Wednesday, January 7, 2015

எலந்தை வடை - மலரும் நினைவுகள்


                    டவுசர் போட்ட காலத்தில் மிகவும் விரும்பிச்சுவைத்த ஒரு தின்பண்டம்.தாம்பாளத்தில் பாலிதீன் உறையில் மூடி பள்ளிக்கூட வாசலில் விற்றுக்கொண்டிருப்பார்கள் பாட்டிமார்கள்.கூடவே ஜவ்மிட்டாய், எலந்தை பழம் இப்படி...எலந்தை பழத்தை அளந்து போட ஒரு சிறு உழக்கு ஒண்ணு இருக்கும்.அதை வாங்கி அப்படியே சாப்பிடலாம்.ஒண்ணு ரெண்டுல புழு இருக்கும்.அதை பிதுக்கிவிட்டு சாப்பிடுவோம்.அப்புறம் எலந்தை பழத்தை ஒண்ணு ரெண்டாக அரைத்தோ இடித்தோ கொஞ்சம் இனிப்பு காரம் சேர்த்து வடை போல் தட்டி விற்பார்கள்.பத்து பைசாவிற்கு வாங்கித்தின்ற அனுபவம்.எலந்தை வடையை நன்கு சப்பிச் சுவைத்தபின் எஞ்சியிருக்கும் கொட்டையை உடைத்து உள்ளிருக்கும் பருப்பை எடுத்து சாப்பிட்ட அனுபவம் இன்னுமிருக்கிறது ஞாபகங்களாய்..


                     அப்புறம் வடையானது உருமாறி பாக்கெட்டில் எலந்தை ஜாம் ஆக வர அது இன்னும் டேஸ்டாக இருக்க அதிகம் சுவைக்க ஆரம்பித்த ஞாபகம் இன்னும் மிச்சமிருக்கிறது..இதன் கூடவே எலந்தைப் பொடியும் வர அதை கையில் கொட்டி நக்கிய அனுபவமும் உண்டு..பின் அதையே ஸ்ட்ரா போட்டு உறிஞ்சி ருசித்ததும் உண்டு.எங்காவது பொட்டிக்கடை பக்கம் ஒதுங்கும் போது தொங்கிக்கொண்டிருக்கிற எலந்தை ஜாமை பார்க்கும்போது சிறுவயது ஞாபகங்கள் வர ஆட்டோமேடிக்காய் வாங்கி ருசிக்க தோன்றுகிறது.ரசித்து ருசிக்கையில் நிச்சயம்அதன் சுவை நம்மை பால்ய வயதிற்குள் கொண்டு செல்கிறது.
           
                    பழைய நினைவுகளை மீட்டித்தருகிறது. பள்ளி வகுப்பறைகளில் யார்க்கும் தெரியாமல் சாப்பிடுவதும், பின் கொட்டையை வாயிலிருந்து புயல் வேகத்தில் ஊதி ஜன்னலுக்கு வெளியே துப்புவதிலும், ஜன்னல் அருகிலில்லாத போது டவுசர் பாக்கெட்டில் போட்டு வைப்பதும், இல்லையேல் நம் எதிரியின் புத்தகப்பைக்குள் ஒளித்து வைப்பதுமான நினைவுகள் கண்டிப்பாய் எட்டிப்பார்க்கும்.இப்போது விலை ஒரு ரூபாய்.அதன் ருசியும் மணமும் இன்னும் கொஞ்சம் கூட குறையவில்லை நம் பால்ய கால நினைவுகளைப்போல்...
எங்காவது கிடைத்தால் ருசித்துப்பாருங்கள் உங்களின் பால்ய வயது எட்டிப்பார்க்கும்....கொஞ்சமாவது...

மற்ற மலரும் நினைவுகள்  ஆடியோ கேசட் 

                                                   பாட்டுப்புத்தகம்

நேசங்களுடன்
ஜீவானந்தம்

3 comments:

  1. அங்கு கிடைத்தால் கொண்டு வாருங்கள்...

    ReplyDelete
  2. அட போங்க சார் நானும் இப்படித்தான் நீங்க சொன்னது மாதிரி நானும் பழைய நினைப்போட நேத்து எலந்தைப் பழத்தை 10 ரூபாய்க்கு வாயில் எச்சில் ஊற வாங்கி ஒரு பத்து பழத்தை வாய் வலிக்க சப்பி சாப்பிட்டு விட்டு வேறு எதையும் மென்று சாப்பிட முடியாமல் கிடக்கிறேன். பல்லு கூசுது. வீட்டிலே நீங்க சாப்பிடாம போட்ட சாப்பாடெல்லாம் சாப்பிட்டு முடிச்ச பிறகுதான் சுடு சோறுன்னு வேறு சொல்லி புட்டாங்க...

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....