Thursday, February 6, 2014

பயணம் - மேகமலை (MEGAMALAI), சின்னமனூர், தேனி மாவட்டம்

மேகமலை
ஒரு நாள் தேனில இருக்கிற நம்ம நண்பர்கிட்ட இருந்து போன்.இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை கிடாவெட்டு வச்சிருக்கேன். மாப்ளை தவறாம கலந்துக்கணும்அப்படின்னு அன்போட அழைச்சிருந்தாப்ல.சரின்னு மூட்டை முடிச்செல்லாம் தூக்கிட்டு சனிக்கிழமை அதிகாலையிலேயே நம்ம சிங்கத்தை கூட்டிட்டு கிளம்பியாச்சு...பெரியகுளம் போன போது மணி 7.30 ஆகி இருந்தது.பசி வேற வயிற்றைப் பதம் பார்க்க ஆரம்பித்தது.அப்பொழுதுதான் பக்தி மணம் பரப்ப கடையை திறந்து ஆவி பறக்க இட்லியை எடுத்து வைத்துக்கொண்டிருந்த ஓனரிடம் கேட்டவாறே சாப்பிட அமர்ந்தோம்.சூடான இட்லியை சாம்பாரிலும் சட்னியிலும் தோய்த்து உள்ளே தள்ளவும் தான் கொஞ்சம் நிம்மதியாய் இருந்தது.சின்னமனூர்ல இருந்துதான் மேகமலை போகனும் என்பதால் சின்னமனூர் கிளம்பினோம்.
சின்னமனூரில் இருந்து ஒரு சில சிற்றூர்களை கடந்து கடைசியாய் தென்பழனி வனப்பகுதி செக் போஸ்ட் அடைந்தோம்.செக்போஸ்டில் விவரங்களை எழுதிக்கொடுத்துவிட்டு வனப்பகுதிக்குள் நுழைந்தோம். கொஞ்ச தூரத்தில் வழிவிடு முருகன் என்ற கோவிலில் ஆரத்திகாட்டி மலை மேல் போகின்ற வாகனங்களுக்கும் ஆரத்தி காட்டி வசூல் செய்துகொண்டிருந்த மூதாட்டியிடம் காணிக்கையைக் கொடுத்துவிட்டு மலை மேல் ஏற ஆரம்பித்தோம்.

மலை மீது ஏற ஏற மிகவும் வறட்சியாய் காணப்பட்டது இருபுறமும்.ரோடும் மிக மோசமாக இருக்கவே சிங்கமும் சீறாமல் மெதுவாகவே சென்றது. மொத்தம் பதினெட்டு ஹேர்பின் வளைவுகள் இருக்கின்றன.ரோடும் அகலம் குறைவாக இருப்பதால் ஒரு வண்டி மட்டுமே செல்ல கூடிய வகையில் இருக்கிறது.ஏதாவது வண்டி எதிரில் வந்தால் ஒதுங்குவது சிரமமாக இருக்கிறது.உயரே செல்ல செல்ல பசுமையானது கண்ணுக்கு தோன்ற ஆரம்பித்தது.பெரும் பள்ளத்தாக்குகளும், ஓங்கி உயர்ந்த மரங்களும் அடர்ந்த காட்டின் நிறமும் நம்மை அதிசயக்க வைக்கிறது.




எங்காவது காட்டு விலங்குகள் தென்படுமா என்று எண்ணிக்கொண்டே ஒவ்வொரு வளைவிலும் வளைந்து கொண்டிருந்தோம்.வெறும் போர்டுகள் மட்டுமே அங்குள்ள விலங்குகளை காண்பித்துக்கொண்டிருந்தன. அதிசயமாய் ஒரு வரையாடு எங்கள் கண்களுக்கு மட்டும் விருந்தளித்து, கேமராவில் சிக்காமல் பாய்ந்தோடியது.அதுபோல நிறைய காட்டு சேவல்கள்..மிக அழகாய் இருக்கின்றன.நம்ம ஊர் சேவல்கள் போல் இல்லாமல் நல்ல புஷ்டியுடன் இருக்கின்றன.அவைகளும் நம் வண்டியின் சத்தம் கேட்டு ஓடி ஒளிகின்றன.கடைசி வரைக்கும் யானை கண்ணுக்கு அகப்படவில்லை.எப்போதோ யானை போட்ட சாணம் மட்டுமே கிடக்கிறது.

அனைத்து வளைவுகளையும் கடந்த பின் பச்சை பசேல் என்று கண்களுக்கு காட்சியளிக்கின்றன தேயிலைத்தோட்டங்கள். கண்ணுக்கெட்டும் தூரம் வரை பசுமை....பசுமை மட்டுமே...ஹைவேவிஸ் என்றழைக்கப்படும் ஊரினை அடைய இன்னும் பயணப்பட வேண்டி இருந்தது. 

