Wednesday, April 3, 2019

கோவை மெஸ் - சென்னை அதிகாலை பிரியாணி – KGN AARIFA BIRIYANI CENTRE பீஃப் பிரியாணி, வியாசர்பாடி சென்னை


கோவை மெஸ் - சென்னை அதிகாலை பிரியாணி – KGN AARIFA BIRIYANI CENTRE பீஃப் பிரியாணி, வியாசர்பாடி சென்னை
                 கடந்த மாதம் சென்னை வந்திருந்த போது நிறைய முறை கேள்விப்பட்டிருந்த அதிகாலை பிரியாணியை சுவைக்க ஆவல் ஏற்பட்டது.இதற்காகவே அலாரம் வைத்து எழுந்து ஒரு கால் டாக்ஸி புக் செய்து வடசென்னைக்கு பயணமானோம். இந்த பிரசித்தமான இடம் சென்னைக்கு சம்பந்தமே இல்லாத போல இருக்கிறது.ஆனாலும் பரபரப்போடு மக்கள் இயங்கி கொண்டிருக்கின்றனர்.
              சென்ற இடம் பார்த்தால் ஆட்டுத்தொட்டி அருகே இருக்கிறது.வியாபாரிகள் வண்டிகளில் இறைச்சியை அப்படியே எடுத்து செல்கின்றனர்.இரு சக்கர வாகனங்கள் முதல் மீன்பாடி வண்டி, மினிடோர் வரைக்கும் வண்டிகளில் இறைச்சிகள் மூடியும் மூடாமலும் செல்கின்றன.ஒட்டு மொத்த சென்னைக்கும் இங்கு இருந்து தான் சப்ளை ஆகிறது என நினைக்கிறேன்.


               ஒரு அழுக்கு படிந்த கவர்ன்மெண்ட் குவார்ட்டர்ஸ்.அதற்கு எதிரே ஒரு சின்ன கடை.கடைக்கு முன்னால் ஒரே கூட்டம்.பிரியாணி அண்டாவை சுற்றி ஒரே வாடிக்கையாளர்கள் கூட்டம்.பிரியாணி அள்ளி போடுபவர் சளைக்காமல் தட்டுக்களில் வைத்துக்கொண்டே இருக்கிறார்.சிக்கன் மற்றும் பீஃப் என இரு வகை பிரியாணிகள்.
பாசுமதி அரிசியின் சுவையோடு, பீஃப் இறைச்சியின் சுவை இரண்டற கலந்து நல்ல ஒரு சுவையை தருகிறது.இறைச்சி நன்றாக வெந்து இருக்கிறது.சாப்பிட சுவையாக இருக்கிறது.பாஸ்மதி அரிசியும் மிக உதிரி உதிரியாக இருக்கிறது.பிரியாணியின் மசாலா ஒவ்வொரு அரிசியிலும் ஒட்டி இருப்பது சிறப்பு.இதற்கு கொடுக்கப்படும் புதினா சட்னி புதிய சுவையைத் தருகிறது.பிரியாணியின் அளவும் அதிகமே.விலை குறைவாகவே இருக்கிறது.




            காலை 5 மணி முதல் இங்கு பிரியாணி கிடைக்குமாம். பெண்களும் காலையிலேயே இங்கு வந்து சாப்பிடுகிறார்கள்.சுகாதாரம் என்று பார்த்தால் இங்கு எல்லாம் வந்து சாப்பிடவே முடியாது.ஆனாலும் சுவை என்கிற விசயத்திலும், அதிகாலை பிரியாணி என்கிற விசயத்திலும் இந்த சுகாதாரம் என்கிற விசயம் அடிபட்டு போகிறது.அதிகாலையில் பிரியாணி என்கிற விசயமே ஆச்சர்யத்தினை தருகிறது.இரவு முழுக்க வேலை செய்பவர்களுக்கு இந்த பிரியாணி ஒரு வரமே.போய் சாப்பிட்டு விட்டு படுத்தால் மாலை வரை எழுந்திருக்க தேவையில்லை.

