Wednesday, November 29, 2017

கோவை மெஸ் - குற்றாலம் பார்டர் ரஹமத் கடை, ரேஸ்கோர்ஸ், கோவை; COURTALLAM BORDER RAHMATH KADAI, RACE COURSE, COIMBATORE

COURTALLAM BORDER RAHMATH KADAI, RACE COURSE, COIMBATORE  நாட்டுக்கோழி ஸ்பெஷல்              
                இன்று புதிதாய் கோவையில் தன் கிளையை தொடங்கி இருக்கும் குற்றாலம் பார்டர் ரஹமத் கடைக்கு சிறப்பு அழைப்பின் பேரில் சென்றிருந்தேன்.அழைப்பிற்கு காரணம் சென்னையின் பிரபல ஃபுட் பிளாக்கர் நண்பர் ஷப்னம் அவர்கள்.காலை பதினொரு மணி சுமாருக்கு சென்றிருந்தேன்.ஹோட்டலின் இண்டீரியர் அழகுற அமைக்கப்பட்டு மனதுக்கு இதமாய் இருக்கிறது.உள் நுழைந்ததும் குளிரூட்டப்பட்ட டைனிங் ஹால் நம் மனதை ரம்மியமாக்குகிறது.எங்களுக்குண்டான டேபிளில் அமர்ந்தோம்.



            பச்சை பசேலென்ற வாழை இலையை டேபிளில் விரித்துவிட்டு, கொடுத்து விட்டு போன மெனுகார்டில் புரோட்டாவும், பிரியாணியும், நாட்டுக்கோழி வெரைட்டிகளும் வரிசை கட்டி இருக்க, அனைத்தையும் ஒவ்வொன்றாய் பார்த்துக் கொண்டிருந்தோம். நாட்டுக்கோழியில் இத்தனை வகைகளா என ஆச்சர்யப்படுத்தும் வகையில் மெனுக்கள் நிரம்பி வழிகின்றன.நல்ல கார சாரமா சாப்பிடறவங்களுக்கு ஏத்த மெனுக்கள் நிறைய இருக்கின்றன.
யூனிபார்மிட்ட பணியாட்கள் நெல்லைத் தமிழில் என்ன சாப்டீறீங்க என அழகாய் கேட்கும் போதே செங்கோட்டை பார்டர் கடை ஞாபகம் வருகிறது.



                மட்டன் பிரியாணி, சிக்கன் கன் (CHICKEN GUN), சிக்கன் பொடிமாஸ், பிச்சிப்போட்ட நாட்டுக்கோழி என ஆர்டரை அதிகப்படுத்தவும், ஒவ்வொன்றாய் எங்களைத்தேடி வந்தது.முதலில் வந்த மட்டன் பிரியாணியின் மணம் மூக்கைத்துளைக்கிறது.நன்கு நீண்ட பாசுமதி அரிசியின் சுவையில் மசாலாக்கள் ஒன்று சேர்ந்து மட்டனின் சுவையும் சேர்ந்து நம் பசி நரம்புகளை மீட்டி உடனடியாக சுவைக்க செய்கிறது.கொஞ்சம் ஒரு விள்ளலை எடுத்து வாயில் இட்டபோது, நாவின் சுவை நரம்புகள் நாட்டியமாடுகின்றன.மட்டன் துண்டுகள் பஞ்சு போன்று பெரிய பெரிய துண்டுகளாய் இருக்கின்றன.எலும்புகள் இருந்தாலும் கடிப்பதற்கு கொஞ்சம் போராட வேண்டி இருக்கிறது.ஆனாலும் சுவையாக இருக்கிறது.தால்ச்சாவும், தயிர் ரைத்தாவும் நல்ல காம்பினேசனில் இருக்கிறது


அடுத்து வந்தது பிச்சிப்போட்ட கோழி….
              நன்கு வெந்து நல்ல மிளகு காரத்துடன் தோசைக்கல்லில் பிரட்டப்பட்ட நாட்டுக்கோழி சதைகள் தனித்தனியாய் உதிரி உதிரியாய் இருக்கிறது.சிறிது சிறிதாய் எடுத்து சாப்பிடும் போது சுவையின் அளவு அதிகரிக்கிறது.காரம் அளவாக இருக்கிறது.நாட்டுக்கோழியின் எலும்பும் நன்கு வெந்து கடித்து சாப்பிட செம டேஸ்டாக இருக்கிறது.

