Showing posts with label சின்னமனூர். Show all posts
Showing posts with label சின்னமனூர். Show all posts

Friday, September 18, 2020

கோவை மெஸ் - ஹோட்டல் கர்ணா, சின்னமனூர், தேனி

 ஹோட்டல் கர்ணா, சின்னமனூர், தேனி

        ஒரு வேலை விசயமா தேனியில் இருந்து சின்னமனூர் வந்தோம்.நேரத்துலயே போனதால் காலை சாப்பாடு சாப்பிடாம போய்ட்டோம்.பத்துமணி வேற ஆயிடுச்சி.சரி. ஏதாவது இருப்பதை சாப்பிடுவோம்னு பிரபல ஹோட்டலான கர்ணா வுக்கு போய் கேட்டா, பிரியாணியே ரெடியா இருக்குண்ணே..அப்படின்னு சொல்ல, சரி மதிய சாப்பாட்டையே இப்பவே ஆரம்பிப்போம்னு கை கழுவிவிட்டு டேபிளில் அமர்ந்தோம்.


                    பளபளன்னு ஃப்ரஷான வாழை இலை போட, பிரியாணி வெண்கல சிறு குண்டாவில் கொண்டு வைத்து வைக்க, பிரியாணி அதன் நிறத்தோடு மிக்க வாசனையோடு, சீரகசம்பா அரிசியோடு மட்டன் துண்டுகளோடு, இலையில் சூடாய் வைக்க, ஆவி பறக்கும் வாசனையில் மூக்கை துளைத்தது பிரியாணியின் மணம்.ஆஹா..இதுவல்லவோ பிரியாணி...ஒரு விள்ளல் எடுத்து சுவைத்ததும் நாக்கின் நரம்பு மண்டலங்கள் இயந்திரகதியில் இயங்க ஆரம்பித்தன..
நல்ல சுவை.மணம்.நிறம் என அனைத்தும்.





மட்டன் துண்டுகள் அதன் வாசனையில் நன்கு வெந்திருக்கிறது..சாப்பிட சுவையுமாக இருக்கிறது.அரிசியும் நல்ல உதிரி உதிரியாக, பிரியாணிக்கே உண்டான நிறத்துடன் சூப்பராக இருக்கிறது.

ஆரம்ப காலத்தில் இந்த ஹோட்டல் பத்துக்கு பத்து ரூம் சைசில் இருந்ததாம்.இன்று பிரம்மிக்கத் தக்க வளர்ச்சி என்பதன் காரணம் அதன் ருசியே..

                        மட்டன் சுக்கா அடுத்த ஆர்டராய் இருக்க, அது ஏனோ என்னை கவரவில்லை.இன்னும் கொஞ்சம் பதமாக வெந்திருக்க வேண்டிய நிலையில் அது இருக்கிறது.ஒருவேளை நாங்கள் நேரத்திலேயே சென்றுவிட்டதால், வெந்து கொண்டிருக்கும் போதே எடுத்து வந்து விட்டார்களோ என நினைக்கிறேன்.



பிரியாணி நல்ல சுவை.மணம், சுவை, திடம் திரீ ரோசஸ் போல பிரியாணி சூப்பரோ சூப்பர்.

                சின்னமனூர் போனீங்கன்னா தாராளமாக சுவைக்கலாம்..பத்து மணிக்கே தயாராகிவிடுகிறது பிரியாணி..ஆற அமர ருசிக்கலாம்.

நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Monday, February 17, 2014

அருள்மிகு குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில், குச்சனூர், தேனி மாவட்டம்

குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில்
தேனில இருந்து சின்னமனூர் நோக்கி மெயின் ரோட்டில் போயிட்டு இருந்தபோது வலது புறம் ஒரு ரோடு பிரிய, அருகே இருந்த போர்டு குச்சனூர் சனீஸ்வரன் கோவில் 15 கி.மீ என காட்ட, பார்த்துட்டு போலாமா என்று மனது அலைபாய, இவ்ளோ தூரம் வந்திருக்கோம் இனி எப்போ வருவோமோ இந்தப்பக்கம் என நினைத்தபடி இருக்க, அட...இன்னிக்கு சனிக்கிழமை வேற.பகவானுக்கு உகந்த நாள்.....ஆதலால் சனிபகவானுக்கு ஒரு அட்டண்டன்ஸ் போடுவோமே என எண்ணி அங்கே செல்ல ஆயத்தமானோம்....




இருபுறமும் பச்சை பசேலென்ற வயல்வெளிகள்...கண்ணுக்கு எட்டும் தூரம் வரை பசுமை...சுத்தமான காற்று, அமைதியான நெரிசலற்ற ரோட்டில் இருபுறமும் பார்த்து வியந்தவாறே உப்புக்கோட்டை, பாலார்பட்டி போன்ற சிற்றூர்களைத்தாண்டி குச்சனூர் எங்களை வரவேற்றது.
கோவிலுக்கு முன்பாக அரைகிலோமீட்டர் தூரத்திலேயே கார்கள், டூவீலர்கள், பக்தர்கள் என கூட்டம் நிறைந்து காணப்பட்டது.சனிக்கிழமை ஆதலால் ஏகப்பட்ட கூட்டம்.கோவில் நுழைவு வாயில் புதிதாக கட்டப்பட்டு கொண்டிருக்க, வண்டி மெதுவாய் ஊர்ந்து உள்ளே சென்றது.தோதான இடத்தில் நிறுத்திவிட்டு ஜனத்திரளுக்குள் நாங்களும் ஐக்கியமானோம்.
சுருளி ஆறிலிருந்து பிரிந்து கிளை நதியாக வந்து கோவில் அருகே ஓடிக்கொண்டிருக்கிற வாய்க்கால் போன்ற சிறு ஆற்றில் கை, கால்களை நனைத்துக்கொண்டு படியேறினோம்.ஆற்றின் ஓரங்களில் குடும்ப குடும்பமாய் மக்கள், கூடவே புரோகிதர்கள்.....அவர்களின் மந்திரம் பரிகாரங்களுக்கு பயன்பட்டுக்கொண்டிருக்க, குடும்பத்தார்களின் சனி தோஷங்கள் நிவர்த்தியாகிக்கொண்டிருந்தன.

சனி தோஷம் நிவர்த்தி செய்வதற்கான பொருட்கள் உப்பும், பொரியும், எள்ளும் மண்காகமும் திரி விளக்குமாய் கடை பரப்பி இருக்கின்றன. கோவில் முன்புறம் இருக்கிற இடங்கள் பெரும் விசாலமாய் இருப்பதால் க்யூ கட்டி பக்தர்கள் சென்று கொண்டிருந்தனர்.வரிசையில் நாங்களும் அடைந்து கொண்டோம்....

பக்தர்கள் வழிபடும் முறை என்று பிளக்ஸ் பேனரில் ஒட்டப்பட்டிருக்கின்றன.அதன்படி ஒவ்வொருத்தரும் செயல்பட்டுக் கொண்டிருந்தனர். அவ்வாறே நாங்களும் செய்து கொண்டிருந்தோம். .கொடிமரத்தினை கும்பிட்டு பொரியும், உப்புத்தொட்டியில் உப்பும் போட்டோம்.மண்காகத்தினை தலையில் வைத்து ஒரு சுற்று சுற்றி காகம் பீடத்தில் வைத்தோம்.காகத்தின் மேல் காசுகளை வைத்து கும்பிட்டு, பின் எள் விளக்கினை தீப இடத்தில் வைத்து வேண்டிக்கொண்டோம்.பின் கொஞ்ச நேரம் காத்திருந்து சுயம்புவாக அருள் பாலிக்கும் சனி பகவானை பக்தியோடு வேண்டிக்கொண்டு வெளியேறினோம்.