            அதிகாலையில் இப்படி பிரியாணி சாப்பிட கொடுத்து வைத்திருக்க வேண்டும்.அதுவும் பீஃப் பிரியாணி சாப்பிட......வாவ்......

நேசங்களுடன்
ஜீவானந்தம்



இன்னும் கொஞ்சம்...

Wednesday, February 20, 2019

கோவை மெஸ் - HSR, ஹோட்டல் சத்தார் ராவுத்தர் பிரியாணி, காந்திபுரம், கோவை


HSR
ஹோட்டல் சத்தார் ராவுத்தர் பிரியாணி.


            புதிதாக காந்திபுரம் ஏழாவது வீதி தொடர்ச்சியில் இந்த ஹோட்டல் ஆரம்பிக்கப்பட்டு இருக்கிறது.ஏற்கனவே துடியலூரில் உள்ள கடையின் கிளையாக இது ஆரம்பிக்கப்பட்டு இருக்கிறது.(தீபாவளிக்கே ஓபனாம்...நம்ம கண்ணுக்குத்தான் சிக்காம போயிருக்கு...).இன்னிக்கு நம்ம பையன் ஒருத்தர் சொல்லவும் ஓடோடி(டூ வீலர்ல தான்) போனோம் ஹோட்டலுக்கு.
                ஹோட்டல் நல்ல பளிச்சென்று மிக சுத்தமாக இருக்கிறது.உள்ளே நுழைந்ததும் பிரியாணியின் வாசனை நம் மூக்கைத் துளைக்கிறது.டேபிளில் வாழை இலை போட்டு, தண்ணீர் தெளித்தவுடன், சுடச்சுட பிரியாணி ..ஆம்...பீஃப் பிரியாணி தான்…சூடாய் வைக்க, பிரியாணியானது பொலபொலவென உதிர்ந்து உள்ளே இருக்கும் பீஃப் துண்டுகள் வெளியே வர, அந்த கணத்தில் பிரியாணியின் மணத்தில் கை அனிச்சையாக ஒரு விள்ளலை எடுத்து வாயில் இட, நாவின் ருசி நரம்புகள் நடனமாட தொடங்கின.பிரியாணியின் சுவை சூப்பராக இருக்கிறது.சீரக சம்பா அரிசியின் சுவையில், பிரியாணி மசாலாவின் மணத்தில் பீஃப் இறைச்சி இணைந்து நாடாளுமன்ற எடப்பாடி கூட்டணி போல சூப்பரான சுவையைத் தருகிறது.



அளவான காரத்தில், சூப்பரான சுவையில் பிரியாணி இருக்கிறது.அந்த பிரியாணியின் நிறமும் செம தான்.பீஃப் இறைச்சித் துண்டுகள் நன்றாகவே வெந்து சுவையாக இருக்கிறது.பிரியாணிக்கு கொடுக்கப்படும் சிக்கன் குழம்பு .ஒன்.அதே போல் பச்சடியும்...
சீப் அண்ட் பெஸ்ட் ஹோட்டலில் உள்ள சுவையை விட இங்கு நன்றாகவே இருக்கிறது.ரொம்ப நேரம் காத்திருந்து சாப்பிட்டுவிட்டு வருவதற்கு பதில், இங்கு அதே விலையில் ஆற அமர உட்கார்ந்து நன்கு சுவை பட சாப்பிட்டு வரலாம்.
பீஃப் சுக்காவும் செம.கறி நன்றாக வெந்தும், அதனோடு கூடிய மசாலா கிரேவியும் செமயாக இருக்கிறது.


காந்திபுரம் ஏரியாவில் உள்ள பீஃப் கிடைக்க கூடிய ஹோட்டல்களில் இது நல்ல பெட்டர்.
சீப் அண்ட் பெஸ்ட் விட இதன் சுவை சூப்பர்...விரைவில் சாப்பிட்டு விட்டும் வரலாம்.சாப்பிடுபவர் எப்பொழுது எந்திரிப்பார், என காத்திருக்க தேவையில்லை.
காந்திபுரம் ஏழாவது வீதியின் தொடர்ச்சியில் இந்த ஹோட்டல் இருக்கிறது.விலையும் குறைவு தான்.மற்ற ஹோட்டல்களின் விலையை ஒத்திருக்கிறது.சுவையும் கூடுதலாக இருக்கிறது.

