Monday, September 19, 2016

கரம் - 26

பார்த்தது:
ஓணம் பண்டிகையை ஒட்டி ஏசியாநெட் டீவியில் மீண்டும் பத்தேமாரி பார்த்தேன்.எத்தனை முறை பார்த்தாலும் கண்கலங்க வைக்கிற படம்.வெளிநாட்டில் கஷ்டப்படும் தொழிலாளியின் உணர்ச்சிமிகுந்த கதை தான்.இந்தப்படத்தில் அவ்வப்போது மெலிதாய் ஒலிக்கும் பத்தேமாறி பாடல் இன்னும் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கிறது...படம் முழுக்க மம்முட்டி வாழ்ந்திருக்கிறார்  தன் குடும்பத்திற்காக வாழ்க்கையை தொலைத்து......

படித்தது:
                    சமீபத்தில் புத்தககண்காட்சியில் நிறைய புத்தகங்கள் வாங்கினேன்.அதில் ”கம்பிக்குள் வெளிச்சங்கள்”  தோழர் தியாகு எழுதின சிறை அனுபவங்களை பற்றின தொகுப்பு.படிக்க செம இண்ட்ரஸ்டிங்.நக்சலைட் இயக்கத்தில் இருந்தபோது செய்த போராட்டங்கள், கொலைக்குற்றங்கள், சிறைத்தண்டனை, மூலதனம் தமிழாக்கம் இயற்றியது, மற்றும் சிறைக்கைதிகளின் வாழ்க்கை, சிறையில் நடக்கும் கொடுமைகள் என சுவைபட சொல்லியிருக்கிறார்.தூக்கு தண்டனை பெற்ற குற்றவாளிகளின் கதையை சுவராஸ்யமாக சொல்லியிருப்பது படிக்க ஆவலைத் தூண்டுகிறது.அதிலும் பூ.கருப்பையா என்பவரின் கதை ஒரு நாவல் போல இருக்கிறது.பொய் வழக்கு புனையப்பட்டு தூக்குத்தண்டனை பெற்று சிறையில் தூக்குக்காக காத்திருக்கும் நேரத்தில், அதே சிறையில் இருக்கும் தியாகு அவர்களால் அவர் விடுதலை பெற்று, பின் பல வருடங்கள் கழித்து இருவரும் சந்திக்கும் போது அந்த இடம் ஒரு திரைப்படத்தினை பார்த்த மகிழ்ச்சியினை ஏற்படுத்துகிறது.மனமும் கலங்குகிறது.அந்தளவுக்கு எழுத்துக்களில் வசீகரிக்கிறார். மிசா காலத்தில் சிறையில் அடைக்கப்பட்ட அத்தனை அரசியல்வாதிகளுக்கும் ஏற்பட்ட கொடுமைகளை விவரிக்க, நமக்கே பதைபதைக்கிறது.அதிலும் ஸ்டாலின் சிறையில் பட்ட கொடுமைகளையும், அப்போதைய சிட்டிங் எம்பி திரு சிட்டிபாபு  அவர்களுக்கு ஏற்பட்ட கொடுமைகளையும் விவரிக்கும் போது மிசாவின் கொடுமையான சிறை வரலாற்றினை பற்றி தெரிந்து கொள்ள முடிகிறது.
காவல் துறையின் பொய் புனைவுகள்,  கொலையாளியை கண்டுபிடிக்கும் விதம் என சுவாரஸ்யமாக தேர்ந்த திரைக்கதை போல் தன் அனுபவத்தினை சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.
விலை : ரூ 350.
வெளியீடு - விஜயா பதிப்பகம்.


இன்னொரு புத்தகம் காட்டுக்குட்டி

தூப்புக்காரி என்ற நாவலைப் படைத்து சாகித்ய அகாடமி  விருது பெற்ற மலர்வதி எழுதிய நாவல் என்று வாங்கினேன்.முதல் முன்னுரையே ஏகப்பட்ட பிழைகளுடன் இருக்க,  கதைக்குள் நுழைந்தால்  பேச்சு வழக்கில் நாவல்.சாதாரணமான வார்த்தைகள் என்றால் பரவாயில்லை.நாகர்கோவில் கன்னியாகுமரி மாவட்ட மலையாள வாசம் வீசும் தமிழ்.புரிந்து கொள்ளவே கொஞ்சம் நேரம் பிடிக்கிறது.இரண்டு அத்தியாயங்கள் தான் படித்து இருப்பேன்.செம போர்...ஒன்றும் புரியவில்லை.அப்படியே மூடி பத்திரமாய் வைத்து விட்டேன்.இனி அது பரணில் தூங்கும்.காசுக்கு கேடு...
நேசங்களுடன்
ஜீவானந்தம்

No comments:

Post a Comment

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....