Tuesday, March 25, 2014

திராட்சைத்தோட்டங்கள், சுருளிப்பட்டி, தேனி மாவட்டம்

சுருளிப்பட்டி....
இயற்கை எழில் கொஞ்சும் அழகான சிற்றூர். ரோட்டின் இருபுறமும் நீண்ட நெடிய பசுமை வாய்ந்த வயல்வெளிகள், கொத்து கொத்தாய் தொங்கும் திராட்சை தோட்டங்கள், தென்னந்தோப்புகள், காய்கறித் தோட்டங்கள்,வாழைத்தோப்புகள், பருவகாலத்திற்கேற்ற சீதோஷ்ண நிலை, முல்லைப்பெரியாறு அணையிலிருந்து கிளை நதியாய் பாய்ந்து ஊரைப் பசுமையாக்கும் சுருளி ஆறு, உள்ளூர் மட்டுமல்ல வெளியூர்களிலிருந்து மக்கள் வந்து ரசிக்கும் சுற்றுலாத்தளமாக சுருளி ஃபால்ஸ், என இயற்கையாய் இருக்கக்கூடிய ஒரு அழகான கிராமம் தான் சுருளி.

கம்பம் பள்ளத்தாக்கு எனப்படுகிற இப்பகுதியானது பெரும்பாலும் திராட்சை தோட்டங்களால் சூழ்ந்திருக்கிறது.அப்படித்தான் அன்று சுருளிப்பட்டியில் இருக்கிற நண்பனின் தோட்டத்திற்கு சென்ற போது அதிசயத்துவிட்டேன்.ஏக்கர் கணக்கில் பரந்து விரிந்து கிடந்திருந்த திராட்சைக்கொடிகள்.ஐந்தடி உயரத்தில் ஒரே சீராக பந்தலில் படர்ந்து கொண்டிருந்தன பசுங்கொடிகள்.....பழமுதிர் நிலையங்களிலும் ரோட்டோர பழக்கடைகளிலும் பார்த்த திராட்சைப்பழங்களின் உற்பத்தி நிலையத்திற்குள் நுழைந்திருந்தேன்.கொடி போல் படர்ந்திருந்த திராட்சைச் செடிகளையும் அதில் பழமும் காய்களுமாக காய்த்து தொங்கிய திராட்சைகளைப் பார்க்கும் போது வியப்பிலாழ்ந்து விட்டேன். அய்யோ.....எம்புட்டு பழம்.....


இன்னும் அதிகமாய் காண தோட்டத்திற்குள் நுழைய அடிமைப்பெண் எம்ஜியார் போல் தலையைக் குனிந்து கொஞ்ச தூரம் திராட்சைத் தோட்டத்திற்குள் சென்ற போது தலையில் மோதிய காய் பழக்கொத்துகளால் பரவசமடைந்தேன்.தோட்டம் முழுக்க மணம் வீசுகிறது ஒன்றிரண்டு நன்கு கனிந்த பழங்களின் வாசனையால்...அறுவடைக்கு இன்னும் சில மாதங்கள் இருக்க கவனிப்புகள் அதிகமாகி பாதுகாப்பு வளையத்திற்குள் அகப்பட்டு கொண்டிருந்தன திராட்சைக்கொத்துகள்.கருப்பு வகை பன்னீர் திராட்சைகள் தான் அதிகம் பயிரிடப்படுகின்றன.சுருளியில் இருக்கின்ற மண்வளம்,நீர்வளம். சீதோஷ்ண நிலை யாவும் நன்கு சுவையான திராட்சைப்பழங்கள் கிடைக்க ஏதுவாகிறது.இந்த தோட்டம் முழுக்க சொட்டு நீர்ப்பாசனத்தால் ஏற்பாடு செய்யப் பட்டிருக்கிறது.ஒவ்வொரு திராட்சைக்கொடிக்கும் தனித்தனியாக நீர்பாய்ந்து பசுமைக்குள்ளாக்குகிறது.



