Showing posts with label அருவி. Show all posts
Showing posts with label அருவி. Show all posts

Saturday, October 12, 2013

பயணம் - கொடைக்கானல்...ஒரு பார்வை

திண்டுக்கல்லில் இருக்கும் போது தீடீர்னு ஒரு யோசனை..இவ்ளோ தூரம் வந்திருக்கோமே......கொடைக்கானல் வேற இங்க பக்கத்துல தானே இருக்கு ஏன் போகக்கூடாது அப்படின்னு.நாம என்ன ஹனிமூன் கப்பிள்ஸா...ரொம்ப நாள் முன்னாடியே ரூம்லாம் புக் பண்ணிட்டு போறதுக்கு......சரி கிளம்புவோம்..அப்படின்னு கூட திண்டுக்கல் நண்பர்களையும் இழுத்துப் போட்டுக்கிட்டு கிளம்பினேன்.மாலை 4 மணி ஆயிடுச்சு வத்தலகுண்டு போகவே.மலை ஏறதுக்குள்ள இருட்டிடும் அதனால இங்கயே எல்லாத்தையும் முடிச்சிட்டு போயிடுவோம்னு நம்ம கடைக்கு போய் சாப்பிட்டுவிட்டு வேணுங்கிறத பார்சல் வாங்கிட்டு மலை ஏற ஆரம்பித்தோம்..அந்த மாலை வேளையிலும் பசுமை இன்னும் மாறாமல் இருந்தது.


வளைந்து நெளிந்து செல்லும் சாலையில் இருமருங்கிலும் அடர்ந்த பசுமை வரவேற்றது எங்களின் வருகையை...குளிர் காற்று மெலிதாய் வீச ஆரம்பிக்க வெகு விரைவிலேயே பெருமாள் மலை அடைந்து விட்டோம்.. ஆனாலும் இருட்டாகி விட்டது.குளிருக்கு ஏத்த போர்வையை உள்ளே போர்த்தி இருந்ததால் அதிகம் குளிர் தெரியவில்லை.பனி படர்ந்த இரவினில் இனி எங்கேயும் சுத்த முடியாது என்பதால் நண்பரின் காட்டேஜ்க்கு குடியேறினோம்.
இரவின் குளிரில் மித கதகதப்பாய் உணர்ந்தோம்.நடு நிசி இரவு வரை நீண்ட எங்களின் முந்தைய வரலாறுகளை உணர்ந்து உருவகித்து பேசி உண்டு களித்தோம்.அப்படியே தூங்கிப்போனோம்.
காலை சுள்ளென்று சூரியன் விழிக்க நாங்கள் உடனடியாக உதித்துக் கொண்டோம்.அந்த காலை வேளையிலும் உடலினை சுறுசுறுப்பாக வைத்திருக்க கைவசம் கொண்டிருந்த மருந்தினை ஒரு லார்ஜ் விழுங்கிக்கொண்டோம்.குளிருக்கு பழக்கமாகிப்போனது உடலும் மனசும்.
நேற்றைய மகிழ்ச்சியினை மீண்டும் ஒரு முறை ஞாபகப்படுத்திக்கொண்டு குளித்துவிட்டு கிளம்ப ஆரம்பித்தோம்.
                சுற்றுலாப்பயணிகள் வந்து சேராமல் துடைத்து வைத்தது போல கொடைக்கானல் ரோடுகள் இருக்க,சுற்றும் முற்றும் வேடிக்கைப்பார்த்தபடியே அதில் பயணித்தோம்.
கொடைக்கானல் வந்ததுக்காக ஒரு சிறு சுற்றுலாவாக மட்டும் பார்ப்போம் என்றெண்ணி போனது போட் ஹவுஸ்...
அமைதியாய் பச்சைப்பசேலென்று குளம் இருக்க வாக்கிங் செல்பவர்கள் இயற்கையை ரசித்து சுத்தமான காற்றினை சுவாசித்துக்கொண்டு சென்று கொண்டிருந்தனர்.இன்னும் வியாபாரத்தினை துவக்காமல் இழுத்துப் போர்த்தியபடி கடைகள் இருக்க நாங்கள் முன்கூட்டியே வந்து விட்டதை எண்ணி ஆச்சர்யப்பட்டோம்.

