Wednesday, October 5, 2016

அனுபவம் - ஓலா (OLA) டாக்ஸி - கட்டணக்கொள்ளை - OLA TAXI

ஓலா(OLA)வின் கட்டணக்கொள்ளை

கடந்த சனிக்கிழமை அன்று கோவை காந்திபுரம் கணபதி சில்க்ஸ் நிறுத்தத்திலிருந்து கொடிசியா விற்கு ஓலா வில் பயணித்தேன்.
சில்லறைத்தட்டுப்பாடு மற்றும் ட்ரைவர் பேட்டா இவைகளில் இருந்து தப்பிப்பதற்காக ஓலா மணி ( OLA MONEY) யில் வரவு செலவு வைத்து இருப்பதால் அன்று சென்ற கட்டணத்தினை உடனடியாக கழித்துக்கொண்டனர். அன்று போன கிலோ மீட்டர் தூரம் 9 கிலோமீட்டருக்குள் இருக்கும்.ரூ 154 எடுத்துக்கொண்டனர்.
பிறகு கொடிசியாவில் எனது வேலை முடிந்தவுடன் திரும்பவும் ஓலா வில் புக் பண்ணி வண்டி ஏறினேன்.மீண்டும் புறப்பட்ட இடமேதான்.அதே தூரம்.அதே வழித்தடம்.ஆனால் வந்த தொகையோ ரூ.255.எப்படி என்று ட்ரைவரிடம் வினவ, உங்களுக்கு 1 .6 டைம்ஸ் பீக் சார்ஜ் போட்டு இருக்கின்றனர் என்றார்.எனக்கு எதுவும் புக் பண்ணும்போது பீக் சார்ஜ் காட்டவில்லை என்றேன்.புக் பண்ணுவதற்கு முன்னாடி காட்டிட்டா எப்படி புக் பண்ணுவீங்க, புக் பண்ணியவுடன் மெசேஜ் வந்திருக்கும் பாருங்கள் என்றார்.அப்பொழுது தான் கவனித்தேன். அவர்கள் அனுப்பிய மெசேஜில் 1.6 டைம்ஸ் சார்ஜ் செய்யப்படும் என இருக்கிறது.








சனிக்கிழமை அதுவும் மதியம் ஒரு மணிக்கு மேல் மாலை நான்கு வரை அவினாசி சாலையில் அதிகம் வாகன நெரிசல் இருக்காது.இதற்கு எதற்கு பீக் அவர்ஸ் சார்ஜ் போட்டு இருக்கின்றனர்?
ஓலா அப்ளிகேசனில் புக் பண்ணும் போது இந்த மாதிரி பீக் அவர்ஸ் காட்டப்படவில்லை.ஆனால் புக் பண்ணியவுடன் மெசேஜ் அனுப்பி இப்படி கஸ்டமருக்கு தெரியாமலே கொள்ளை அடிக்கின்றனர்.புக் பண்ணுவதற்கு முன்னால் தெரிந்தால் புக் பண்ணாமலே இருப்போம்.அதனால் புக் பண்ணியவுடன் கன்பர்மேசன் மெசேஜில் இந்தமாதிரி பீக் சார்ஜ் போட்டுவிடுகின்றனர்.நாமும் எப்பவும் வரும் ஓலா மெசேஜ் தானே என்று படிக்காமல் விட்டு விடுகிறோம். 
பிறகு ட்ரிப் கேன்சல் பண்ணிவிட்டால் நமது அக்கவுண்ட்டில் இருந்து கேன்சல் சார்ஜ் தொகையை ஆட்டோமேட்டிக்காக எடுத்துவிடுவர் ஓலா மணியில் இருந்து.
வாடிக்கையாளரிடம் ஓலா மணி இல்லை என்றால் எப்போதாவது அவர் பயணிக்கும்போது அது ஒரு மாதமோ அல்லது ஆறு மாதமோ கழித்து இருந்தாலும் அவர் கேன்சல் பண்ண சார்ஜை மீண்டும் பயணிக்கும்போது பில் பண்ணி விடுவர்.பக்கா அப்டேட் சாப்ட்வேர்.
நீங்கள் பயணிக்கும் தூரத்தில் சிக்னலில் காத்திருக்கும் ஒவ்வொரு நொடிக்கும் வெயிட்டிங் சார்ஜ் போடப்படுகிறது.சாரி கொள்ளையடிக்கப்படுகிறது.
ஓலாவின் பெயரில் வண்டி ஓட்டும் வாடகை மற்றும் சொந்த கார்களை வைத்திருப்பவர்களுக்கு பர்சன்டேஜ் அடிப்படையில் பணம் கொடுத்தாலும் அவர்களிடமிருந்து அதிக பர்சன்டேஜ் எடுத்து கொள்ளை அடிக்கின்றனர்.
ரேட் கார்டில் ஒரு தொகை இருக்கிறது.ஆனால் பில் பண்ணுவதோ வேறு மாதிரி இருக்கிறது.
ஓலா ட்ரைவர்கள் யாராவது தப்பு செய்து காவல் துறை வசம் மாட்டினால், உடனடியாக அவர்களை டெர்மினேட் பண்ணி எங்களுக்கும் அவர்களுக்கும் சம்பந்தமில்லை என்று அறிக்கை விட்டுவிடுவார்கள்.எதற்கும் கோர்ட் கேஸ் என்று அலைவதில்லை.சமீபத்தில் நடந்த சென்னை சம்பவம் இதற்கு உதாரணம்.
ஆட்டோக்காரன் கொள்ளை அடிக்கிறான்னு இவங்ககிட்ட வந்தால் இவனுங்க டெக்னாலஜியை பயன்படுத்தி கொள்ளை அடிக்கிறார்கள்.
எளிதில் புக் பண்ணும் முறை, சரியான நேரத்தில் வருவது, ட்ரைவர் ரெஸ்பான்ஸ், துல்லியமான பில் என எல்லாம் இருந்தாலும் ஒரே தூரத்திற்கு, ஒரே வழித்தடத்திற்கு மாறுபட்ட பில் பண்ணுவதில் ஓலாவிற்கு நிகர் ஓலா தான்.கிட்டத்தட்ட கொடிசியாவிற்கு நிறைய முறை போய் வந்து இருக்கிறேன்.ஒவ்வொரு முறையும் ஒரு தொகை.
என்னதான் டெக்னாலஜியை பயன்படுத்தி எளிது படுத்தினாலும் கொள்ளை அடிப்பதில் ஏதாவது சந்துபொந்தை கண்டுபிடித்து விடுகின்றனர்.
இனி கொஞ்சம் கொஞ்சமாய் ஓலாவை புறக்கணித்து வேறொரு கால்டாக்ஸிக்கு மாறிவிட வேண்டும்.

