Showing posts with label நான்வெஜ். Show all posts
Showing posts with label நான்வெஜ். Show all posts

Friday, September 11, 2020

கரம் - 38 கொரோனோ பாதிப்புகள்

இப்ப இருக்கின்ற வேலை இல்லாத நிலைமையில், தத்தம் பொருளாதார பாதிப்பின் சுமையினை ஈடுகட்ட நிறைய பேர் உணவுத்தொழிலாக திடீர் ஹோட்டல்கள், வீட்டு சமையல்கள், ஹோம்மேட் டெலிவரி என ஆரம்பித்திருக்கின்றனர்.நல்ல விசயம் தான்.ஆனால் எதை செய்து கொடுத்தாலும் சாப்பிடுவோம் என்று நினைத்து விட்டார்கள் போல..

நம் ஆபீசுக்கு பக்கத்து தெருவில் ஒரு கடைக்காரர் பிட் நோட்டிஸ் கொடுத்து ஆரம்ப சலுகை விலையாக சிக்கன் பிரியாணி, பெப்பர் சிக்கன், சில்லி சிக்கன் என எது வாங்கினாலும் ரூ.50 என விளம்பர படுத்தினார். முக்கியமாய் முஸ்லீம் அன்பரோட கடை அது.கொரோனோ பரவல் காரணமாக இப்பொழுது நான் எங்கும் வெளியே செல்வதில்லை. வீட்டிலிருந்தே மதிய உணவையும் கொண்டு வந்து விடுகிறேன்.அந்த நாளன்று அந்த பக்கமாய் போன நம் சூப்பர்வைசர் இந்த பிட் நோட்டிசை கண்டதும் போன் அடிக்க, சரி டேஸ்ட் பார்க்கலாம், நாமும் எவ்வளவு நாள்தான் வீட்டுச்சோறையே சாப்பிடுவது கொஞ்சம் டேஸ்ட் பண்ணி பார்ககலாமே என பெப்பர் சிக்கன் வாங்கி வா என சொல்ல, பையனும் வாங்கி வந்தான்.

                        பிளாஸ்டிக் டப்பாவில் பேக் பண்ணி கொடுத்திருந்தார்கள்.ஓபன் பண்ணி பார்த்தால் எந்த வித மணமும் இல்லை.சிக்கனை வேக வைத்து மிளகு பொடி என்கிற பெயரில் காரமில்லாத ஏதோ ஒரு தூளில் பிரட்டி வைத்திருக்கின்றனர்.சிக்கனும் ஏதோ கடமைக்கு வெந்திருக்கும் போல.

                                    உப்பு உரைப்பு இல்லை.மசாலா வாசனை இல்லை.மிளகுப்பொடியும் மரத்தூளை போல இருக்க, வாயில் வைத்தவுடன் துப்பத்தான் தோன்றியது.அப்படியே எடுத்து வெளியே கொட்டிவிடு தம்பி என்று சொல்ல அது உடனே குப்பைக்கு தான் போனது.பாய் வீட்டு கடை சரி டேஸ்ட் நல்லா இருக்கும்னு வாங்கியது தப்பாக போய்விட்டது.நல்லவேளை பிரியாணி, இன்னும் மற்ற அயிட்டங்கள் எதுவும் வாங்க வில்லை.இந்த மகா மோசமான உணவுக்கு பிட் நோட்டிஸ் வேறு.அதிலும் வீட்டு விசேசங்களுக்கு ஆர்டரின் பேரில் சமைத்து தரப்படுமாம்...

பிட் நோட்டிசை பார்த்து எத்தனை பேர் வாங்கி இருப்பார்கள்..முதலில் நன்கு சுவையாக சமைக்க கற்றுக் கொண்டு இந்த மாதிரி கடைகளை ஆரம்பியுங்கள்.சமைக்கும் போதாவது கொஞ்சம் டேஸ்ட் பாருங்கள்.ஏனோ தானோ என்று சமைத்து வாடிக்கையாளர்களின் உடலை கெடுக்காதீர்கள்.காசையும் கொடுத்து வியாதியையும் வாங்க வேண்டியிருக்கிறது.நம்ம சூப்பரிடமும் சொன்னேன்.. போய் கடைக்காரரிடமே சொல்..மிக மட்டமான சுவை என்று.. அவனும் போய் சொல்லிவிட்டு வந்திருக்கிறான்...ரெடிமேட் பதில் ஒன்றை சொல்லியிருக்கிறார்கள்.

