Friday, April 20, 2012

பெங்களூர் - பென்னார் கட்டா பயாலாஜிக்கல் பார்க்.---2


இந்த பார்க்கில் இருக்கிற இன்னும் ஒரு சில விலங்குகள் ...












அனைவருக்கும் ஏற்ற பொழுது போக்க கூடிய ஒரு நல்ல இடம்.இந்த பார்க் உள்ளே டீ, காபி, ஐஸ்கிரீம், சமோசா, பப்ஸ் என அனைத்தும் கிடைக்கிறது. பஸ் ஸ்டாண்ட் பின்புறம் இந்த பார்க் இருக்கிறது. நடைபாதை கடைகள் நிறைய இருக்கின்றன.மக்களின் கூட்டம் எப்போதும் வந்து கொண்டு இருக்கிறது.நல்ல விசாலமான கார் பார்க்கிங்.நல்ல பராமரிப்பு என பார்க் இருக்கிறது.
முந்தைய பதிவு - பென்னார் கட்டா பயாலாஜிக்கல் பார்க்

நேசங்களுடன் 
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Wednesday, April 18, 2012

பென்னார் கட்டா பயாலாஜிக்கல் பார்க் - Bannerghatta Biological Park – Bangalore


பெங்களூர்..
பென்னார் கட்டா பயாலாஜிக்கல் பார்க்...
ஞாயிறு அன்னிக்கு காலையில் இந்த பார்க் போனோம்.மிருக காட்சி சாலை மற்றும் சபாரி செல்லுதல் என இரண்டும் இங்கு இருக்கிறது.பறவைகள், பாம்புகள், முதலைகள், யானைகள் சிறுத்தை, கரடி என அனைத்தும் இந்த பார்க்கில் இருக்கிறது.சபாரி அப்படினா ஒரு வேனில் காட்டுக்குள் இயற்கையாக உலாவும் விலங்குகளை காண அழைத்து செல்கின்றனர். நாங்கள் ஜூ மட்டுமே சென்றோம்.ஜூ வுக்குள் நுழைந்தவுடன், ஒரு வித மணம் நம் நாசியை அடைகிறது.
இன்னும் கொஞ்சம்...

Friday, April 13, 2012

அனுவாவி சுப்பிரமணியர் கோவில் - கோவை

அனுவாவி சுப்பிரமணியர் கோவில் 
கோவையில் இருந்து 17 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலையின் மேல் இருக்கிறது. தமிழ் புத்தாண்டு தினமான இன்னிக்கு தமிழ் கடவுளான முருகனை கும்பிடுவோம்னு நினைச்சு இந்த கோவிலுக்கு போனேன்.தடாகம் என்ற ஊரிலிருந்து கோவில் வரும் வரை இரு மருங்கிலும் ஏகப்பட்ட சேம்பர் எனப்படும் செங்கல் சூளைகள்.இந்த சூளைகளினால் இங்குள்ள பகுதி வறண்டு போய் இருக்கிறது.

கோவிலின் அடிவாரம் வந்தபின் வண்டி டோக்கன் போட்டுவிட்டு படிகள் ஏற ஆரம்பித்தேன்.கோவில் படிகளில் ஏறும்போது ஆரம்பத்தில் சாதரணமாக இருக்கிற படிகள் கோவிலுக்கு அருகில்  செல்லும்போது செங்குத்தாக இருக்கிறது. ரொம்ப மூச்சு வாங்கி போனேன். 

