Showing posts with label புரோட்டா. Show all posts
Showing posts with label புரோட்டா. Show all posts

Wednesday, September 16, 2020

கோவை மெஸ் - ஹோட்டல் ரோடுசைட், பாண்டமங்கலம், வேலூர் - ROADSIDE HOTEL, PANDAMANGALAM, VELUR, NAMAKKAL

 ROADSIDE HOTEL, PANDAMANGALAM, VELUR

                         நம்ம மாப்ள விவசாயி பாலு தோட்டத்திற்கு போன போது ஒரு கடையை பத்தி சொன்னாப்ல.நான்கு நண்பர்கள் சேர்ந்து ஒரு ஹோட்டல் நடத்துவதாகவும், அந்த ஏரியாவில் கொஞ்சம் டேஸ்ட்ல பிரபலம் ஆகிட்டு இருக்குன்னு சொன்னாப்ல..

                சரி..சொல்லு மாப்ள.. அந்தப்பக்கம் போலாமுனு சொன்னேன்.

            சரி.கிளம்பு ஒரு எட்டு போய்ட்டு வந்துடலாம்னு சொல்ல போன இடம் வேலூர் பக்கத்துல இருக்கிற பாண்ட மங்கலம்.

                இந்த ஏரியாவுல ஆட்டுக்கறி ரொம்ப பேமஸா இருந்தது.600 ரூபாய்க்கு விற்ற காலத்தில் 265 க்கு விற்ற ஊர்.ஆனா இப்பொழுது நார்மல் ரேட்டுக்கு வந்த ஊர்.பக்கத்தில் இருக்கும் ஜேடர்பாளையம் என்கிற ஊர் காட்டன் சேலைகளுக்கு பிரபலம். அந்த ஊர் செல்லும் வழியில் பாண்டமங்கலம்.

            அங்கே ரோட்சைடு ஹோட்டல் என்கிற பெயரில் புளிய மரத்தின் அடியிலே..(புஷ்பலதா மடியிலே).புளியமரம்னு சொன்னாலே நம்ம விஜய் டிவி தங்கதுரை ஞாபகம்தான் வருகிறது.


            கீற்று கொட்டகையில் மூங்கில் தட்டிகளை வைத்து மூன்று டேபிள்கள், இரண்டு கிச்சன்கள் என அமைத்து கொஞ்சம் விசாலமாக இந்த ஹோட்டலை அமைத்திருக்கின்றனர்.சீரியல் லைட் வெளிச்சத்தில் ஹோட்டல் மின்னிக் கொண்டிருக்க உள் நுழைந்தோம்.

                கஸ்டமர்கள் பார்சலுக்கு வெயிட் பண்ணி கொண்டிருக்க, அப்பொழுது தான் காலியான டேபிளில் அமர்ந்தோம்.கல்லில் வெந்து கொண்டிருந்த பொன்னிற புரோட்டோக்களை பார்க்க ஆசை அதிகமானது.புரோட்டாவையே சாப்பிடுவோம் என இலையை போட சொல்லி கொண்டு வரச்சொன்னோம்.


                            சுடச்சுட புரோட்டோ லேயர் லேயராய் பொன்னிறமாய் கல்லில் வெந்து, முறுகலான வாசனையில் பார்க்கவே பசியை தூண்டும் விதத்தில் இருந்த புரோட்டாவை பிய்த்து போட சொன்னோம்.


                            சூடான குருமாவை அதன்மேல் ஊத்தி பிசைந்து குழைந்து, ஒரு விள்ளலை எடுத்து வாயில் போட்டால் சொர்க்கம் பக்கத்தில் தெரிந்த நிலையை அடைந்தோம்.


            வாவ்..புரோட்டாவும் குருமாவும் ஒன்று சேர்ந்து செம சுவையை தந்தது.

                    பன் பரோட்டாவினை மாஸ்டர் நல்ல டேஸ்டியாக போடுவார் என சொல்ல அதில் இரண்டை ஆர்டர் செய்தோம்.குட்டியாய் அழகாய் வட்ட வடிவத்துடன் மொறுமொறுவுடன், பொன்னிறமாக புரோட்டா லேயர் லேயராக வர, அதில் சிக்கன் குருமாவினை ஊற்ற, அது அதனுடன் ஓபிஎஸ் இபிஎஸ் போல இணைந்து நல்ல சுவையை தந்தது.



