம அருமை.புரோட்டாவை பிச்சி போட்டு, குழம்பை நிறைய ஊத்தி பிரட்டி, ஊறவைத்து சாப்பிடுவது ஒரு வகை.மொறுகலான புரோட்டா துண்டை கெட்டியான குழம்பில் தொட்டு மொறு மொறுவென சாப்பிடுவது இன்னொரு வகை.இரண்டுமே செம தான்.

                   செல்லப்பா ஹோட்டலில் மொறுகலான புரோட்டாவுக்கு திக்கான குழம்பு செம டேஸ்ட்.இரண்டு மொறு மொறு புரோட்டாக்களும், குழம்பும் ஆசை தீர உள்ளே சென்றன.திருப்தியாய் வெளிவந்தோம்.விலையும் குறைவுதான்.டேஸ்ட் மிக மிக அதிகம்.
சேலம் பகுதிகளில் கொஞ்சம் காரம் அதிகமாகவே இருக்கும்.ஆனால்                   டேஸ்ட் செமயாக இருக்கும்.நாமக்கல்லில் செல்லப்பா நன்கு  ருசியுடன், அளவான காரத்துடன் இருப்பது செம.
                கண்டிப்பா அந்தப்பக்கம் போனீங்கன்னா காடை புறா, நாட்டுக்கோழி, மொறுகலான புரோட்டா, திக்கான மட்டன் குழம்பினை மிஸ் பண்ணிடாதீங்க.
               நாமக்கல் டூ பரமத்தி ரோட்டில் மின்வாரியத்தினை தாண்டி இடது புறம் இருக்கிறது

நேசங்களுடன்

ஜீவானந்தம்

6 comments:

  1. வெள்ளிக்கிழமை அதுமா ஏன்டா என் வாயை புடுங்குறே?!

    ReplyDelete
    Replies
    1. ஆடி வெள்ளி ஸ்பெஷல்....ஹிஹிஹி

      Delete
  2. நெப்போலியனை அடிச்சிட்டு போய்ட்டு பகார்டி அடிச்சிட்டு போனதாக கதை விடுறீங்களே உங்களுக்கே நல்லா இருக்கா
    எதுக்கு இந்த வறட்டு ஜம்பம் / கவுரவம்

    ReplyDelete
    Replies
    1. பாஸ்...முதல்ல
      அனானியா வர்றத நிறுத்துங்க..எனது பேஸ்புக் பதிவுகளை பார்த்துட்டு இங்க வந்தா போதும்.

      Delete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....