பெயரில் தான் ஹைவே இருக்கிறது. ரோடு என்பதே இல்லை.மேடும் பள்ளமும், கற்களுமாக நிரம்பி கிடக்கின்றன.கரடு முரடான பாதையில் மெதுவாய் வண்டியை உருட்டியபடியே சென்றோம்.என்னதான் ரோடு மோசமாக இருந்தாலும் சுற்றிலும் இருக்கின்ற பசுமை நம்மை இலகுவாக்குகின்றது.மெல்லிய குளிர், மலை முகடு தொட்டு செல்லும் மேகம் என மிகவும் ரம்மியமாக இருக்கிறது.





இயற்கையை ரசித்தபடியே செல்ல பள்ளத்தாக்குகளில் இருக்கும் அணை நீர் இன்னும் நம்மை ரசிக்க வைக்கிறது.எங்கு திரும்பினாலும் பசுமை.இயற்கை அன்னை மலைகளை பசுமையால் போர்த்திக்கொண்டிருக்கும் அழகினை பார்க்க பார்க்க வியப்பூட்டுகிறது. இயற்கையை ரசித்ததில் பசி என்பது மறந்து போனது.நேரம் ஆக பசியை ஞாபகப்படுத்த ஹைவேவிஸ் இல் இருக்கும் ஒரே ஒரு ஹோட்டலில் தஞ்சம் புகுந்தோம்.நல்லவேளை...சாப்பாடு இருந்தது.(முன்கூட்டியே சொன்னால்தான் சமைத்து வைப்பார்களாம்).மீன் இருக்கிறதா என்று கேட்க, அணையில் பிடித்த கோல்டு ஃபிஷ் இருக்கிறது அரைக்கிலோ  பொரிக்கட்டுமா என கடைக்காரர் கேட்க, எவ்ளோ ஆகுமென வினவ, 125 தான் என சொல்ல உற்சாகமாய் தலையாட்டினோம்.கொஞ்ச நேரத்தில் மீன் எங்கள் டேபிளுக்கு வர ஒவ்வொன்றாய் காலி செய்தோம்.மிக சுவையாக இருந்தது அந்த குளிருக்கு இதமாய் சூடாக...

திருப்தியாய் சாப்பிட்டு விட்டு இன்னும் இருக்கிற சொச்சம் இடங்களையும் பார்த்து விடலாம் என்று மகாராஜா மெட்டு என்கிற இடத்திற்கு சென்றோம்.
அங்கேயும் அதே கரடுமுரடான சாலை.இருபுறமும் தேயிலைத்தோட்டங்கள்.பசுமை... பசுமை...மெல்லிய குளிர், மிதமான வெப்பம என அழகை ரசித்துக்கொண்டே கிளம்பினோம்.வண்டியின் ஸ்பீட் 20க்கும் குறைவாக இருந்தது.மெதுவாய் மேடு பள்ளம் பார்த்து இறக்கி ஏற்றி சென்று கொண்டிருந்தோம்.எங்கெங்கு காணினும் தேயிலை மலைத்தொடர்களே..இந்த மலைத்தொடரில் ஹைவேவிஸ், வெண்ணியார், இரவங்கலாறு, வட்டப்பாறை என நிறைய இடங்கள் இருக்கின்றன.அணைகளும் நிறைய இருக்கின்றன.அணைகளில் இருக்கும் தண்ணீர் மின்சாரம் எடுக்கப்பயன்படுகிறது.பொறுமையாய் அனைத்தையும் ரசித்து முடித்தபின் வந்த வழியே கீழிறங்கினோம். மீண்டும் அதே கரடுமுரடான சாலை.இருபுறமும் தேயிலைத்தோட்டங்கள்.பசுமை... பசுமை...மெல்லிய குளிர், மிதமான வெப்பம என அழகை ரசித்துக்கொண்டே கிளம்பினோம்.

வுட்பிரையர் எனப்படும் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான எஸ்டேட்களே மேகமலை முழுவதும் இருக்கின்றன.எஸ்டேட்டினுள் இருக்கும் சாலைகள்  மட்டும் பளபளவென்று இருக்கின்றன.ஆனால் நாம் செல்லும் ரோடு மிக மோசமாக இருக்கின்றன.அரசுக்கும் தனியாருக்கும் பஞ்சாயத்து போல.கிடப்பில் போட்டு விட்டார்கள்.ஆனாலும் இயற்கை ஆர்வலர்களின் வரத்து இருக்கத்தான் செய்கிறது.மேலும் தேயிலை உரிமையாளரான உட்ஃபிரையரின் டீ ஃபேக்டரி காண அனுமதி அளிக்கப்படுகிறது தலைக்கு நூறு ரூபாயில்.டீத்தூள் உருவாகும் முறையை தெரிந்து கொள்ளலாம்.
சுத்தமான காற்று, மனதிற்கு மகிழ்ச்சி, இயற்கை அன்னையை தரிசித்தல் இதெல்லாம் வேண்டும் என்றால் மேகமலை செல்லலாம்.
மேகமலை செல்ல பஸ்வசதி இருக்கிறது.காரில் செல்பவர்களுக்கு கொஞ்சம் கடினம் தான்.ஜீப் போன்ற SUV  வாகனங்கள் தான் பெஸ்ட்.