                        புரோட்டா எப்பொழுது சாப்பிட்டாலும், அதனுடன் ஜோடி சேரும் குருமாவினை பொருத்தே அதன் சுவை தெரியவருகிறது.சிக்கன் குழம்பில் ஊற வைத்த புரோட்டா அப்படியே தொண்டையில் வழுக்கி கொண்டு போவது செம..சிக்கன் துண்டுகளும் நன்கு வெந்து அதன் சுவையை அதிகரிக்கிறது.

                        இந்த கடையில் வாத்து வறுவல், குடல், சிக்கன் வறுவல் என அனைத்தும் கிடைக்கிறது. இன்னொரு சமயத்தில் அந்தபக்கம் போனால் அனைத்தையும் சுவைக்க வேண்டும் என்கிற ஆவலை தருகிறது.

                கடையில் புரோட்டாவிற்காக கூடும் கஸ்டமர்களே இதற்கு சாட்சி. அந்தப்பக்கம் போனீங்கன்னா சாப்பிட்டு பாருங்க.

                புரோட்டா ஏ ஒன்..மாஸ்டர் வேற காரைக்குடியை சேர்ந்தவராம்.பின்னி பிடல் எடுக்கிறார் சுவையில்..

                புரோட்டா ரூ.12ம், சிக்கன் வறுவல் ரூ.60 க்கும் கிடைக்கிறது.ஆர்டரின் பேரில் சைவம் அசைவம் இரண்டும் செய்து கொடுக்க தயாராக இருக்கிறார்கள்.

                        நண்பர்களில் ஒருவர் கேட்டரிங் முடித்து இருப்பதால் சுவையில் பல மாற்றங்களை அவ்வப்போது செய்கிறாராம்.கிராமம் போன்ற ஊரில் துணிந்து ஹோட்டலை ஆரம்பித்த அந்த நால்வருக்கு வாழ்த்துக்கள்.

நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Friday, August 11, 2017

கோவை மெஸ் - செல்லப்பா ஹோட்டல், பரமத்தி ரோடு, நாமக்கல்.

                 பகல்வேளையில் பகார்டியின் துணை கொண்டு சுற்றித் திரிந்ததாலும், மதிய வேளை முடிகின்ற தருவாயில் இருந்ததாலும், வயிற்றுக்கு உணவிட வேண்டுமே என்கிற அக்கறையினாலும், சாப்பிடுகின்ற உணவு நல்ல காரஞ்சாரமாக இருக்க வேண்டும், அதுவும் பகார்டிக்கு இன்னும் சாதகமாய் அமைய வேண்டும் என தெளிவாய் சொல்லிவிட்டதால் நம் சகலபாடிகள் செல்லப்பா ஹோட்டலுக்கு செல்லலாம், அங்கு செமயாக இருக்கும் என்று முடிவெடுத்ததால் பரமத்தி சாலையில் உள்ள செல்லப்பா ஹோட்டலுக்கு சென்றோம்.
                       ஹோட்டலானது மதிய நேர பரபரப்பில் இருந்து விலகி கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் வேளையில், அதே சமயத்தில் மாலை நேரத்திற்கான தயாரிப்புகள் பலமாய் இருக்கவும், அந்த நேரத்தில் நாங்கள் அங்கே உட்புகுந்தோம்.சின்ன ஹோட்டல் தான்.ஒரு சிறு ஊரில் வைக்கப்பட்டிருக்கும் ஹோட்டல் போலதான் எந்தவித ஆடம்பர விசயங்களும் இல்லாமல், ஒரே ஒரு பிளக்ஸ் போர்டு மட்டும் தான் இந்த ஹோட்டலின் அடையாளம்.
 ஓரிருவர் சாப்பிட்டுக்கொண்டிருக்க, நாங்களும் அங்கே ஆஜரானோம்.அனைத்து கறிக்குழம்புகளும் குண்டாக்களில் வைக்கப்பட்டு நம்மை வரவேற்றன, கூடவே மணமும்.புரோட்டாக்களும் ரெடியாகிக் கொண்டிருந்தன.