சிக்கன் கன் (CHICKEN GUN)
           சிக்கன் விங்க்ஸ் தான் துப்பாக்கி வடிவில்.இதுவும் செம டேஸ்ட்.நன்கு வேக வைத்து கல்லில் பிரட்டி மிளகு காரத்துடன் சாப்பிடநல்ல கார சாரமாக இருக்கிறது.கொஞ்சம் கொஞ்சமாய் பிய்த்து சாப்பிடும் போது நாவின் நரம்புகள் நல்ல நாட்டியமாடுகின்றன.


சிக்கன் பொடிமாஸ்
           உதிர்த்த நாட்டுக்கோழியுடன் கொஞ்சம் வெங்காயம், கறிவேப்பிலையுடன் முட்டை சேர்த்து கல்லில் நன்கு பிரட்டி பொரியல் பதத்தில் இருக்கிறது.இதுவும் நல்ல சுவையே.அளவான காரத்துடன் சுவை மிகுந்து இருக்கிறது.

அடுத்து கடையின் மிகப்பிரபலமான புரோட்டா..
           வட்ட வடிவில் அழகாய் வந்து சேர்கிறது பொன்னிறமாய் கல்லில் வேக வைத்த புரோட்டா.கூடவே சால்னாவும்.பரோட்டா மிருதுவாக இருக்கிறது.பரோட்டா இலையில் வைத்தவுடனே அருகிலேயே வாளி நிறைய சால்னாவும் வைக்கப்படுகிறது.நாட்டுக்கோழி சால்னாவில் நன்கு ஊற வைத்து சாப்பிட செம டேஸ்ட் தான்.


             புரோட்டாவிற்கு தனியாய் சிக்கன் 65 கிரேவி என்று ஒன்று இருக்கிறது.கொஞ்சம் காரம், கொஞ்சம் உப்பு என சுருக்கென்று இதுவும் புரோட்டாவுக்கு ஏத்த ஜோடி. எல்லாம் சாப்பிட்டு முடித்தவுடன் இலையில் மிஞ்சியிருப்பவை மென்று தின்ற நாட்டுக்கோழி மற்றும் மட்டன் எலும்புகள்  மட்டுமே.எல்லா டேபிள்களிலும் இதே தான்.அந்தளவுக்கு சுவை ஆக்ரமித்து இருக்கிறது.
                கடைக்கு கூட்டம் அலை மோதுகிறது.டேபிள்கள் அனைத்தும் நிரம்பி இருக்கின்றன. கடை இன்று தான் ஆரம்பித்து இருக்கிறார்கள்.கொங்கு மண்ணிற்கு புதிதான சுவை மிகுந்த வரவு.செங்கோட்டை பார்டர் போய் சாப்பிட்டு விட்டு வரவேண்டும் என்கிற அவசியம் இல்லை இனி.ஒரு எட்டு போனால் இங்கேயே அந்த சுவையுடன் சாப்பிட்டுக் கொள்ளலாம்.போக போக சுவை இன்னும் அதிகமாகும், காரணம் நம்மூரு சிறுவாணி தண்ணீர்.
              விலை எப்பவும் போல கோவைக்கு ஏற்றார் போல இருக்கிறது.புரோட்டா மிகச் சிறியதாக இருக்கிறது, விலை அதிகமானதாக தோன்றுகிறது.நாட்டுக்கோழி வகைகளை சுடச்சுட சுவைக்கனும்னா தாராளமா செங்கோட்டை பார்டர் போறதுக்கு பதிலா இங்கேயே சுவைக்கலாம்…
                சென்னையில் கிட்டத்தட்ட நான்கு கிளைகளை கொண்டுள்ள இந்த நிறுவனம் கோவையிலும் பல்வேறு கிளைகளை நிறுவி கோவை மக்களுக்கு மென்மேலும் ருசியினை அளிக்கட்டும்.கடையின் உரிமையாளர் முகமது ஹசன் அவர்களைச் சந்தித்து உரையாடியதில் மிக்க மகிழ்ச்சி..

நேரம் : காலை - 12 மணி முதல் 4 மணி வரை
         மாலை – 6.30 முதல் இரவு 10 மணி வரை.

நேசங்களுடன்
ஜீவானந்தம்




இன்னும் கொஞ்சம்...

