Monday, January 12, 2015

மலரும் நினைவுகள் - பனங்கிழங்கு -


             
                   
             பனைமரத்தில் முற்றிய நுங்குகளை அப்படியே விட்டுவிட்டால் அது பழமாகிவிடும்.அதன் வாசம் ஊரையே தூக்கும்.நன்கு பழுத்த பனம்பழங்கள் தானே உதிர்ந்துவிடும்.சிறுவயதில்இந்த பனம்பழத்தினை பொறுக்க காலையிலேயே கிளம்பிவிடுவோம்.ஒவ்வொரு பனைமரமாய் தேடி எடுத்துவந்து நெருப்பில் சுட்டு சாப்பிடுவோம்.அதன் நெருப்பில் சுடும் மணம் எட்டுபட்டி கிராமத்தையும் தூக்கும்.அதன் சுவை ஆஹா...வாய் மூஞ்சியெல்லாம் பனம்பழத்தின் தடித்த சாறு வடவட வென ஒட்டிக்கொண்டிருக்கும்.பனங்கொட்டையை சப்பி சப்பி சாப்பிடும்போது அதன் நாறுகள் பல்லில் சிக்கி ஒரு சில இம்சையை கூட்டும்.அதை பல்லில் இருந்து எடுக்க கடும் பிரயத்தனம் செய்து கொண்டிருப்போம்.

                  சப்பிய கொட்டையை நன்றாய் கழுவி அதை ஒரு வித அழகுபொருளாய் செய்வோம்.பொம்மை போல் பனங்கொட்டையை ஆக்குவோம்.முடி உள்ள சாமியார் போலவும், பிசாசு போன்ற உருவம் கொண்டதுமாய் வரைவோம் அந்த பனங்கொட்டையை..வீட்டின் முகப்பில் மாட்டிவைத்து அழகுபடுத்துவோம்..


                      பனம்பழத்தினை எடுத்துவந்து பதியன்போட்டு ஒரு சில வாரங்களில் முளைத்ததும் பிடுங்கி எடுத்தால் பனங்கிழங்கு ரெடி..அந்த கிழங்குடன் கொட்டையும் இருக்கும்.அந்தகொட்டையை இரண்டாய் பிளக்கும்போது சீம்பு கிடைக்கும் அது இன்னமும் செம டேஸ்டாய் இருக்கும்.பனங்கொட்டையை வெட்டும்போது சீம்பு முகத்தில் எல்லாம் தெறிக்கும்.அதில் அழுகுன சீம்பு கூட அவ்வப்போது வரும்.அதையெல்லாம் துடைத்துவிட்டு கொட்டையை வெட்டுமிடத்தில் உட்கார்ந்திருப்போம்.பிறகு கிழங்கை எடுத்து வேகவைத்து திங்கும்போது நாறுகள் ஏகப்பட்டது வரும்.அதை லாவகமாய் பிய்த்து எறிந்து கிழங்கை சாப்பிடுவோம்.கிழங்கின் சுவை சூப்பராய் இருக்கும்.இப்போதெல்லாம் பனைமரங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன.தென்மாவட்டங்களில் மட்டும் இருக்கின்றன.பனைமரத்தின் பயன்கள பலப்பல..ஆனால் அழிந்துவரும் இனத்தில் இப்போது பனைமரமும்...



மற்ற மலரும் நினைவுகள்  மருதாணி

நேசங்களுடன்
ஜீவானந்தம்

1 comment:

  1. வருங்காலத்தில் கிடைப்பது அரிது தான்...

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....