Monday, January 5, 2015

கோவில் குளம் - அருள்மிகு ஸ்ரீஆதி ஜெகந்நாத பெருமாள் கோவில், திருப்புல்லாணி, இராமநாதபுரம்

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்


**************************************************************
     இராமநாதபுரத்தில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது திருப்புல்லாணி என்கிற ஊர்.இங்கு கோவில் இருப்பது எல்லாம் தெரியாத நிலையில் ஒரு வேலை விசயமாக அங்கு சென்றேன்.சிறு கிராமமாய் தோற்றமளிக்கும் ஊரில் பிரம்மாண்டமான கோவில் கோபுரமும்,மதில் சுவர்களும், கோவிலுக்கு எதிரில் ஒரு பெரிய குளமும் இருக்கவும் ஆச்சர்யப்பட்டு விசாரித்தபோது இங்கு தான் ராமர் இலங்கைக்கு கடத்தி செல்லப்பட்ட சீதையை மீட்டிட ஆலோசனை செய்த இடம் எனவும், கடல் ராஜன் ராமனிடம் மன்னிப்பு கேட்ட இடம் எனவும், தர்ப்பைப்புல்லில் சயன நிலையில் ராமர் தரிசனம் தரும் கோவில் என சொல்லவும் அதை அறியும் பொருட்டு  ஆவலுடனும், அதே சமயம் ராமபெருமானின் பக்தியைப் பெறவும் கோவிலுக்குள் நுழைந்தேன்.
          மிகப்பழங்காலத்தில் கட்டப்பட்ட திருக்கோயில் என்பதை அங்குள்ள தூண்களையும் சிற்பங்களை வைத்து கண்டுகொள்ளலாம்.பிரகார மண்படத்தில் நூறுக்கும் மேற்பட்ட தூண்கள் அழகிய வடிவமைப்புடன் காணப்படுகின்றன.வெளிப்பிரகார மண்டபத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள சிலைகளின் அழகும் வண்ணமும் நம் கண்ணைக்கவரும்.இந்தக் கோவில் 72 சதுர்யுகங்களுக்கு முன்பு ஏற்பட்ட கோவில் என்று கூறப்படுகிறது. இக்கோவிலில் இராமன் சயன நிலையில் உள்ள சிலையின் அமைப்பும் அழகும் நம்மை பரவசப்படுத்துகின்றன.இந்த கோவிலின் தலவிருட்சமாக அரசமரம் இருக்கிறது.பல நூற்றாண்டுகளுக்கும் மேலாக இந்த மரம் இன்னும் இருப்பது அதிசயம்.திருமாலின் அவதாரமான இராமபிரானே இத்தலத்துப்பெருமாளை ஆராதனம் செய்ததாக தலவரலாறு கூறுகிறது..




தலவரலாறு
72 சதுர்யுகங்களுக்கு முன்பு புல்லவர், காலவர், கண்ணவர் ஆகிய மூன்று மகரிஷிகளும் தர்ப்பைப்புல் நிரம்பிய . தற்போது கோவில் அமைந்துள்ள இடமான திருப்புல்லாணி காட்டில் பெருமாளை வேண்டி கடும் தவமிருந்தனர்.தவத்தின் பலனாக அகம் மகிழ்ந்த பெருமாள் அரசமரமாக இவர்கள் முன்பு காட்சியளித்தார்.அதைக்கண்டு மகரிஷிகள் மகிழ்ந்தாலும் பெருமாளிடம் உண்மையான சொரூபத்தில் காட்சியளிக்கும்படி வேண்ட, அவர்களின் வேண்டுகோளை ஏற்று ஆதி ஜெகந்நாதப்பெருமாளாக காட்சியளித்தார்.அத்திருத்தலமே இத்திருத்தலம்.



ஸ்ரீஆதி ஜெகந்நாதப் பெருமாள் ஸந்நிதி:

இந்த ஸந்நிதிக்கு எதிரில் பெரிய கருட மண்டபமும் கருடன் ஸந்நிதியும் உள்ளன.பெருமாள் ஸந்நிதி மண்டப வாசலில் துவாரபாலகர்கள் காட்சி தருகின்றனர்.உள்ளே அர்த்தமண்டபத்தில் ஸ்ரீஆதிஜெகந்நாதப்பெருமாள் ஸ்ரீபூமி நீளை என்ற தேவிமார்களுடன் வீற்றிருந்த திருக்கோலத்துடனும் பொற்கவசத்துடனும் பக்தர்களின் கண்களுக்கு காட்சி தருகிறார்.

ஸ்ரீதர்ப்பசயன ராமன் ஸந்நிதி :

வடக்கு பிரகாரத்தில் பெருமாள் ஸந்நிதிக்கு சற்று வடகிழக்கே இந்த ஸந்நிதி இருக்கிறது.இராமன் சீதையை தேடிக்கொண்டு வந்தபோது இங்கு மூன்று நாட்கள் புல்லில் இட்ட படுக்கையில் பள்ளி கொண்டு விபிஷணன் சொல்லுக்கிணங்க  கடல் ராஜன் சமுத்திராஜனிடம் வழிவிடவேண்டி அவரை சரணாகதி பண்ணினார்.அதனால்தான் இப்பெருமாளுக்கு தர்ப்பசயனராமன் என்ற திருநாமம் ஏற்பட்டது.இங்கு தான் ராமன் கடல் மேல் அணை கட்ட வானர வீரர்களுடன் ஆலோசனை பண்ணினார்.

