அனுவாவி சுப்பிரமணியர் கோவில்
கோவையில் இருந்து 17 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலையின் மேல் இருக்கிறது. தமிழ் புத்தாண்டு தினமான இன்னிக்கு தமிழ் கடவுளான முருகனை கும்பிடுவோம்னு நினைச்சு இந்த கோவிலுக்கு போனேன்.தடாகம் என்ற ஊரிலிருந்து கோவில் வரும் வரை இரு மருங்கிலும் ஏகப்பட்ட சேம்பர் எனப்படும் செங்கல் சூளைகள்.இந்த சூளைகளினால் இங்குள்ள பகுதி வறண்டு போய் இருக்கிறது.
கோவிலின் அடிவாரம் வந்தபின் வண்டி டோக்கன் போட்டுவிட்டு படிகள் ஏற ஆரம்பித்தேன்.கோவில் படிகளில் ஏறும்போது ஆரம்பத்தில் சாதரணமாக இருக்கிற படிகள் கோவிலுக்கு அருகில் செல்லும்போது செங்குத்தாக இருக்கிறது. ரொம்ப மூச்சு வாங்கி போனேன்.
ஒரு பக்தர் தன் செல்போனில் “முருகனைக் கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு முற்றிய வினை தீருமே” என்ற பாடலை கேட்டுக்கொண்டே ஏறிக்கொண்டு இருந்தார். கீழே இருந்து கோவில் வரை 450 படிகள் இருக்காம்...இன்னொரு பக்தர் சொல்லிக்கொண்டே இறங்கினார். கோவில் ரொம்ப டெவலப் ஆகி இருக்கிறது. படிகள், சுற்றிலும் பாதுகாப்பு வேலிகள், யானை வரவை தடுக்க மின்சார வேலி என ரொம்ப முன்னேற்றம். அப்புறம் மேலிருந்து கீழே பார்த்தால் ஏகப்பட்ட புகை போக்கிகள்.எல்லாம் செங்கல் சூளைகளின் கைங்கர்யம் .புதிதாய் முளைத்த செல்போன் டவர் போல....
அப்புறம் இங்கு அனுமன்தீர்த்தம் என்ற சுனை ஒன்று இருக்கிறது.இதில் எப்போதும் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.இதற்கு ஒரு வரலாறு இருக்கிறது.ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையை தூக்கிட்டு இந்த மலை வழியாக வரும் போது, அவருக்கு தாகம் ஏற்பட்டதால் இம்மலையில் உள்ள முருகனை வேண்டியதால் முருகன் வேலால் ஒரு இடத்தில் குத்த, அந்த இடத்திலிருந்து தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. அனுமான் தாகம் தீர்ந்தார்.இந்த ஊரின் பெயர் காரணம் என்னவெனில் "ஹனு' என்றால் ஆஞ்சநேயர். "வாவி' என்றால் ஊற்று, நீர்நிலை என்று பொருள். அனுமனுக்காக தோன்றிய ஊற்றாதலால் இத்தலம் ஹனுவாவி என்று பெயர் பெற்று தற்போது அனுவாவி ஆகிவிட்டது
முருகன் வள்ளி மற்றும் தெய்வானை உடன் காட்சி அளிக்கிறார்.நவக்கிரக சன்னதி வேறு இருக்கிறது.இந்த பிரகாரம் அருகின் மேல் ஒரு சிவன் கோவில் இருக்கிறது.இன்று தமிழ் புத்தாண்டு தினம் ஆதலால் அன்ன தானம் ஏற்பாடு நடை பெற்று கொண்டு இருந்தது.மேலும் வந்த பக்தர்கள் தாங்கள் கொண்டு வந்த சாப்பாட்டினை ஆங்காங்கே அமர்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்தனர்.
அப்புறம் கோவிலை ஒட்டி அத்திமரங்கள் நிறைய இருக்கின்றன. ஒரு பெரிய ஆலமரம் வேறு தன் விழுதுகளை கீழே நிறைய பரப்பி விட்டு இருக்கிறது.சுனை நீர் கொஞ்சமாய் கீழே வந்து கொண்டு இருக்கிறது.
யானைகள் வரும் அபாயம் இருப்பதால் எச்சரிக்கை போர்டு நம்மை ஆரம்பித்திலேயே எச்சரிக்கிறது.அப்புறம் பக்தர்களின் அறியாமையை விலை பேச கிளி ஜோசியம் பார்ப்பவர் ஏக்கத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார் கீழே இருக்கிற நுழைவு மண்டபத்தில்.
வண்டி நிறைய மாங்காய்களை வைத்து கொண்டு யாராவது வந்து வாங்குங்கப்பா என்று வாடிக்கையாளரை எதிர்நோக்கி ஒரு திடீர் கடையின் ஓனரம்மா....என் புகை படத்திற்கு போஸ் தந்த படி....
அப்புறம் நிறைய எச்சரிக்கை போர்டு வைத்து இருக்கிறார்கள், என்னவெனில் கோவில் சுவற்றை எழுதி அசிங்க படுத்த வேணாம் என்று... ஆனாலும் நம்மாளுங்க அங்க இருக்கிற க்ரில் கம்பியில் உள்ள வேல்களில் பெயரை பொறித்து சுவற்றை அசிங்கம் செய்யாமல் விட்டு இருக்கிறார்கள்.
அப்புறம் முருகனின் முக்கிய விசேச தினங்களில் சிறப்பு வழிபாடு நடக்கிறது
கோவை உக்கடம் டு அனுவாவி கோவில் 11A பேருந்து செல்கிறது. ஆனைகட்டி செல்லும் வழியும் இதன் அருகில் தான் இருக்கிறது.இங்கே இருந்து மருதமலை கோவில் 10 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது.
வெளியூர் பக்தர்கள் கால் டாக்சியை மணிக்கணக்கு (நான்கு மணி நேரம் போதும்) முறையில் அமர்த்தி கொண்டால் இக்கோவில், மருதமலை, பேரூர் பட்டீஸ்வரர் கோவில் என மூன்றையும் தரிசித்து விடலாம்.
நேசங்களுடன்
ஜீவானந்தம்
//இந்த சூளைகளினால் இங்குள்ள பகுதி வறண்டு போய் இருக்கிறது//.
ReplyDeleteமனிதரின் பணம் பண்ணும் ஆசையினால் இப்பகுதி மட்டுமல்ல... எல்லாப் பகுதிகளும் சில வருடங்களில் வறட்சியாகப் போகிறது.
கோவையில் இந்த கோயில் இருப்பதை உங்கள் பதிவு முலம் அறிந்திக்கொண்டேன். நன்றி ஜீவா
ReplyDeleteநண்பரே..!முருகனை தரிசிக்கனும்ன்னா சும்மாவா...இப்ப தரிசிச்சிட்டீங்க..இனிமேல் நல்ல காலம்தான் உங்களுக்கு..
ReplyDeleteநல்ல காலம் வந்தால் ரொம்ப சந்தோசமே ...சிரிப்பு சிங்காரம்
ReplyDeletephotos super.
ReplyDelete