Wednesday, July 2, 2014

கோவையின் பிரபல இடங்கள் - சுற்றுலா

          கோவை தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரம்.தொழில்வளர்ச்சி அடைந்த நகரம்.(இப்போ அப்படியான்னு தெரியல..ஏகப்பட்ட பஞ்சாலை மில்கள் மூடப்பட்டு அபார்ட்மெண்ட்களாகிவிட்டன.மோட்டார் தொழில்களும் நசிவடைந்து போய்விட்டிருக்கின்றன.கோவை முழுக்க கான்கிரீட் காடுகள் உருவாகிக்கொண்டிருக்கின்றன பசுமை மறந்து.)
கோவை என்றாலே சிறுவாணி தண்ணீரும் சில்லென்ற தென்றலும் தான் ஞாபகத்திற்கு வரும்.மேற்குத்தொடர்ச்சி மலைகளினால் வருகின்ற மிதமான குளிர்ச்சி எப்பவும் கோவையில் குடிகொண்டிருக்கும். கோவில்களும், மலைகளும், அணைகளும் மற்றும் பூங்காக்களும் நிறைந்த ஊராகும்.ஒரு நாள் சுற்றுலா போக ஏற்ற இடங்கள் நிறைய இருக்கின்றன.அப்படிப்பட்ட கோவையில் இருக்கிற பிரபல இடங்களைப்பார்ப்போம்.
கோவில்கள்:
மருதமலை முருகன் கோவில்:
       கோவையின் மிக அருகில் இருக்கின்ற ஒரு பிரபல மலைக்கோவில் மருதமலை.முருகனின் ஏழாவது படைவீடாகும். மேற்குத்தொடர்ச்சி மலையின் மேல் அமைந்துள்ள இந்தக்கோவிலில் முருகன் குடிகொண்டுள்ளார்.உயரம் குறைவான மலைதான்.ஆனாலும் வளைந்து வளைந்து செல்லும் மலைப்பாதை...மலை மேலிருந்து கோவையின் அழகை ரசிக்கலாம். அடிவாரம் வரை மாநகரப்பேருந்துகள் செல்லும். கோவிலுக்கு செல்ல தனிபேருந்துகள் இயக்கப்படுகின்றன. முருகனின் விசேச தினங்களில் கூட்டம் அள்ளும்.

நாம எழுதினது - மருதமலை
அனுவாவி சுப்ரமணியர் கோவில்:
       இந்தக்கோவிலும் மேற்குத்தொடர்ச்சி மலையில் தான் அமைந்துள்ளது.அனுமனின் தாகம் தீர்க்க வாவி( ஊற்று) ஒன்றினை முருகப்பெருமான் ஏற்படுத்திய இடம் அனுவாவி என்றழைக்கப்படுகிறது
ஆனைகட்டி செல்லும் வழியில் கணுவாய் தாண்டி இருக்கிறது இந்தக்கோவில்.மலைப்பாதைகள் இல்லை.செங்குத்தாக செல்லும் மலைப்படிகளில் தான் செல்லவேண்டும்.அடிவாரம் வரை பேருந்துகள் செல்லும். இந்த கோவிலில் இருந்து சுற்றிலும் இயற்கை சூழ்ந்த மேற்குத்தொடர்ச்சி மலைகளைக்காணலாம்.
பேரூர் பட்டீஸ்வரர் கோவில்:
       மேலைச்சிதம்பரம் என்றழைக்கப்படும் ஒரு சிவஸ்தலம்.படைப்புத்தொழில் வேண்டி புற்று வடிவில் இருந்த சிவனை நோக்கி கடும் தவம் புரிந்த காமதேனுவுக்கு, தன் கன்றின் குளம்படி பட்டு புற்று உடைந்ததால், காட்சியளித்த சிவன் தோன்றிய இடம்.தன் தலையில் குளம்படி தழும்பைக்கொண்டிருக்கும் சிவலிங்கத்தினை காணலாம். ஆனி மாதத்தில் கிருத்திகை நாள் அன்று நடைபெறும் நாற்று நடவு உற்சவம்பிரசித்தி பெற்றது.
தண்டு மாரியம்மன் கோவில்:
           கோவை மாநகரில் அவினாசி நெடுஞ்சாலையில் வடக்கு நோக்கி இந்த மாரியம்மன் திருக்கோவில் இருக்கிறது.மிகவும் பழம்பெருமை பெற்ற கோவிலாக 200 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கிறது.கோவையின் கோட்டையை முற்றுகையிட்ட ஆங்கிலேய படைகளை எதிர்த்து திப்புசுல்தான் போரிட,  போரில் உதவி செய்த மைசூர் படையில் லிங்க உருவம் ஒன்று போரிட்டது.போர் முடிந்தபின் மைசூர் செல்லாமல் இந்த லிங்க உருவம் மாரியம்மனாக எழுந்தருளியுள்ளது.படைக்கலன்களுக்கு தண்டு என்று பொருள் அதனாலேயே தண்டுமாரியம்மன் எனும் பெயர் நிலைபெயராகிவிட்டது.இந்தக்கோவிலும் கோவையின் பிரபல கோவில்களில் ஒன்றாகும்.
கோனியம்மன் கோவில்:
        கோவையின் காவல் தெய்வம் என்றழைக்கப்படுகிற இந்த கோனியம்மன் கோவையை ஆண்ட மன்னன் கோவனின் குலதெய்வம் ஆகும்.இக்கோவில்  நிறுவப்பட்டு கிட்டதட்ட 900 ஆண்டுக்களுக்கும் மேலாக ஆகிவிட்டது.கோவை நகரின் மிகச்சிறந்த விழா எதுவென்றால் அது கோனியம்மன் கோவில் திருவிழாதான். கோனியம்மன் வடக்கு நோக்கி, எட்டு கரங்களில் சூலம், உடுக்கை, வாள், சங்கம், கபாலம், அக்னி, சக்கரம், மணி ஏந்தி காட்சியளிக்கிறாள். சிவனைப் போல, இடது காதில் தோடும், வலது காதில் குண்டலமும் அணிந்திருப்பது அபூர்வமான அமைப்பு.இக்கோவில் நகரத்தின் முக்கிய இடத்தில் அமைந்திருக்கிறது.

தொடரும்.......

நேசங்களுடன்
ஜீவானந்தம்


1 comment:

  1. தண்டு மாரியம்மன் கோயிலும், அனுவாவி சுப்ரமணியர் கோயிலும் நான் பார்க்க வேண்டியவை. சந்தர்ப்பத்துக்கு வெயிட்டிங். (சந்தடி சாக்குல நாம எழுதினதுன்னு சுயவிளம்பரம் செய்துக்கற சாமர்த்தியத்துக்கு ஒரு சபாஷ்.)

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....