Saturday, November 4, 2017

கோவை மெஸ் - ஹோட்டல் PR, காமக்காபட்டி, கொடைக்கானல் ரோடு, தேனி மாவட்டம்

KOVAI MESS : HOTEL PR, KAMAKKAPATTI, KODAIKANAL ROAD, BATLAKUNDU, THENI DISTRICT
                ஒரு வேலை விஷயமாக வத்தலகுண்டு வரைக்கும் செல்ல வேண்டி இருந்தது.ஞாயிறு மாலை பகார்டி துணையோடு சுற்றிக்கொண்டிருந்ததில் பசி தெரியவில்லை.ஆனாலும் சாப்பிட்டு ஆகவேண்டும் என்று அடம்பிடித்ததால் கூட வந்த நண்பர் ”பக்கத்தில் ஒரு ஹோட்டலில் சாப்பாடு விடிய விடிய கிடைக்கும், அதுமட்டுமல்ல, மட்டன் சுக்கா, குடல், தலைக்கறி ன்னு எல்லாம் கிடைக்கும்” என்று சொன்னதால் அந்த ஹோட்டலுக்கு வண்டியை திருப்பினோம்.
          காமக்காபட்டி என்கிற ஊர் தான்.வத்தலகுண்டு தாண்டி தேனி ரோட்டில் செல்லும் போது வலதுபுறமாக கொடைக்கானல் செல்லும் ரோடு பிரிகிறது.அங்கிருந்து பதினைந்து கிலோ மீட்டர் தொலைவில் இந்த ஹோட்டல் இருக்கிறது.மொத்தம் மூணு ஹோட்டல்கள் இருக்கின்றன.
எந்த ஹோட்டலுக்கு பெயர் இல்லையோ அந்த ஹோட்டலில் தான் விடிய விடிய சாப்பாடு சூடா கிடைக்கும்.மதியம் 12 மணியில் இருந்து இரவு 9 மணி வரை நான்வெஜ் கிடைக்கும்.உங்கள் அதிர்ஷ்டம் இருந்தால் இரவு நேரங்களில் ஒரு வேளை கிடைத்தாலும் கிடைக்கும்.



           ரோட்டோரத்தில் இருக்கிற ஒரு சாதாரண ஹோட்டல் தான்.நான்கைந்து டேபிள்கள் போடப்பட்டு இருக்கின்றன.தோசைக்கல் எப்பவும் சூடாகவே இருக்கிறது.அவ்வப்போது புரோட்டா, ஆம்லெட், ஆஃப்பாயில், மட்டன் ஃப்ரை என ஏதோ ஒன்று வெந்து கொண்டோ இருக்கிறது.போர்டு என்பது இல்லை.ஆனால் மதிய நேரங்களில் கூட்டம் எப்பவும் போல சேர்ந்து விடுகிறதாம்.
        கரும்பச்சை வாழையிலையில் நீர் தெளித்து காத்திருக்கையில் சுடச்சுடச் சாதத்தினை பொலபொலவென்று கொட்டும் போது சாதத்தின் ருசி நம் நாசியை பதம்பார்க்கிறது.என்ன குழம்பு வேண்டும் என்று கேட்கையில், குழம்புகளின் எண்ணிக்கை ஆச்சர்யப்படுத்துகிறது. சாதத்தினை கையைவிட்டு அளாவி தேவையான சாதத்திற்கு மட்டும் குடல் குழம்பு ஊற்றி சாப்பிடும் போது குடல் குழம்பின் மணம் பட்டையை கிளப்புகிறது.ருசி நம்மை இழுக்கிறது.அளவாய் காரம் இருந்தாலும் நன்கு சுறுசுறுவென இருக்கிறது.அடுத்து தலைக்கறிக் குழம்பு இதுவும் அதே மாதிரியே தலைக்கறி சுவையுடன் பட்டையை கிளப்புகிறது.மூன்றாவதாக மட்டன் குழம்பு செம டேஸ்ட்.கெட்டியாக இல்லாமல் சாறு போல் இருக்கிறது.சாப்பிட சாப்பிட சுவை அதிகமாகிக் கொண்டே போகிறது.மட்டனிம் வெரைட்டி என்ன இருக்கிறது என்ன கேட்க, குடல்கறி, தலைக்கறி, மட்டன் சுக்கா, மூளை ஃப்ரை இருக்கிறது என சொல்ல, அனைத்திலும் ஒன்று தரச்சொன்னோம்.



