ஒரு மத்தியான வேளை திண்டுக்கல்லில் இருந்து கொடைக்கானல் போயிட்டு இருக்கும் போது பசி எடுக்கவே நம்ம நண்பரிடம் கேட்க அவர் கொஞ்சம் வெயிட் பண்ணு, ஒரு நல்ல ஹோட்டலைக் காட்டறேன் என்று சொல்லியபடியே வத்தலகுண்டு ரோட்டில் சாலைப்புதூர் என்கிற ஊர் வந்தவுடன் நம்ம சிங்கத்தினை ஓரம் கட்ட சொல்ல இறங்கின இடம் மண்பானை சமையல் ஹோட்டல்.அந்த ஊரில் இன்னும் சில ஹோட்டல்கள் இருந்தாலும் இங்குதான் நன்றாக இருக்கும் என்று அழைத்துச் சென்றார்.அண்ணாத்துரை என்பவர் தான் முதலில் இந்த வகை சமையலை ஆரம்பித்து இருக்கிறார்.வியாபாரம் பிச்சிக்கவே அந்த ஏரியாவில் நிறைய மண்பானை சமையல் செய்து தரும் ஹோட்டல்கள் முளைத்து விட்டிருக்கின்றன.ஆனால் சுவை இங்குதான் நன்றாக இருக்கும் என்று கேட்டபடியே உள் நுழைந்தோம்.
சிறு குடிசை போல் தான் இருக்கிறது.ஆனால் ஆஸ்பெஸ்டால் சீட் போட்டு இருக்கிறார்கள்.இடது புறம் சமையல் கட்டில் விறகு அடுப்பில் ஒரு மண்பானையில் சாதமோ குழம்போ வெந்து கொண்டிருந்தது.எந்த ஒரு அலங்காரமும் இல்லாமல் கிராமத்து பாணியில் இருக்கிறது ஹோட்டல்.
அமர்ந்தவுடன் இலை போட்டு தண்ணீர் தெளித்துவிட்டு என்ன இருக்குண்ணே...என்று கேட்க, சாதம், மட்டன் குழம்பு, சிக்கன் வருவல், முட்டை என சொல்ல, ( ரொம்ப நேரம் ஆனதால் ஆட்டோட மத்த பார்ட்ஸ் எல்லாம் தீர்ந்துவிட்டதாம்..)
சரி சாப்பாடு மற்றும் சிக்கன் வகையறாக்கள் சொல்ல உடனே மண்பானையில் இருந்து சூடாக சாதம் எடுத்து வந்து இலையில் கொட்டினர்.அதே மாதிரி குழம்பும்...எப்பவும் போல பொரியல் அப்பளம்.
நன்றாக இருக்கிறது.அளவாய் உப்பும் காரமும் இருக்கிறது.சாதம் பொலபொலவென்று நன்றாக இருக்கிறது.
சிக்கன் மற்றும் மட்டன் சுக்கா நன்றாக இருக்கிறது.அளவு குறைவுதான்.அதனால் தான் விலையும் குறைவாக இருக்கிறது.
குழி கரண்டி ஆம்லெட் கேட்க அதுவும் சூடாக வந்தது.நன்றாக இருக்கிறது அனைத்தும்.
இந்த ஹோட்டலில் வெளி ஆட்கள் யாரும் வேலை செய்வதில்லை..குடும்ப உறுப்பினர்களே வேலை செய்து வருகின்றனர்.
சுற்றுலா செல்லும் பயணிகளின் வருகை அதிகமாக இருக்குமாம் சனி ஞாயிறு அன்று.ரோட்டின் இரு பக்கமும் கார்களின் வரிசை அணிவகுக்குமாம்.
விலையும் குறைவாகத்தான் இருக்கிறது.அதே போல் சுவையாகவும் சுத்தமாகவும் இருக்கிறது.இந்த ஊரில இன்னும் சில ஹோட்டல்கள் இருப்பதால் செம காம்பெடிசனாம்.அதனால போட்டி போட்டுக்கொண்டு விலை குறைவாக அதே சமயம் ருசியாகவும் தருகிறார்கள்.கொடைக்கானல் செல்லும் அமைச்சர்கள், அதிகாரிகள் எல்லாம் இந்த ஹோட்டலுக்கு வாடிக்கையாளர்களாம்.அந்தப்பக்கம் போனால் சாப்பிட்டுவிட்டு வாருங்கள்.
திண்டுக்கல் டூ கொடைக்கானல் ரோட்டில் வத்தலகுண்டு அருகே இருக்கிறது சாலைப்புதூர்.சாப்பிட்ட பில் எவ்ளோன்னு தெரியல.சத்தியமா நான் கொடுக்கல.
நேசங்களுடன்
ஜீவானந்தம்