அந்த காலை வேளையிலும் குதிரைகளும் அதன் உரிமையாளர்களும் இன்றைய வரும்படிக்காக காத்துக்கொண்டிருந்தனர்.கூடவே தள்ளுவண்டிக் கடைக்காரரும்....பொழுது போகாமலிருக்க தினத்தந்தியை ஒப்புவித்துக் கொண்டிருந்தனர்..

அந்த இடத்தில் நம் வருகையினைப் பார்த்தவுடன் குதிரைகளுக்கும் அங்கிருந்த ஜாக்கிகளுக்கும் அப்படி ஒரு சந்தோசம்  தெரிந்தது அவர்களது முகத்தில்.முதல் போணியாய் நான் ஒரு குதிரையை தேர்ந்தெடுத்து தேசிங்கு ராஜாவாய் அமர்ந்தேன்.குதிரை முன்னும் பின்னும் போக ......இன்னும் கொஞ்ச நேரத்தில் என் வெயிட் தாங்காமல் அலறிவிடுமோ என்றெண்ணி, ஒரு வாயில்லா ஜீவனை வதைத்த பாவத்திற்கு ஆளாக வேண்டாமே என்று உடனே இறங்கிவிட்டேன்.அந்த சைக்கிள் கேப்பிலும் என் வரலாறினைப் பதித்துக் கொண்டேன் புகைப்படங்களாய்...

அப்புறம் அங்கிருந்த ஒரு கடையில் குளிருக்கு சூடாய் டீ சாப்பிட ஆரம்பிக்கையில் கடந்து சென்ற ஒரு காலேஜ் டூர் பஸ்ஸின் அம்மணிகளின் சத்தம் எங்கள் காதைப்பிளந்தது.ரசித்துக்கொண்டே ருசிக்கையில் எங்களை தாண்டிச் சென்ற ஒரு வட இந்திய ஹனிமூன் கப்பிள்ஸின் பாவனைகள் நேற்றைய இரவின் மிச்சங்களை இன்றும் தொடர்வதற்கான அறிகுறிகளை அவர்களின் நெருக்கத்தில் கண்டோம். அதைப்பார்த்துக் கொண்டிருக்கும் போதே இளம் சூடான புகை வெளியேறிக் கொண்டிருந்தது டீ டம்ளரிலிருந்து மட்டுமல்ல....
             மனதை கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு அங்கிருந்து நகர ஆரம்பித்தோம்.திரும்ப திண்டுக்கல் செல்ல ஆயத்தமானோம்.கிளம்பி வருகையில் வெள்ளி நீர்வீழ்ச்சி அருவியின் அருகே அம்மணிகள் வரிசை கட்டி ரசித்துக்கொண்டிருக்க ஆட்டோமேட்டிக்காய் வண்டி நின்றது.இறங்கி அருவியை ரசித்துவிட்டு (?) நம் வரலாறுக்காக புகைப்படங்களை எடுத்து விட்டு கீழிறங்கினோம்.

வரும் வழியில் ஒரு இடத்தில் வண்டியை நிறுத்தி இது மன்மதன் அம்பு பாறை என நண்பன் சொல்லவே...காரணம் கேட்க இந்த இடத்தில் தான் மன்மதன் அம்பு படம் சூட்டிங்க் எடுத்தார்கள் என்றான்.
அங்கயும் ஒரு சில போட்டோக்களை எடுத்துவிட்டு திண்டுக்கல் வந்தடைந்தோம்.மீண்டும் செல்லக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாகவே இந்த பயணம் இருந்தது.ஏனெனில் பார்க்கவேண்டிய இடங்கள் இன்னும் நிறைய இருக்கின்றன.

நேசங்களுடன்
ஜீவானந்தம்
இன்னும் கொஞ்சம்...