ஒரு பக்தர் தன் செல்போனில் “முருகனைக் கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு முற்றிய வினை தீருமே என்ற பாடலை கேட்டுக்கொண்டே ஏறிக்கொண்டு இருந்தார். கீழே இருந்து கோவில் வரை 450 படிகள் இருக்காம்...இன்னொரு பக்தர் சொல்லிக்கொண்டே இறங்கினார். கோவில் ரொம்ப டெவலப் ஆகி இருக்கிறது. படிகள், சுற்றிலும் பாதுகாப்பு வேலிகள், யானை வரவை தடுக்க மின்சார வேலி என ரொம்ப முன்னேற்றம். அப்புறம் மேலிருந்து கீழே பார்த்தால் ஏகப்பட்ட புகை போக்கிகள்.எல்லாம் செங்கல் சூளைகளின் கைங்கர்யம் .புதிதாய் முளைத்த செல்போன் டவர் போல.... 


 

 
அப்புறம் இங்கு அனுமன்தீர்த்தம் என்ற சுனை ஒன்று இருக்கிறது.இதில் எப்போதும் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.இதற்கு ஒரு வரலாறு இருக்கிறது.ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையை தூக்கிட்டு இந்த மலை வழியாக வரும் போது, அவருக்கு தாகம் ஏற்பட்டதால் இம்மலையில் உள்ள முருகனை வேண்டியதால் முருகன்  வேலால் ஒரு இடத்தில் குத்த, அந்த இடத்திலிருந்து தண்ணீர் ஆறாக  பெருக்கெடுத்து ஓடியது. அனுமான் தாகம் தீர்ந்தார்.இந்த ஊரின் பெயர் காரணம் என்னவெனில்  "ஹனு' என்றால் ஆஞ்சநேயர். "வாவி' என்றால் ஊற்று,  நீர்நிலை என்று பொருள். அனுமனுக்காக தோன்றிய ஊற்றாதலால் இத்தலம் ஹனுவாவி என்று பெயர் பெற்று தற்போது அனுவாவி ஆகிவிட்டது
முருகன் வள்ளி மற்றும் தெய்வானை உடன் காட்சி அளிக்கிறார்.நவக்கிரக சன்னதி வேறு இருக்கிறது.இந்த பிரகாரம் அருகின் மேல் ஒரு சிவன் கோவில் இருக்கிறது.இன்று தமிழ் புத்தாண்டு தினம் ஆதலால் அன்ன தானம் ஏற்பாடு நடை பெற்று கொண்டு இருந்தது.மேலும் வந்த பக்தர்கள் தாங்கள் கொண்டு வந்த சாப்பாட்டினை ஆங்காங்கே அமர்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்தனர்.
அப்புறம் கோவிலை ஒட்டி அத்திமரங்கள் நிறைய இருக்கின்றன. ஒரு பெரிய ஆலமரம் வேறு தன் விழுதுகளை கீழே நிறைய பரப்பி விட்டு இருக்கிறது.சுனை நீர் கொஞ்சமாய் கீழே வந்து கொண்டு இருக்கிறது.



யானைகள் வரும் அபாயம் இருப்பதால் எச்சரிக்கை போர்டு நம்மை ஆரம்பித்திலேயே எச்சரிக்கிறது.அப்புறம் பக்தர்களின் அறியாமையை விலை பேச கிளி ஜோசியம் பார்ப்பவர் ஏக்கத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார் கீழே இருக்கிற நுழைவு மண்டபத்தில்.

வண்டி நிறைய மாங்காய்களை வைத்து கொண்டு யாராவது வந்து வாங்குங்கப்பா என்று வாடிக்கையாளரை எதிர்நோக்கி ஒரு திடீர் கடையின் ஓனரம்மா....என் புகை படத்திற்கு போஸ் தந்த படி....

அப்புறம் நிறைய எச்சரிக்கை போர்டு வைத்து இருக்கிறார்கள், என்னவெனில் கோவில் சுவற்றை எழுதி அசிங்க படுத்த வேணாம் என்று... ஆனாலும் நம்மாளுங்க அங்க இருக்கிற க்ரில் கம்பியில் உள்ள வேல்களில் பெயரை பொறித்து சுவற்றை அசிங்கம் செய்யாமல் விட்டு இருக்கிறார்கள்.