நேசங்களுடன்
ஜீவானந்தம்


இன்னும் கொஞ்சம்...

Monday, February 4, 2019

கரம் - 34 - கேரள ஸ்பெஷல் - கண்ணூர் - முட்டைமாலை - MUTTAMALA, கல்லுமக்காயா - MUSSELS

கேரளத்தின் ஸ்பெஷல்:

கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் பையனூர் சென்றிருந்த போது வித்தியாசமாக இருந்த இந்த உணவுப்பண்டத்தினை ருசித்ததில் மிக நன்றாகவே இருந்தது.பெயரும் அதே போல...

முட்டமால.. முட்டை மாலை.
முட்டையின் மஞ்சள் கருவினை நூடுல்ஸ் மாதிரி செய்து, வெள்ளைக் கருவினை பனீர் மாதிரி செய்து தரப்படும் ஒரு இனிப்பு பண்டம். நன்கு சுவையாகவே இருக்கிறது.முட்டையின் மணம் கொஞ்சம் கூட இல்லை.ஆனால் இனிப்போடு நன்றாக இருக்கிறது.இது ஒரு ஹோம் மேட் தயாரிப்பாகும்.ஸ்வீட் ஸ்டால்களில் கிடைக்கிறது.




யூ டுயூப் களில் இதன் செய்முறை கிடைக்கிறது.

கல்லுமக்காய் - (MUSSIL)
தலச்சேரியின் பிரபலமான கடல் உணவு கல்லுமக்காய்.பாறை இடுக்குகளில் கிடைக்கும் இந்த கல்லுமக்காய்களை கிளிஞ்சல்கள், சிப்பிகள் என்றும் சொல்லலாம்.கால்சியம் சத்து நிறைந்த இந்த கல்லுமக்காய் சாப்பிடுவதற்கு மிக சுவையாக இருக்கும்.கிலோ ரூ 100 டூ 150 வரை விற்கின்றனர்.இந்த கல்லுமக்காயை எண்ணையில் பொரித்தும் அல்லது நன்கு வறுவல் செய்தும் சாப்பிடலாம்...எந்த முறையில் செய்தாலும் சுவை அள்ளுகிறது.






செய்முறை :
கல்லுமக்காயை ஒரு பாத்திரத்தில் போட்டு வேக வைக்க வேண்டும்.பாத்திரத்தில் நீர் ஊற்றக்கூடாது.வேக வைக்கும் போது கல்லுமக்காயில் உள்ள நீர் வெளியேறும்.ஒரு ஐந்து நிமிடம் அடுப்பில் இருந்தால் போதும்.பின் எடுத்து அதை இரண்டாக பிளந்து உள்ளே இருக்கும் சதைப்பகுதியை எடுத்து சுத்தம் செய்து, மிளகாய்த்தூள், உப்பு, மஞ்சள் போடு பிரட்டி, பின் பொடியாக நறுக்கின வெங்காயம், தக்காளியோடு வதக்கி, காரத்திற்கு கொஞ்சம் மிளகாய் இட்டால் போதும்.உப்பு தேவைப்படின் சேர்த்துக்கொள்ளலாம்.தேங்காய் எண்ணையில் வதக்கும் போது அதன் வாசம் இருக்கிறதே....ஆஹா...சுவையான கல்லுமக்காய் ரெடி.

நேசங்களுடன்
ஜீவானந்தம்
இன்னும் கொஞ்சம்...

