Friday, January 9, 2015

கோவை மெஸ் - Dr.Karumbu (டாக்டர்.கரும்பு ), கரும்புச்சாறு, சாய்பாபா காலனி, கோவை

               நான் சிறுவனாக இருந்த போது எங்கள் கிராமத்தில் ஒரு கரும்பு ஆலை இருந்தது.அந்த ஆலையை கடந்துதான் பள்ளிக்கூடம் போகணும்.போகும் போதும் வரும்போதும் வெல்லம் காய்ச்சிற மணம் ஆலையில் இருந்து வெளியேறி நம்ம நாசியை துளைக்கும். அதுமட்டுமல்லாமல் அந்த ஏரியாவையே தூக்கும்.அந்த ஆலையில் எப்பவும் கரும்பு பிழியற மெசின் இடைவிடாது ஓடிக் கொண்டிருக்கும். அதுல கரும்புச்சாறு குடிப்பதே பெரும் அலாதியா இருக்கும்.நம்ம தெரிஞ்ச ஆளுங்க இருக்காங்களா இல்லையான்னு  ஒரு எட்டு உள்ளே போயி பார்ப்போம்.அப்படி இருந்துட்டா அன்னிக்கு செம ஜாலிதான்.அனேகமா வாரத்துல ரெண்டு மூணு நாளு குடித்திருவோம். ஏன்னா கிராமங்களில் எல்லாரும் தெரிந்தவங்க தான்.
           ஓடிக்கிட்டு இருக்கிற மெசின் பக்கத்திலேயே எதாவது ஒரு சில்வர் லோட்டா இருக்கும்.அது அப்பப்ப வேலை செய்யறவங்க குடிப்பதற்காக வச்சி இருப்பாங்க.கூடவே ஒரு பண்ணாடை இருக்கும். நாங்க போனவுடன் அந்த பண்ணாடையை வச்சி கரும்புச்சாறை வடிகட்டி அந்த லோட்டாவுல தருவாங்க.எப்படியும் ரெண்டு கிளாஸ் புடிக்கும் அந்த லோட்டா.அப்படியே ஜில்லுன்னு இறங்கும் தொண்டைக்குள்ளயும் பின் வயிற்றுக்குள்ளயும்…. ரெண்டு லோட்டா குடிச்சிட்டு திம்ம்னு வெளியே வருவோம்.
                லீவ் நாட்களில் வீட்டுக்கு வேணும்னா ஒரு தூக்குவாளி எடுத்துக்கிட்டு கூடவே கொஞ்சம் இஞ்சி, எலுமிச்சையையும் எடுத்துகிட்டு வருவோம்.நல்ல கரும்புக்கட்டாக தேடி அதை எடுத்து அவர்களிடம் தருவோம்.அதை மெசினில் விட்டு சாறு பிழியும் போது கூடவே இஞ்சி வச்சிடுவோம்.அதுவும் நசுங்கி சாறாய் தூக்குவாளியில் சேரும்.கரும்பினை ஒரு முறை விட்டபின் அடுத்து அரைக்கும் பல் சக்கரத்தினை கொஞ்சம்  டைட்டாக திருக்கி இன்னொரு முறை விடுவார்கள். அவ்வளவு தான்.நம்மூரைப்போல் சக்கையாய் மடக்கி உருட்டி சாறு பிழிய மாட்டார்கள்.இரண்டாவது முறையிலேயே நன்கு சக்கையாய் ஆகி இருக்கும் கரும்பு.பின் நுரை பொங்க தூக்குவாளியில் பிடிச்சிட்டு வீட்டிற்கு வருவோம்.
                 இப்படித்தான் கரும்புச்சாறு குடித்த அனுபவம் இருக்கிறது.கால ஓட்டத்திற்குப் பின் இப்பொழுது ரோட்டில் எங்காவது கரும்பு ஜூஸ் கடை இருந்தால் காசு கொடுத்து குடிக்கிற நிலைமைக்கு ஆளாகி இருக்கிறேன். என்ன செய்வது எல்லாம் காலத்தின் விதி….

