Showing posts with label ஓசூர். Show all posts
Showing posts with label ஓசூர். Show all posts

Tuesday, May 6, 2014

பயணம் – மூதறிஞர் இராஜாஜி பிறந்த இல்லம், தொரப்பள்ளி, ஓசூர்

மூதறிஞர் இராஜாஜி பிறந்த இல்லம், தொரப்பள்ளி, ஓசூர்
போன மாதம் ஓசூர் போயிருந்தபோது மூதறிஞர் இராஜாஜி பிறந்த வீடு இங்கு தான் இருக்கிறது என்று அறிந்த போது மிகவும் ஆச்சரியப்பட்டேன். அவரைப்பற்றி அதிகம் தெரிந்ததில்லை, எப்போதோ வரலாறுகளில் படித்தது, அப்புறம் பொது அறிவுக்கேள்விகளில் மட்டுமே இராஜாஜி என்பவரை தெரிந்து வைத்து இருந்தேன்.ஓசூர் அருகிலேயே இருக்கும் அவரது இல்லத்தினை பார்க்க கிளம்பினோம்.ஓசூர் டூ கிருஷ்ணகிரி செல்லும் பெங்களூர் நெடுங்சாலையில் வலதுபுறம் தொரப்பள்ளி செல்லும் ஊரின் முன்பாக பெரிய வளைவு நம்மை வரவேற்கிறது.
தொரப்பள்ளி செல்லும் சாலையானது படுமோசம் என்பது அதில் செல்லும்போதே தெரிகிறது.ஆனால் சாலையின் இருமருங்கிலும் பசுமை தலைவிரித்தாடுகிறது.மாமர தோப்புகள், சிறு வயல்வெளிகள், அதில் காலிபிளவர் செடிகள், கொத்தமல்லி செடிகள் என விவசாயம் செழிப்பாய் நடந்து கொண்டிருக்கிறது.தென்பெண்ணை நதிதான் அதற்கு காரணம் என்பது தெள்ளத்தெளிவாக விளங்குகிறது.இருபுறமும் பசுமையை ரசித்தபடி 4 கிலோமீட்டர் தொலைவு வந்தடைய தொரப்பள்ளி எனும் சிறு கிராமம் நம்மை வரவேற்கிறது.





இன்னமும் நகரவாழ்க்கைக்கு அடிபணியாமல் கிராமத்து இயல்பில் இருந்தாலும் பொட்டிக்கடை வரை குடியேறிவிட்ட கோகோ பெப்சி குளிர்பானங்களின் அத்தனை விளம்பர போர்டுகளிலும் தமிழும் கன்னடமும் சரிக்கு சமமாய்  இடம் பிடித்திருக்கின்றன. அங்கிருக்கிற ஒருவரிடம் விசாரித்தபோது பக்கத்தில் தான் இருக்கிறது என சொல்ல அந்த சின்ன கிராமத்தில் அடுத்த தெருவில் இன்னுமொரு பெரிய ஆர்ச்சு வரவேற்கிறது.நீண்ட தெரு...வீடுகள் அனைத்தும் வரிசையாய் இருபுறமும் இருக்கின்றன.அனைத்து வீடுகளிலும் ஆள் நடமாட்டம் இருக்க, மூதறிஞர் இராஜாஜி வீடு பூட்டிக்கிடந்தது.வீட்டினைப் பராமரிக்கும் வாட்ச்மேன் கூட இல்லை.பக்கத்தில் கேட்டபோது அவர் எங்கோ சென்றிருக்கிறார் என சொல்ல, பூட்டிய வீட்டிற்கு முன் புகைப்படம் எடுத்துக்கொண்டோம்.





வரலாற்று சிறப்புமிக்க ஒரு தலைவரின் வீடு ஆள் அரவமின்றி இருக்க காரணம் முந்தைய வரலாற்று நிகழ்வுகள் பற்றி யாரும் அறிந்து கொள்ள விருப்பம் இல்லாததுதான் காரணம்.இதையெல்லாம் பார்க்கும்போது நாமெல்லாம் எந்த மூலைக்கு என்று நினைக்க தோன்றுகிறது.அவரின் வீட்டிற்கு சென்ற பின் தான் அவரைப்பற்றி அதிகம் தெரிந்து கொண்டேன்.அவர் பிறந்த ஆண்டின் அடுத்த நூறு ஆண்டுகளுக்கு பின் நான் பிறந்திருக்கிறேன் என்பதும், நான் பிறப்பதற்கு முன்பே காலமானதும் மலைக்கவைக்கும் ஆச்சர்யம்.1878ல் பிறந்து பல்வேறு சாதனைகள் செய்த மூதறிஞர் பற்றி தெரிஞ்சுக்க கிளிக்

இந்த கோடைவிடுமுறையில் கொஞ்சம் பயனுள்ளதாக கழியனும்னா இந்தமாதிரி இடங்களுக்கு சுற்றுலா கூட்டிட்டு போங்க...வரலாற்றில் இருக்கிற உண்மைகள் கொஞ்சமாவது தெரிய வரும்....

நேசங்களுடன்
ஜீவானந்தம்


இன்னும் கொஞ்சம்...