Wednesday, January 9, 2019

கோவை மெஸ் - குழந்தை கடை, C.R பிரியாணி, டவுன்ஹால்,கோவை C.R BIRIYANI, TOWNHALL, KOVAI


C.R பிரியாணி
குழந்தை கடை, டவுன்ஹால்

நிறைய பேரு இந்த கடையப்பத்தி சொல்லி இருந்ததால் நேற்றைய மதியம் இங்கு போய் இருந்தோம்.கடைக்கு முன்னால் சிலர் நின்று கொண்டிருந்தனர்.கூட்டமா இருக்கும் போல என்று நினைத்தபடியே கடைக்குள்ளே எட்டிப் பார்த்தோம்.ரொம்ப சின்ன கடைதான்.நான்கு டேபிள்கள்.மொத்தம் பதினாறு பேர் அமர்ந்து சாப்பிடலாம்.முதல் பந்தி அப்பொழுது தான் ஆரம்பித்திருந்தது.அதனால் அடுத்த பதினாறில் நாங்களும் இருவராய் காத்திருக்க வேண்டியதாகி விட்டது.டேபிள்கள் ஒவ்வொன்றாய் காலி ஆக ஆக அடுத்த பதினாறும் ஆக்ரமித்தது அடுத்த பந்தியை.

                  வாழை இலை வைத்து பேப்பர் கப்பில் தண்ணீர் வைக்க, என்ன வேண்டும் என கேட்க பிரியாணி என சொல்ல, காலி ஆகிவிட்டது, பிளைன் தான் என சொல்ல, அதனுடன் வறுவல், குடல் குழம்பு கலக்கி என ஆர்டரிட்டோம்.ஒவ்வொன்றாய் வந்து சேர்ந்தது. பிளைன் பிரியாணி.சீரகசம்பாவின் குருணை அரிசிதான்.ரொம்ப சிறிதாக இருக்கிறது.சாப்பிட கொஞ்சம் சுவையாக இருக்கிறது.மற்றபடி கொஞ்சம் காரசாரமாய் இருக்கிறது.இதற்கு கொடுக்கப்படும் குழம்பு நல்ல காரம்.இரண்டும் காம்பினேசனில் மேட்ச் ஆகிறது.அளவாய் தான் மட்டன் மற்றும் சிக்கன் பிரியாணி இருக்கும் போல.
பிளைன் தான் அதிகமாக ஓடுகிறது.அடுத்த முறை மட்டன் பிரியாணியை சுவைத்துப் பார்க்க வேண்டும்.



                      மட்டன் வறுவல்..திக்கான வறுவல் எல்லாம் கிடையாது.வறுவல் நல்ல பதத்தில் இல்லை.எண்ணிப் பார்த்ததில் எட்டுதுண்டுகள் தான்.அளவும் பெரிதும் சிறிதுமாய் இல்லை.எல்லாம் ஒரே சைசில் இருக்கின்றன.வெங்காயம்தான் அதிகம் இருக்கின்றன.கறி கொஞ்சம் மென்மையாய் இருக்க, காரசாரமாக இருக்கிறது.
குடல் வறுவல்.இதுவும் அதே தான்.குழம்புடனே வந்து சேர்கிறது.வறுவலை இலையில் வைத்தால் குழம்பு ஆறாக ஓடக் கூடாது.திக்கான மசாலா ஆமையை விட மெதுவாய் நகரவேண்டும்.வெறும் மசாலா கலந்த எண்ணைய் தான் லைட்டாய் பிரிய வேண்டும்.அது தான் வறுவலுக்கு உண்டான பதம்.அப்படி இல்லை. குடலுடன் வெங்காயமும் போட்டி போடுகிறது.சுவையாக இருக்கிறது.

                                 குழம்பு கலக்கி சுமார்தான்.செக்க செவேல் என்று வருகிறது.குழம்பின் மணமும் இல்லை முட்டையின் மணமும் இல்லை.சரியான காம்பினேசனில் இரண்டும் இல்லை.மொத்தமாய் நாலைந்து முட்டையை உடைத்து ஊற்றி, குழம்பையும் சேர்த்து,ஒரே தடவையாய் கல்லில் ஊற்றி அங்கு அளவாய் பிரித்து இலைக்கு இலை தருகின்றனர்.அதில் தான் சுவை மிஸ் ஆகிறது. 

