Saturday, October 12, 2013

பயணம் - கொடைக்கானல்...ஒரு பார்வை

திண்டுக்கல்லில் இருக்கும் போது தீடீர்னு ஒரு யோசனை..இவ்ளோ தூரம் வந்திருக்கோமே......கொடைக்கானல் வேற இங்க பக்கத்துல தானே இருக்கு ஏன் போகக்கூடாது அப்படின்னு.நாம என்ன ஹனிமூன் கப்பிள்ஸா...ரொம்ப நாள் முன்னாடியே ரூம்லாம் புக் பண்ணிட்டு போறதுக்கு......சரி கிளம்புவோம்..அப்படின்னு கூட திண்டுக்கல் நண்பர்களையும் இழுத்துப் போட்டுக்கிட்டு கிளம்பினேன்.மாலை 4 மணி ஆயிடுச்சு வத்தலகுண்டு போகவே.மலை ஏறதுக்குள்ள இருட்டிடும் அதனால இங்கயே எல்லாத்தையும் முடிச்சிட்டு போயிடுவோம்னு நம்ம கடைக்கு போய் சாப்பிட்டுவிட்டு வேணுங்கிறத பார்சல் வாங்கிட்டு மலை ஏற ஆரம்பித்தோம்..அந்த மாலை வேளையிலும் பசுமை இன்னும் மாறாமல் இருந்தது.


வளைந்து நெளிந்து செல்லும் சாலையில் இருமருங்கிலும் அடர்ந்த பசுமை வரவேற்றது எங்களின் வருகையை...குளிர் காற்று மெலிதாய் வீச ஆரம்பிக்க வெகு விரைவிலேயே பெருமாள் மலை அடைந்து விட்டோம்.. ஆனாலும் இருட்டாகி விட்டது.குளிருக்கு ஏத்த போர்வையை உள்ளே போர்த்தி இருந்ததால் அதிகம் குளிர் தெரியவில்லை.பனி படர்ந்த இரவினில் இனி எங்கேயும் சுத்த முடியாது என்பதால் நண்பரின் காட்டேஜ்க்கு குடியேறினோம்.
இரவின் குளிரில் மித கதகதப்பாய் உணர்ந்தோம்.நடு நிசி இரவு வரை நீண்ட எங்களின் முந்தைய வரலாறுகளை உணர்ந்து உருவகித்து பேசி உண்டு களித்தோம்.அப்படியே தூங்கிப்போனோம்.
காலை சுள்ளென்று சூரியன் விழிக்க நாங்கள் உடனடியாக உதித்துக் கொண்டோம்.அந்த காலை வேளையிலும் உடலினை சுறுசுறுப்பாக வைத்திருக்க கைவசம் கொண்டிருந்த மருந்தினை ஒரு லார்ஜ் விழுங்கிக்கொண்டோம்.குளிருக்கு பழக்கமாகிப்போனது உடலும் மனசும்.
நேற்றைய மகிழ்ச்சியினை மீண்டும் ஒரு முறை ஞாபகப்படுத்திக்கொண்டு குளித்துவிட்டு கிளம்ப ஆரம்பித்தோம்.
                சுற்றுலாப்பயணிகள் வந்து சேராமல் துடைத்து வைத்தது போல கொடைக்கானல் ரோடுகள் இருக்க,சுற்றும் முற்றும் வேடிக்கைப்பார்த்தபடியே அதில் பயணித்தோம்.
கொடைக்கானல் வந்ததுக்காக ஒரு சிறு சுற்றுலாவாக மட்டும் பார்ப்போம் என்றெண்ணி போனது போட் ஹவுஸ்...
அமைதியாய் பச்சைப்பசேலென்று குளம் இருக்க வாக்கிங் செல்பவர்கள் இயற்கையை ரசித்து சுத்தமான காற்றினை சுவாசித்துக்கொண்டு சென்று கொண்டிருந்தனர்.இன்னும் வியாபாரத்தினை துவக்காமல் இழுத்துப் போர்த்தியபடி கடைகள் இருக்க நாங்கள் முன்கூட்டியே வந்து விட்டதை எண்ணி ஆச்சர்யப்பட்டோம்.

