Wednesday, September 11, 2013

சினிமா - அடிமைப்பெண் (1969) - தமிழ் - விமர்சனம் - 40++

                                    சிறுவயதில் எம்ஜிஆர் படங்களைப் பார்க்கின்ற போது ஒரு ஈர்ப்பு எப்பவும் இருக்கும்.வில்லன்கள் யாரையாவது கொடுமைப்படுத்திக் கொண்டிருக்கும் போதோ, இல்லை யாருக்காவது உதவி செய்ய வருகின்ற போதோ, படம் பார்க்கும் நம்மை  எப்படா வருவார், சண்டை போடுவார் என எதிர்பார்க்க வைக்கும், ஏங்க வைக்கும் காட்சிகள் மூலம் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தவர்.  படத்தில் அவர் போடும் கத்தி சண்டைக் காட்சிகளை பார்த்துவிட்டு பள்ளி மைதானத்தில் வாழை மட்டை, தென்னையின் அரக்குமட்டை இவைகளை வைத்து சண்டை போட்டது இன்னும் ஞாபகம் இருக்கிறது.எங்க ஊர்ல ஏதாவது திருவிழான்னா மைதானத்துல திரை கட்டி படம் போடுவாங்க.10 மணிக்கு படம் அப்படின்னாலே 8 மணிக்கே பாயை தூக்கிட்டு போய் திரைக்கு முன்னாடி மண்ணைக் குவிச்சு அதுல பாய் போட்டு இடம் பிடிச்சி உட்கார்ந்து விடுவோம்.

               படம் ஓட்டறவன் 10 மணிக்கு பத்து நிமிசம் முன்னாடிதான் வருவான்.அதுவரைக்கும் நம்மாளுங்க மைக்க பிடிச்சு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நடித்த திரைப்படம் இன்னும் சற்று நேரத்தில் திரையிடப்படும் அப்படின்னு 8 மணியில இருந்தே கூவ ஆரம்பிச்சிடுவாங்க.ஆனாலும் பொட்டி வந்தபாடிருக்காது.அப்புறம் அவன் வந்தப்புறம் திரை கட்டி புரஜெக்டரை கரக்டா வச்சு ரீல் சுத்தி போடும் போது சவுண்ட் இருக்காது.அப்புறம் அதை சரிபண்ணி படம் போட எப்படியும் அரைமணி நேரம் ஆக்கிடுவாங்க.அந்த நேரத்துல திட்டிகிட்டே இருந்தாலும் திரையில எம்ஜிஆரை காண்பித்தவுடன் கோபம்லாம் போய் வர்ற மகிழ்ச்சி இருக்கே..அதை விவரிக்க முடியாது.விசில் பறக்கும், பேப்பர் பறக்கும்.

                             அப்படித்தான் எம்ஜிஆர் படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு திருவிழாவிற்கும் எனக்கு அறிமுகம் ஆனது.அப்புறம் எப்பவாது தூர்தர்சனில் போடும் படங்களை பார்ப்பதோடு முடிந்துவிடும்.எம்ஜியார் அவர்கள் காலமான போது அவரின் படங்களை ஒரு வீட்டில் டெக் போட்டு காண்பித்தனர்.அப்போது தான் மலைக்கள்ளன், மதுரைவீரன் போன்ற படங்களை பார்த்தேன்.
அடிமைப்பெண் படமும் அப்படித்தான்.எங்கள் ஊரில் ஒரு திருவிழாக் காலத்தில் பார்த்த ஞாபகம்.வில்லன் நம்பியார் இல்லாத படம்.சமீபத்தில் என்னுடைய மொபைல் புரஜக்டஃரில் இந்த படத்தினை டவுண்லோடு செய்து வைத்து இருந்தேன்.அதை எனது கிராமத்தில் என் பெற்றோருடன் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.அதனால் தான் இந்த விமர்சனம்
வேங்கைமலை ராணியாக இருக்கும் மங்கம்மா (பண்டரிபாய்) மீது ஆசைப்படும் செங்கோடனின் காலை ராணி வெட்டிவிடுகிறார்.இதை அறிந்த வேங்கைமலை ராஜாவான எம்ஜியார்  மன்னிப்பு கேட்க சொல்லி அவனிடம் வருகிறார்.ஆனால் போர் புரியும் சூழ்நிலை ஏற்படும் போது இருவரும் சண்டை போடலாம் என தீர்மானம் எடுத்து ஒற்றைக்காலுடன் இருக்கும் செங்கோடனுடன் தானும் ஒரு காலை கட்டிக்கொண்டு சண்டையிடுகிறார். இதில் தோற்ற செங்கோடன் வஞ்சகமாக எம்ஜியாரை கொன்று விடுகிறான்.நாட்டையும் கைப்பற்றி விடுகிறான்.ராணி தப்பித்துவிடுகிறாள்.ஆனால் அவர்களது குழந்தை செங்கோடன் கையில் சிக்கி சிறையில் அடைக்கப்படுகிறது.