திராட்சைத்தோட்டத்தில் கொஞ்ச நேரம் கவனித்ததில் ஒரு வேலையாள் ஒரு டப்பாவினை எடுத்துக்கொண்டு ஒவ்வொரு திராட்சை கொத்துக்கும் சென்று அதை நனைத்துக் கொண்டிருந்தார்.என்னவென்று கேட்க மருந்து அடிக்கிறார்கள் என்று சொல்லிவிட்டு நிறுத்தினார்.முன்பெல்லாம் திராட்சைப் பழங்களில் பூச்சி பிடிப்பதைத் தடுப்பதற்காக மருந்து தெளிப்பார்களாம்.ஆனால் இப்போதெல்லாம் மருந்தை மொத்தமாய் கலக்கி டப்பாவில் எடுத்து அந்த டப்பாவினுள் திராட்சைக்கொத்தினை மூழ்கடிக்கிறார்களாம்.வேலையும் ஈஸி ஆகிறது, மருந்தும் வேஸ்ட் ஆகுவதில்லையாம்...(ஆனால் நம் உயிர் வேஸ்ட் ஆகிடும் போல ) அதனால் திராட்சை பழங்களை எப்போதுமே அப்படியே சாப்பிடக்கூடாது.உப்பு போட்ட தண்ணீரில் கழுவி அப்புறம் தான் சாப்பிட வேண்டுமாம்...
ரொம்ப நேரமாய் தேடி அலைந்து கண்டுபிடித்த நன்கு விளைந்த ஒரே ஒரு பழத்தினை கொத்திலிருந்து பறித்து வாயில் போடும் முன்பு இதைக் கேட்டதால் அப்படியே பாக்கெட்டில் போட்டுக்கொண்டேன், எதற்கும் வீட்டில் போய் சாப்பிட்டுக்கொள்ளலாம் என்று....


கொஞ்ச நேரம் அப்படி இப்படி குனிந்து சுற்றிப்பார்த்ததில் உடல் கொஞ்சம் வேதனையைக் கொடுக்கவே கிளம்ப ரெடியானோம்.மீண்டும் அதே அடிமைப்பெண் ஸ்டைல்...வெளியே வந்ததும் நிமிர்ந்து நின்றதில் என்ன ஒரு சுகம்....ஆஹா....மீண்டும் சுருளி பால்ஸ் செல்லலாமே என்று நினைத்தபடி அவவழியே செல்கையில் மற்றொரு தோட்டத்தில் விற்பனைக்கு  வைத்திருந்த திராட்சைப் பழங்களை வாங்கி வண்டியில் போட்டுக்கொண்டு கிளம்பினோம், அன்றைய இரவினை தமிழக அரசோடு கொண்டாட......

நேசங்களுடன்
ஜீவானந்தம்



16 comments:

  1. உப்பு போட்ட தண்ணீரில் கழுவிவிட்டுத் தான் சாப்பிட வேண்டும் என்று எத்தனை பேருக்குத் தெரியும்...?

    அரசோடு கொண்டாடும் போது இதெல்லாம் ஜூஜுபி... ஹா... ஹா...

    ReplyDelete
  2. திராட்சைத் தோட்டங்கள்....

    கலக்கும் நச்சு - சரியாகச் சொன்னீர்கள் - இப்போதெல்லாம் எந்த காய்/கனி வாங்கினாலும் அதன் மேலே அத்தனை நச்சு.

    பார்க்கத் தூண்டும் பதிவு. வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. கடைசி பன்ச் கலக்கல்....

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா///வருகைக்கு நன்றி....

      Delete
  4. வெறும் தண்ணில கழுவினால் போதாதா!?

    ReplyDelete
    Replies
    1. வாங்க....போதும்...ஆனா மருந்து போகாதே.....

      Delete
  5. டூத் பேஸ்ட்ல உப்பு இருக்கான்னு கேக்குற மாதிரிலா இருக்கு ...

    ReplyDelete
  6. உப்பு போட்ட தண்ணீரில் கழுவி சாப்பிட வேண்டும்! நல்ல தகவல்! படங்கள் அருமை! தமிழக அரசை தினமும் வாழ வைக்கிறீர்கள் போல! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி...என்ன பண்றது.. ஏழை பாழைங்களுக்கு மிக்ஸி, கிரைண்டர்லாம் தரணுமே...

      Delete
  7. இந்த இரசாயனங்களால் தான் பாதி உடல் நலம் பாதிப்பு வருகிறது.இப்போது உற்பத்தியாகும் காய் கறிகள்&பல வகைகள் அனைத்துமே இரசாயனத் தாக்கத்துக்கு உட்பட்டவையே!எனவே,பசுமையாக இருக்கிறதென்று உப்பு நீரில்/வினாக்கிரி யில் கழுவாமல் உபயோகித்தல் கூடாது!

    ReplyDelete
    Replies
    1. சரிதான்....அனைத்து காய்கறிகளிலும் விஷம் ஏறிக்கிடக்கிறது

      Delete
  8. டப்பால மூழ்கடிக்கிற டெக்னாலஜிய கண்டுபிடிச்சது நிச்சயமா தமிழனாதான் இருப்பான், நாம தான் குதர்க்கமா வேலை பாக்கிற ஆளாச்சே.. நல்ல பதிவு.....

    ReplyDelete
    Replies
    1. நம்மாளுங்க தானே அறிவி ஜீவிகள் ஆச்சே....எப்பவும்...

      Delete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....