            சமீபத்தில் சாய்பாபா காலனியில் ஒரு மாலை நேரம் சென்றிருந்தபோது ஒரு கரும்பு ஜூஸ் கடையைக் கண்டேன்.ஆட்கள் வருவதும் போவதுமாக நல்ல கூட்டம்.மெயின் ரோட்டிலேயே வேறு இருக்கிறது.எனக்குள் இருந்த சிறுவயது ஞாபகம் எட்டிப்பார்க்க, நானும் கடைக்குள் நுழைந்தேன்.கடை மிக பிரமாதமாக இண்டீரியர் செய்யப்பட்டிருந்தது.கடை முழுதும் கரும்புச்சாறினால் உண்டாகும் நன்மைகள் ப்ரிண்ட் அவுட்டாய் தொங்கிக்கொண்டிருந்தன.கரும்புச்சாறில் இத்தனை வெரைட்டிகளா என்பதை அவர்கள் கொடுத்த மெனு கார்டு நம்மை ஆச்சர்யப்படுத்தியது.கரும்புச்சாறினை மையப்படுத்தி பலவித ஜூஸ்களும் விலைக்கேற்ப மெனுகார்டினை அலங்கரித்தன.


                எப்பவும் நம்ம பேவரைட் இஞ்சி கலந்த கரும்புச்சாறு தான்.அதை சொல்லவும் பிரிட்ஜ் இல் இருந்த கரும்புத்துண்டை எடுத்து நவீன ரக மிசினில் விட ஜூஸ் நமக்கான டம்ளரில் கொட்டியது.பின் ஏற்கனவே ரெடியாக இருக்கும் இஞ்சிச்சாறினை அதனுடன் கலந்து கொடுத்தனர்.எப்பவும் போல கரும்புச்சாறு டேஸ்ட் தான்.அப்புறம் பெப்பர் கலந்து ஒன்று கேட்கவும் முன்பு மாதிரியே ஜூஸ் பிழிந்து பெப்பர் கலந்து கொடுத்தனர்.


       இன்னும் நிறைய வெரைட்டிகள் இருக்கின்றன. அதையெல்லாம் ட்ரை பண்ண முடியாமல் வயிறு நிறைந்து விட்டது.
            கரும்புச்சாறினுள் ஏகப்பட்ட நன்மைகள் இருக்கின்றன என்பதை அங்கு இருக்கும் பிளக்ஸ் போர்டுகள் உணர்த்துகின்றன.அதை படித்துக்கொண்டே குடித்துவிட்டு வாருங்கள்.

சாய்பாபா காலனி கரூர் வைஸ்யா பேங்க் எதிரில் இருக்கிறது இந்த டாக்டர் கரும்பு.

கிசு கிசு : மாலை நேரமா போனிங்கன்னா கொஞ்சம் மனசும் இளமையாகும்...சாய்பாபா காலனியில் அம்மணிகள் கொஞ்சம் அழகாக இருப்பாங்க.........


நேசங்களுடன்

ஜீவானந்தம்

6 comments:

 1. என்னய்யா இது அக்கிரமம், நம்ம ஊரைப் பத்தி (சாயிபாபா காலனி) அங்கேயே 50 வருஷமாகக் குடியிருக்கும் நமக்கே தெரியாத விஷயங்களை எங்கிருந்தோ (கவுண்டம்பாளையம்) வருகின்றவர்கள் சொல்லிக்கொடுக்கிற மாதிரி ஆகிப்போச்சே?

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி சார்..கொஞ்சம் வீட்டை விட்டு வெளிய வாங்க....உலகம் ரொம்ப அழகா இருக்கு.....

   Delete
  2. முடியலயே, ஜீவானந்தம்.

   Delete
 2. Replies
  1. வாங்க தனபாலன்...சியர்ஸ்.....போட்டுடலாம்...

   Delete
 3. வருகைக்கு நன்றி...

  ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....