நேசங்களுடன்
ஜீவானந்தம்


இன்னும் கொஞ்சம்...

Wednesday, September 21, 2016

சமையல் - அசைவம் - ஆட்டுத் தலைக்கறி குழம்பு

                  எங்க ஊர்ல ஏதாவது விசேசத்தின் போது கிடா வெட்டும் போது ஆட்டோட தலைய மட்டும் பொசுக்குற வேலை நம்மளுது.வாயில குச்சியை குத்தி தலைய நெருப்புல வாட்டி முடியை சுரண்டி கிளீன் பண்ணனும்.தலையை பொசுக்கிட்டு இருக்கும் போதே காது மடல் நல்லா வெந்து இருக்கும்.அதை பிய்த்து அப்படியே சாப்பிடுவது செம டேஸ்டாக இருக்கும்.நன்கு பொசுக்கின தலையை மஞ்சள் தடவி நன்றாக அலசி கொடுத்தால் போதும்.மிக பதுவுசாய் வெட்டி துண்டு போடுவாங்க.மூளைய மட்டும் நொங்கு வெட்டற மாதிரி சிந்தாம சிதறாம ஒரு இலைல தருவாங்க.அதை தோசைக்கல்லில் போட்டு உப்பும் மிளகும் போட்டு பிரட்டினால் சுவையான மூளை ஃப்ரை ரெடி...இப்போ தலைக்கறி குழம்பு எப்படி வைப்பது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
தலைக்கறி
சின்ன வெங்காயம் - 200 கிராம்
தக்காளி - 3
இஞ்சி பூண்டு விழுது - சிறிதளவு
தேங்காய் - ஒரு மூடி
வரமிளகாய் - 2
மஞ்சள் தூள்
மிளகாய்த்தூள் - சிறிதளவு
மல்லித்தூள் - சிறிதளவு
பட்டை, கிராம்பு, சீரகம், சோம்பு, கசகசா - சிறிதளவு
கொத்தமல்லி புதினா தழை - சிறிது
தேவையான உப்பு
கொஞ்சம் எண்ணைய்

செய்முறை :
முதலில் குக்கரில் எண்ணைய் விட்டு பட்டை கிராம்பு, சோம்பு, போட்டு பின் இஞ்சி பூண்டு போட்டு வதக்கி பின் தலைக்கறியை நன்கு வதக்கி  சிறிதளவு உப்பு சேர்த்து இரண்டு விசில் வரை விட்டு வேக வைத்துக்கொள்ளவும்

வாணலியில் கொஞ்சம் எண்ணைய் விட்டு பட்டை கிராம்பு சீரகம் போட்டு வதக்கி, சின்ன வெங்காயம், தக்காளி வரமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கி பின் அரைக்கும் போது மல்லித்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

தேங்காய்  கசகசா சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.