இங்கே தல விருத்தமாக விடத்தலை மரம் இருக்கிறது.இந்த மரத்தினை சுற்றி பக்தர்களின் வேண்டுகோள் மஞ்சள் கயிறாக நிறைந்து இருக்கிறது.தனி சன்னதியில் திருமலைக்குமரன் வீற்றி இருக்கிறார்.



இந்தியாவிலேயே சனிபகவான் சுயம்புவாக தோன்றிய ஒரே ஸ்தலம் இது தான்.சனிபகவானுக்கே பிரம்மகத்தி தோசம் பிடித்து நீங்கின வரலாறு பெற்ற தலம்.சனி தோஷம் பெற்றவர்கள் இங்கு வந்து வழிபடுதல் சிறப்பு.
தேனியில் இருந்து 23 கி மீட்டர் தொலைவில் இருக்கிறது. இந்தக்கோவிலைப்பத்தி வரலாறு இது தான்.

கிசுகிசு : இங்க செம அம்மணிங்க கூட்டம்....சனி தோசம் நிவர்த்தி ஆகனும்னு போனா நமக்கு வேற தோஷம் பிடிப்பது உறுதி...ஹிஹிஹி....

நேசங்களுடன்

ஜீவானந்தம்
இன்னும் கொஞ்சம்...

Thursday, February 6, 2014

பயணம் - மேகமலை (MEGAMALAI), சின்னமனூர், தேனி மாவட்டம்

மேகமலை
ஒரு நாள் தேனில இருக்கிற நம்ம நண்பர்கிட்ட இருந்து போன்.இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை கிடாவெட்டு வச்சிருக்கேன். மாப்ளை தவறாம கலந்துக்கணும்அப்படின்னு அன்போட அழைச்சிருந்தாப்ல.சரின்னு மூட்டை முடிச்செல்லாம் தூக்கிட்டு சனிக்கிழமை அதிகாலையிலேயே நம்ம சிங்கத்தை கூட்டிட்டு கிளம்பியாச்சு...பெரியகுளம் போன போது மணி 7.30 ஆகி இருந்தது.பசி வேற வயிற்றைப் பதம் பார்க்க ஆரம்பித்தது.அப்பொழுதுதான் பக்தி மணம் பரப்ப கடையை திறந்து ஆவி பறக்க இட்லியை எடுத்து வைத்துக்கொண்டிருந்த ஓனரிடம் கேட்டவாறே சாப்பிட அமர்ந்தோம்.சூடான இட்லியை சாம்பாரிலும் சட்னியிலும் தோய்த்து உள்ளே தள்ளவும் தான் கொஞ்சம் நிம்மதியாய் இருந்தது.சின்னமனூர்ல இருந்துதான் மேகமலை போகனும் என்பதால் சின்னமனூர் கிளம்பினோம்.
சின்னமனூரில் இருந்து ஒரு சில சிற்றூர்களை கடந்து கடைசியாய் தென்பழனி வனப்பகுதி செக் போஸ்ட் அடைந்தோம்.செக்போஸ்டில் விவரங்களை எழுதிக்கொடுத்துவிட்டு வனப்பகுதிக்குள் நுழைந்தோம். கொஞ்ச தூரத்தில் வழிவிடு முருகன் என்ற கோவிலில் ஆரத்திகாட்டி மலை மேல் போகின்ற வாகனங்களுக்கும் ஆரத்தி காட்டி வசூல் செய்துகொண்டிருந்த மூதாட்டியிடம் காணிக்கையைக் கொடுத்துவிட்டு மலை மேல் ஏற ஆரம்பித்தோம்.