           கூட வந்தவர்கள் கொஞ்சம் அரசியல் பின்புலத்தில் இருப்பதால் என்னவோ அங்கே வழக்கம் போலவே கொஞ்சம்  கூடுதல் கவனிப்பு ஏற்பட்டது எங்களுக்கு.வந்து கேட்ட பணியாளரிடம் என்ன இருக்கு என்று வினவவும், வழக்கம் போலவே ஒப்புவித்தார்.சுடச்சுட தயாராகி இருக்கும் நாட்டுக்கோழி வறுவல், காடை வறுவல், புறா வறுவல் என அடுக்கவும், அனைத்திலும் ஒவ்வொரு பிளேட் என சொல்ல, அடுத்த பத்தாவது நிமிடத்தில் வந்து சேர்ந்தது.
                      மிளகு தூவி, நன்கு தோசைக்கல்லில் பிரட்டி சூடாய் வாழை இலையில் வைத்தபோது இலை பொசுங்கி நல் மணத்தினை தந்தது. ஒவ்வொன்றும் செம டேஸ்ட்.புறா மற்றும் காடைகளில் எலும்புதான் இருக்கும்.எங்காவது எலும்புகளில் கொஞ்சம் புஷ்டியாய் சதை இருக்கும்.ஆனால் நன்கு மசாலாவில் வெந்து, உப்பு, காரம் என அளவாய் இருக்கும் போதும், பின் தனியாய் தோசைக்கல்லில் வெங்காயம், கறிவேப்பிலை, கொஞ்சம் மிளகுத்தூள் சேர்த்து எண்ணெய்யோடு பிரட்டப்பட்டிருக்கும் போது அதன் சுவை தனித்து தெரியும்.எலும்போடு சதையை சுவைக்கும் போது செம ருசியாய் இருக்கும்.மெலிதான எலும்புகள் பற்களில் கடிபடும் போது ஏற்படுகிற சுவை இருக்கிறதே…ஆஹா அது தனி இன்பம்.

              காடை, புறா, நாட்டுக்கோழி என எதையும் மிச்சம் வைக்கவில்லை.அனைத்தின் ருசியும் எங்களை மயக்கி இருந்ததால் மீண்டுமொருமுறை வரிசையாய் ஆர்டர் செய்து காலி செய்தோம்.
புரோட்டா..நன்கு மொறுகலாக வேண்டும் என்று சொல்லிவிட்டதால், மொறு மொறு வென்று கொண்டு வைத்தனர்.செம டேஸ்ட்.அந்த புரோட்டாவுக்கு கொடுத்த திக்கான குழம்பு செம காம்பினேசன்.தேங்காய் போட்டு வைக்கப்பட்டிருந்த மட்டன் குழம்பு செம அருமை.புரோட்டாவை பிச்சி போட்டு, குழம்பை நிறைய ஊத்தி பிரட்டி, ஊறவைத்து சாப்பிடுவது ஒரு வகை.மொறுகலான புரோட்டா துண்டை கெட்டியான குழம்பில் தொட்டு மொறு மொறுவென சாப்பிடுவது இன்னொரு வகை.இரண்டுமே செம தான்.

                   செல்லப்பா ஹோட்டலில் மொறுகலான புரோட்டாவுக்கு திக்கான குழம்பு செம டேஸ்ட்.இரண்டு மொறு மொறு புரோட்டாக்களும், குழம்பும் ஆசை தீர உள்ளே சென்றன.திருப்தியாய் வெளிவந்தோம்.விலையும் குறைவுதான்.டேஸ்ட் மிக மிக அதிகம்.
சேலம் பகுதிகளில் கொஞ்சம் காரம் அதிகமாகவே இருக்கும்.ஆனால்                   டேஸ்ட் செமயாக இருக்கும்.நாமக்கல்லில் செல்லப்பா நன்கு  ருசியுடன், அளவான காரத்துடன் இருப்பது செம.
                கண்டிப்பா அந்தப்பக்கம் போனீங்கன்னா காடை புறா, நாட்டுக்கோழி, மொறுகலான புரோட்டா, திக்கான மட்டன் குழம்பினை மிஸ் பண்ணிடாதீங்க.
               நாமக்கல் டூ பரமத்தி ரோட்டில் மின்வாரியத்தினை தாண்டி இடது புறம் இருக்கிறது

நேசங்களுடன்

ஜீவானந்தம்
இன்னும் கொஞ்சம்...