Thursday, March 14, 2013

அகஸ்தியர் அருவி - பொதிகைமலை, பாபநாசம், திருநெல்வேலி

அகஸ்தியர் அருவி…
நெல்லை அம்பாசமுத்திரம் சென்றபோது பாபநாசம் அருகே இருக்கும் அகஸ்தியர் அருவியில் எப்பொழுதும் தண்ணீர் வரத்து இருக்குமாம் என்று பாசக்கார பயபுள்ளங்க சொல்லவும் அங்கே செல்ல ஆசையாய் மனம் துடித்தது.சரி...போய் ஒரு விசிட் விட்டுட்டு வரலாம் என்று கிளம்பினோம்…
பாபநாசம் என்கிற ஊர் வர...... வழியிலேயே ஒரு சிவன் கோவில் நம்மை வரவேற்றது.கோவில் கோபுரம் வெள்ளை நிறத்தில் இருக்கிறது.அன்று விசேச நாள் போல…..ஏகப்பட்ட பக்தர்களின் கூட்டம்..தத்தம் பாவத்தை போக்க குவிந்து இருந்தனர்…
 
அந்த கோவிலை தாண்டி செல்லவும் பசுமை நிறைந்த வயல்வெளிகள் கண்ணுக்கு குளிர்ச்சியாய்.....இன்னும் கொஞ்ச தூரம் சென்றதும் அடக்க ஒடுக்கமாய் கிராமத்து அம்மணிகள் கூட்டம்.....க…க…க..க.....கல்லூரிச்சாலை ஏதோ ஒரு தமிழ்க்கல்லூரி போல….அப்படியே கொஞ்சம் நோட்டம் விட்டுவிட்டு பயணித்தோம்…..மலைப்பாதை வரவேற்கிறது…..அருகிலேயே செக்போஸ்ட் களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயம்………நிறைய எச்சரிக்கை போர்டுகள்……நம்மை மிரட்டியபடி புலிகளின் படங்கள்….
மலைப்பாதையில் பயணிக்க ஆரம்பித்தவுடன் இருபுறமும் பசுமை அன்னை தன் இயற்கையை போர்த்தியிருக்கிறாள்…மேலே இருந்து பார்க்கும் போது அருவி அழகாய் வழிந்து ஓடுவது மிக ரம்மியமாக இருக்கிறது..மலைப்பாதையில் இருந்து இடது பக்கம் பிரியும் ரோட்டில் இறங்க அருவிக்கு செல்லும் இடத்தினை அடைந்தோம்.
 
இயற்கை அன்னையின் மடியில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் நீர்மின்தொகுப்பு இருக்கிறது. அதைத்தாண்டி சென்று கார் பார்க்கிங்கில் காரை நிறுத்தினோம்…...ஒற்றை ஆலமரம்…அதில் ஏகப்பட்ட நம் முன்னோர்கள்…அதிலும் சிங்கவால் குரங்குகள் அதிகம்…
அவைகளை ரசித்தபடியே அருவிக்கு சென்றோம்..பாறை முகடுகளில் தண்ணீர் வழிந்து கொண்டுருக்கிறது.பெண்களுக்கு என்று தனியாக உடைமாற்றும் வசதிகள் இருக்கின்றன.
 
 
 
அருவியில் நீர்வரத்து எப்பொழுதும் வந்து கொண்டே இருக்கிறது.வருடம் முழுவதும் நீர் வரக்கூடிய ஒரே அருவி இந்த அகஸ்தியர் அருவி…கொஞ்ச நேரம் அருவியின் அழகை ரசித்துவிட்டு கை நனைக்க அருவியை தொட்டபோது செம குளிர்ச்சி…..சில்லென்ற சாரலில் நனைந்தபடி அருவியின் அழகைப் பருகினோம்….சூழ்நிலை மிக ரம்மியமாக இருக்கிறது…ஆங்காங்கே…எண்ணை தேய்த்து குளித்தபடி ஆண்களும் பெண்களும்…..எலே…….இங்க பாருல…..என்கிற நெல்லைத் தமிழ் கேட்க சுவையாய் இருக்கிறது…
 