வாணலியில் அரைத்த வைத்த மசாலா சேர்த்து கொஞ்சம் கொதி வந்தவுடன் வெந்த தலைக்கறியை சேர்த்து சிறிது மஞ்சள் தூள் உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும், பின் தேங்காய்  விழுதினை சேர்த்து ஒரு கொதி வந்தவுடன், கொத்தமல்லி புதினா தழை தூவி இறக்கவும்.
டேஸ்ட் கூடுதலாக வேண்டுமெனில் சிறிதளவு மட்டன் மசாலா சேர்த்து கொதிக்கவிடவும்.கெட்டியாக கெட்டியாக குழம்பு டேஸ்டாக இருக்கும்.
கொதிக்கிற குழம்பில் மூளையை போட்டு எடுத்தாலே மூளை வெந்து விடும்.அதுவும் மிக சுவையாக இருக்கும்..








இட்லிக்கு தலைக்கறி குழம்பு மிக அருமையாக இருக்கும்.குடல் குழம்பை போலவே டேஸ்ட் சூப்பராக இருக்கும்.

தலைக்கறி ஃப்ரை வேண்டுமென்றால்
வாணலியில் எண்ணைய் விட்டு பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கி பின் குழம்பிலிருந்து தலைக்கறித் துண்டுகளை சேர்த்து கொஞ்சம் மிளகுப்பொடி தூவி நன்கு பிரட்டினால் போதும்.சுவையான தலைக்கறி ஃப்ரை ரெடி....

நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Monday, September 19, 2016

கரம் - 26

பார்த்தது:
ஓணம் பண்டிகையை ஒட்டி ஏசியாநெட் டீவியில் மீண்டும் பத்தேமாரி பார்த்தேன்.எத்தனை முறை பார்த்தாலும் கண்கலங்க வைக்கிற படம்.வெளிநாட்டில் கஷ்டப்படும் தொழிலாளியின் உணர்ச்சிமிகுந்த கதை தான்.இந்தப்படத்தில் அவ்வப்போது மெலிதாய் ஒலிக்கும் பத்தேமாறி பாடல் இன்னும் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கிறது...படம் முழுக்க மம்முட்டி வாழ்ந்திருக்கிறார்  தன் குடும்பத்திற்காக வாழ்க்கையை தொலைத்து......

படித்தது:
                    சமீபத்தில் புத்தககண்காட்சியில் நிறைய புத்தகங்கள் வாங்கினேன்.அதில் ”கம்பிக்குள் வெளிச்சங்கள்”  தோழர் தியாகு எழுதின சிறை அனுபவங்களை பற்றின தொகுப்பு.படிக்க செம இண்ட்ரஸ்டிங்.நக்சலைட் இயக்கத்தில் இருந்தபோது செய்த போராட்டங்கள், கொலைக்குற்றங்கள், சிறைத்தண்டனை, மூலதனம் தமிழாக்கம் இயற்றியது, மற்றும் சிறைக்கைதிகளின் வாழ்க்கை, சிறையில் நடக்கும் கொடுமைகள் என சுவைபட சொல்லியிருக்கிறார்.தூக்கு தண்டனை பெற்ற குற்றவாளிகளின் கதையை சுவராஸ்யமாக சொல்லியிருப்பது படிக்க ஆவலைத் தூண்டுகிறது.அதிலும் பூ.கருப்பையா என்பவரின் கதை ஒரு நாவல் போல இருக்கிறது.பொய் வழக்கு புனையப்பட்டு தூக்குத்தண்டனை பெற்று சிறையில் தூக்குக்காக காத்திருக்கும் நேரத்தில், அதே சிறையில் இருக்கும் தியாகு அவர்களால் அவர் விடுதலை பெற்று, பின் பல வருடங்கள் கழித்து இருவரும் சந்திக்கும் போது அந்த இடம் ஒரு திரைப்படத்தினை பார்த்த மகிழ்ச்சியினை ஏற்படுத்துகிறது.மனமும் கலங்குகிறது.அந்தளவுக்கு எழுத்துக்களில் வசீகரிக்கிறார். மிசா காலத்தில் சிறையில் அடைக்கப்பட்ட அத்தனை அரசியல்வாதிகளுக்கும் ஏற்பட்ட கொடுமைகளை விவரிக்க, நமக்கே பதைபதைக்கிறது.அதிலும் ஸ்டாலின் சிறையில் பட்ட கொடுமைகளையும், அப்போதைய சிட்டிங் எம்பி திரு சிட்டிபாபு  அவர்களுக்கு ஏற்பட்ட கொடுமைகளையும் விவரிக்கும் போது மிசாவின் கொடுமையான சிறை வரலாற்றினை பற்றி தெரிந்து கொள்ள முடிகிறது.
காவல் துறையின் பொய் புனைவுகள்,  கொலையாளியை கண்டுபிடிக்கும் விதம் என சுவாரஸ்யமாக தேர்ந்த திரைக்கதை போல் தன் அனுபவத்தினை சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.
விலை : ரூ 350.
வெளியீடு - விஜயா பதிப்பகம்.