Tuesday, October 15, 2013

கோவை மெஸ் - தாஸ் லாட்ஜ் கேண்டீன், நஞ்சப்பா ரோடு, உப்பிலிபாளையம், கோவை

தாஸ் லாட்ஜ் கேண்டீன்
கோவையில நஞ்சப்பா ரோடு உப்பிலிபாளையம் ஏரியா அப்படின்னாலே மோட்டார் பம்பு உதிரி பாகங்கள் எலக்ட்ரிகல் சாமான்கள் மற்றும் ஹார்டுவேர் கடைகள் தான் ஞாபகத்துல வரும்.ஆனா அங்கயும் ஒரு ஹோட்டலோட புரோட்டா ஞாபகத்துக்கு வரும்.அதுதான் தாஸ் லாட்ஜ் கேண்டீன்.
கிட்டத்தட்ட ரொம்ப வருசமா இருக்கு இந்த கடை.சின்ன கடை தான்.டீ பஜ்ஜிக்காக ஆரம்பித்த கடை இன்று ஒரு ஹோட்டலாக உருவெடுத்து இருக்கிறது.உட்கார்ந்து சாப்பிடக்கூடிய இடம் குறைவுதான்.ஆனால் அதைப்பொருட்படுத்தாமல் நின்று கொண்டே சாப்பிட்டு விட்டு செல்லும் வாடிக்கையாளர்கள் தான் அதிகம்.காலையில் இருந்து இரவு வரைக்கும் ஓயாமல் வியாபாரம் நடக்கும் இடம்.
காலையில் டீ காபி டிஃபன், போண்டா பஜ்ஜி வகைகளுடன் ஆரம்பிக்கிற இந்த கடை இரவு வரை நீடிக்கிறது.மதியம் விதவிதமான பலவகை சாதங்களுடன் பொட்டலமாக கட்டி விற்கின்றனர்.தக்காளி சாதம், தயிர் சாதம், பிரியாணி, சாம்பார் சாதம் என நிறைய வெரைட்டிகள் இருக்கின்றன.
அதே மாதிரி எண்ணெய் பலகாரங்களில் வடை, போண்டா, பஜ்ஜி, உளுந்து வடை, மசால் வடை, முட்டைப்போண்டா, மிளகாய் பஜ்ஜி, என ஏகத்துக்கும் இருக்கிறது.பலகாரங்களின் தட்டு காலியாக காலியாக அனைத்து வகைகளும் அவ்வப்போது பக்கத்துலயே இருக்கும் போண்டா மாஸ்டரின் கண்ணும் கருத்துமான கைவண்ணத்தில் சூடாக நிரம்பிக்கொண்டே இருக்கும்.
மதியவேளைக்கு ஒரு பொட்டலம் சாப்பாடு வாங்கிக் கொண்டு கூட ஏதாவது ஒரு பலகாரத்தினை வாங்கிகொண்டு இருக்கிற இடத்தில் அமர்ந்தோ நின்று கொண்டோ சாப்பிட்டால் செம டேஸ்டாக இருக்கும்.அனைத்து சாப்பாடுகள் வெளியில் தயாராகி இங்கு விற்பனைக்கு மட்டும் வருகின்றன அதுவும் சூடாக...
சாயந்திர வேளையில் இங்கு தயாராகும் புரோட்டாக்கள் செம டேஸ்டாக இருக்கும்.மாலை 4 மணி முதல் புரோட்டா விற்பனை சூடுபிடிக்க ஆரம்பித்துவிடும்.சுடச்சுட புரோட்டா சாப்பிடனுமா இந்த கடைக்கு போங்க.குருமா, முட்டைமசால், சிக்கன் குருமா என எல்லாம் இருக்கிறது புரோட்டாவிற்கு தொட்டுக்கொள்ள...



