Thursday, September 1, 2016

கரம் - 24

பார்த்தது:
                மலையாளத்தில் நிறைய படங்கள் பார்த்தேன்.களி மற்றும் கம்மாட்டி பாடம் இந்த இரண்டும் ஓரளவுக்கு ரசிக்க வைத்தன.ஆக்சன் ஹீரோ பிஜு இன்னும் பயங்கரமா ரசிக்க வைத்தது.அதற்கப்புறம் மகேஷிண்ட பிரதிகாரம், டார்விண்டே பரிமாணம், ஜேக்கபிண்டே சொர்க்கராஜ்யம், லீலா இப்படி பல படங்கள் சுவாரஸியமற்று இருந்தன.மலையாள ரசனை நமக்கு ஒத்து போவதில்லை போல...


ருசித்தது:
வாங்க சாப்பிடலாம்

                  ஒரு மதிய நேரம்.கோவையின் வ உ சி பார்க், நேரு விளையாட்டு அரங்கத்தை சுற்றி வண்டியை ஓட்டிய போது கண்ணில் பட்டது "வாங்க சாப்பிடலாம்" என்கிற ஹோட்டல்.புதுசா ஆரம்பிச்சிருக்காங்க போலிருக்கு ஒரு கை ..சாரி ஒரு வாய் பார்க்கலாம்னு உள்ளே போனோம்.கீழே டேபிள் சேர் போட்டு இருக்காங்க, ஒரு ஈ. காக்கா காணோம்.பார்த்தா மாடிக்கு போற ஒரு படி இருக்கு.ஏறி உள்ள போனா பரந்து விரிந்து இருக்கு.நல்ல இண்டீரியர்.தாராளமான இடவசதியில் டேபிள்கள் போடப்பட்டிருக்கின்றன.

                  அங்கொன்றும் இங்கொன்றுமாய் டேபிள்கள் நிறைந்திருக்க, நாங்கள் ஒரு டேபிளை நிறைத்தோம்.சாப்பிட வந்தவர்களைவிட சர்வர்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது.அதில் நேபாளிகளும் அடக்கம்.இலையை விரித்தனர்..பெரிய மெனு புக்கை தந்துவிட்டு சென்றனர்.புதிதாய் எதுவுமில்லை.பொதுவாய் எல்லா ஹோட்டலிலும் அச்சடிக்கப்பட்டு இருக்கும் ஒரே மெனு தான்.சிறப்பு மெனு என்று எதுவும் இல்லை.

                    பிச்சிப்போட்ட கோழி என்கிற டிஷ் என்னை கவர்ந்தது.ஆர்டர் போட்டேன்.பின் தந்தூரி, லாலி பாப், பிரியாணி, நான் வெஜ் மீல்ஸ் , தயிர்சாதம் இப்படி அனைத்தும் ஆர்டரிட்டேன்.

                     ஒவ்வொன்றாய் வந்தது.பிச்சிப்போட்ட கோழி...இது எந்த வகையான மெனு என்றே தெரியவில்லை.முட்டையை மிக்ஸ் பண்ணி கோழியை போட்டு குருமா ஊத்தி கல்லில் ஃபிரை பண்ணி கொத்து புரோட்டா போல் இருந்தது.நன்றாகவே இல்லை.கோழிக்குன்டாண சுவை முட்டையில் அடங்கிப்போய் நம் நாவை அடக்கம் செய்து விட்டது..அடுத்து பிரியாணி..பேரு ஆம்பூர் பிரியாணி...ஆம்பூர் போய் சாப்பிட்டிருப்பாரா மாஸ்டர் என்று தெரியவில்லை.குழைந்த போன சாதம்.நிறமில்லை.மணமில்லை.சுவையும் சுத்தமாய் இல்லை..