ஏற்கனவே குளித்துவிட்டு வந்தபடியால் அகஸ்தியர் அருவியில் குளிக்கவில்லை…கைகால் முகம் அலம்பிவிட்டு மேலேறினோம்.
அருவிக்கு அருகிலேயே காவல் தெய்வமாய் ஒரு விநாயகப்பெருமான்....அவருக்கு ஒரு வருகைப்பதிவை உறுதி செய்துவிட்டு கிளம்பினோம்...
அங்கே இருக்கிற பாறை குழிகளில் மீன்களின் ராஜ்ஜியம் இருக்கோ இல்லையோ ஆனால் தவளையின் தலைப்பிரட்டைகள் நிறைய இருக்கிறது….
அகஸ்தியர் அருவிக்கு செல்லும் முன் வலதுபக்கம் ஒரு செங்குத்தான படிகள் இருக்கின்றன…அது கல்யாண தீர்த்தம் எனப்படும் இடமாகும்…(அதை அடுத்தபதிவில் பார்க்கலாம்...)
நல்ல ஒரு ரம்மியமான இடம்......சுற்றிலும் பசுமை .பசுமை…தாமிரபரணி தண்ணீர் உருவாகும் அகத்தியமலை அங்கிருந்து வந்து விழும் அகஸ்தியர் அருவி என அழகாய் இருக்கிறது…
நல்ல அமைதியும் இறைவன் அருளும் பெற சிறந்த இடம்...

நேசங்களுடன்
ஜீவானந்தம்
 
இன்னும் கொஞ்சம்...

Saturday, January 26, 2013

சேராப்பட்டு, கல்வராயன் மலைத்தொடர், விழுப்புரம்

சேராப்பட்டு, விழுப்புரம்
கள்ளக்குறிச்சி சென்ற போது அருகில் ஒரு மலையில் சிறு அருவி இருக்கிறது என்ற விவரம் தெரியவரவே அந்த இடத்தைக் காண சென்றோம்.
கள்ளக்குறிச்சி டு திருவண்ணாமலை ரோட்டில் புதூர்பிரிவு என்கிற இடத்தில் சேராபட்டு என்கிற மலை கிராமத்திற்கு செல்ல வழி பிரிகிறது..
இருமருங்கிலும் பசுமை....கல்வராயன் மலைத் தொடர் முழுவதும் இயற்கை அன்னை பரந்து விரிந்து கிடக்கிறாள்.மலை அடிவாரம் செல்லும் வரை கிராமங்கள் நிறைய இருக்கின்றன.விவசாயம் செழிப்புடன் இருக்கிறது.மலைப்பாதை ஆரம்பித்தவுடன் பசுமை சாலைக்குள் செல்வது போன்ற உணர்வு.இன்னும் செப்பனிடப்படாத பாதைகள் இருக்கின்றன.