            செங்கோடன் அங்கிருக்கும் வேங்கை மலை பெண்களை சங்கிலி போட்டு அடிமைப்படுத்தி விடுகிறான்.சிறையில் குழந்தை வெளியுலகம் தெரியாத ஆளாக வளர்ந்து பின் வேங்கைமலை ஆளால் தப்பிக்க வைக்கப்படுகிறான்.ஜீவா எனப்படும் வேங்கைமலை பெண்ணிடம் புது மனிதனாக வளர்கிறார் புது எம்ஜியார்.பேச்சு முதல் காதல் வரை அனைத்து கலைகளையும் கற்று தேர்கிறார்.தன் தாயார் உயிருடன் இருப்பதை அறிந்து எம்ஜியார் அவரை சந்தித்து சபதம் எடுக்கிறார்.அடிமைப்பட்டு கிடக்கும் பெண் சமூகத்தை விடுதலை செய்து விட்டு வந்து சந்திக்கிறேன் என்று...


                           இதற்கிடையில் பவளநாட்டின் தளபதியின் சூழ்ச்சியால் எம்ஜியார் ஜீவா இருவரும் கைதாகின்றனர்.அந்நாட்டின் ராணி பவளவல்லியின் காதலை ஏற்காததால் எம்ஜியார் இருக்கும் இடத்தினை செங்கோடனிடம் சொல்லி விடுகிறாள்.அதே சமயம் மங்கம்மாவினை கண்டுபிடித்து செங்கோடன் கொடுமைப்படுத்தும் போது எம்ஜியார் செங்கோடனை கொன்று தன் தாயாரையும் தன் நாட்டையும் காப்பாற்றி அடிமைப்பெண்களின் விலங்கை உடைப்பது தான் கதை.
                        எம்ஜியார் இருவேடங்களில் நடித்து இருக்கிறார்.கூன் விழுந்தபடி நடித்து பின் ஒரு சண்டைக்காட்சியில் கல்லைத்தூக்கும் போது முதுகு நிமிரும் காட்சியில்  நமக்கே புல்லரிக்கிறது.அதே மாதிரி பவள நாட்டில் கைகளை கட்டி இழுக்கும் காட்சியில் கைதட்டல் காதைப் பிளக்கிறது.கிளைமாக்ஸ் காட்சியில் சிங்கத்துடன் சண்டையிட்டு அதன் வாயை பிளக்கும்போது நாம் வாயைப் பிளக்கிறோம் உற்சாகத்தில்.
செங்கோடன் எம்ஜியாருடன் வலையில் குதித்துக்கொண்டு கீழே இருக்கும் குத்தீட்டிகளில் மோதாமல்  நடக்கும் சண்டைக்காட்சியில் பிரமிக்க வைக்கிறது.அதே மாதிரி கிளைமாக்ஸ் காட்சியும் பவர்புல்..
                            இதில் ஜீவா, பவளவல்லியாக ஜெயலலிதா இருவேடங்களில் நடித்து இருக்கிறார்.கவர்ச்சி வேடங்களில் கலக்கி இருக்கிறார்.படம் முழுக்க கவர்ச்சி உடையிலேயே வலம் வருகிறார்.நடனத்திலும் பின்னி இருக்கிறார்.ஒரு பாடலில் தன் கால்கள் மற்றும் இடையினில் மத்தளத்தினைக் கட்டிக்கொண்டு அடிக்கும் நடனத்தில் இப்போதைய கவர்ச்சி நடிகைகள் எல்லாம் கை கட்டி நிற்க வேண்டும்.
படத்தின் வசனங்களும் அருமை.பவளநாட்டின் மந்திரவாதியாக சோ, வேங்கைமலை வைத்தியராக சந்திரபாபு, தளபதியாக மனோகர் நடித்து இருக்கின்றனர்.

பாடல்கள் அனைத்திலும் சமூகக்கருத்துக்கள் பொதிந்து இருக்கின்றன.

ஏமாற்றாதே....ஏமாறாதே...
தாயில்லாமல் நானில்லை...
அம்மா என்றால் அன்பு....
உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது 
காலத்தை வென்றவன் நீ....காவியமானவன் நீ
ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா 
என ஆறு பாடல்கள்...அனைத்தும் ரசிக்க வைக்கின்றன.


இதில் அம்மா என்றால் அன்பு பாடலை ஜெயலலிதா பாடியிருக்கிறார் முதன் முதலாக.
ஆயிரம் நிலவே வா பாடலை நம்ம எஸ்பிபி அவர்கள் முதன் முதலாக எம்ஜியார்க்கு பாடியிருக்கிறார்.தமிழ்த்திரையுலகிற்கு எஸ்பிபியின் முதல் பாடலாக இதுவே இருக்கிறது.

கே வி மகாதேவனின் இசையில்,  கே.சங்கரின் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமாக படம் இருக்கிறது (ஷங்கர் என்றாலே பிரம்மாண்டம் போல..)
எம்ஜியார் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த படம்.திரையிட்ட அனைத்து இடங்களிலும் நூறு நாட்கள் மேல் ஓடி சாதனை படைத்த படம்.

கண்டிப்பா எங்காவது உங்க ஊர்ல திரையிட்டாங்கன்னா பாருங்க...எம்ஜியார் ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரையும் கவரும் படம்.