Monday, April 21, 2014

பயணம் - கெலவரப்பள்ளி அணை - ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம்

ஓசூர் கெலவரபள்ளி அணை.
ஒரு வேலை விசயமாக ஓசூர் சென்றிருந்த போது ஃப்ரி டைமில் அந்த ஊரில் சுற்றிப்பார்க்க என்ன இருக்கிறது என கூகுளிடவும், கெலவரப்பள்ளி அணை, மூதறிஞர் ராஜாஜி பிறந்த இல்லம், சந்திரசூடேஸ்வர் கோவில் மற்றும் தளி ஆகிய இடங்களைக் காட்டவும், சரி...பக்கத்தில் இருக்கும் கெலவரப்பள்ளி டேம் போவோம் என்று அங்கு வண்டியைக்கட்டினோம்.


பாகலூர் செல்லும் வழியில் வலது புறம் ஒரு ரோட்டில் பிரிய, 20 நிமிட நேரப்பயணத்தில் கெலவரப்பள்ளி டேம் வந்தோம்.ரோடு படு மோசமாக இருக்க, இருபுறமும் கரட்டுமேடுகளாய் காணப்படுகிறது.ஒரு சில இடங்களில் மட்டும் விவசாய நிலங்கள் விளைந்திருக்க, ஆங்காங்கே கான்கிரீட் காடுகள் உருவாக ஆரம்பித்து இருக்கின்றன.
கர்நாடகா மாநிலத்தில் சிக்கபல்லபூர் மாவட்டம் நந்தி மலையில் தென்பெண்ணை நதியாய் உருவாகி கர்நாடகா, தமிழ்நாடு வழியே பாய்ந்து கடலூர் மாவட்டத்தில் கடலில் கலக்கிறது.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூரில் பொன்னையார் நதியாக மாறிப்பாய்கிறது.அதன் குறுக்கே கெலவரப்பள்ளியில் அணை கட்டப்பட்டு நீர் தேக்கி வைக்கப்பட்டு அங்குள்ள பகுதிகளுக்கு பாசனம் மற்றும் குடிநீர் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது.பரந்து விரிந்து கிடக்கிறது இந்த அணையின் நீர்த்தேக்கம்.ஆனால் அணையோ மிகச்சிறியதாக இருக்கிறது.அணையின் உயரம் 13.5 மீட்டர்கள் மட்டுமே.நீளமும் 105.25 மீட்டர்தான்.மிகப்பெரிய அணையாக இருக்கும் என்றெண்ணி வந்தவர்களுக்கு நிச்சயம் கொஞ்சம் ஏமாற்றமாகத்தான் இருக்கும்.எங்களுக்கும் அதுவே...




புரட்சித்தலைவர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட அணை தற்போது கிருஷ்ணகிரி, ஓசூர், பகுதிகளுக்கு பாசன வசதியை தந்து கொண்டிருக்கிறது.
இந்த அணையை சுற்றுலாத்தளமாக ஆக்கிய அரசு அங்கு சிறுவர் பூங்கா மற்றும் பொழுது போக்கு அம்சங்களை அமைத்துள்ளது.ஓசூரின் பரபரப்புக்கு ஓய்வு கொடுக்கும் இடமாக இது இருக்கிறது.பசுமை வாய்ந்த பூத்துக்குலுங்கும் மரங்கள், பலவித பறவைகள் (அம்மணிகளும் சேர்த்து) என காணும் போது மனம் மகிழ்ச்சியில் திளைக்கும்.


அணைக்கு செல்ல 4 ரூபாய் வசூலிக்கிறார்கள்.இந்த அணையில் கடை கண்ணிகள் என்பது சுத்தமாக இல்லை.எப்போதாவது வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக எதற்கு கடை போடணும் என்று நினைத்திருப்பார்கள் போல....ஆனால் இது போன்ற சுற்றுலாத்தளங்களில் எப்பவும் போல அம்மணிகள் தத்தம் ஜோடிகளுடன் ஒதுக்குப்புறங்களில் மோன நிலையில் இருப்பதைக்காணலாம்.அணையில் ஒரு சில பேர் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.ஆனால் எங்கும் மீன் வறுவலைக் காணோம்.எல்லா அணைகளிலும் யாராவது ஒருத்தர் மீன் கடை போட்டு இருப்பாங்க.ஆளே இல்லாத கடையில் எதுக்கு  டீ ஆத்தனும் அப்படின்னு விட்டிருப்பாங்க போல...
மிக அமைதியாக ஊரின் பரப்பரப்பின்றி இருக்கிறது.இயற்கை ஆர்வலர்களுக்கு ஏற்ற இடம்.அது போலவே நம்ம பங்காளிகளுக்கும் ஏற்ற இடம்.வார இறுதியை சுகமாய் செலவின்றி கொண்டாடக்கூடிய இடம்.

ஓசூர் மக்களுக்கான ஒரே பொழுது போக்கு இடம் இதுதான்.சனி ஞாயிறுகளில் கூட்டம் அள்ளும்.ஓசூர் பக்கம் போனிங்கன்னா ஒரு எட்டு பார்த்துட்டு வாங்க.வருங்கால சந்ததியினருக்கு நீர் எப்படி தேக்கி வைக்கப்படுகிறது, அணையின் பயன்பாடு என்ன என்பதெல்லாம் அறிந்து கொள்ள முடியும்.

நேசங்களுடன்
ஜீவானந்தம்




இன்னும் கொஞ்சம்...