            இந்த கொரோனோவை விட இவர்கள் தயாரிக்கும் உணவு மிக மோசமாக இருக்கிறது..

இன்னும் கொஞ்சம்...

Friday, January 3, 2020

கோவை மெஸ் - கீர்த்தனா மெஸ், சூலூர், கோவை; KOVAI MESS - KEERTHANA MESS, SULUR, COIMBATORE


இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

கீர்த்தனா மெஸ்:
          கோவையில் இருந்து சூலூர் செல்லும் போது RVS கல்லூரி குமரகோட்டம் தாண்டி செல்கையில் வலது புறம் சைவம் அசைவம் என தனித்தனியாக இந்த ஹோட்டல் இருக்கிறது. ஒரு மாதத்திற்கு முன்பு இந்த ஹோட்டலில் நுழைந்து விட்டோம் ஒரு மதிய நேரத்தில்.வாஷ்பேசினில் கையை கழுவிவிட்டு டேபிளில் அமர, எப்பவும் போல பெரிய சாப்பாட்டு இலையை போட்டுவிட்டு என்ன சாப்பிடுகிறீர்கள் என கேட்க, சாப்பாடு, குடல் கறி என நாங்க சொல்ல, அவர் சொன்னது என்னவோ எல்லாம் சைவ அயிட்டங்கள்.வெஜ் மீல்ஸ், தயிர், தக்காளி, வெரைட்டி மீல்ஸ் என சொல்ல, ஏங்க….ஒரு ஆம்லேட்டாவது கிடைக்குமா என வினவ, இது சைவ ஹோட்டல்ங்க என அவரு சொல்ல, வெளியில் அசைவம் போட்டு இருக்கே என கேட்க, அது பக்கத்து ஹோட்டல் என சொல்ல, அங்க எல்லாம் கிடைக்குமானு கேட்க, அவரும் மொத்தமாய் தலை அசைக்க, இலையை போட்டது போட்டபடி விட்டு விட்டு, பக்கத்து வழியாய் அந்த ஹோட்டலுக்கு தாவினோம்.ஹோட்டலுக்குள்ளேயே வழி இருக்கிறது இரு ஹோட்டலுக்கும்.

        இங்கே வந்தமர்ந்து சாப்பாடு, குடல் கறி ஆர்டரிட்டோம்.இலையை வைத்து சாப்பாடு போட்டு, பொரியலாய் சிக்கன் பிச்சுபோட்ட கறியும், இரத்தப்பொரியலும் வைக்க, அதிசயத்து போனோம்.இரண்டும் முதன் முறையாக அசைவ சாப்பாட்டுக்கு பொரியலாய் பார்க்கிறேன்.சிக்கன் பொரியல் இருக்கே...அது செம..சூடான சாதத்திற்கு மட்டன் குழம்பு முதலில் ஊற்ற, கொஞ்சம் பிசைந்து வாயில் வைக்க, அப்படியே அதன் சுவையில் மெய் மறந்து போனோம்.திருவிழாவிலோ, அல்லது வீட்டு விசேசங்களிலோ ஆட்டுக்கொழுப்பு  மிதக்க மிதக்க எலும்பு குழம்பு ஊற்றுவார்களே….அந்த மாதிரி மிக சுவையாய் இருக்கிறது.இலையில் குழம்பு ஓட, அதை சோற்றை போட்டு அணை கட்டி, வழித்து உறிஞ்சி சாப்பிடுவோமே, அந்த மாதிரி இருக்கிறது.அந்த அளவுக்கு சுவையோ சுவை.குழம்போடு இரண்டு கறித்துண்டுகளும் இருப்பது மிகச்சிறப்பு.


