Friday, September 1, 2017

கோவை மெஸ் - ஹோட்டல் சிந்தூரம், செராய் பீச் ஜங்சன் , கொச்சின், CHERAI BEACH, KOCHI

                  கேரளாவிற்கு எப்பொழுது சென்றாலும் கேரளாவின் பழமை மாறாத ஹோட்டல்களில்  சாப்பிடுவதுதான் பிடிக்கும்.ஆதிகாலத்து கண்ணாடி பொருத்தப்பட்ட மர ஷோகேஸில் வைக்கப்பட்டிருக்கும், புட்டு, இடியாப்பம், ஆப்பம், புரோட்டா, வடை வகைகள் போன்றவை நம்மை ஈர்க்கும்.காலையில் புட்டுக்கு காம்பினேசனாக கடலைக்கறியோ அல்லது நேந்திரன் பழமோ சேர்த்து சாப்பிடுவது கொஞ்சம் பிடிக்கும்.அதைவிட மிகவும் பிடித்தது புரோட்டாவும் பீஃப் கறியும் தான். காலையிலேயே இரண்டும் ரெடியாக இருக்கும்.சுட சுடச் சாப்பிடுவதில் அப்படி ஒரு அலாதியான இன்பம் இருக்கிறது.அதே போல் ஆப்பத்திற்கு அசைவம் என்றால் முட்டைக்கறியோ, பீஃப் கறியோ தான். அப்படித்தான் செராய் பீச்சிலேயும் ஒரு கடையை கண்டுபிடித்தோம்.செராய் பீச் ஒட்டி பல மாடர்ன் ஹோட்டல்கள் இருக்கின்றன.நம்மூர் உணவுகள் இட்லி, தோசை, பிரியாணி, சிக்கன் தந்தூரி, சிக்கன் ஷ்வர்மா போன்ற உணவு வகைகளை சாப்பிட சுத்தமாய் பிடிக்கவில்லை.எந்த ஊருக்கு போனாலும் அங்கு உள்ள மண் மணத்தோடு இருக்கும் உணவுகளை ஒரு கை பிடிப்பது தான் வழக்கமாக இருந்து கொண்டிருக்கிறது.அப்படித்தான் இந்த கேரளா பயணத்தின் போது சாப்பிட்ட உணவும்.


மதியம் என்றால் மட்டை அரிசியுடன் மீன் கறி, பொரிச்ச மீன், புளிசெரி, சம்மங்கி துவையல், ஒரு பொரியல், கூட்டு, அப்பளம் என இப்படித்தான் போகும்.இல்லை எனில் கேரளத்து பிரியாணி.சிக்கன், பீஃப், என விரும்பி சாப்பிட பிடிக்கும்.கப்பா எனப்படும் மரவள்ளி கிழங்கு மசியலுடன் பீஃப் கறி சேர்த்து சாப்பிட பிடிக்கும்.இல்லையேல் கப்பாவுடன் டபுள் ஆம்லேட் சேர்த்து சாப்பிட பிடிக்கும்.சரி..விஷயத்திற்கு வருவோம்.செராய் பீச் ஜங்க்சனில் அமைந்துள்ள ஒரு டிரெடிசனல் ஹோட்டலுக்குள் நுழைந்தோம்.அதே மர ஷோகேஸ்.வரிசையாய் வைக்கப்பட்டிருக்கும் புட்டு, ஆப்பம், புரோட்டா என உணவு வகைகள். காலை மதியம் இரவு என எல்லா வேளைகளிலும் அந்த ஹோட்டலிலேயே முடிந்தது.சுடச்சுட புரோட்டா, பீஃப் கறி, முட்டைகறி, கடலைக்கறி, கப்பா, மீன்கறி, மாந்தல், பொரிச்ச மத்தி, அயிலை என விரும்பிய நேரத்தில் எல்லாம் சாப்பிட்டோம்.போட்டி எனப்படும் குடல் கறி செம டேஸ்ட்.








கிட்டத்தட்ட மூன்று நாட்கள் கடலில் குளிப்பது, குடிப்பது, சாப்பிடுவது என இளைப்பாறிக் கொண்டிருந்தோம்.பீச் சென்றால் அங்கு அம்மணிகளை ரசிப்பது, இங்கே ஹோட்டல் என்றால் உணவுகளை ருசிப்பது என விரும்பியதை செய்து கொண்டிருந்தோம். கேரள உணவும் சரி, மதுவும் சரி எப்பவும் ஏமாற்றியதில்லை அந்தளவுக்கு ஒரிஜினல். கடவுளின் தேசம் சென்று வந்தாலே போதும் மனம் லேசானதாகி விடுகிறது.மனதும் உடலும் இளமையாய் இருக்க இந்த மாதிரி பயணங்கள் எப்பவும் நமக்கு தேவைப்படுகிறது.

நேசங்களுடன்
ஜீவானந்தம்

2 comments:

  1. மீன் குழம்பு என்னை பார்த்து கண் சிமிட்டுகிறது

    ReplyDelete
  2. வெள்ளிக்கிழமையா பார்த்து மீன், நண்டுன்னு போட்டு இம்சை பண்ணுறதே பொழப்பா போச்சு உனக்கு

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....