Monday, April 21, 2014

பயணம் - கெலவரப்பள்ளி அணை - ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம்

ஓசூர் கெலவரபள்ளி அணை.
ஒரு வேலை விசயமாக ஓசூர் சென்றிருந்த போது ஃப்ரி டைமில் அந்த ஊரில் சுற்றிப்பார்க்க என்ன இருக்கிறது என கூகுளிடவும், கெலவரப்பள்ளி அணை, மூதறிஞர் ராஜாஜி பிறந்த இல்லம், சந்திரசூடேஸ்வர் கோவில் மற்றும் தளி ஆகிய இடங்களைக் காட்டவும், சரி...பக்கத்தில் இருக்கும் கெலவரப்பள்ளி டேம் போவோம் என்று அங்கு வண்டியைக்கட்டினோம்.


பாகலூர் செல்லும் வழியில் வலது புறம் ஒரு ரோட்டில் பிரிய, 20 நிமிட நேரப்பயணத்தில் கெலவரப்பள்ளி டேம் வந்தோம்.ரோடு படு மோசமாக இருக்க, இருபுறமும் கரட்டுமேடுகளாய் காணப்படுகிறது.ஒரு சில இடங்களில் மட்டும் விவசாய நிலங்கள் விளைந்திருக்க, ஆங்காங்கே கான்கிரீட் காடுகள் உருவாக ஆரம்பித்து இருக்கின்றன.
கர்நாடகா மாநிலத்தில் சிக்கபல்லபூர் மாவட்டம் நந்தி மலையில் தென்பெண்ணை நதியாய் உருவாகி கர்நாடகா, தமிழ்நாடு வழியே பாய்ந்து கடலூர் மாவட்டத்தில் கடலில் கலக்கிறது.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூரில் பொன்னையார் நதியாக மாறிப்பாய்கிறது.அதன் குறுக்கே கெலவரப்பள்ளியில் அணை கட்டப்பட்டு நீர் தேக்கி வைக்கப்பட்டு அங்குள்ள பகுதிகளுக்கு பாசனம் மற்றும் குடிநீர் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது.பரந்து விரிந்து கிடக்கிறது இந்த அணையின் நீர்த்தேக்கம்.ஆனால் அணையோ மிகச்சிறியதாக இருக்கிறது.அணையின் உயரம் 13.5 மீட்டர்கள் மட்டுமே.நீளமும் 105.25 மீட்டர்தான்.மிகப்பெரிய அணையாக இருக்கும் என்றெண்ணி வந்தவர்களுக்கு நிச்சயம் கொஞ்சம் ஏமாற்றமாகத்தான் இருக்கும்.எங்களுக்கும் அதுவே...




புரட்சித்தலைவர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட அணை தற்போது கிருஷ்ணகிரி, ஓசூர், பகுதிகளுக்கு பாசன வசதியை தந்து கொண்டிருக்கிறது.
இந்த அணையை சுற்றுலாத்தளமாக ஆக்கிய அரசு அங்கு சிறுவர் பூங்கா மற்றும் பொழுது போக்கு அம்சங்களை அமைத்துள்ளது.ஓசூரின் பரபரப்புக்கு ஓய்வு கொடுக்கும் இடமாக இது இருக்கிறது.பசுமை வாய்ந்த பூத்துக்குலுங்கும் மரங்கள், பலவித பறவைகள் (அம்மணிகளும் சேர்த்து) என காணும் போது மனம் மகிழ்ச்சியில் திளைக்கும்.


அணைக்கு செல்ல 4 ரூபாய் வசூலிக்கிறார்கள்.இந்த அணையில் கடை கண்ணிகள் என்பது சுத்தமாக இல்லை.எப்போதாவது வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக எதற்கு கடை போடணும் என்று நினைத்திருப்பார்கள் போல....ஆனால் இது போன்ற சுற்றுலாத்தளங்களில் எப்பவும் போல அம்மணிகள் தத்தம் ஜோடிகளுடன் ஒதுக்குப்புறங்களில் மோன நிலையில் இருப்பதைக்காணலாம்.அணையில் ஒரு சில பேர் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.ஆனால் எங்கும் மீன் வறுவலைக் காணோம்.எல்லா அணைகளிலும் யாராவது ஒருத்தர் மீன் கடை போட்டு இருப்பாங்க.ஆளே இல்லாத கடையில் எதுக்கு  டீ ஆத்தனும் அப்படின்னு விட்டிருப்பாங்க போல...
மிக அமைதியாக ஊரின் பரப்பரப்பின்றி இருக்கிறது.இயற்கை ஆர்வலர்களுக்கு ஏற்ற இடம்.அது போலவே நம்ம பங்காளிகளுக்கும் ஏற்ற இடம்.வார இறுதியை சுகமாய் செலவின்றி கொண்டாடக்கூடிய இடம்.

ஓசூர் மக்களுக்கான ஒரே பொழுது போக்கு இடம் இதுதான்.சனி ஞாயிறுகளில் கூட்டம் அள்ளும்.ஓசூர் பக்கம் போனிங்கன்னா ஒரு எட்டு பார்த்துட்டு வாங்க.வருங்கால சந்ததியினருக்கு நீர் எப்படி தேக்கி வைக்கப்படுகிறது, அணையின் பயன்பாடு என்ன என்பதெல்லாம் அறிந்து கொள்ள முடியும்.

நேசங்களுடன்
ஜீவானந்தம்




7 comments:

  1. பறவைகள் ஏதும் கண்ணில்படலையே... ஹிஹி

    ReplyDelete
    Replies
    1. இங்க வந்தா நிறைய கண்ணுல படும்...

      Delete
  2. அழகான இடங்கள்&படங்கள்.பகிர்வுக்கு நன்றி,சார்!!!

    ReplyDelete
  3. நாங்க குடும்பத்தோடு குழந்தைகளோடு போய்ட்டு ரொம்ப பாடுபட்டுட்டோம்.

    ReplyDelete
  4. மரங்களின் படங்கள் அட்டகாசம்....

    ReplyDelete
  5. படங்கள் அழகு! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  6. படங்கள் நன்று.

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஜீவா.

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....