மலை மீது ஏற ஏற மிகவும் வறட்சியாய் காணப்பட்டது இருபுறமும்.ரோடும் மிக மோசமாக இருக்கவே சிங்கமும் சீறாமல் மெதுவாகவே சென்றது. மொத்தம் பதினெட்டு ஹேர்பின் வளைவுகள் இருக்கின்றன.ரோடும் அகலம் குறைவாக இருப்பதால் ஒரு வண்டி மட்டுமே செல்ல கூடிய வகையில் இருக்கிறது.ஏதாவது வண்டி எதிரில் வந்தால் ஒதுங்குவது சிரமமாக இருக்கிறது.உயரே செல்ல செல்ல பசுமையானது கண்ணுக்கு தோன்ற ஆரம்பித்தது.பெரும் பள்ளத்தாக்குகளும், ஓங்கி உயர்ந்த மரங்களும் அடர்ந்த காட்டின் நிறமும் நம்மை அதிசயக்க வைக்கிறது.




எங்காவது காட்டு விலங்குகள் தென்படுமா என்று எண்ணிக்கொண்டே ஒவ்வொரு வளைவிலும் வளைந்து கொண்டிருந்தோம்.வெறும் போர்டுகள் மட்டுமே அங்குள்ள விலங்குகளை காண்பித்துக்கொண்டிருந்தன. அதிசயமாய் ஒரு வரையாடு எங்கள் கண்களுக்கு மட்டும் விருந்தளித்து, கேமராவில் சிக்காமல் பாய்ந்தோடியது.அதுபோல நிறைய காட்டு சேவல்கள்..மிக அழகாய் இருக்கின்றன.நம்ம ஊர் சேவல்கள் போல் இல்லாமல் நல்ல புஷ்டியுடன் இருக்கின்றன.அவைகளும் நம் வண்டியின் சத்தம் கேட்டு ஓடி ஒளிகின்றன.கடைசி வரைக்கும் யானை கண்ணுக்கு அகப்படவில்லை.எப்போதோ யானை போட்ட சாணம் மட்டுமே கிடக்கிறது.

அனைத்து வளைவுகளையும் கடந்த பின் பச்சை பசேல் என்று கண்களுக்கு காட்சியளிக்கின்றன தேயிலைத்தோட்டங்கள். கண்ணுக்கெட்டும் தூரம் வரை பசுமை....பசுமை மட்டுமே...ஹைவேவிஸ் என்றழைக்கப்படும் ஊரினை அடைய இன்னும் பயணப்பட வேண்டி இருந்தது. 

பெயரில் தான் ஹைவே இருக்கிறது. ரோடு என்பதே இல்லை.மேடும் பள்ளமும், கற்களுமாக நிரம்பி கிடக்கின்றன.கரடு முரடான பாதையில் மெதுவாய் வண்டியை உருட்டியபடியே சென்றோம்.என்னதான் ரோடு மோசமாக இருந்தாலும் சுற்றிலும் இருக்கின்ற பசுமை நம்மை இலகுவாக்குகின்றது.மெல்லிய குளிர், மலை முகடு தொட்டு செல்லும் மேகம் என மிகவும் ரம்மியமாக இருக்கிறது.





இயற்கையை ரசித்தபடியே செல்ல பள்ளத்தாக்குகளில் இருக்கும் அணை நீர் இன்னும் நம்மை ரசிக்க வைக்கிறது.எங்கு திரும்பினாலும் பசுமை.இயற்கை அன்னை மலைகளை பசுமையால் போர்த்திக்கொண்டிருக்கும் அழகினை பார்க்க பார்க்க வியப்பூட்டுகிறது. இயற்கையை ரசித்ததில் பசி என்பது மறந்து போனது.நேரம் ஆக பசியை ஞாபகப்படுத்த ஹைவேவிஸ் இல் இருக்கும் ஒரே ஒரு ஹோட்டலில் தஞ்சம் புகுந்தோம்.நல்லவேளை...சாப்பாடு இருந்தது.(முன்கூட்டியே சொன்னால்தான் சமைத்து வைப்பார்களாம்).மீன் இருக்கிறதா என்று கேட்க, அணையில் பிடித்த கோல்டு ஃபிஷ் இருக்கிறது அரைக்கிலோ  பொரிக்கட்டுமா என கடைக்காரர் கேட்க, எவ்ளோ ஆகுமென வினவ, 125 தான் என சொல்ல உற்சாகமாய் தலையாட்டினோம்.கொஞ்ச நேரத்தில் மீன் எங்கள் டேபிளுக்கு வர ஒவ்வொன்றாய் காலி செய்தோம்.மிக சுவையாக இருந்தது அந்த குளிருக்கு இதமாய் சூடாக...

