Showing posts with label போண்டா. Show all posts
Showing posts with label போண்டா. Show all posts

Saturday, May 10, 2014

கோவை மெஸ் – அபூர்வ விலாஸ், தேங்காய்ப்பால், கணபதி

அபூர்வ விலாஸ், தேங்காய்ப்பால், கணபதி
கணபதியில் தேங்காய்ப்பாலுக்கு ரொம்ப பேமஸான கடை சிவவிலாஸ்.அந்த கடை இப்போது செயல்படுவதில்லை.ஆனால் அந்த சிவவிலாஸ் குரூப்பில் இருந்து வந்து அதே இடத்தில் ஷெட் போட்டு புதிதாய் ஆரம்பித்து இருக்கிற ஒரு பலகாரக்கடைதான் இந்த அபூர்வ விலாஸ்.

எப்பவும் இந்த கடை ஒரே கூட்டமாத்தான் இருக்கும்.கடை முன்னாடி வண்டி நிறுத்த இடம் இருக்காது.அந்த வழியா போனால் பலகார வாசனை நம்மை இழுத்து உள்ள விட்டுடும் அப்படி ஒரு வாசனை அடிக்கும்....அப்படித்தான் நேத்து அந்த வழியா போகும் போது நம்மளையும் உள்ளே இழுத்து விட,

கடைக்குள்ள போனா ஷோகேஸ்ல போண்டா, வடை, பஜ்ஜி, கேழ்வரகு பகோடா, மசால் போண்டா இப்படி எதெதெல்லாம் எண்ணையில் மிதக்குதோ அதெல்லாம் இங்க சுடச்சுட சூடா இருக்குது.அதை விட முக்கியம் தேங்காய்ப்பால் தான்.எப்போதும் அடுப்பில் மிதமான சூட்டில் இருக்க, பலவித கலர்கலர் டோக்கன்களில் தேங்காய்ப்பாலுக்கான டோக்கன் வாங்கி கொடுக்க, இளஞ்சூடாய் நம் கைகளில் வந்தது தேங்காய்ப்பால்.

கொஞ்சம் கொஞ்சமாய் ருசிக்க தேவாமிர்தமாய் இருந்தது.அளவான இனிப்பில் மிக அமிர்தமாய் இருந்தது.அந்த சூட்டிலும் ஊதி ஊதி குடிக்க ரொம்ப சுவையாக இருந்தது.ஏலக்காய் மணத்துடன் மிக அற்புதமாய் இருக்க ரசித்து குடித்ததில் சீக்கிரம் தீர்ந்து போக, இன்னொரு டோக்கன் வாங்கி உடனடியாக ரீசார்ஜ் செய்து ருசிக்க ஆரம்பித்தேன்...ஆஹா என்ன சுவை...
விலையும் குறைவாகத்தான் இருக்கிறது.கிளாஸ் 8 ரூபாய் தான்.டீ குடிக்கிற செலவில் இது எவ்வளவோ மேல்.தேங்காய்ப்பாலுக்கு காம்பினேசனாக அனைவரும் வடை, போண்டா என வெளுத்துக் கட்டுகின்றனர்.எப்பவாது அந்தப்பக்கம் போனா சாப்பிட்டுப் பாருங்க.


எத்தனையோ வருடங்களுக்கு முன் வீட்டில் சாப்பிட்டது.இப்போதெல்லாம் இந்த மாதிரி தேங்காய்ப்பால் யார் சமைக்கிறார்கள் வீட்டில்.மிக ஆரோக்கியமான ஒரு பானம் இது.உளுந்து போட்டு செய்திருக்கும் தேங்காய்ப்ப்பாலில் எவ்வளவோ நன்மைகள் இருக்கின்றன.
டெக்ஸ்டூல் மேம்பாலம் முடியற இடத்தில் இந்த கடை இருக்கு.அருகில் கண்ணன் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் இருக்கிறது.தேங்காய்ப்பால் தான் இந்த கடையின் ஃபேமஸ்...டீ, காபி, போண்டா வடை என எல்லாம் வேற இருக்கிறது....போனா சாப்பிட்டு பாருங்க...

நேசங்களுடன்
ஜீவானந்தம்



இன்னும் கொஞ்சம்...