இட வசதிமட்டும் தான் இல்லை.ஆனால் கூட்டம் அதைப்பத்தி கவலைப்படுவதாக இல்லை.நின்று கொண்டே சாப்பிட்டுவிட்டு தட்டினை ...இடத்தினை காலி செய்கின்றனர்.
பக்கத்து மாநிலமான கேரளாவிலிருந்து வரும் சேட்டன்கள் அதிகம் இங்கு குவிவதைப் பார்க்கலாம்.குறைந்த விலை, செமத்தியான டேஸ்ட் இருப்பதால் கூட்டம் எப்பவும் இருக்கிறது.அதுமட்டுமல்ல அந்த ஏரியாவில் இருக்கிற அத்துணை கடைக்காரர்களும் ஆபத்பாந்தவனாய் இருக்கிறது இந்த கடை.அந்த ஏரியாவில் புகழ்பெற்ற கடை இது ஒன்றுதான்.

நேசங்களுடன்
ஜீவான்ந்தம்

இன்னும் கொஞ்சம்...

Thursday, July 18, 2013

கோவை மெஸ் – பர்மா பாய் கடை, நேரு ஸ்டேடியம், கோவை

நேத்து காந்திபுரத்துல இருந்த போது நஸ்ரியாவின் தீவிர ரசிகரும், கோவை மாவட்ட ரசிகர் மன்ற தலைவரும், அவ்வப்போது ஆவிப்பா எழுதி அடுத்தவங்களை குளிர் காய்ச்சல் பட வைக்கிறவருமான கோவை ஆவி அவர்களிடமிருந்து போன்.சென்னையில் இருந்து கவியாழி கண்ணதாசன் அவர்கள் வர்றார் அப்படின்னு...சரி எங்காவது மீட் பண்ணலாம் அப்படின்னு ப்ளான் போட்டு உலக சினிமாரசிகன் அவர்களையும் வரச்சொல்லி அழைப்பு விடுத்தேன்....அவரும் அனுஷ்காவில் பறந்தோடி வந்தார்.அதற்குள் ஆவியும் கவியும் வந்து விட கோவை வ.உ.சி பார்க்கில் சந்தித்தோம்.  
அவர் வந்திறங்கிய நேரம் பசி நேரம் ஆதலால் சாப்பிட்டுக்கொண்டே பேசலாமே என்று முடிவெடுத்து போன இடம் பர்மா பாய் கடை..இந்த கடை புரோட்டாவிற்கும் பிரியாணிக்கும் பேமசான கடை...எந்த நேரத்தில் போனாலும் சூடான புரோட்டா கிடைக்கும்...(அதுக்குன்னு நடுராத்திரி போயிடாதீங்க).அதுக்கு மேட்சான குருமா கிடைக்கும்..
கடையில் தற்போது வாஸ்து படி ஒரு சில மாற்றங்களை செய்து இருக்கிறார்கள்..முன்பு கடைக்குள் நுழையும் முன்பே சுட சுட புரோட்டா போட்டு கொண்டு இருப்பார்கள்.ஆவி அடிக்கும்...இது புரோட்டா ஆவி..அப்புறம் சூடான கல்லு ஆவி.....இப்போது அந்த இடத்தினை ஒரு சின்ன ரூமாக பார்டிசன் பண்ணி உள்ளே தீயா வேலை செய்து கொண்டிருக்கின்றனர் புரோட்டா மாஸ்டர்கள்...புரோட்டா சுடும் காட்சி தெய்வ தரிசனமாக ஆகிவிட்டது இப்போ...
சரி விசயத்திற்கு வருவோம்...நாங்கள் உள்ளே நுழைந்தவுடன் சாப்பிட்டுக்கொண்டிருந்த ஓரிரு அம்மணிகளும் வெளியேறியது மிக வருத்தமாக இருந்தது.எனினும் மனதை சாந்தப்படுத்திக்கொண்டு தோதான இடம் பார்த்து அமர்ந்து கொண்டோம்...
புரோட்டா மற்றும் பெப்பர் சிக்கன் ஆர்டர் பண்ணினோம்..ஒரு சில நிமிடங்களிலேயே ஆவி பறக்க புரோட்டா வந்தது..எடுத்து இலையில் வைக்க பூப்போல இருந்தது.மிக மிருதுவாக..பொல பொலவென்று...தட்டில் வைத்து குருமாவை ஊற்றி ஊறவைத்து கொஞ்சம் கொஞ்சமாக பிய்த்து சாப்பிட...ஆகா...செம டேஸ்ட்...குருமாவும் புரோட்டாவும் உள்ளே போனதே தெரியவில்லை..ஒரு தட்டு முழுக்க வைத்திருந்த புரோட்டா சீக்கிரம் காலியாக, இன்னொரு பிளேட் ஆர்டர் செய்யப்பட்டது நஸ்ரியாவின் தங்க தலைவனால்.