அப்புறம் முருகனின் முக்கிய விசேச தினங்களில் சிறப்பு வழிபாடு நடக்கிறது
கோவை உக்கடம் டு அனுவாவி கோவில் 11A பேருந்து செல்கிறது. ஆனைகட்டி செல்லும் வழியும் இதன் அருகில் தான் இருக்கிறது.இங்கே இருந்து மருதமலை கோவில் 10 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது.
வெளியூர் பக்தர்கள் கால் டாக்சியை மணிக்கணக்கு (நான்கு மணி நேரம் போதும்) முறையில் அமர்த்தி கொண்டால் இக்கோவில், மருதமலை, பேரூர் பட்டீஸ்வரர் கோவில் என மூன்றையும் தரிசித்து விடலாம்.
நேசங்களுடன்
ஜீவானந்தம்
இன்னும் கொஞ்சம்...

Wednesday, April 11, 2012

கோவை குற்றாலம் - (Kovai Kutralam)


கோவை குற்றாலம்
கோவையின் மேற்கு தொடர்ச்சி மலையில் சிறுவாணி நதியில் இருந்து வனபகுதிக்குள் கொட்டுகிற ஒரு அருவி தான் இந்த கோவை குற்றாலம். அடர்ந்த வனம்..சுற்றிலும் பசுமை...இதுதான் இந்த கோவை குற்றாலம்.

 

 
எனது வீட்டிலிருந்து கிளம்பி கோவை குற்றாலம் அடையும் வரை 40 கிலோ மீட்டர் தூரம். சாய்பாபா கோவில், செல்வபுரம் , பேரூர், மாதம்பட்டி,ஆலாந்துறை, சாடிவயல்,காருண்யா நகர், பின் கோவை குற்றாலம் வனப்பகுதி செக் போஸ்ட் அடைந்தோம்.இங்க இருக்கிற கட்டிடங்கள் அனைத்திலும் காடுகள் போல விலங்குகள் இருக்கிற மாதிரி வரைந்து வைத்து இருக்கின்றனர்.

வனத்துறை செக் போஸ்டில் நுழைவு கட்டணம், கேமரா கட்டணம், பராமரிப்பு கட்டணம் என அனைத்தும் செலுத்தி விட்டு வன பாதைக்குள் நுழைந்தோம்.இங்கே இருந்து சிறுவாணி அணைக்கும் அருவிக்கும் பாதை பிரிகிறது. செக் போஸ்டில் இருந்து 3 கிலோ மீட்டர் உள்ளே சென்ற வுடன் அங்கு காரை நிறுத்தி விட்டு நடக்க தொடங்கினோம்.ஓங்கிஉயர்ந்த மரங்களில் உள்ள சில்வண்டுகளின் ரீங்காரம் நம் காதுகளில் ஒலிக்கிறது.
அதுக்கு முன்னாடி நம்ம பைகளை சோதனை போடறாங்க.சரக்கு பாட்டில் ஏதாவது இருக்குமா அப்படின்னு.உள்ளே மது அருந்த அனுமதி இல்லை.ஆனாலும் நம்மாளுங்க போட்டுகிட்டே வந்து விடுகிறார்கள்.(இதுக்கு முன்னாடி நாங்கலாம் போன போது பீர் பாட்டிலை பேண்ட்க்குள் சொருகி வைத்து கொண்டு உள்ளே நுழைவோம்..அங்கு சலசலக்கிற குளிர்ச்சியான அருவியின் தண்ணீரில் பாட்டிலை மூழ்க வைத்து விட்டு குளிப்போம்.பின்னர் பாட்டில் குளிர்ச்சி அடைந்தவுடன் குடிப்போம்...குளிப்போம். ம்கூம்....அது ஒரு கனா காலம் ..)
அப்புறம் ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்தவுடன் நம்மை அருவி வரவேற்கிறது.உயரமான பாறைகளின் மேலிருந்து தண்ணீர் வழிந்து வருவது கண்ணுக்கு குளிர்ச்சியாய் இருக்கிறது அருவியை ஒட்டி அருகில் இருக்கிற மரங்கள் எல்லாம் பசுமையாக இருக்கு.மேட்டுல இருக்கிற தேக்கு மரங்கள் எல்லாம் சரியான மழை இல்லாததால் ரொம்ப காஞ்சு போய் இருக்கு.நல்ல மழைக்காலம் அன்று சென்று இருந்தால் இன்னும் பசுமையாய் இருக்கும்.
பத்து வருடம் முன்பு செல்லும் போது அதிகம் வசதிகள் இல்லாமல் இருந்தது.இப்போ பெண்கள் உடை மாற்றும் அறை, பாதுகாப்பு வசதிகள், பாலம், படிக்கட்டுகள், சிறுவர்களுக்கு குளம் என நிறைய மாறி விட்டு இருக்கிறது.நாங்கள் மேற்பகுதியில் கொட்டுகிற அருவியில் குளிக்க ஆரம்பித்தோம்..தண்ணீர் வரத்து இப்போ கொஞ்சம் குறைவாக இருந்தாலும் நல்ல குளிர்ச்சியுடன் இருக்கிறது.குடிப்பதற்கு மிகவும் சுவையாகவும் இருக்கிறது.கீழே நிறைய பேர் ஆண்கள் பெண்கள் சகிதமாய் குளித்து கொண்டு இருந்தனர்.அருவி செல்லும் வழி எங்கும் ஆங்காங்கே குளித்து கொண்டு இருந்தனர். 