அந்த காலை வேளையிலும் குதிரைகளும் அதன் உரிமையாளர்களும் இன்றைய வரும்படிக்காக காத்துக்கொண்டிருந்தனர்.கூடவே தள்ளுவண்டிக் கடைக்காரரும்....பொழுது போகாமலிருக்க தினத்தந்தியை ஒப்புவித்துக் கொண்டிருந்தனர்..

அந்த இடத்தில் நம் வருகையினைப் பார்த்தவுடன் குதிரைகளுக்கும் அங்கிருந்த ஜாக்கிகளுக்கும் அப்படி ஒரு சந்தோசம்  தெரிந்தது அவர்களது முகத்தில்.முதல் போணியாய் நான் ஒரு குதிரையை தேர்ந்தெடுத்து தேசிங்கு ராஜாவாய் அமர்ந்தேன்.குதிரை முன்னும் பின்னும் போக ......இன்னும் கொஞ்ச நேரத்தில் என் வெயிட் தாங்காமல் அலறிவிடுமோ என்றெண்ணி, ஒரு வாயில்லா ஜீவனை வதைத்த பாவத்திற்கு ஆளாக வேண்டாமே என்று உடனே இறங்கிவிட்டேன்.அந்த சைக்கிள் கேப்பிலும் என் வரலாறினைப் பதித்துக் கொண்டேன் புகைப்படங்களாய்...

அப்புறம் அங்கிருந்த ஒரு கடையில் குளிருக்கு சூடாய் டீ சாப்பிட ஆரம்பிக்கையில் கடந்து சென்ற ஒரு காலேஜ் டூர் பஸ்ஸின் அம்மணிகளின் சத்தம் எங்கள் காதைப்பிளந்தது.ரசித்துக்கொண்டே ருசிக்கையில் எங்களை தாண்டிச் சென்ற ஒரு வட இந்திய ஹனிமூன் கப்பிள்ஸின் பாவனைகள் நேற்றைய இரவின் மிச்சங்களை இன்றும் தொடர்வதற்கான அறிகுறிகளை அவர்களின் நெருக்கத்தில் கண்டோம். அதைப்பார்த்துக் கொண்டிருக்கும் போதே இளம் சூடான புகை வெளியேறிக் கொண்டிருந்தது டீ டம்ளரிலிருந்து மட்டுமல்ல....
             மனதை கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு அங்கிருந்து நகர ஆரம்பித்தோம்.திரும்ப திண்டுக்கல் செல்ல ஆயத்தமானோம்.கிளம்பி வருகையில் வெள்ளி நீர்வீழ்ச்சி அருவியின் அருகே அம்மணிகள் வரிசை கட்டி ரசித்துக்கொண்டிருக்க ஆட்டோமேட்டிக்காய் வண்டி நின்றது.இறங்கி அருவியை ரசித்துவிட்டு (?) நம் வரலாறுக்காக புகைப்படங்களை எடுத்து விட்டு கீழிறங்கினோம்.

வரும் வழியில் ஒரு இடத்தில் வண்டியை நிறுத்தி இது மன்மதன் அம்பு பாறை என நண்பன் சொல்லவே...காரணம் கேட்க இந்த இடத்தில் தான் மன்மதன் அம்பு படம் சூட்டிங்க் எடுத்தார்கள் என்றான்.
அங்கயும் ஒரு சில போட்டோக்களை எடுத்துவிட்டு திண்டுக்கல் வந்தடைந்தோம்.மீண்டும் செல்லக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாகவே இந்த பயணம் இருந்தது.ஏனெனில் பார்க்கவேண்டிய இடங்கள் இன்னும் நிறைய இருக்கின்றன.