               முதலில் வைத்த சாப்பாட்டுக்கு மட்டன் குழம்பே போதும் என்கிற அளவிற்கு சாப்பிட்டவுடன், மீண்டும் மறுசாதம் வாங்க....அதற்கு நாட்டுக்கோழிக் குழம்பு.இதுவும் நன்கு சுவையாய் இருக்கிறது.குழம்பு நன்கு மணத்துடன், திடத்துடன் இருக்கிறது.சுவையும் மிக சூப்பராக இருக்கிறது.இந்த குழம்பு ஊற்றும் போதும் நாட்டுக்கோழி துண்டுகளை போகிற போக்கில் அள்ளிப்போட்டுச் செல்வது மிக மிக சிறப்பு.
                  வைத்த மறுசாதம் நாட்டுக்கோழி குழம்புக்கு தீர்ந்து போனதால், அடுத்தது மீண்டும் மறு சாதம் வைக்க, அதற்கு மத்தி மீன் குழம்பு.....இந்த மீன் குழம்பும் இரண்டு மத்தி மீன்களோடு ஊற்றுவது மிகவும் சிறப்பு.நல்ல கெட்டியாக மீன் குழம்பு இருக்க, சாதத்தில் பிசைந்து சாப்பிட மிக சுவையாய் இருக்கிறது.அரைத்து வைத்த தேங்காயோடு புளி சேர்த்து நன்கு காரசாரமாய் மீன் குழம்பு சாப்பிட சுவையாய் இருக்கிறது.

                 அடுத்து தக்காளி ரசம்.இது ஏ ஒன் ரகம்.நன்கு காரசாரமாய் அசைவ குழம்புகளை சாப்பிட்டு பின் கொஞ்சம் சாதம் வாங்கி இந்த ரசத்தினை ஊற்றி சாப்பிட்டால் போதும், அவ்வளவு இதமாய் இருக்கிறது. நிறைந்து போன வயிற்றில் இருக்கும் மிச்ச மீதி இண்டு இடுக்குகளிலும் போய் நிறைவது மிகச் சிறப்பு.அடுத்து மோர் இருந்தாலும் வயிற்றில் இடம் இல்லாத காரணத்தால் தவிர்க்கப் படும் போது கொஞ்சம் மனம் கனக்கிறது.இருந்தாலும் ரசத்தினை ஒரு கிண்ணியில் வாங்கி குடிப்பது சூப்பராக இருக்கிறது.

                   மனதும் வயிறும் நிறைந்து வெளியில் வருவது சுகமாய் இருக்கிறது.இப்படித்தான் அன்று எதேச்சையாக போய் சாப்பிட்டதில் இந்த ஹோட்டலின் சுவை அருமை தெரிய வந்தது.அதற்கு அப்புறம் அந்தப்பக்கம் செல்லும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மதிய நேரம் செல்வது போல அமைத்துக்கொண்டேன்.அப்படித்தான் கிட்டத்தட்ட ஒரு மாத காலத்திற்குள் நான்கைந்து முறை சாப்பிட நேர்ந்தது.சாப்பிட்ட அத்தனை தடவையும் அதே சுவைதான்.
                 அந்த சிக்கன் பொரியல் இருக்கிறதே இதுவரை தமிழகத்தில் எங்குமே சாப்பிட்டதில்லை.சிக்கனை நன்கு உதிரி உதிரியாக நீளவாக்கில் பிய்த்து அதில் மசாலாக்கள் சேர்த்து நன்றாக செய்திருக்கிறார்கள்.எப்படி இப்படி சிக்கனில் ஒரு பொரியலை சுவைபட செய்திருக்க முடியும் என ஆச்சரியமாய் இருக்கிறது.சுவையும் சூப்பராக இருக்கிறது.என்ன அளவாய் ஒரு சின்ன பொரியல் பாத்திரத்தில் வைக்கிறார்கள்.இரத்தப்பொரியலும் நன்றாகவே இருக்கிறது.


                     குழம்பு வகையறாவில் மட்டன் குழம்பை சுவையில் அடித்துக்கொள்ளவே முடியாது. அந்தளவிற்கு சுவை.கொழுப்பு மிதக்க மிதக்க குழம்பினை சுடுசாதத்தில் ஊற்றி பிசைந்து சாப்பிடுவது ஒரு தனி சுவை.வீட்டின் கைப்பக்குவம் இதில் தனியாய் தெரிகிறது.
                எல்லாம் சாப்பிட்டு விட்டு பில் வந்தால் ஒரு சாப்பாடு ரூ.80 மட்டுமே.மிக சுவையான தரமான சம்பவம்.மூன்று வகை அசைவ குழம்பு, இரண்டு அசைவ பொரியல், அன்லிமிட்டடு சாப்பாடு, ரசம், மோர்  இந்த விலையில் கிடைப்பது மிக ஆச்சரியமாக இருக்கிறது.
                     சாப்பாட்டோடு சைடு டிஷ் ஆக குடல் கறி, சிக்கன், காடை என அனைத்தும் கிடைக்கிறது,ஆனால் சாப்பாடே மிகச் சிறப்பாய் இருப்பதால் இந்த சைட் டிஷ்கள் தேவைப்படாததாக இருக்கிறது.இது மதிய நேரத்திற்கு மட்டுமே.
                  நன்கு புல் கட்டு கட்டக்கூடியவர்களுக்கு இந்த ஹோட்டல் ஒரு சிறந்த வரப்பிரசாதம்.அந்தப்பக்கம் போனீங்கன்னா ஒரு கை பாருங்க…சாரி…ஒரு வாய் பாருங்க...சுவைக்கு நான் கேரண்டி….
                கோவையில் இருந்து சூலூர் செல்லும் போது பாப்பம்பட்டி பிரிவு தாண்டினால் RVS கல்லூரி, குமர கோட்டம் தாண்டி செல்லும் போது, வலது புறம் இருக்கிறது இந்த ஹோட்டல்.சைவம் அசைவம் என இரு ஹோட்டல்கள் இருக்கின்றன. மதிய நேரத்தில் ஹோட்டல் கொஞ்சம் பிசியானதாக இருக்கும்.டேபிள்கள் ஏழு தான் இருக்கின்றன.ஆனால் சர்வீஸ் நன்றாகவே இருக்கிறது. 

