Wednesday, February 25, 2015

கோவை மெஸ் - பாண்டியன் பிரதர்ஸ் கம்மங்கூழ் ஸ்டால், பவர்ஹவுஸ், காந்திபுரம், கோவை

பாண்டியன் பிரதர்ஸ் கம்மங்கூழ் ஸ்டால், பவர்ஹவுஸ், காந்திபுரம் கோவை
                     பவர்ஹவுஸ் ரோட்டில் ஒரு தள்ளுவண்டியில் கம்மங்கூழ் நன்றாக இருக்கும் என கேட்டு இருப்பதால் ஒரு மதிய வேளை சுள்ளென்ற வெயிலில் சென்றால் குளிர்ச்சியாக இருக்குமே என இன்றைய உச்சிவெயிலில் அங்கு ஆஜரானேன்.கார்களும் டூ வீலர்களும் வரிசை கட்டி நின்று கொண்டிருக்க, அதன் உரிமையாளர்களோ தள்ளுவண்டியை சுற்றி கூட்டமாய் இருக்க ஓவ்வொருத்தர் கைகளிலும் காகித டம்ளர்கள்…கூடவே கடித்துக்கொள்ள ஸ்னேக்ஸ் வகைகளும்…..


                ஒரு தள்ளுவண்டி தான்..இரு பெரிய பானைகள்.வண்டிக்கு பக்கத்தில் ஒரு சின்ன டேபிள்.அதில் அனைத்து வகையான ஸ்னேக்ஸ்களும் வரிசை கட்டி இருந்தன.



                 ரொம்பவும் பிஸியாய் வரிசையாய் வைக்கப்பட்டிருந்த டம்ளர்களில் கொஞ்சம் தயிர், கூட வெங்காயம், பின் கம்மங்கூழ் என ஊற்றி ஆட்டத்தில் பிஸியாக இருந்த பாண்டியன் பிரதர்ஸ்களில் ஒருவரது அசாத்திய வேகம் கண்டு கண்ணிமைக்க மறந்து காத்திருந்தோம்.பிறகு கூட்டத்தில் எப்படியோ அரும்பாடு பட்டு அவரது கவனத்தினை ஈர்த்து இரு டம்ளர் ஆர்டர் செய்து விட உடனடியாய் கம்மங்கூழ் கைக்கு வந்தது.ரொம்ப திக்கான தயிரில், கெட்டியான கம்மங்கூழுடன், சிறிது வெங்காயம் போட்டு டம்ளர் வழிய வழிய நிறைந்த படி இருந்தது.கொஞ்சமாய் வாயில் வைத்து குடிக்க, அமிர்தமாய் இறங்கியது..அடிக்கிற வெயிலில் சில்லென்ற குளிர்ச்சியாய் தொண்டையை நனைத்தது. 
அதற்கு தொட்டுக்கொள்ளவும், கடித்துக் கொள்ளவும் வகை வகையாய் வைத்து இருந்தனர். வடாகம், சுண்டக்காய் வத்தல், கொத்தவரங்காய் வத்தல், குடல் வகைகள், மஞ்சள்,  சிகப்பு வர்ணங்களில் உண்டான குடல் வகைகள் என ரொம்ப வெரைட்டிகள் இருக்க, எல்லாத்திலும் ஒவ்வொன்றாய் எடுத்து ஒரு மிடக்கு கம்மங்கூழ், பின் ஒரு கடி என இப்படி ஒவ்வொரு மடக்காய் கொஞ்சம் கொஞ்சமாய் வழுக்கியபடியே உள்ளுக்குள் இறங்கிக்கொண்டிருந்தது.நன்கு வெந்த கம்பு, கொஞ்சம் கெட்டியாய் கூழாய் குடிக்க சுவையோ சூப்பராக இருக்கிறது.

கம்பு உடலுக்கு மிகவும் நல்லது.அதுவும் இந்த வெயிலுக்கு மிகவும் நல்லது.அந்தப்பக்கம் போனீங்கன்னா ஒரு வாய் சாப்பிட்டு பாருங்க…டேஸ்டை நீங்களே உணர்வீங்க…..ஆரோக்கியமான உணவும் கூட....

இதுக்கு பக்கத்துல தமிழக அரசோட நெய்தல் மீன் வளர்ச்சி விற்பனையகம் இருக்கு...மாலை நேரத்துல போனிங்கன்னா மீன் வறுவல் ஒரு கட்டு கட்டலாம்.....
நெய்தல் மீன் விற்பனையகம்

நேசங்களுடன்
ஜீவானந்தம்



1 comment:

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....