நேசங்களுடன்
ஜீவானந்தம்

22 comments:

  1. ரசிக்க ஒரு நாள் போதுமா என்ன...? மறுபடியும் வாருங்கள்...

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகைக்கு நன்றி.....கண்டிப்பா நாம போறோம்...

      Delete
  2. மலைகளின் இளவரசியை பார்க்க ‘ஆண் துணைகளோடு’ போவது ஆபத்தாயிற்றே!

    ReplyDelete
    Replies
    1. ஹா...ஹா...ஹா...இது ஏதோ டபுள் மீனிங்கா தெரியுதே...

      Delete
  3. திண்டுக்கல், பெருமாள் மலை, மூஞ்சிக்கல், கொக்கேர்ஸ் வாக், பேரிஜம் லேக், பூம்ப்பாறை (கூக்கால்), மூனாறு -- இதையெல்லாம் மறக்கமுடியுமா?

    என் நினைவுகளை தூண்டிய உங்களுக்கு தா.ம .1 . plus vote

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி சார்...நீங்க சொன்ன இடங்கள் எல்லாம் மீண்டும் போகனும்..

      Delete
  4. கவிதையா வார்த்தைகளை நிறைய போட்டு இருக்கீங்க ஜீவா...... கொடைக்கானல் உங்களை மாத்திடுச்சா ?! நல்ல பயண கட்டுரை, விரைவில் முழுமையாக சுற்றி பார்த்து எழுதுங்க.......

    ReplyDelete
    Replies
    1. வாங்க சுரேஷ்...சும்மா...மீண்டும் போகனும்.,...

      Delete
  5. ஒரு முறை போய் வரனும்

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பா போய்ட்டு வாங்க...

      Delete
  6. // நீர்வீழ்ச்சி அருவியின் அருகே அம்மணிகள் வரிசை கட்டி ரசித்துக்கொண்டிருக்க ஆட்டோமேட்டிக்காய் வண்டி நின்றது.//

    adhaane!!

    ReplyDelete
  7. அடடா அப்படியே பழனி வந்துருக்கலாமே?

    ReplyDelete
    Replies
    1. கொடைக்கானல் செம மூடுல போகும் போது முருகனை தரிசிக்கிறதா...? சான்சே இல்ல...

      Delete
  8. நல்லா ஊர் சுற்றுகின்றீர்கள். கலக்கல். பல மலரும் நினைவுகளை தங்கள் பதிவும், படங்களும் உண்டாக்கியது. கோடைக்கானலின் அழகும், ரம்மியமும் குறையவில்லை போலும். :)

    ReplyDelete
    Replies
    1. வேறு வேலை வெட்டி இல்ல..அதான் எங்காவது போய்ட்டு இருக்கேன் ....கொடைக்கானல் ரம்யம் தான்....

      Delete
  9. கொடைக்கானல் பயணம்.... நிச்சயம் ரசிக்கும்படியான பயணம் தான்.

    ReplyDelete
    Replies
    1. ஆம்...மிக அருமையான பயணம்...

      Delete
  10. பயண அனுபவம் அருமை! தினத்தந்தியை ஒப்புவித்துக் கொண்டிருந்தார் வரிகள் ரசிக்க வைத்தன!

    ReplyDelete
  11. //***

    எங்களை தாண்டிச் சென்ற ஒரு வட இந்திய ஹனிமூன் கப்பிள்ஸின் பாவனைகள் நேற்றைய இரவின் மிச்சங்களை இன்றும் தொடர்வதற்கான அறிகுறிகளை அவர்களின் நெருக்கத்தில் கண்டோம்.

    ***/

    சுஜாதாவின் வரிகளைப்போல உள்ளது.

    கலக்குங்க

    - vimal

    ReplyDelete
    Replies
    1. நன்றி விமல்...உங்க வருகை மகிழ்ச்சியைத்தருகிறது

      Delete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....