அதற்குள் பெப்பர் சிக்கன் வரவே அதையும் ஒரு கை.... சாரி ....ஒரு வாய் பார்த்தோம். அதுவும் செம டேஸ்ட்..உதிர்த்து விடப்பட்ட சிக்கன் துண்டுகள் எலும்பில்லாமல் பெப்பர் மணத்துடன் நன்கு சுவையாக இருந்தது.டிரையாக இருந்தாலும் மிக நன்றாக இருந்தது..நான் இந்த பதிவு தேத்த போட்டோ எடுப்பதற்குள் பெப்பர் சிக்கன் காலியானதே தெரியவில்லை..
புரோட்டா பிரியர்கள் நிறைய குவியும் இடம்.அதுபோலவே அம்மணிகளும்.சனி ஞாயிறு கூட்டம் அள்ளும்.அருகிலேயே வ.உ.சி.பார்க் இருப்பதால் எப்பவும் ரஷ் ஆக இருக்கும்.புரோட்டா விலை 10 மற்றும் பெப்பர் சிக்கன் விலை 110.
குருமாவுக்கு பதில் இன்னும் நிறைய வெரைட்டி இருக்கிறது.அது எல்லாம் காசு...பணம் துட்டு மணி.மணி...குருமா மட்டும் புரோட்டாவிற்கு இலவசம்..சாரி விலையில்லா குருமா....
சாப்பிட்டு முடித்துவிட்டு வெளியேறி வளைச்சி வளைச்சி போட்டோ எடுத்து ஒரு மினி பதிவர் சந்திப்பினை அரங்கேற்றினோம்.அப்புறம் கைகுலுக்கலுடன் விடை பெற்றோம்.
பர்மா பாய் கடை என்பதால் என்னவோ அயல்நாட்டு பேரிச்சை பழம் வகைகள் கடை கவுண்டரில் கிடைக்கிறது.கடை இருக்கிற ஏரியா வ.உ.சி பார்க் ஸ்டேடியம்.இதுக்கு பக்கத்துலயே பூமாராங் ஐஸ்கிரீம் கடை இருக்கு..அங்க போனா சும்மா...ஜில்லுனு இருக்கும்.


நேசங்களுடன்
ஜீவானந்தம்




இன்னும் கொஞ்சம்...

Wednesday, June 19, 2013

கோவை மெஸ் - நூராணி பிரியாணி ஹோட்டல், சாய்பாபா காலனி, கோவை

நூராணி பிரியாணி ஹோட்டல்.
பீப் சாப்பிடணும் அப்படின்னா உக்கடம், கோட்டை மேடு அப்புறம் முஸ்லிம் அன்பர்கள் வசிக்கிற இடத்துக்குத்தான் போகனும் அப்படிங்கிற எண்ணம் இருந்துச்சு.ஆனா நம்ம ஏரியாவான சாய்பாபா காலனியில் மெயின் ரோட்டிலேயே இரண்டு கடைகள் இருக்கின்றன.அதில் ஒன்று தான் இந்த நூராணி.இன்னொரு கடையிலும் சுவை நன்றாக இருக்கும்.அதைப்பற்றின விவரங்கள் அடுத்த பதிவில் பார்க்கலாம்.இப்போ நூராணி.
இந்த பேரைப் பார்த்தாலே நம்ம முஸ்லிம் அன்பர்களோட ஹோட்டல் என்பது தெரியவரும்.இந்த கடைக்கு எப்போ போனாலும் சூடான சுவையான புரோட்டா கிடைக்கும்.அப்புறம் நான் வெஜ் அயிட்டத்துல பீஃப் சில்லி, பீஃப் சுக்கா, மற்றும் பிரியாணி, காடை வறுவல், சிக்கன், மட்டன் என்ன மற்றவைகளும் இருக்கிறது.