எப்பவும் போல இங்கு நம்ம முன்னோர்கள் அதிகமா இருக்காங்க..அதுக்கு மேல நம்ம காதல் பறவைகள். தள்ளிக்கிட்டு, கூட்டிகிட்டு, ஓட்டிகிட்டு வந்தது என நிறைய....வழி எங்கும் நிரவி ..பரவி...கிடக்கிறாங்க...சாரி இருக்காங்க..ஒரு ஜோடி குளிச்சிட்டு சாப்பிட்டு விட்டு டிபன் பாக்ஸ் கழுவி கொண்டிருந்ததை யும் பார்த்தேன்..இன்னொரு ஜோடி நாம வர்றதை பார்த்து விட்டு உடனே கை எடுக்கிறதையும் பார்த்தேன்....(.ம்கூம்...காதல் வாழ்க.. நமக்கு இந்த மாதிரி ஒரு கொடுப்பினை இல்லையே.)..
அப்புறம் இங்க 10 மணி முதல் 4 மணி வரைக்கும் தான் குளிக்க அனுமதி.ரொம்ப நேரம் குளித்ததினால் மனமும் உடலும் புத்துணர்ச்சி யடைய வீட்டிற்கு கிளம்பினோம்..அப்புறம் வழியெங்கும் திடீர் கடைகள் நிறைய இருக்கு..மாங்காய், எலந்தவடை, சிப்ஸ், தண்ணீர் பாட்டில், என அனைத்தும் இருக்கு.என்ன விலை தான் அதிகமா சொல்வாங்க..அதனால வரும்போதே எல்லாம் வாங்கி வந்துடுங்க...
ரொம்ப செலவு இல்லாத சுற்றுலா இடம் எதுன்னா இத சொல்லலாம்.பஸ்சில் வந்தா செலவு ரொம்ப கம்மி.செக் போஸ்ட் வரைக்கும் தான் பஸ் வரும் அதனால ரொம்ப தூரம் நடக்கணும்.
காதல் பறவைகளுக்கும் மற்றவங்களுக்கும் ஓகே. எங்காவது ஒதுங்கி கொஞ்சம் பூஸ்ட் அப் பண்ணிக்குவாங்க...கடலை போட்டு கிட்டே அருவி வரைக்கும் வந்து விடுவார்கள்.குழந்தை குட்டிகளுடன் செல்பவர்கள் ரொம்ப தூரம் நடக்க முடியாது.பைக்கிலோ அல்லது காரிலோ செல்லலாம்.
கோவை குற்றாலம் செல்லும் வழியில் தான் காருண்யா பார்க், பூண்டி வெள்ளியங்கிரி மலை, ஈசா தியான லிங்கம் இருக்கிறது.
நுழைவு கட்டணம் – 15, கேமரா – 25, கார் – 15
ஒருநாள் சுற்றுலாவிற்கு ஏத்த இடம்.மனம் லேசாகும் இயற்கையை காணும் பொழுது..
இன்னும் கொஞ்சம்...