                             ஆட்டின் பெரும்பாலான பார்ட்ஸ்கள் இருக்கின்றன.மட்டன் சாப்ஸ், குடல் ஈரல், ரத்தப்பொறியல் என. மதுரை தவிர்த்து தேனி மாவட்டத்தில் கிடைக்கும் சுவை போலத் தான் இருக்கின்றன.ரொம்ப எதிர்ப்பார்ப்போடெல்லாம் செல்ல தேவையில்லை.முனியாண்டி விலாஸில் கிடைக்கும் ருசி தான்.காரசாரமாக கிடைக்கும்.பிரியாணி டேஸ்ட் நார்மல் தான்.சிட்டிக்குள் இருக்கும் ஒரு முனியாண்டி விலாஸ் தான் இது.விலை கோவைக்கு ஏற்றார் போல் இருக்கிறது.
மட்டன் பிரியாணி -120, குடல் -90 வறுவல் -110 ( இது வெறும் எட்டு துண்டுகள் தான்.) பிளைன் - 60 
                        
மதியம் ஒரு மணி சுமாருக்கு சென்றால் ரஷ் ஆக இருக்கும்.ஆற அமர சாப்பிடனும் என்றால் இரண்டரை மணிக்கு மேல் போனால் போதும்.

அமைவிடம் :
டவுன்ஹால் டூ வைசியாள் வீதி செல்லும் போது இடதுபுறம் அங்காளம்மன் கோவில் வீதி. அங்கே ஒரு ஜங்சன்.அதில் வலதுபுறம் இருக்கிறது இந்த கடை.மேலும் விவரங்களுக்கு 
கூகுள் மேப்பிடவும்.

நேசங்களுடன்
ஜீவானந்தம்
இன்னும் கொஞ்சம்...

Monday, December 31, 2018

HAPPY NEW YEAR 2019

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
இந்த வருடம் அனைவருக்கும் நல்ல வளமையையும், நல்ல ஆரோக்கியத்தையும், நல்ல மகிழ்ச்சியையும் தரட்டும்.கடந்த கால கசப்புகள் நீங்கி புத்தாண்டில் புதிய வாழ்வினை தொடங்க வாழ்த்துக்கள்.



நேசங்களுடன்
ஜீவானந்தம்
இன்னும் கொஞ்சம்...

Saturday, October 27, 2018

கோவை மெஸ் - கொக்கரக்கோ, கவுண்டம்பாளையம் கிளை, கோவை; COCKRACO, KAVUNDAMPALAYAM BRANCH, COIMBATORE


                             நேற்று செ.சி.வானம் படம் பார்த்து விட்டு வெளியே வரும் போதும் மழை தூறிக்கொண்டிருந்தது.மழைக்கு இதமாய் நாவுக்கு காரமாய் சாப்பிடத் தோணியதால் தியேட்டரில் இருந்து யூ டர்ன் அடித்து மெயின்ரோட்டில் உள்ள கொக்கரக்கோ போனோம்.புதிதாக ஆரம்பித்த கிளை இது.பல வருடங்களுக்கு முன்னால் கவுண்டம்பாளையத்தில் நன்கு சக்கை போடு போட ஹோட்டல் இது.அப்பவே கிரில் தந்தூரி என மிக அருமையான சுவையில் கிடைக்கும்.இடையில் பார்ட்னர்ஷிப் பிரச்சினை காரணமாக கவுண்டம்பாளையத்தில் இருந்து வெளியேறியது.அதற்கு பின் கொக்கரக்கோ சிவானந்தா காலனியில் இன்னொரு கிளையை ஆரம்பித்தது.பின் சில வருடம் கழித்து, கவுண்டம்பாளையத்தில் மிக நேர்த்தியாய் தனது மூன்றாவது கிளையை ஆரம்பித்தது.ஹோட்டல் நல்ல இண்ட்ரீயர் அமைப்புடன் விசாலமாக இருக்கிறது.உள்ளே நுழைந்ததும் நிறைய டேபிள்கள் காலியாக இருந்தது.மழைக்கு யாரும் ஒதுங்க வில்லை போல.சாப்பிட வருபவர்களை விட அங்கே வேலை செய்பவர்கள் அதிகமாக இருக்கிறார்கள்.நாங்களும் ஒரு டேபிளை ஆக்ரமித்து அமர்ந்தோம்.