சின்ன கடைதான்.இப்போது கொஞ்சம் நவீனப்படுத்தப்பட்டு இருக்கிறது.கடைக்கு உள்ளே நுழையும் முன்பே நம்மை வாசம் உள்ளே இழுத்துக்கொண்டு செல்வது உறுதி.சுடச்சுட புரோட்டா சதுரவடிவில் போட்டுக்கொண்டு இருப்பர்.மிக சுவையாக இருக்கும்.அந்த புரோட்டாவிற்கு சிக்கன் குருமா ஊற்றி சாப்பிட்டால் செமயாக இருக்கிறது.இல்லை எனில் பீப் வறுவலோடு சாப்பிட இன்னும் டேஸ்டாக இருக்கிறது.


பிரியாணி அப்படி ஒன்றும் சுவை இல்லை.மட்டன் மட்டும் நன்றாக வெந்து இருக்கிறது.பாய்கடை பிரியாணி போல இல்லை.பீப் சுக்கா நன்றாக இருக்கிறது.நம்மளை மாதிரி ஆட்களுக்கு இந்த கடை பெஸ்ட்.பார்சல் வாங்கிட்டு போய் சாப்பிடற ஆட்களும் இருக்கிறார்கள்.
கடைக்கு உள்ளே நுழையும் போது சூடான கல்லில் இருந்து எடுத்துப்போட்ட புரோட்டாக்கள் உடனடியாக வாடிக்கையாளர்களின் இலைக்கு சென்று சீக்கிரம் காலியாகிக்கொண்டே இருக்கின்றன.புத்தம் புது புரோட்டாக்கள் ரெடியாகிக்கொண்டே இருக்கின்றன.

விலையும் குறைவாகத்தான் இருக்கிறது.சுட சுட புரோட்டா சாப்பிட போகனும் என்றால் கண்டிப்பாக போகலாம்.சாய்பாபா காலனியில் கண்ணன் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் அருகே இருக்கிறது.

நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Friday, March 1, 2013

கோவை மெஸ் - நியூ கமாலியா ஹோட்டல், விருதுநகர்

கோவை மெஸ் - நியூ கமாலியா ஹோட்டல், விருதுநகர்
நெல்லையில் இருந்து ரிட்டர்ன் வரும்போது விருதுநகர் ஊர் வந்தவுடன் புரோட்டா ஞாபகம்..அட....இங்க புரோட்டா பேமஸ் ஆச்சே ...சரி ஒரு பதிவை சாப்பிடலாம்னு சாரி தேத்தலாம்னு பைபாஸ் ரோட்டில் இருந்து இரண்டு கிலோமீட்டர் பயணித்து விருது நகர் பஸ் ஸ்டாண்ட் வந்தோம்.உள்ளே ஊருக்குள் நுழையும் போதே சின்ன சின்ன ஹோட்டல்களில் சூடாய் அந்த மதிய வேளையிலும் கல்லிலே எண்ணையில் பொரித்து ரெடியாகிக் கொண்டிருந்தது.
அங்கே இருந்த ஆட்டோ டிரைவரிடம் எந்த ஹோட்டல் நன்றாக இருக்கும் என்று நம்ம சிங்கத்தின் உள்ளே இருந்து கேட்கவும் அவர்கள் நம் வண்டியை பார்த்துவிட்டு கொஞ்சம் பெரிய ஹோட்டலாக சொல்லிவிட்டனர். விருதுநகரிலேயே ஏசி போட்ட ஹோட்டல் இதுவாகத்தான் இருக்கும் போல...வண்டியை கொஞ்ச தூரம் முன்பே நிறுத்திவிட்டு அந்த அடிக்கிற வெய்யிலில் நடக்க கொஞ்சம் சோர்ந்து தான் போனோம்...அம்புட்டு வெயில்...இருக்கிற கொஞ்ச நஞ்ச பூஸ்டும் காணாமல் போகவும் ஹோட்டலை அடையவும் சரியாய் இருந்தது.
 