           நன்கு காய்ந்த தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி,வெங்காயம் போட்டு வதக்கி, பின் கறிவேப்பிலை போட்டு, மட்டன் துண்டுகளை போட்டு வதக்கி, கொஞ்சம் மசாலாத்தூள்களை போட்டு, கடைசியாய் மிளகுப் பொடி போட்டு வாழை இலையில் வைத்து தரும்போது அதன் மணம் நம் நாசியை பதம் பார்க்கிறது.சூடான மட்டன் அந்த வாழையிலையோடு சேர்ந்து ஒரு வித சுவையையும் மணத்தினையும் தந்து பசியை அதிகப்படுத்துகிறது.
            இதே போல் தான் குடல்கறி, தலைக்கறி, மூளை ஃப்ரை என அனைத்தும் ஒவ்வொன்றும் தனித்தனி சுவை.வதங்கிய வெங்காயத்தோடு மிளகு காரத்தோடு கறித்துண்டுகளை சாப்பிடும் போது ஏற்படுகிற சுவை நம் நாவை விட்டு போவதில்லை.சாதத்துடன் குழம்பை ஊற்றி சாப்பிட்டுக் கொண்டு அவ்வப்போது குடல் ஃப்ரையோ, மட்டன் துண்டுகளையோ, தலைக்கறியோ எடுத்து கடித்துக்கொள்ளும் போது அதன் சுவை ஆஹா…அற்புதம்.சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே காரத்தின் விளைவால் மூக்கில் ஒழுகுவது கூட அழகுதான்…சாப்பாடு அப்படியே இறங்குகிறது ஒவ்வொரு குழம்புக்கும்..வஞ்சனையில்லாமல் வந்து கொட்டுகிறார்கள் சாதத்தினை...அதுபாட்டுக்கு போகிறது.குடல் குழம்பு அருமையோ அருமை...வயிறு முட்ட சாப்பிட்டதற்கு அப்புறம் தான் போதும் இத்தோடு நிறுத்திக்கலாம் என்று தெரியவருகிறது...
           அனைத்து கறி குழம்புகளையும் டேஸ்ட் பண்ணிவிட்டு சாம்பார் சாப்பிட்டாலும் நன்றாக இருக்கிறது.சாதத்தோடு ரசம் மிக அருமை.டம்ளரில் வாங்கி குடித்தது அதை விட அருமை..
சாப்பிட்ட அனைத்திற்கும் விலை என்பது மிகக்குறைவு தான்.காலையில் டிபன் புரோட்டா கள் கிடைக்கும்.மதியம் 12 மணி முதல் இரவு வரை அனைத்தும் கிடைக்கும்.சாப்பாடு அதிகாலை மூணு மணி, நான்கு மணி வரை கிடைக்கும்.


நேசங்களுடன்
ஜீவானந்தம்
    
இன்னும் கொஞ்சம்...

Monday, October 16, 2017

கோவை மெஸ் - எண்டே கேரளம் ( ENTE KERALAM , RACE COURSE, COIMBATORE), ரேஸ்கோர்ஸ், கோவை

எண்டே கேரளம்
          சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்டு இருக்கும் கேரள பாரம்பரிய உணவுகளுக்கான ஒரு மல்டி குஷன் ரெஸ்டாரண்ட் எண்டே கேரளம்.
சென்னையில் இருந்து வந்திருந்த நண்பருடன் ஒருநாள் நானும் உள்ளே நுழைந்தேன்.கேரளா சாரி உடுத்தி நம்மை வரவேற்ற அம்மணியின் புன்சிரிப்பிலும் இன்முகத்திலும் கவரப்பட்டு உள்ளமர்ந்தோம்.கேரள பாணியில் இண்டீரியர் அமைக்கப்பட்டு உணவகத்தின் சூழல் நம்மை பரவசத்திற்குள்ளாக்குகிறது.மெலிதான இன்னிசையில் ஒலிக்கும் கேரளத்தின்80 மற்றும் 90 களில் வெளிவந்த பிரபல மலையாள பாடல்கள் நம் மனதை லேசாக்குகிறது.
             பார்வையை நாலாபுறமும் ஓடவிட்டு ரசித்துக்கொண்டு இருக்கையில் கேரள நேந்திர சிப்ஸ் சினேக்ஸாய் வந்து சேர, அதை கொறித்துக்கொண்டே மெனு கார்டினை நோக்கினோம்.கேரளத்தின் உணவு வகைகள் ஒவ்வொன்றாய் வரிசை கட்டி இருக்க, எதை ஆர்டர் செய்வது எதை விடுப்பது என்கிற எண்ணம் அதிகமாகிக் கொண்டிருந்தது.
               இதனிடையில் எண்டே கேரளத்தின் செஃப் வந்து சேர அவரது ஆலோசனைப்படி அவர் தயாரித்து கொடுத்த உணவுகள் ஒவ்வொன்றாய் வந்து சேர்ந்தது.வெல்கம் டிரிங் காக நன்னாரி மற்றும் இளநீர் சர்பத் வந்து சேர்ந்தது.ருசித்து முடிக்கையில் ஸ்குயிட் மீன் எனப்படும் கூந்தல் மீன் ப்ரை வந்தது.ரவுண்ட் ரவுண்டாய் அழகாய் பார்க்கவே பசியை தூண்டியது.ருசித்ததில் சுவை அள்ளியது.அடுத்து செம்மீன் பிரை…இது செம டேஸ்ட்.மொறு மொறுவென பார்க்கவே பசியை தூண்டியது.எடுத்து வாயில் இட்டதும் சுவை நரம்புகள் நாட்டியமாடின.
 