                               மெனுகார்டு புக் வடிவில் வர, தந்துவிட்டு வெயிட்டர் காத்திருந்தார் ஆர்டர் வேண்டி...நாங்களும் கொஞ்சம் பத்து நிமிடம் கழித்து வாருங்கள், புக்கை முடித்துவிட்டு கூப்பிடுகிறோம் என சொல்ல அவரும் அங்கிருந்து நகர்ந்தார்.பின் ஆர்டராய் சிக்கன் விங்ஸ், கிரில், சிக்கன் டைனமைட் என பிடித்ததை சொன்னோம்.ஒவ்வொன்றும் சூடாக வந்து சேர்ந்தது.கிரில் சிக்கன் நல்ல காரம்.மழைக்கு ஆஃப்டாக இருந்தது.நன்கு மசாலாக்கள் தூவி இன்னும் காரமாக இருந்தது.மயோனிஸ் மற்றும் கொத்தமல்லி சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கிறது.அடுத்து எப்பவும் பிடித்த அயிட்டம் சிக்கன் விங்க்ஸ்.எப்பொழுது கொக்கரக்கோவின் எந்த கிளைக்கு சென்றாலும் மறக்காமல் அதை ஆர்டர் செய்வது சிக்கன் விங்க்ஸ் தான்.அந்தளவிற்கு அதன் சுவை பிடிக்கும்.அதை ஒவ்வொன்றாய் எடுத்து சின்ன சின்ன எலும்புகளை பிரித்து பின் கறியை சாப்பிடுவதில் அப்படி ஒரு அலாதி இன்பம்.



                  அதைப்போலவே சிக்கன் டைனமைட்டும் செம டேஸ்ட்.போன்லெஸ்.பட்டரில் வறுத்தெடுத்திருப்பார்கள் போல.நல்ல சுவை.மெதுவாய் உள்ளிறங்குகிறது.அதற்கப்புறம் நூடுல்ஸ், பட்டர் நான், பரோட்டா என எல்லாம் வரிசையாய் வந்தது.பன் பரோட்டோ மட்டும் ஏமாற்றிவிட்டது.பன் மாதிரி சின்னதாய் இருக்கும் என பார்த்தால் நார்மல் புரோட்டாவை அடித்து துவைத்து கொண்டு வந்து பொசுபொசுவென வைக்கிறார்கள்.சுவையும் சரியில்லை.சைஸும் சரியில்லை.




                                      பட்டர் சிக்கன் கிரேவி நல்ல சுவை.கிரில் மட்டும் சரியான காரம்.அதேபோல் மிக்ஸ்ட் நூடுல்ஸ் இல் வந்த இறால், மீன், சிக்கன் துண்டுகள் அதே போல் கொஞ்சம் காரம். குழந்தைகள் சாப்பிடாமல் ஒதுக்கிவிட்டனர்.பெரியவர்களுக்கு ஓகே ரகம்.நன்றாகவே இருக்கிறது.
                                             காரசாரமா சாப்பிடறவங்களுக்கு இது ஓகே தான்.எதிரில் வேற தமிழக அரசு கடை இருக்கிறது.அதனால் கூட ஒருவேளை காரம் கூடியிருக்கலாம்.
எப்பவும் போல விலை கோவைக்கு ஏற்ற மாதிரி தான் இருக்கிறது.

எப்பவாது இந்தப்பக்கம் வந்தீங்கன்னா கவுண்டம்பாளையம் கிளையிலும் சாப்பிட்டுப் பாருங்கள்...

நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...