திருப்தியாய் சாப்பிட்டு விட்டு இன்னும் இருக்கிற சொச்சம் இடங்களையும் பார்த்து விடலாம் என்று மகாராஜா மெட்டு என்கிற இடத்திற்கு சென்றோம்.
அங்கேயும் அதே கரடுமுரடான சாலை.இருபுறமும் தேயிலைத்தோட்டங்கள்.பசுமை... பசுமை...மெல்லிய குளிர், மிதமான வெப்பம என அழகை ரசித்துக்கொண்டே கிளம்பினோம்.வண்டியின் ஸ்பீட் 20க்கும் குறைவாக இருந்தது.மெதுவாய் மேடு பள்ளம் பார்த்து இறக்கி ஏற்றி சென்று கொண்டிருந்தோம்.எங்கெங்கு காணினும் தேயிலை மலைத்தொடர்களே..இந்த மலைத்தொடரில் ஹைவேவிஸ், வெண்ணியார், இரவங்கலாறு, வட்டப்பாறை என நிறைய இடங்கள் இருக்கின்றன.அணைகளும் நிறைய இருக்கின்றன.அணைகளில் இருக்கும் தண்ணீர் மின்சாரம் எடுக்கப்பயன்படுகிறது.பொறுமையாய் அனைத்தையும் ரசித்து முடித்தபின் வந்த வழியே கீழிறங்கினோம். மீண்டும் அதே கரடுமுரடான சாலை.இருபுறமும் தேயிலைத்தோட்டங்கள்.பசுமை... பசுமை...மெல்லிய குளிர், மிதமான வெப்பம என அழகை ரசித்துக்கொண்டே கிளம்பினோம்.

வுட்பிரையர் எனப்படும் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான எஸ்டேட்களே மேகமலை முழுவதும் இருக்கின்றன.எஸ்டேட்டினுள் இருக்கும் சாலைகள்  மட்டும் பளபளவென்று இருக்கின்றன.ஆனால் நாம் செல்லும் ரோடு மிக மோசமாக இருக்கின்றன.அரசுக்கும் தனியாருக்கும் பஞ்சாயத்து போல.கிடப்பில் போட்டு விட்டார்கள்.ஆனாலும் இயற்கை ஆர்வலர்களின் வரத்து இருக்கத்தான் செய்கிறது.மேலும் தேயிலை உரிமையாளரான உட்ஃபிரையரின் டீ ஃபேக்டரி காண அனுமதி அளிக்கப்படுகிறது தலைக்கு நூறு ரூபாயில்.டீத்தூள் உருவாகும் முறையை தெரிந்து கொள்ளலாம்.
சுத்தமான காற்று, மனதிற்கு மகிழ்ச்சி, இயற்கை அன்னையை தரிசித்தல் இதெல்லாம் வேண்டும் என்றால் மேகமலை செல்லலாம்.
மேகமலை செல்ல பஸ்வசதி இருக்கிறது.காரில் செல்பவர்களுக்கு கொஞ்சம் கடினம் தான்.ஜீப் போன்ற SUV  வாகனங்கள் தான் பெஸ்ட்.

நேசங்களுடன்
ஜீவானந்தம்
இன்னும் கொஞ்சம்...