 
 ஹோட்டல் .நியூ கமாலியா போர்டில் நிறைய எழுத்துக்கள் காணோம்.. ஹோட்டல் முழுக்க முழுக்க வெறும் போர்டுகளால் நிறைந்து இருக்கிறது.உள்ளே நுழைய மக்கள் கொஞ்சம் நிறைந்து இருந்தனர்.நம்மைப்பார்த்தவுடன் மேலே ஏசி இருக்கிறது என்று அனுப்பிவைத்தனர்.
கொஞ்சம் பேர் மட்டுமே ரசித்து ருசித்து கொண்டு இருந்தனர்.எப்பவும் போல வாஸ்து படி அமர்ந்து விட்டு நிமிர்கையில் கையில் ஆர்டர் எடுக்க தயாராய் சர்வர்...என்ன ஸ்பெசல் என்று கேட்க புறா வறுவல் இருக்கிறது என்று சொல்லவும் புரோட்டாவை விட்டு விட்டு புறாவை பிடிக்க சொன்னோம்.
புறாவுக்கு இணையாய் கோழி இருக்கட்டுமே என்று பிரியாணி சொன்னோம்.
அப்படியே ஒரு ஆட்டு குடல் ஒன்றும் சொல்ல பறந்தோடி சென்றார் புறாவினை பிடிக்க...
கொஞ்ச நேரத்தில் தெம்பாய் இருக்க வேண்டும் என்பதற்காகவே சூப் வந்தது. அதை குடித்து முடிப்பதற்குள் பிரியாணி வர...கோழி வேட்டையில் இறங்கினோம்.
பாசுமதி அரிசி தான்..கொஞ்சம் சுமார்தான்.அரிசி உதிரியாகவே இல்லை.கோழி அப்படியே பாதி பீஸ் ...நல்ல பொல பொல வென்று நன்றாக வெந்து இருந்தது.ஆனால் கொஞ்சம் கூட கோழியின் உடம்பில் மசாலா நிறம் இல்லை..ஆனால் சுவையாய் இருந்தது.

அடுத்து புறா நல்ல மணத்துடன் நம்மை நோக்கி தூது செல்ல வருவது போல குழம்பு பதத்தில் வந்தது.முழு புறாவாக நன்கு வேக வைக்கப்பட்டு நன்றாக இருந்தது.ரொம்ப சின்ன புறா போல...சைஸ் சிறிது தான்.சுவை நன்றாக இருக்கிறது.
அடுத்து வந்த மட்டன் குடல் நன்றாகவே இல்லை.குடல் குழம்பாய் வந்தது. பிரை செய்து கொடுங்கள் என்று சொல்லவும், குழம்பை வடிகட்டி விட்டு வெங்காயம் போட்டு ஃபிரை செய்து கொண்டு தந்தனர்.சுவைத்து பார்க்கையில் நான் சமைக்கும் அளவிற்கு கூட இந்த குடல் குழம்பு இல்லை.அவ்ளோ மோசம்.மணம், சுவை,  திடம் என்று திரி ரோசஸ் போல எதுவுமே இல்லை...
பில் வந்தது...விலை மிக அதிகம்.அந்த ஊருக்கு அதிக விலை.நல்ல வேளை..ஏசிக்கு என்று தனியாக பில் போடவில்லை.அந்தப்பக்கம் போனால் கண்டிப்பாக புரோட்டா இருக்கா என்று கேட்டு விட்டு அந்த ஹோட்டலுக்கு செல்லுங்கள்...
விருது நகர் வந்த நோக்கமே புரோட்டா சாப்பிடத்தான்..ஆனால் இந்த ஹோட்டலில் வந்து கேட்கவும் புரோட்டா மதியம் இல்லை என்று கை விரித்து விட்டனர்.ஆனால் சாயந்திரம் கிடைக்கும் என்று சொல்லிவிட்டனர்.ஒருவேளை புரோட்டா சாப்பிட்டால் பில் குறைவாக வரும் என்று தவிர்த்து விட்டனரா என்று தெரியவில்லை.வெளியூரில் இருந்து வரும் என்னைப்போன்ற சாப்பாட்டு ரசிகர்களுக்காவது வைத்து இருக்கலாம்.
இந்த ஹோட்டல் அருகிலேயே இரண்டு கடைகள் இருக்கின்றன.சுட சுட தயாராகிகொண்டிருந்தது.நாம் தான் ஏமாந்து விட்டோம் போல...
சரி..விருதுநகர் எண்ணைய் புரோட்டா தான் கிடைக்கல...நம்ம சாதா புரோட்டாவது நம்ம ரசிகர்களுக்கு காட்டலாம் என்று ஒரு கடையில் எடுத்த போட்டோ..

 நேசங்களுடன்
ஜீவானந்தம்


இன்னும் கொஞ்சம்...