 ஒரு சிலஹேர்பின் வளைவுகள் இருக்கின்றன.கிட்டதட்ட 39 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது சேராபட்டு என்கிற ஊர்.குளிர் இல்லாமல் சமதளத்தில் இருக்கிற உணர்வே இருக்கிறது.சேராபட்டு ஊருக்கு முன்பே மான்கொம்பு என்கிற ஊரில் தான் அந்த அருவிக்கு செல்லும் வழி இருக்கிறது என்று ஒரு வழிப்போக்கன் தகவல் தரவே மான்கொம்பு அடைந்தோம்...
அந்த ஊரிலிருந்து ஒரு சில கிலோமீட்டர் தொலைவில் பள்ளத்தாக்கு போன்ற இடம் வருகிறது.அங்கிருந்து அருவியை காண கீழிறங்கினோம்..இன்னும் பாதைகள் அமைக்கப்படவில்லை...சறுக்கிக்கொண்டே இறங்கினோம்200அடி ஆழத்தில் பசுமை நிறைந்த மரங்கள் ..சலசலக்கும் அருவியின் சத்தம் கேட்டு சிலிர்த்துப்போனோம்..தண்ணீர் வரத்து குறைவாக இருக்கிறது.ஆனால் பயங்கர ஜில்லென்று இருக்கிறது.பாறைகள் இடையே நீர் கொஞ்சமாக இருந்தாலும் நன்றாக இருக்கிறது.ஆள் அரவமற்ற இடம் என்பது பார்த்தாலே தெரிகிறது.அங்கிருந்து பார்த்தால் கல்வராயன் மலை மிக பசுமையாக இருக்கிறது.அருவியின் மேற்பரப்பில் இருந்து 100 அடி பள்ளத்தில் நீர் விழுவது கண்கொள்ளாக் காட்சியாகும்.தண்ணீர் வரத்து அதிகம் இருக்கிற நாட்களில் சென்றால் மிக அருமையாக இருக்கும்...ஆனால் அருவி கொட்டுகின்ற இடத்தினை பார்க்க முடியாது.
அங்கு உலாவிக்கொண்டிருந்த ஒரு மனிதரிடம் கேட்டு பொங்கலம்மன் அருவி என்று தெரிந்துகொண்டோம்..அருவியை ஆசை தீர பார்த்துவிட்டு வெள்ளிமலை வழியாக அயோத்தியாபட்டணம் வந்து சேலம் அடைந்தோம்..
கல்வராயன் மலையானது 3 மாவட்டங்களான சேலம், விழுப்புரம், திருவண்ணாமலை சேர்ந்து அமைந்துள்ளது.கள்ளக்குறிச்சி சங்கராபுரம் வழியாக மலைப்பாதை மூலம் சேராபட்டு அடையலாம்.சேலம் அயோத்தியாபட்டினம் வழியாகவும் இந்த சேராபட்டு அடையலாம்.மலைப்பாதை வழியாக செல்லும் போது ஏற்படுகிற அனுபவம் அதை விவரிக்க வார்த்தைகள் இல்லை.
சேராபட்டு இடத்தில் இருந்து சேலம் செல்லும் வழியில் வெள்ளிமலை என்கிற ஊர் இருக்கிறது.அங்கும் ஒரு அருவி இருக்கிறது.கரியாலூர், கோமுகி அணை போன்ற இடங்கள் காணக்கூடியவையாக இருக்கின்றன.
நாங்கள் மான்கொம்பு அருகில் உள்ள அருவிக்கு மட்டும் சென்று வந்தோம்.இன்னொரு முறை இந்த ஏழைகளின் மலைவாசஸ்தலம் செல்ல வேண்டும் என்கிற ஆவலை தூண்டி இருக்கிறது.
இயற்கையை ரசிப்பவர்கள், தனிமையை விரும்புகிறவர்கள் தாராளமாக செல்லலாம்...ஒவ்வொரு வருடமும் ஜூன் ஜூலை மாதங்களில் கோடைவிழா நடைபெறுகிறது கல்வராயன் மலைத்தொடரில் அமைந்துள்ள கரியாலூரில்.

நேசங்களுடன்
ஜீவானந்தம்


இன்னும் கொஞ்சம்...

Wednesday, December 19, 2012

பயணம் - நீர் காத்த அய்யனார் கோவில் , ராஜபாளையம், விருதுநகர் மாவட்டம்.

ராஜபாளையத்தில் அய்யனார் கோவிலும் ஒரு அருவியும் அருகிலேயே இருக்கிறது என்று நண்பர்கள் சொன்னதால் சிவகாசியில் இருந்து அங்கு கிளம்பினோம்.ராஜபாளைத்தில் இருந்து 13 கி.மீ தொலைவில் இந்த அய்யனார் கோவில் இருக்கிறது.கோவில் செல்லும் பாதையின் இருமருங்கிலும் மாமரங்கள், தேக்கு மரங்கள், புளிய மரங்கள் என இருபுறமும் பசுமையாய் இருக்கிறது.மேற்கு தொடர்ச்சி மலையின் இயற்கையில் எங்கு பார்த்தாலும் பசுமை...சில்லிட வைக்கும் சாரல் என அற்புதமாய் இருக்கிறது.கண்ணுக்கு குளிர்ச்சியாய் இருக்கிறது.
 