 
                 அடுத்து கறிமீன்.வாழையிலையில் மசாலாக்கள் சேர்த்து பொதிக்கப்பட்டு நன்கு வேகவைக்கப் பட்டு ஆவி பறக்க தட்டில் வைக்க, மீனின் சுவை நாலாபக்கமும் பரவியது.கொஞ்சம் எடுத்து வாயில் வைக்க, சுவை நம் நாடி நரம்புகள் ஒவ்வொன்றிலும் பரவியது.அளவான காரத்துடன் செம டேஸ்ட்.இலையின் மணத்துடன் மீனின் வாசமும் சேர்ந்து நம்மை மோன நிலைக்கு தள்ளியது.ரசித்து சுவைத்ததின் முடிவில் மீனின் முள்ளு மட்டுமே மிஞ்சியது.




              அடுத்து கேரள புகழ் புரோட்டா, பீஃப் கறி, அப்பம் மீன் கறி, வெஜிடபிள் குருமா, கேரள மட்டை அரிசி சாதம் என அனைத்தும் சுவையில் பட்டையை கிளப்பியது.கேரள மட்டை அரிசியுடன் மீன் கறி அடி பொலி…அதுவும் அந்த மீன் கறி ஆலப்புழா ஸ்பெசல்…புளிக்கு பதிலாக மாங்காய் அரைத்து சேர்ப்பது.அப்பத்திற்கும், மட்டை அரிசிக்கும் இந்த மீன் கறி செம டேஸ்ட்…சுவையில் நரம்புகள் நர்த்தனம் ஆடுகின்றன…


கடைசியாய் டிசர்ட்….பாலடை பிரதமன், தேங்காய்பால் பாயாசம்…இரண்டும் சுவையில் ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல…
                எண்டே கேரளம் கேரள நாட்டின் பாரம்பரிய உணவுகளை மிகச்சிறப்பாய் ருசிக்க ஏற்ற இடம்.கேரளத்தின் பாரம்பரிய உணவுகளை கேரள சுவையோடு ரசித்து சாப்பிட புதிதாய் ரேஸ்கோர்ஸ் சாலையில் ஆரம்பிக்கப்பட்டு இருக்கும் எண்டே கேரளம் உணவகத்திற்கு தாராளமாய் செல்லலாம்.

            
        விலை எப்பவும் போல கோவை மாநகரத்திற்கு ஏற்றார் போல் இருக்கிறது.கேரள சேட்டன்கள் சேச்சிகள் சனி ஞாயிறுகளில் படையெடுப்பார்கள் என்பது உண்மை..

நேசங்களுடன்
ஜீவானந்தம்
இன்னும் கொஞ்சம்...

Thursday, September 28, 2017

கரம் - 30

உப்புக்கண்டம் எனப்படும் உலர்கறி.

                   கிடா வெட்டும் போது பின்னாட்களில் உபயோகப்படுத்துவதற்காக பச்சைக்கறியில் கொஞ்சம் எடுத்து உப்பு மஞ்சள் தூள் சேர்த்து கயிற்றில் கோர்த்து வெயிலில் காயவைத்து விடுவர்.


                பதினைந்து நாள் வெயிலிலும் நிழலிலும் காய்ந்த பின்னர் எடுத்து பத்திரப்படுத்திக் கொள்வர்.தேவையான நாட்களில் சிறிது எடுத்து வெந்நீரில் அலசி ஊறவைத்து அம்மிக்கல்லால் தட்டி குழம்புக்கு பயன்படுத்துவர்.இதன் குழம்பின் சுவையே தனிச்சுவையாக தெரியும்.இந்த குழம்பில் கத்திரிக்காய் சேர்த்து வைத்தால் இன்னும் டேஸ்ட் மிக நன்றாக இருக்கும்.நன்கு வெந்த இந்த உப்புக்கண்ட கறியும் சுவையில் தனியாய் தெரியும்.பல்லில் அரைபடும் போது கறியின் மணமும் சுவையும் செமயாக இருக்கும்.ஆதிகால மனிதன் வேட்டையாடிய மிருகங்களை உப்பிட்டு பதப்படுத்தி வைப்பான்.அந்த முறைதான் இதுவும்.நகர்ப்புறங்களில் இந்த உப்புக்கண்டம் எங்குமே கிடைக்காது.கிராமங்களில் மட்டும் தான் கிடைக்கும்.அதுவும் விற்பனைக்கு இருக்காது.காது குத்து, கிடா வெட்டு, திருவிழா மற்றும் முக்கிய விசேஷங்களில் வெட்டப்படும் ஆடுகளின் கறியை தேவைக்கேற்ப எடுத்து உப்புக்கண்டம் போட்டு வைப்பர்.ஒரு வருடம் வரைக்கும் கூட தாக்கு பிடிக்கும் இந்த உப்புக்கண்டம்.பின்னாட்களில் என்றாவது ஒருநாள் தேவைக்கேற்ப காரசாரமாக குழம்பு வைத்து உண்பது வழக்கம்.