நேசங்களுடன்
ஜீவானந்தம்

18 comments:

 1. இப்படத்தை எம்.ஜி.ஆர் சொந்தமாக தயாரித்தார்.
  ராஜஸ்தான் பாலைவனத்தில் படமாக்கப்பட்டது.
  ‘ஆயிரம் நிலவே வா’ பாடல் ஜெய்பூர் அரண்மனையில் படமாக்கினார்கள்.

  ReplyDelete
  Replies
  1. தகவலுக்கு நன்றி...உங்க காலகட்டத்துல வெளியான படம் தானே சார் இது..

   Delete
 2. விமர்சனம் நல்லா இருக்கு, ஆனா 40++ அப்படின்னு போட்டு கோயமுத்தூர் குசும்ப காட்டிட்டியே!! :-)

  ReplyDelete
  Replies
  1. ஹிஹிஹி..18++ போட்டா அடிக்க வந்துடுவாங்க...அதான்...

   Delete
 3. இந்தப் படத்தில் எம்.ஜி.ஆர். கூன் முதுகிட்டு நடந்துவருவார், கடைசி காட்சியில் சிங்கத்துடன் சண்டை போடுவார்... இவ்வளவே எனக்கு நினைவில் இருப்பவை. விமர்சனத்துக்கு பாராட்டுக்கள்....

  ReplyDelete
  Replies
  1. நல்லா ஞாபகம் வச்சி இருக்கீங்களே...

   Delete
 4. தலைவருக்கு.... புதிய ரசிகருக்கு வாழ்த்துக்கள்... அப்படியே உங்க ஊர் சகோதரிகளை பார்க்கச் சொல்லுங்கள்... புரிதலுக்கு நன்றி...

  சேவல் கூட தூங்கும் உலகை கூவி எழுப்பும் குரலாலே...
  ஏவல் செய்யும் காவல் காக்கும் -
  நாய்களும் தங்கள் குணத்தாலே...
  இரை எடுத்தாலும் இல்லை என்றாலும் -
  உறவை வளர்க்கும் காக்கைகளே...
  இரை எடுத்தாலும் இல்லை என்றாலும் -
  உறவை வளர்க்கும் காக்கைகளே...
  இனத்தை இனமே பகைப்பது எல்லாம்
  மனிதன் வகுத்த வாழ்க்கையிலே...

  உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது...
  உன் செயலைப் பார்த்து உன் நிழலும் வெறுக்கிறது...
  உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது..

  பாடும் பறவை.. பாயும் மிருகம்...
  பாடும் பறவை.. பாயும் மிருகம்...
  இவைகளுகெல்லாம் பகுத்தறிவில்லை...
  ஆனால் அவைகளுக்குள்ளே சூழ்ச்சிகள் இல்லை...

  ReplyDelete
  Replies
  1. தி.த...வணக்கம்..பாட்டாவே சொல்லிடீங்க...

   Delete
 5. கோவை பதிவர்கள் யாரும் திரட்டியில் இணைக்க மாட்டீர்களா...? நீங்கள் மூன்றாவது... தேவையில்லை என்றால் எடுத்து விடவும்... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. சார் எல்லாம் செட்யூல்டு போட்டு விடறது அதான்..இனி இணைத்துவிடுகிறேன்,

   Delete
 6. போன வாரம் தான் அடிமை பெண் படத்தை யூ டுப்ல பார்த்தேன் ஜீவா. இது வரைக்கும் எந்த டிவியிலும் போடாத படம் இது தான்னு நினைக்கிறன்.

  ReplyDelete
  Replies
  1. ஆமா ராஜ்...டீவியில் யாரும் ஒளிபரப்பல..

   Delete
 7. எனக்கு எம்ஜிஆரையும் பிடிக்காது. ஜெயலலிதாவையும் பிடிக்காது. அதனால, நான் எஸ்கேப்!!

  ReplyDelete
  Replies
  1. அப்போ ஜெமினியை பிடிக்குமா../

   Delete
 8. I like MGR , but i don't find this film that much interesting, feel bored when watching it.

  ReplyDelete
  Replies
  1. எம்ஜியாரை எல்லாருக்கும் பிடிக்கும்.ஆனா ஒவ்வொரு படங்கள் நல்லாவே இருக்காது.ஆனால் அடிமைப்பெண், குடியிருந்த கோயில், எங்க வீட்டுப்பிள்ளை, நல்ல நேரம், அன்பே வா என ஒரு சில படங்கள் எப்ப போட்டாலும் பார்க்க ரசிக்கும்.

   Delete
 9. நல்ல கருத்துகள், வீரம், நேர்மை,தாயன்பு இவைகளைப் படங்கள் மூலம் சொல்லிப் பலர் மனதைப் பண் படுத்தியவர் எம்ஜி ஆர்.
  படங்களால் மனிதத்தைக் கேவலப்படுத்தும் படங்களைப் பார்ப்பதைக் காட்டிலும் பழைய படங்கள் மேல்.

  ReplyDelete
  Replies
  1. ஆம்..நல்ல கருத்துக்களை சொல்லியே வந்திருக்கிறார்.

   Delete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....