கார் பார்க்கிங்கில் வண்டியை நிறுத்தி விட்டு பார்த்தால் நிறைய எச்சரிக்கை போர்டுகள்...வனப்பகுதியில் தீ மூட்டாதீர் என்று....அருகே ஒரு பெரிய ஆலமரம் நிறைய விழுதுகளுடன்....எப்பவும் போல இங்கு நம் முன்னோர்கள் அதிகமாகவே இருக்கிறார்கள்...
 கோவிலை அடைந்தோம்..மிக அமைதியாக இருக்கிறது.மலைகளில் இருந்து வரும் அருவி நீர் ஓடை போல் கோவில் அருகே வருகிறது.ஒரு ஓடை மிக மெல்லியதாய் சிறு சிறு பாறைகளுக்கு இடையே வந்து கொண்டு இருக்கிறது.தண்ணீரில் கால் வைத்ததும் செம குளிர்ச்சி....இந்த ஓடையை தாண்டி தான் செல்ல வேண்டும் அய்யனார் கோவிலுக்கு...அருவி தான் எங்க இருக்குனு தெரியல..காட்டுக்குள் ரொம்ப தூரம் செல்லவேண்டும் என்று சொன்னதால் போகவில்லை...
நிசப்தம்..எங்கும்..நகர வாழ்க்கையின் பரபரப்பு கொஞ்சம் கூட இல்லை இங்கு...பறவைகளின் கீச்சிடல், இயற்கையின் சப்தம் என மிக அமைதியாக அம்சமாக இருக்கிறது.
தல வரலாறு :
மேற்குத் தொடர்ச்சி மலையின் அடி வாரத்தில், பாலாறு, நீராறு ஒன்றாக சேரும் ஆற்றங்கரை ஓரத்தில் நீர் காத்த அய்யனார் அருளாட்சி செய்து கொண்டிருக்கிறார். இவருக்கு வலது புறம் பூர்ணா, இடதுபுறம் புஷ்கலா தேவியார் வீற்றிருக்கின்றனர்.கிட்டதட்ட 500 - 1000 ஆண்டுகளுக்கு முன் ராஜ ராஜ சோழன் காலத்தில் இக்கோவில் அமைக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது.(ஆனால் இப்பொ இருக்கிற தூண்கள் அனைத்திலும் யாராவது ஒருத்தர் பெயர் பொறிக்கப்பட்டு இருக்கிறது..நன்கொடை கொடுத்தவர்களாம்....)
 கோவிலின் உள்ளே சுற்றி வர பிரகாரம் கொஞ்சம் பெரிதாகவே இருக்கிறது.இந்த இந்தக் கோயிலில் வனலிங்கம், தலைமைசுவாமி, பெருமாள் , லட்சுமி, சின்ன ஓட்டக்காரசாமி, பெரிய ஓட்டக்காரசாமி, வனகாளி, மாடம், மாடத்தி, ரக்காச்சி அம்மன், வனப்பேச்சியம்மன், கருப்பசாமி, தர்மராஜர், சப்தகன்னிமார் ஆகிய தெய்வங்கள் அருள்பாலிக்கிறார்கள்.
இந்தகோவில் விசேசம் என்னவெனில் குடும்பத்தில் நிலவும் பிரச்சனைகளையும், குறைகளையும் போக்கவும் இங்கு வந்து வழிபடுகின்றனர்.பிரார்த்தனை நிறைவேறியதும் அபிஷேகம் செய்து, தங்களால் இயன்ற பொருளுதவி, அன்னதானம் செய்தும் நேர்த்திக்கடன் செய்கின்றனர்.
இப்போது ஓடையில் நீர் வரத்து குறைவாக இருக்கிறது.திடீர் என்று வெள்ளப்பெருக்கும் ஏற்படும்..இந்த ஓடையை தாண்டி தான் கோவிலுக்கு செல்ல வேண்டும்.

இயற்கையை விரும்புகிறவர்கள், தனிமையை நாடுபவர்கள் செல்லவேண்டிய அற்புத இடம் இந்த அய்யனார் கோவில்...

ராஜபாளையத்தில் இருந்து 13 கி.மீ தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இருக்கிறது.பஸ் போக்குவரத்து வசதி இருக்கிறது.

இன்னும் கொஞ்சம்...