இன்னொரு புத்தகம் காட்டுக்குட்டி

தூப்புக்காரி என்ற நாவலைப் படைத்து சாகித்ய அகாடமி  விருது பெற்ற மலர்வதி எழுதிய நாவல் என்று வாங்கினேன்.முதல் முன்னுரையே ஏகப்பட்ட பிழைகளுடன் இருக்க,  கதைக்குள் நுழைந்தால்  பேச்சு வழக்கில் நாவல்.சாதாரணமான வார்த்தைகள் என்றால் பரவாயில்லை.நாகர்கோவில் கன்னியாகுமரி மாவட்ட மலையாள வாசம் வீசும் தமிழ்.புரிந்து கொள்ளவே கொஞ்சம் நேரம் பிடிக்கிறது.இரண்டு அத்தியாயங்கள் தான் படித்து இருப்பேன்.செம போர்...ஒன்றும் புரியவில்லை.அப்படியே மூடி பத்திரமாய் வைத்து விட்டேன்.இனி அது பரணில் தூங்கும்.காசுக்கு கேடு...




நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Friday, September 16, 2016

கரம் - 25

கலப்பட வெல்லம்

                 சாலையோரங்களில் விற்கும் கருப்பட்டி மற்றும் அச்சு வெல்லங்களை வாங்காதீர்கள்.அனைத்தும் கலப்படங்களே..

                   அதிகளவு ரேசன் கடை சர்க்கரையை கரும்புச்சாறு மற்றும் பதனீரில் கலந்து தயாரிக்கி்ன்றனர்.

     இவர்களின் விற்பனை இலக்கு சாலை ஓரங்கள் மட்டுமே.வண்டிஓட்டிகளின் கவனத்தை கவர்ந்து வியாபாரம் செய்கின்றனர்.பனை ஓலையில் செய்த பெட்டியில் கருப்பட்டி மற்றும் வெல்லங்களை அடுக்கி இயற்கை மணம் மாறாது போலியை விற்கின்றனர்.

            பெரியநாய்க்கன் பாளையம் செல்லும் வழியில் ஒரு கும்பல் இடமும் வலமும் நூறடி தூர இடைவெளியில் கடை பரப்பியிருந்தனர்.காரை விட்டு இறங்கியவுடன் உடனடி வியாபாரத்தை ஆரம்பிக்க, கிலோ 160 என்றனர் பிறகு 120 க்கு தருகிறோம் என்றனர்.உடன்குடி மற்றும் திருநெல்வேலியில் இருந்து கொண்டு வந்து விற்பனை செய்கிறோம் என்றனர்.சேம்பிள் கொஞ்சம் உடைத்து தர வாயில் போட்டேன்.பனைக்கருப்பட்டியின் சுவையை விட சர்க்கரைப்பாகின் சுவை அதிகம் ஆக்ரமிக்கிறது.

               இன்னொரு கருப்பட்டி வெல்லம் கிலோ 200 .அதில் இஞ்சி மிளகு சுக்கு சேர்த்து செய்திருக்கிறார்களாம். இருமல் சளி கபம் போன்ற வியாதிகளுக்கு நல்லதாம்.தேர்ந்த நாட்டுப்புற சித்த மருத்துவரைப்போல் பேச, வாயில் இட்டிருந்த வெல்லக்கட்டி கரையவும் ,போய்ட்டு வந்து வாங்கிறேன் என சொல்ல, இன்னும் பத்து ரூபாய் குறைத்து தருகிறேன் என ஆரம்பிக்க, வேணாம் பிறகு வாங்கிக்கொள்கிறேன் என்றபடி வண்டி ஏறினேன்.



என்னதான் பனை ஓலைப்பெட்டியில் வைத்து நல்லா மேக்கப் பண்ணி, அச்சு வெல்லம் மற்றும் கருப்பட்டியை கொடுத்தாலும் விஷம் விஷம் தானே.அது இனிக்கத்தான் செய்யும் அதில் எவ்வளவு கலப்படமிட்டிருந்தாலும்...


கரூர் அருகே உள்ள ஜேடர்பாளயத்தில் கரும்பு ஆலைகள் அதிகம்.அங்கு வெல்லப்பாகில் சர்க்கரையை கலந்து தான் வெல்லம் செய்கின்றனர்.

நேசங்களுடன்
ஜீவானந்தம்
இன்னும் கொஞ்சம்...