Tuesday, August 25, 2015

கோவை மெஸ் - பலகாரக்கடை, தள்ளுவண்டிக்கடை, காந்திபுரம், கோவை

             காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டுல இருந்து 100 அடி ரோட்டுக்கு செல்ல ஒன்றிலிருந்து 12 வரைக்கும் பல வீதிகள் இருக்கு.இதுல முதல் 7 வீதிகளில் செல்போன் கடைகளும், பிரிண்ட் பிரஸ்களும் இருக்கு.இந்த வீதிகளில் எண்ணிப்பார்த்தா ஐநூறுக்கும் மேற்பட்ட மொபைல் ஷாப்கள், பிரிண்ட் பிரஸ்கள் தான் இருக்கும்.பேக்கரி மொத்தம் பத்துலிருந்து 15க்குள்ள தான் இருக்கும்.ஒரு மாலை நேரத்தில் ஸ்னேக்ஸ் மாதிரி சாப்பிடனும்னா ஒண்ணும் இருக்காது.பேக்கரியில் தேங்காய்ப்பன்னும், எப்பவோ போட்ட முட்டை பப்ஸ்தான் இருக்கும்.அது நல்லாவே இருக்காது வேற....
                சாயங்கால நேரத்தில் மழை மெலிதா தூறும் போது சூடாய் ஏதாவது பலகாரம் சாப்பிட்டால் எப்படி இருக்கும்.அந்த மெல்லிய மண் வாசனையில், பலகாரங்களின் வாசனை மூக்கைத்துளைத்தால் எப்படி இருக்கும்...எண்ணெயில் பொரியும் கடலை மாவின் வாசனை, அதன் கூட வேகும் வெங்காயமோ, வாழைக்காயோ, அதன் சுவை எட்டுத்திக்கும் பரவி நம் மூக்கினை அடைந்தால் எப்படி இருக்கும். அப்படிப்பட்ட சுகானுபவத்தினை தருவது தான் இந்த தள்ளுவண்டிக்கடை...               காந்திபுரம் இரண்டாவது வீதிக்கும் மூணாவது வீதிக்கும் நடுவுல ஒரு ஜங்சன் இருக்கு.அந்த ஜங்சன் ரோட்டுல ஒரு வயதான பெண்மணி வடை போண்டா, பஜ்ஜி, முட்டைப்போண்டா என பலவித பலகாரங்கள் போட்டு விற்கின்றார்.நான் கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக அங்கு சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன்...எனக்கு அங்கு அதிகம் பிடித்த பலகாரம் என்னவெனில் முட்டை போண்டாதான்.வெந்த அரைமுட்டையை பஜ்ஜி மாவில் நன்கு தோய்த்து எண்ணையில் பொரித்து சுடச்சுட ஆவி பறக்க தட்டில் வைக்கும் போது அந்த போண்டாவின் கடலைமாவு சுவை நம் நாசியில் பரவும் பாருங்கள்.....அது சொர்க்கம்...
                             அந்த முட்டைப்போண்டாவை இரண்டாக பிளந்து சட்னி ஊற்றி தருவார்கள்...அந்த முட்டைப் போண்டாவை சுடச்சுட பிய்த்து அவர்கள் தரும் சட்னியில் தொட்டு சாப்பிட... ஆஹா....ஆஹா... அற்புதம்.ஒட்டுமொத்த நரம்புகளும் சுவை அரும்புகளை இன்னும் முளைக்கவிடும்..மீண்டும் இன்னொரு துண்டை சட்னியில் தொட்டு சாப்பிட இன்னும் கொஞ்சம் வளர ஆரம்பிக்கும் சுவை அரும்புகள்....
அப்புறம், வடை, போண்டா, பஜ்ஜி என ஒவ்வொரு அயிட்ட்த்திலும் ஒவ்வொன்றாய் டேஸ்ட் பண்ணி சாப்பிட்டுவிட்டு கை கழுவினால் மனமும் வயிறும் நிறைந்திருக்கும்...
                 அங்கு சாப்பிடும் நேரத்தில் பேச்சு கொடுப்பேன் அந்த பெண்மணியிடம்...கிட்டத்தட்ட 33 வருடங்கள் ஆகிவிட்டதாம் இந்தக்கடை போட்டு.....ஒரே இடத்தில் இன்று வரை தள்ளுவண்டிக்கடை தான் நடத்தி வருகிறார்கள்..சொந்த ஊர் மதுரையாம்..வேலை பிழைப்புக்காக இங்கு வந்தபோது கணவரின் உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் கடை போட ஆரம்பித்தவர், இன்று தன் மூன்று மகள்களுக்கு நல்ல இடத்தில் நகை நட்டு போட்டு கல்யாணம் செய்து வைத்து இருக்கிறாராம். இப்பொழுது தன் மகனுக்கு ஒரு பிரான்ச் ஒன்றை போட்டு கொடுத்து இருக்கிறார் கல்யாண் சில்க்ஸ் பின்புறம் கார்ப்பரேசன் கடைகள் உள்ள சந்தில்...
             விலை குறைவாகத்தான் இருக்கும் எப்பவும் அவரிடம்.இரண்டு வடை/ போண்டா ஐந்து ரூபாய்.டேஸ்ட் மிக நன்றாக இருக்கும்...
அந்தப்பக்கம் போனாலோ வந்தாலோ சாப்பிட்டு பாருங்கள்...

நேசங்களுடன்

ஜீவானந்தம்

6 comments:

 1. கோயம்புத்தூர்காரங்க சரியான தின்னி பண்டாரங்கள் போல இருக்குது. சாயந்திரம் சூரியன் மறைஞ்சதுன்னா ரோடு,கடை, நொறுக்கு தீனி,இனிப்பு,கேக்,மீனு கோழி வறுவல்.பிரியாணி,புரோட்டா,நண்டு சூப்பு,சைனிஸ்,இட்லி தோசை,காளான் ஸ்பெஷல்,அன்ன பூர்ணா,கௌரி சங்கர்,சுப்பு மெஸ்,அந்த மெஸ்,இந்த மெஸ்,பார்சல்,கையேந்தி பவன் இத்தனையும் பத்தாம வீட்டு சாப்பாடு வேறு.

  இது எதுவுமே கிடைக்காமல் பொரணி பேசும் இன்னொரு கோயம்புத்தூர்காரன்:)

  ReplyDelete
 2. ஹா..ஹா...இன்னும் நிறைய இருக்கு..விட்டுட்டீங்களே...

  ReplyDelete
 3. நான் பதினைந்து வருடங்களா அந்த கடை கஸ்டமர் அப்போதிருந்து இப்போ வரைக்கும் அந்த கார சட்டினி துளிகூட சுவை மாறாமல் இன்னமும் இருக்கிறது ஆச்சரியமானது

  ReplyDelete
 4. நான் 1999 இல் இருந்து 2008 வரை தினமும் சாப்பிட்ட கடை.. வேலை காரணமா வெளியூர் சுத்துறதால முடியறதில்ல

  ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....