திருப்பதி லட்டு :
                திருப்பதி என்றாலே பாலாஜிதான் ஞாபகம் வரும் என்று சொல்பவர்கள் கொஞ்சம் குறைவுதான்.முதலில் லட்டும் அடுத்து மொட்டையும் தான் உடனடி ஞாபகம் வரும்.திருப்பதி வெங்கடாசலபதி கோவிலின் பிரசாதம் லட்டு உலகப்பிரசித்தம்.கோவிலில் தரப்படும் லட்டு மிகுந்த சுவை (?) உடையதாக இருக்கிறது.பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டின் எடை 180 கிராம் இருக்கும்.இது புரோக்தம் லட்டு என்று அழைப்பார்கள்.

                 முந்திரி ஏலக்காய் திராட்சை மற்றும் நெய்யின் மணம் தூக்கலாக இருக்கும்.லட்டு கவுண்டரின் வரிசையில் லட்டினை வாங்க வரிசையில் நிற்கும் போது லட்டின் மணம் நம் நாசியெங்கும் பரவி, சுவை நரம்புகளை தட்டி எழுப்பி உமிழ் நீரை சுரக்க ஆரம்பித்து வைத்துவிடும்.கவுண்டரை நெருங்க நெருங்க மணம் நம் சுவாசத்தை ஆட்கொண்டுவிடும்.வாங்கி ஒரு விள்ளல் பிய்த்து வாயில் போட்டால், திருப்பதி வெங்கடாசலபதியை நேரில் கண்ட பரவசம் நம்முள் ஏற்படும்.லட்டின் சுவை நாம் நாவில் நாட்டியமாடும்.எடுத்த கைகளில் மணம் தாண்டவமாடும்.. அந்தளவுக்கு சுவை கொண்டது இந்த திருப்பதி பிரசாதம்.


சிக்கன் வறுவல்:
                        வாணலியில் எண்ணைய் விட்டு பட்டை கிராம்பு சோம்பு போட்டு வெங்காயத்தை வதக்கி, இஞ்சி பூண்டு அரைச்சு போட்டு நன்கு வதக்கி, பின் கழுவின சிக்கனை போட்டு வதக்கி, பின் கொஞ்சம் உப்பு போட்டு சில்லி பிளேக்ஸ் போட்டு கொஞ்ச வேக விட்டு, அப்புறம் கொஞ்சம் தக்காளி, மஞ்சள், மல்லித்தூள். சிக்கன் மசாலாத்தூள்( தேவைப்படின் ) போட்டு நன்கு வேகவிடனும்.தேவையான உப்பை சேர்த்துக்கனும்.எண்ணையில் கறி சுருண்ட பதத்திற்கு வந்த பின் மிளகுத் தூளை சேர்த்து இன்னும் கொஞ்ச நேரம் பிரட்டி, ட்ரையா எடுத்து புதினா கொத்தமல்லி தூவி இறக்கினா சுவையான சிக்கன் வறுவல் ரெடி..தேங்காயை கீத்து கீத்தா மெலிசா அறிஞ்சி போட்டாலும் இன்னும் சுவை தூக்கும்.வெறும் மிளகு மட்டும் போட்டாலும் செம டேஸ்டா இருக்கும்...இந்த மழைக்கு செம காரத்துடன் சிக்கனோட  பகார்டி ஒரு பெக் போட்டா ஆஹா...சொர்க்கம்...பக்கத்துல தான்..


நேசங்களுடன்
ஜீவானந்தம்



இன்னும் கொஞ்சம்...