ஸ்ரீபட்டாபி ராமன் ஸந்நிதி:-

துவாரபாலகர்களுடன் அர்த்தமண்டப கருவறையில் பட்டாபி ராமன் எழுந்தருளியுள்ளார்.இராமன் இலங்கையில் இராவணனை அழித்து வெற்றிபெற்று சீதையுடன் புஷ்பகவிமானத்தில் அயோத்திக்கு திரும்புகையில், பக்தர்களின் விருப்பத்திற்கிணங்கி இந்த இடத்தில் பட்டாபிஷேகம் செய்துகொண்டு இங்கு அமர்ந்துள்ளார்.இந்த பட்டாபி ராமனை தரிசிப்போருக்கு பலவகையிலும் புண்ணிய பலன் கிட்டும்.

ஸ்ரீசந்தான கோபாலகிருஷ்ணர் ஸந்நிதி:

தர்ப்பசயன ஸந்நிதிக்கு வடபால் வெளிமண்டபத்தில்  ஸ்ரீ சந்தான கோபாலகிருஷ்ணன் எழுந்தருளியுள்ளார்.இம்மண்டபத்திக்கு நாகர் மண்டபம் என்ற பெயரும் உண்டு.இங்கு எம்பெருமானை வேண்டிக்கொண்டு நாகப்பிரதிஷ்டை செய்தால் புத்திரப்பேறு இல்லாதவர்களுக்கு நல்ல புத்திரர்கள் பிறப்பார்கள் எனவும், ஏழு தலைமுறைக்கும் நல்ல புத்திரர்கள் பிறப்பார்கள் என்ற ஐதீகம் இருக்கிறது.இன்றும் பல ஊர்களில் இருந்து பக்தர்கள் இக்கண்ணன் முன்பு இம்மண்டபத்தில் ஸர்ப்பசாந்தி, ஸர்ப்பஹோமம் முதலான வைதிக சடங்குகளைச் செய்து நற்பயன் அடைந்து வருகிறார்கள்.இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான நாகப்பாம்பு சிலைகள் தலவிருட்சமான அரசமரத்தில் பக்கத்தில் வைக்கப்பட்டுள்ளன.
  
முக்கிய உத்ஸவங்கள்
ஆதி ஜகந்நாதப்பெருமாள் பிரமோத்ஸவம்
பட்டாபிராமன் பிரமோத்ஸவம்
சூடிக்கொடுத்த நாச்சியார் உத்ஸவம்
திருப்பவித்திரோத்ஸவம்
பகல்பத்து இராப்பத்து
தாயார் நவராத்திரி உத்ஸவம்
விஜயதசமி
ஆகிய உத்ஸவங்கள் ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெற்று வருகின்றன.
              திருப்புல்லாணி சங்ககாலத்துத்தும் பிற்காலத்தும் பெரும் புகழ்பெற்ற ஊர்.இத்தலம் தீர்த்தம், மூர்த்தி, தலம் என்ற முச்சிறப்புகளை உடையது.புராணப்புகழ் பெற்றும், சரித்திர புகழ் பெற்றும் சிறந்த திவ்யதேசமாக விளங்குகிறது.விஷ்ணுவின் அவதாரமான இராமபிரான் ஆதி ஜெகந்நாதப்பெருமாளை வணங்கி அவரால் கொடுக்கப்பெற்ற வில்லைக்கொண்டு இராவண ஸம்ஹாரம் செய்து, சீதா தேவியை மீட்டிட அனுக்கிரகிக்கப்பட்ட ஸ்தலம்.இராமபிரானை சரணமடைந்த இராவணனின் தம்பி விபீஷணன் இலங்கைக்கு அரசனாக முடிசூட்டப்பட்ட இடம்,கடற்ராஜன் தர்மபத்தினியுடன் இராமபிரானை சரணமடைந்து தன் குற்றத்தினை மன்னிக்கப்பெற்ற இடம். இப்படி பல்வேறு புராதன நிகழ்வுகளை கொண்ட சிறப்புகள் வாய்ந்த ஸ்தலத்தினை அடைந்து அருள் பெறுவீர்களாக.....

எப்பவும் போல கோவிலின் வெளிப்பகுதியில் சிறு சிறு கைவினை கலைஞர்கள்.பனை ஓலையில் செய்யப்பட்ட கூடைகள், தொப்பிகள் கிலுகிலுப்பை என நிறைய கைவினைப்பொருட்களை கடை பரப்பி விற்பனைக்காக வைத்திருந்தனர்.என்பங்குக்கு பனை விசிறியும் தொப்பியும் வாங்கிகொண்டேன்..வரப்போகும் கோடை காலத்திற்காக....



கோவிலுக்கு செல்ல வழி - இராமநாதபுரத்திலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது.நிறைய பேருந்துகள் இருக்கின்றன.
நடை திறக்கும் காலம்- காலை 7 மணி முதல் 12.30 வரை; மாலை 3.30 மணி முதல் இரவு 8.30  வரை.

திருப்புல்லாணி அருகில் கீழக்கரை இருக்கிறது.இங்கே கிடைக்கும் துதல் அல்வா.

நேசங்களுடன்
ஜீவானந்தம்





1 comment:

  1. அனைத்து எண்ணங்களும் நிறைவேற இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....