Saturday, April 7, 2012

காருண்யா பார்க் - மத ஒற்றுமை


காருண்யா பார்க்
கோவையில் உள்ள புகழ் பெற்ற பல்கலைகழகம் காருண்யா பல்கலைகழகம். இங்க ஒரு பார்க் மற்றும் பெதெஸ்தா சர்வதேச ஜெப மையம் இருக்கிறது.இவை அவங்களோட கிறித்துவ மதத்தை பரப்புவதற்காக கட்டபட்டு இருக்குன்னு நினைக்கிறேன்...


நல்ல பசும்புல்வெளிகள், சிறு மண்டபங்கள், தண்ணீர் உள்ள தடாகை கள் என நல்ல வேலைப்பாட்டுடன் அமைக்க பட்டு இருக்கிறது.இந்த பார்க் உள்ளே சர்ச் செல்லும் வழியில் ஆங்காங்கே வைக்கப் பட்டு இருக்கும் ஸ்பீக்கர்களில் எப்போதும் தேவாலய பாடல்கள் ஒலித்து கொண்டு இருக்கின்றன.
அப்புறம் பார்க்கின் நுழைவாயிலில் சிறுவர்கள் விளையாட கூடிய இடங்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த பார்க் தாண்டி கொஞ்சம் உள்ளே சென்றால் அங்கு இயேசுவின் வாழ்க்கை வரலாறு பல்வேறு வடிவங்களாக அமைக்கப்பட்டு இருக்கிறது.









இயேசு நாதர் துன்புறுத்த படும் காட்சிகள் போன்ற   சிலைகள் நன்றாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.இதை காணுபவர்கள் கிறித்துவ மதத்தை பற்றி அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக இருக்கும் என்று அவர்களின் உருவ சிலைகளை வடிவமைத்து உள்ளனர்.

நல்ல அமைதியான எந்த ஒரு ஆரவாரமும் இன்றி மனம் அமைதி கொள்ளுகிற சூழல் மலைத்தொடரின் அடிவாரத்தில் அமைக்கப்பட்டு இருக்கிற இந்த இடத்தில் கிடைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. அனைத்து மத மக்களும் வந்து இந்த இடத்தினை வந்து கண்டு களிப்பது ஒரு சிறப்பாகும்.
மதங்களை மீறி இங்கு மனங்களுக்கு ஒரு அமைதி ஏற்படுவது என்பது நிச்சயமான உண்மை....
ஞாயிறு அன்று இங்கு நல்ல கூட்டம் காணப்படும்.கிறித்துவர் அல்லாது மற்ற மதத்தினை சேர்ந்த மக்களும் வந்து இளைப்பாறி கொள்வது ஒரு அதிசயமாகும்.
குழந்தைகளுடன் வரும் பெற்றோர்கள் அவர்களை விளையாடவிட்டு அப்படியே கையோடு கொண்டு வந்திருக்கிற கட்டுசோறுகளை சாப்பிட்டு கொண்டே தத்தம் கதைகளை பேசி பொழுது போக்க மிக சிறந்த இடம்.கண்ணுக்கு குளிர்ச்சியான பசுமையினை ரசிக்க இங்கு செல்லலாம்..

நேசங்களுடன்
ஜீவானந்தம்


இன்னும் கொஞ்சம்...