ரொம்ப நாள் முன்னாடி கேரளாவின் தலச்சேரிக்கு போயிருந்த போது
பக்கத்துல சுத்திப்பார்க்க என்ன இருக்குன்னு கேரள சேட்டன்கிட்டே ச்சோதிக்கவும், கொறச்ச தூரத்துல ஃபோர்ட் ஒண்ணு உண்டு
என்று பறைய, உடனடியாக ஆட்டோ தேடி ஏறி அமர்ந்தோம்..ஐந்து நிமிட பயணத்தில் கோட்டையை
வந்தடைந்தோம்.
வரலாற்று சிறப்புமிக்க பிரம்மாண்டமான கோட்டை மிக அமைதியாக ஆளரவமற்று
இருக்கிறது.அந்த காலை நேரத்தில் சூரியனின் சுட்டெரிக்கும் கதிர்கள் கூட பலமின்றி
இருக்க, அந்த பலம் வாய்ந்த பிரம்மாண்டமான கோட்டைக்குள் காலடி எடுத்து வைத்தோம்.மிக
விசாலமான இடத்தில் கோட்டை அமைந்திருக்கிறது.இருபுறம் கொண்ட மாடிப்படிகள் மூலம் ஏறி
கோட்டையின் சிறிய நுழைவாயில் அடைந்தோம்.உள் நுழைந்த்தும் மிக விசாலமான இடத்தில்
பரந்து விரிந்து இருக்கிறது.நாற்புரமும் கோட்டையின் அரண் போன்ற சுவர்கள் பாதுகாப்பாய்
பிரம்மாண்டமாய் உயர்ந்து நிற்கிறது.கேரளாவின் இயற்கை செங்கற்களான பாறைக்கல்லில்
கோட்டையின் அனைத்து சுவர்களும் எழுப்பப்பட்டிருக்கின்றன.கோட்டையின் சுற்றுச்சுவரில்
கண்காணிப்பு கோபுரங்கள், பீரங்கி வைக்கும் இடங்கள் என மிக பாதுகாப்பாக
அமைக்கப்பட்டிருக்கிறது.சிறைச்சாலைகள் கூட இருக்கின்றன.ஒரு சுரங்கப்பாதையும்
கோட்டையின் உள்ளே அமைக்கப்பட்டிருக்கிறது.
கோட்டையின் மீது
ஏறிப்பார்க்கும் போதுதான் இக்கோட்டை அரபிக்கடலின் ஓரத்தில் கட்டப்பட்டிருப்பது
தெரிகிறது.அங்கிருந்து பார்க்கும் போது அரபிக்கடலின் அழகான தோற்றம் நம்மை
வியக்கவைக்கிறது.
இந்த கோட்டையினுள் வரலாறு, புகைப்படங்கள் மற்றும் அரிய பொருட்கள் பார்வையாளர்களுக்காக
காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.இந்த கோட்டை தொல்லியல் துறையினரால்
பராமரிக்கப்படும் தேசிய நினைவுச் சின்னங்களில் ஒன்று.
இந்தக்கோட்டையானது 1708ல் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியால் கட்டப்பட்டு
இருக்கிறது.இதைப்பத்தி இன்னும் விரிவா தெரிஞ்சிக்கனும்னா விக்கிபீடியா பார்த்துங்க...
கண்ணூர் தலச்சேரி பக்கம் போனீங்கன்னா ஒரு எட்டு பார்த்துட்டு
வந்திருங்க...
காலை 8 மணிமுதல் மாலை 6 மணி வரைக்கும் திறந்திருக்கும்.
நேசங்களுடன்
ஜீவானந்தம்