Tuesday, October 15, 2013

கோவை மெஸ் - தாஸ் லாட்ஜ் கேண்டீன், நஞ்சப்பா ரோடு, உப்பிலிபாளையம், கோவை

தாஸ் லாட்ஜ் கேண்டீன்
கோவையில நஞ்சப்பா ரோடு உப்பிலிபாளையம் ஏரியா அப்படின்னாலே மோட்டார் பம்பு உதிரி பாகங்கள் எலக்ட்ரிகல் சாமான்கள் மற்றும் ஹார்டுவேர் கடைகள் தான் ஞாபகத்துல வரும்.ஆனா அங்கயும் ஒரு ஹோட்டலோட புரோட்டா ஞாபகத்துக்கு வரும்.அதுதான் தாஸ் லாட்ஜ் கேண்டீன்.
கிட்டத்தட்ட ரொம்ப வருசமா இருக்கு இந்த கடை.சின்ன கடை தான்.டீ பஜ்ஜிக்காக ஆரம்பித்த கடை இன்று ஒரு ஹோட்டலாக உருவெடுத்து இருக்கிறது.உட்கார்ந்து சாப்பிடக்கூடிய இடம் குறைவுதான்.ஆனால் அதைப்பொருட்படுத்தாமல் நின்று கொண்டே சாப்பிட்டு விட்டு செல்லும் வாடிக்கையாளர்கள் தான் அதிகம்.காலையில் இருந்து இரவு வரைக்கும் ஓயாமல் வியாபாரம் நடக்கும் இடம்.
காலையில் டீ காபி டிஃபன், போண்டா பஜ்ஜி வகைகளுடன் ஆரம்பிக்கிற இந்த கடை இரவு வரை நீடிக்கிறது.மதியம் விதவிதமான பலவகை சாதங்களுடன் பொட்டலமாக கட்டி விற்கின்றனர்.தக்காளி சாதம், தயிர் சாதம், பிரியாணி, சாம்பார் சாதம் என நிறைய வெரைட்டிகள் இருக்கின்றன.
அதே மாதிரி எண்ணெய் பலகாரங்களில் வடை, போண்டா, பஜ்ஜி, உளுந்து வடை, மசால் வடை, முட்டைப்போண்டா, மிளகாய் பஜ்ஜி, என ஏகத்துக்கும் இருக்கிறது.பலகாரங்களின் தட்டு காலியாக காலியாக அனைத்து வகைகளும் அவ்வப்போது பக்கத்துலயே இருக்கும் போண்டா மாஸ்டரின் கண்ணும் கருத்துமான கைவண்ணத்தில் சூடாக நிரம்பிக்கொண்டே இருக்கும்.
மதியவேளைக்கு ஒரு பொட்டலம் சாப்பாடு வாங்கிக் கொண்டு கூட ஏதாவது ஒரு பலகாரத்தினை வாங்கிகொண்டு இருக்கிற இடத்தில் அமர்ந்தோ நின்று கொண்டோ சாப்பிட்டால் செம டேஸ்டாக இருக்கும்.அனைத்து சாப்பாடுகள் வெளியில் தயாராகி இங்கு விற்பனைக்கு மட்டும் வருகின்றன அதுவும் சூடாக...
சாயந்திர வேளையில் இங்கு தயாராகும் புரோட்டாக்கள் செம டேஸ்டாக இருக்கும்.மாலை 4 மணி முதல் புரோட்டா விற்பனை சூடுபிடிக்க ஆரம்பித்துவிடும்.சுடச்சுட புரோட்டா சாப்பிடனுமா இந்த கடைக்கு போங்க.குருமா, முட்டைமசால், சிக்கன் குருமா என எல்லாம் இருக்கிறது புரோட்டாவிற்கு தொட்டுக்கொள்ள...



இட வசதிமட்டும் தான் இல்லை.ஆனால் கூட்டம் அதைப்பத்தி கவலைப்படுவதாக இல்லை.நின்று கொண்டே சாப்பிட்டுவிட்டு தட்டினை ...இடத்தினை காலி செய்கின்றனர்.
பக்கத்து மாநிலமான கேரளாவிலிருந்து வரும் சேட்டன்கள் அதிகம் இங்கு குவிவதைப் பார்க்கலாம்.குறைந்த விலை, செமத்தியான டேஸ்ட் இருப்பதால் கூட்டம் எப்பவும் இருக்கிறது.அதுமட்டுமல்ல அந்த ஏரியாவில் இருக்கிற அத்துணை கடைக்காரர்களும் ஆபத்பாந்தவனாய் இருக்கிறது இந்த கடை.அந்த ஏரியாவில் புகழ்பெற்ற கடை இது ஒன்றுதான்.

நேசங்களுடன்
ஜீவான்ந்தம்

இன்னும் கொஞ்சம்...