நேசங்களுடன்
ஜீவானந்தம்.


  

இன்னும் கொஞ்சம்...

Wednesday, September 5, 2018

கோவை மெஸ் - சண்முகா மெஸ் - மார்க்கெட், கரூர்


சண்முகா மெஸ், கரூர்.
                மார்க்கெட் பஸ் நிறுத்தத்திற்கு அருகில் இந்த உணவகம் இருக்கிறது.பழைமை வாய்ந்த கட்டிடம்.அக்ரஹாரத்தில் உள்ள வீட்டில் நுழைந்தது போல அமைப்பு.சுவரெங்கும் பக்தி மணம் கமழும் சாமி புகைப்படங்கள்.கடவுளின் வாகனங்களாக அறியப்படும் உயிரனங்கள் இங்கே சுவையாக கிடைக்கின்றன.அலுமினிய தகரம் பதித்த டேபிள்கள்.அதற்கு தோதாய் ஸ்டூல்கள்.




                    இலை போட்டவுடன் மெனுக்கள் வரிசையாய் உச்சரித்தபடி சர்வர் வர, சிக்கன் பிரியாணியும், சாப்பாடும், மட்டன் வறுவலும் நாட்டுக்கோழி குழம்பும் ஆர்டர் செய்தோம் குழம்பு வகைகள் அத்தனையும் நல்ல சுவை.பிரியாணிக்கு கொடுத்த குழம்பாகட்டும், சாதத்திற்கு கொடுத்த கறிக் குழம்பாகட்டும் மிக நன்றாகவே இருந்தது.பிரியாணியில் கறி தனியாகவும், பிரியாணி தனியாகவும் தருகின்றனர்.


                  பிரியாணியில் கறியை பொதிந்து தருவதில்லை.சாதம் நன்கு மென்மையாக வெந்திருக்கிறது.உதிரி உதிரியாக இல்லை. பிரியாணிக்குண்டான வாசம் கொஞ்சம் குறைவுதான்.குழம்போடு சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கிறது.தயிர்பச்சடி நீராகாரமாய் இருக்கிறது வெங்காயம் சேர்த்ததோடு.கோழிக்கறி சக்கை சக்கையாய் இருக்கிறது.பிரியாணியில் வெந்த மென்மை தன்மை இல்லை.கடினமாக இருக்கிறது.சுவையும் இல்லை கறியில்.நாட்டுக்கோழி வறுவல் குழம்பு நல்லசுவை.ஆனால் கறியை பார்த்தால் மென்மையாக இருக்கிறது பிராய்லர் போல.கலப்படம் இல்லாமல் இருக்க வேண்டுவோம்.மீன் குழம்பு சுவை இல்லை.ரசமும் சுமார்தான்.இரண்டு சாப்பாடு, ஒரு பிரியாணி, மட்டன், நா.கோழி அனைத்தும் சேர்த்து ரூ.460 ஆனது.
                                  சாப்பிட்டு விட்டு வெளியே வரும்போது எதிரில் இதே போல ஒரு சண்முகா மெஸ் இருக்கிறது.சுவை நன்றாக இருந்தால் தானே டூப்ளிகேட் போடனும்..சுமாரான சுவைக்கெல்லாம் எதுக்கு டூப்ளிகேட்..

நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...