அடுத்து தந்தூரி...கொஞ்சம் கூட உப்பு உரைப்பு காரம் என்று எதுவுமில்லை.தந்தூரிக்கான மணம் என்பதே இல்லை.கோழியை மசாலாவோடு நெருப்பில் வாட்டினால் ஒரு வித மணம் ஏற்படும்.அது ஆளையே தூக்கும்.நாவின் சுவை நரம்புகளை துடிக்க வைக்கும்.நாசியின் நரம்புகளை மிரளவைக்கும்.வயிற்றுக்குள் பசி நரம்புகள் நம்மை தூண்டவைக்கும். அந்தமாதிரி எதுவுமே ஏற்படவில்லை பக்கத்தில் வைத்த போதும், சாப்பிட்ட போதும்...மசாலாக்கள் அரைகுறையோடு தந்தூரியின் பாகங்களில் இருக்க, சுவை சுத்தமாய் இருந்தது.

              லாலிபாப்...வெள்ளிபேப்பர் சுத்தப்பட்டு கருஞ்சிவப்பாய் வந்தது.கோழிக்கறியின் மெது மெது தன்மை இல்லாது கெட்டிப்பட்டு இருந்தது.பஞ்சு போன்ற தன்மை இறுகிக்கிடந்தது.
தயிர் சாதம்...வெறும் மாதுளை முத்துக்களை நிரப்பி கலர்புல்லாய் கொண்டு வந்ததுதான் மிச்சம்..தயிர்சாதம் கூட டேஸ்டாய் செய்ய முடியாமல் ஒரு ஹோட்டல்...
                     நான் வெஜ் மீல்ஸ்.பேரில் மட்டும் தான்..ஒரு எலும்பைக்கூட காணவில்லை.வெரைட்டியான குழம்பும் இல்லை...
இந்த ஹோட்டல் நடத்துறவங்க தயவு செஞ்சு அக்கம் பக்கம் இருக்கிற ஹோட்டல்ல சாப்பிட்டு பாருங்க.சுவை எப்படி இருக்குன்னு தெரிஞ்சுகிட்டு மெனு போடுங்க.ஹோட்டலை நடத்துங்க.
பிச்சிப்போட்ட கோழி வளர்மதி மெஸ்ல சாப்பிடுங்க..செம டேஸ்டா இருக்கும்..தந்தூரி சிக்கனை கொக்கரக்கோல சாப்பிடுங்க ஏ ஒன்னா இருக்கும்..

விலை எப்பவும் போல அதிகம்தான்.இதில் 20% தள்ளுபடி வேற..
வாங்க சாப்பிடலாம்...சத்தியமா இன்னொரு வாட்டி போக மாட்டேன்..
நேரு அரங்கில் பர்மா பாய் ஓட்டல் அருகே இருக்கிறது.ஹோட்டல் அலங்கார் நடத்தும் இந்த வாங்க சாப்பிடலாம்...
போங்க உங்களுக்கு ஒரு அனுபவம் வேண்டுமென்றால் ....

படித்தது
கொடிசியாவில் புத்தக கண்காட்சி கடந்த வாரம் நடைபெற்றது.நானும் என் பங்குக்கு பல புத்தங்கங்களை வாங்கி வைத்துள்ளேன்.இனி தான் ஒவ்வொன்றாக படிக்க ஆரம்பிக்கனும்.கடந்த வருடங்களை விட இந்த தடவை கொடிசியாவில் செம கூட்டம்.தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை இருக்கவும், மக்கள் குடும்பத்தோடு குவிந்து விட்டனர்.
கூடின கூட்டமெல்லாம் புக் வாங்க அல்ல.தினமலர் ஷாப்பர்ஸ் ஷாப்பிங் கண்காட்சி போட்டு இருந்தாங்க.எல்லாரும் அங்க தான் போய்ட்டு எஞ்சாய் பண்ணிட்டு வருகிறார்கள்.
ஏதோ நம்மளை மாதிரி ஆட்கள் தான் புத்தக கண்காட்சிக்கு போய்ட்டு வருகிறார்கள்.சில பதிப்பகங்களை வாழ வைக்கிறார்கள்.எழுத்தாளர்களை வளர வைக்கிறார்கள்...



நேசங்களுடன்
ஜீவானந்தம்

1 comment:

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....