நேசங்களுடன்
ஜீவானந்தம்

28 comments:

  1. ஆகா... என்னவொரு அழகு... ரசித்தேன்...

    டீத்தூள் உருவாகும் முறையை தெரிந்து கொள்ள நம்ம கடல் பயணங்கள் - உலகம் சுற்றும் வாலிபர் சுரேஷ் அவர்கள் தான் வர வேண்டும்...

    ReplyDelete
    Replies
    1. ஏன்..... ஏன்...... ஏன்...... இந்த வில்லத்தனம் !! :-) நம்மளை ஏத்தி விட்டே உடம்பை ரணகளமாகி விடுகிறீர்கள் சார் !!

      Delete
    2. டீத்தூள் உருவாகும் முறையை கடல் பயணங்கள் - சுரேஷ் அவர்கள் கண்டிப்பாக எழுதுவர் என்றும் நம்புவோம் .

      Delete
  2. வாழ்ந்தா இந்த மாதிரி இடத்துல தான் வாழனும் ஜீவா!

    ReplyDelete
    Replies
    1. இதெல்லாம் மாமியார் வீடு மாதிரி...போனா வந்தமான்னு இருக்கனும்.....

      Delete
  3. நல்ல வேளை செல்லும் வழியில் எதுவும் கண்ணில் படவில்லை, இல்லையென்றால் அதுவும் இட்லிக்கு மற்றும் பகார்டிக்கு தொட்டுக்க ஆகி இருக்கும் !!

    ReplyDelete
    Replies
    1. ஒரு முடிவோடத்தான் இருப்பீங்க போல....

      Delete
  4. கிடாவெட்டுக்கு போனமா வந்தமான்னு இல்லாம தேனி முழுக்க சுத்திருக்காப்புல.... இலவசமா சுற்றி காட்டியதற்கு நன்றி. அருமையான இயற்கை சூழல் !

    ReplyDelete
    Replies
    1. அவ்ளோ தூரம் போயிருக்கோம்...சுத்தாம வந்தாத்தான் தப்பு...

      Delete
  5. மேகமலை பயண அனுபவம் மற்றும் போட்டோக்கள் அருமை...

    நீங்க என்னைய மாதிரி இல்ல போல ... நான் கெட வெட்டுக்கு போறதுக்கு முன்னாடி ரெண்டு நாளைக்கு தண்ணி மட்டும் குடிச்சி உயிர் வாழ்வேன்.... ஹி...ஹி...

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி..நானும் அப்படித்தான் இருந்தேன்.....தண்ணி மட்டுமே குடிச்சிட்டு உயிர் வாழ்ந்தேன்....

      Delete
  6. பக்கா...!!
    போன மாசந்தான் ப்ரோக்ராம் போட்டு கேன்சல் ஆகிடுச்சி... இதோ மார்ச்சுல கெளம்பறோம்...!!

    ReplyDelete
    Replies
    1. ஜாலியா போய்ட்டு வாங்க....ரெண்டு நாள் தங்குற மாதிரி பாருங்க..

      Delete
  7. இயற்கை அழகை ரசித்தேன்! அருமையான பதிவு! நன்றி!

    ReplyDelete
  8. கிடா வெட்ட பத்தி எதவுமே சொல்லலையே.
    ஊர் சுத்தினதால போகலையா ?
    அருமையான பதிவு

    ReplyDelete
    Replies
    1. அது தனிக்கதை....வருகைக்கு நன்றி...

      Delete
  9. ஆஹா... செமயான இடமா இருக்கும் போல....

    அடுத்த பயணத்தில் ஒரு விசிட் அடிக்கணும்.... பார்க்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. மிக அருமையான இடம்...கண்டிப்பா போய் பாருங்க....மனதை அள்ளும்...

      Delete
  10. ஆஹா பச்சை பச்சை பச்சை கண்களுக்கு குளிர்ச்சி !

    ReplyDelete
    Replies
    1. செம குளிர்ச்சி...கண்களுக்கு விருந்து....

      Delete
  11. நன்றி தனபாலன்...போய் பார்க்கிறேன்.....

    ReplyDelete
  12. Sir...im planning to go megamalai on next week. With family ..say some few best places to visit. .bcoz I plan to spend only half a day there...

    ReplyDelete
  13. புகைப்படங்கள் அருமை. மேகமலையில் உள்ள சுற்றுலா பயணிகள் விடுதிகள் பற்றி கூறினால் பயணத்தின்போது உதவியாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. மேகமலையின் தற்போதய விவரம் அரிய https://rayilpayanam.blogspot.in/2017/04/1.html

      Delete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....