Monday, September 18, 2017

தகவல் - ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் - Renewal of Driving License

ஓட்டுநர் உரிமம் :
 
ரினீவல், முகவரி மாற்றம், டூப்ளிகேட் பெறுவது, பெயர் மாற்றம் செய்வது என பலதும் ஆன்லைன் மூலமே செய்ய வேண்டும்.
                     Form 9 இல் இவை அனைத்தையும் செய்ய வேண்டும்.ஒவ்வொன்றிற்கும் தேவையான சான்றிதழ்களை ஸ்கேன் செய்து அப்டேட்டிட வேண்டும்.
ரினிவல் செய்வதால் மெடிக்கல் சர்டிபிகேட் வாங்க வேண்டும்.CMV form 1A வில் மருத்துவரின் சான்றிதழும் வேண்டும்.ரூ.20 பாண்ட் பேப்பரில் ஓட்டுநர் உரிமம் தொலைந்ததற்கான காரணம், எந்த வழக்கும் இல்லை எனவும், ஓட்டுநர் உரிமம் திரும்ப கிடைத்தால் அதை தங்களிடம் ஒப்படைக்கிறேன் எனவும் எழுதி கையொப்பமிட வேண்டும்.
                      பெயர் மாற்றத்திற்கு கெஜட் பேப்பரும், முகவரி மாற்றத்திற்கு ஆதார் கார்டும்
டூப்ளிகேட் பெற ஓட்டுநர் உரிமமும்,
தொலைந்து போனதற்கு காவல் துறையின் LDR சர்டிபிகேட்டும் ஸ்கேன் செய்து அப்டேட் பண்ணிவிட்டால், நமக்கு ஒரு அப்ளிகேசன் நம்பர் மற்றும் அனைத்தும் இணைத்ததற்கான சான்று வரும்.நம் மொபைல் எண்ணிற்கும் OTP பாஸ்வேர்டு வரும்.அதை பரிவாகன் வெப்சைட்டில் அப்ளிகேசன் நம்பருடன் அளித்து அதை பிரிண்ட் எடுத்து அனைத்து பார்ம்கள் மற்றும் அப்டேட் செய்த அனைத்து ஒரிஜினல்களின் காப்பியையும் இணைத்து போட்டோ ஒட்டி கையொப்பமிட்டு வட்டார அலுவலகத்தில் கொடுக்க வேண்டும்.
                    இதையெல்லாம் பொறுமையாக நாமே செய்து விடலாம்.ஆனால் விவரம் பத்தாது.ஆர்டிஓ ஆபிஸ் அருகே நிறைய சென்டர்கள் இருக்கின்றன.அவர்களிடம் கொடுத்தால் சர்வீஸ்க்கு ஏற்ப ரூ 300 வரை வாங்குகின்றனர்.
மெடிக்கல் சர்டிபிகேட் கூட அங்கேயே வாங்கி தருகிறார்கள்.
இருபது நிமிடத்தில் முடிந்துவிடும்.அதற்கு அப்புறம் ஆர்டிஓ அலுவலகத்தில் பணம் கட்டுவது, போட்டோ எடுத்து கையில் லைசென்ஸ் வாங்க மிகப் பெரிய நீண்ட க்யூவில் நிற்க வேண்டி வரும்.கட்டுச்சோறு எடுத்துச் செல்வது நலம் பயக்கும்.புரோக்கர் லைசன்ஸ் வாங்கி தருவது எல்லாம் இப்போது கடினமே..கட்டாயம் நாம் செல்லாமல் வேலை நடக்காது..
இணைக்க வேண்டிய ஆவணங்கள்:
காவல் துறை சான்று – LDR
ஓட்டுநர் உரிமம் நகல்
ஆதார் கார்டு
மெடிக்கல் சான்று
ரூ 20. பாண்டு பத்திரத்தில் விவரங்களுடன் கையொப்பம்
இரண்டு போட்டோக்கள்

இதை அனைத்தும் ஆன்லைனிலும் அப்டேட்டிருக்க வேண்டும்.இந்த ஆவணங்களை எடுத்துக்கொண்டு நேரிடையாக வட்டார அலுவலகத்தில் பணம் கட்டி ரசீது வாங்கிக் கொள்ள வேண்டும்.பின் போக்குவரத்து அலுவலரை சந்தித்து கையொப்பம் வாங்கி அங்கேயே இருக்கும் தபால் பிரிவு அலுவலகத்தில் சேர்ப்பித்து விட வேண்டும்.பதினைந்து நாட்கள் கழித்து சென்று புகைப்படம் எடுத்து லைசன்ஸ் பெற்றுக்கொள்ளலாம்.

சும்மா இருந்தா ட்ரை பண்ணிப்பாருங்க..பொழுதும் போகும்…


முந்தைய அனுபவம் லைசன்ஸ் எடுக்க...

நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Friday, September 1, 2017

கோவை மெஸ் - ஹோட்டல் சிந்தூரம், செராய் பீச் ஜங்சன் , கொச்சின், CHERAI BEACH, KOCHI

                  கேரளாவிற்கு எப்பொழுது சென்றாலும் கேரளாவின் பழமை மாறாத ஹோட்டல்களில்  சாப்பிடுவதுதான் பிடிக்கும்.ஆதிகாலத்து கண்ணாடி பொருத்தப்பட்ட மர ஷோகேஸில் வைக்கப்பட்டிருக்கும், புட்டு, இடியாப்பம், ஆப்பம், புரோட்டா, வடை வகைகள் போன்றவை நம்மை ஈர்க்கும்.காலையில் புட்டுக்கு காம்பினேசனாக கடலைக்கறியோ அல்லது நேந்திரன் பழமோ சேர்த்து சாப்பிடுவது கொஞ்சம் பிடிக்கும்.அதைவிட மிகவும் பிடித்தது புரோட்டாவும் பீஃப் கறியும் தான். காலையிலேயே இரண்டும் ரெடியாக இருக்கும்.சுட சுடச் சாப்பிடுவதில் அப்படி ஒரு அலாதியான இன்பம் இருக்கிறது.அதே போல் ஆப்பத்திற்கு அசைவம் என்றால் முட்டைக்கறியோ, பீஃப் கறியோ தான். அப்படித்தான் செராய் பீச்சிலேயும் ஒரு கடையை கண்டுபிடித்தோம்.செராய் பீச் ஒட்டி பல மாடர்ன் ஹோட்டல்கள் இருக்கின்றன.நம்மூர் உணவுகள் இட்லி, தோசை, பிரியாணி, சிக்கன் தந்தூரி, சிக்கன் ஷ்வர்மா போன்ற உணவு வகைகளை சாப்பிட சுத்தமாய் பிடிக்கவில்லை.எந்த ஊருக்கு போனாலும் அங்கு உள்ள மண் மணத்தோடு இருக்கும் உணவுகளை ஒரு கை பிடிப்பது தான் வழக்கமாக இருந்து கொண்டிருக்கிறது.அப்படித்தான் இந்த கேரளா பயணத்தின் போது சாப்பிட்ட உணவும்.


மதியம் என்றால் மட்டை அரிசியுடன் மீன் கறி, பொரிச்ச மீன், புளிசெரி, சம்மங்கி துவையல், ஒரு பொரியல், கூட்டு, அப்பளம் என இப்படித்தான் போகும்.இல்லை எனில் கேரளத்து பிரியாணி.சிக்கன், பீஃப், என விரும்பி சாப்பிட பிடிக்கும்.கப்பா எனப்படும் மரவள்ளி கிழங்கு மசியலுடன் பீஃப் கறி சேர்த்து சாப்பிட பிடிக்கும்.இல்லையேல் கப்பாவுடன் டபுள் ஆம்லேட் சேர்த்து சாப்பிட பிடிக்கும்.சரி..விஷயத்திற்கு வருவோம்.செராய் பீச் ஜங்க்சனில் அமைந்துள்ள ஒரு டிரெடிசனல் ஹோட்டலுக்குள் நுழைந்தோம்.அதே மர ஷோகேஸ்.வரிசையாய் வைக்கப்பட்டிருக்கும் புட்டு, ஆப்பம், புரோட்டா என உணவு வகைகள். காலை மதியம் இரவு என எல்லா வேளைகளிலும் அந்த ஹோட்டலிலேயே முடிந்தது.சுடச்சுட புரோட்டா, பீஃப் கறி, முட்டைகறி, கடலைக்கறி, கப்பா, மீன்கறி, மாந்தல், பொரிச்ச மத்தி, அயிலை என விரும்பிய நேரத்தில் எல்லாம் சாப்பிட்டோம்.போட்டி எனப்படும் குடல் கறி செம டேஸ்ட்.








கிட்டத்தட்ட மூன்று நாட்கள் கடலில் குளிப்பது, குடிப்பது, சாப்பிடுவது என இளைப்பாறிக் கொண்டிருந்தோம்.பீச் சென்றால் அங்கு அம்மணிகளை ரசிப்பது, இங்கே ஹோட்டல் என்றால் உணவுகளை ருசிப்பது என விரும்பியதை செய்து கொண்டிருந்தோம். கேரள உணவும் சரி, மதுவும் சரி எப்பவும் ஏமாற்றியதில்லை அந்தளவுக்கு ஒரிஜினல். கடவுளின் தேசம் சென்று வந்தாலே போதும் மனம் லேசானதாகி விடுகிறது.மனதும் உடலும் இளமையாய் இருக்க இந்த மாதிரி பயணங்கள் எப்பவும் நமக்கு தேவைப்படுகிறது.

நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...