Showing posts with label திருப்பத்தூர். Show all posts
Showing posts with label திருப்பத்தூர். Show all posts

Saturday, August 22, 2015

கோவை மெஸ் – குலோப் ஜாமூன், நக்படியான் பாவாஜான் ஸ்வீட்ஸ், ஜின்னா ரோடு, திருப்பத்தூர்

               சும்மா இருக்கும் போது திருப்பத்தூர்ல இருக்கிற சந்து பொந்தெல்லாம் வண்டியை எடுத்துக்கொண்டு சுத்துவது வாடிக்கை. அப்படித்தான் ஒரு சில வாரங்களுக்கு முன் இந்த ஜின்னா ரோடு வழியாக சென்றபோது ஒரு கடையில் செம கூட்டம்.டாஸ்மாக்ல எப்படி நம்மாளுங்க சுத்தி நின்னு பரபரப்பா இருப்பாங்களோ, அதுமாதிரி இந்தக்கடையிலும் அவ்ளோ கூட்டம்.எட்டிப்பார்த்தா ஸ்வீட் கடை...ஹோட்டலைப்பத்தி தானே எழுதறோம், இந்தக்கடையை பத்தி எழுதனுமான்னு யோசிச்சிட்டு போயிட்டேன்.
                     மீண்டும் இரண்டு நாளைக்கு முன்னாடி அந்தப்பக்கம் போனபோது அதே மாதிரி கூட்டம்.ஓகே..ட்ரை பண்ணிட வேண்டியது தான் என்று வண்டியை ஓரங்கட்டி கூட்டத்தோடு கூட்டமா ஐக்கியமாகிட்டேன்.கடையோ ஒரு பழங்கால தோற்றத்தில் உட்புறமும் வெளிப்புறமும் இருக்க, கடையினுள் உள்ளே எந்தவித அலங்கார ஷோகேஸ்களும் இல்லாமல் லட்டு, மிக்சர், ஜாமுன், பால்கோவா, அல்வா என அனைத்தும் நம் முன்னாடியே இருக்கிறது. ஒவ்வொருத்தரும் பூந்தி கால் கிலோ, மிக்சர் கால் கிலோ, ஜாமுன் என்று அவரவர் இஷ்டத்துக்கு வாங்கிக் கொண்டிருக்க, ஒரு சிலபேர் ஜாமூன் வாங்கி ருசித்துக் கொண்டிருந்தனர்.நானும் ஜாமுன் என கேட்க, ஒரு பேப்பர் கப்பில் ஜீரா ஊத்தி ஒரு நீள் வடிவ உருண்டையை போட்டார் கடைக்கார சிப்பந்தி.. 
                      


           அந்தப் பேப்பர் கப் அதிசயத்திலும் அதிசயம்.தள்ளுவண்டியில் கடலையோ சுண்டலோ வாங்கும் போது கூம்பு வடிவில் பேப்பரை சுத்தி தருவாங்களே அந்த மாதிரி ஒரு தடித்த பேப்பரை சுத்தி அதில் ஊற்றி தருகின்றனர்.ஜீரா ஒழுக வில்லை.நம் வாயில் இருந்து எச்சில் ஊறுகிறது அதைப்பார்த்தவுடன்.
                     ஒரு சின்ன வில்லையை பிய்த்து வாயில் போட்டால் ஆஹா....அபார ருசி...ஜீராவில் நன்கு ஊறி இருக்கிறது ஜாமுன்.நல்ல இதமாய் பதமாய் வாய்க்கு ருசியாக இருக்கிறது.கொஞ்சம் பிய்த்து கொஞ்சம் ஜீராவில் நனைத்தும் சாப்பிட இன்னும் செம டேஸ்ட்..அந்த ஜீரா வேறு நல்ல சுவை.ஜாமுன் காலியாகிவிட அதை அப்படியே குடிக்க, ஆஹா சூப்பரோ சூப்பர்.....

              லட்டு .....நெய் சேர்த்து மிக டேஸ்ட்.கொஞ்சம் கூட கடிது இல்லாமல் மிக மென்மையாய் இறங்குகிறது லட்டு.ஜாமுன் சாப்பிட்டுவிட்டு கொஞ்சம் மிக்சர் சாப்பிட்டால் அந்த காம்பினேசன் செம....
                  ஒரு லட்டும் ஒரு ஜாமூன் சேர்த்து சாப்பிட்டு விட்டு எவ்வளவு பில் என்று கேட்டு இருவது ரூபாய் கொடுக்க, பத்து ரூபாய் மீதி தந்துவிட்டு, சில்லரை இல்லை, அதற்கு மிக்சர் தந்து விடுகிறேன் என ஐம்பது கிராமுக்கும் அதிகமாக மிக்சர் தந்து சரிக்கட்ட, ஆச்சர்யத்துடன், எவ்ளோங்க என்று கேட்க, எட்டு ரூபாய் தான் என்றார். ஜாமூன் வெறும் மூன்று ரூபாய் தான்.நல்ல சுவையாக இருக்கிறது ஆனால் விலை மிகக்குறைவாக இருக்கிறது. அந்தக்கடையின் மிக முக்கியமான பிரபலமான சுவையான இனிப்பு எதுவென்றால் பூந்திதானாம்.அடுத்தமுறை கண்டிப்பாக அதுதான்....
இந்தக்கடைக்கு ஒரு போர்டு கூட இல்லை.ஒரே ஒரு சின்ன போர்டு அதுவும் பூந்தி 60 ரூபாய் என்கிற விலைப்பட்டியலில் சின்ன அளவில் பெயர் மட்டுமே...திருப்பத்தூரில் நக்படியான் ஸ்வீட்ஸ் என்றால் மிகப்பிரபலம் என்பது உண்மைதான்.....ஒரு மாலை நேரம் அந்தக்கடைக்கு போய் பாருங்கள்..இன்னும் கூட்டம் அள்ளும்...

நேசங்களுடன்

ஜீவானந்தம்
இன்னும் கொஞ்சம்...

Tuesday, August 11, 2015

கோவை மெஸ் - நியூ ஷோபா ஹோட்டல், மடவாளம், திருப்பத்தூர்

                            திருப்பத்தூரில் இருந்து ஆலங்காயம் என்கிற ஊருக்கு செல்கின்ற வழியில் ஆறு கிலோமீட்டர் தொலைவில் மடவாளம் என்கிற ஊர் இருக்கிறது.ஒரு வேலை விசயமாக அந்த ஊர் வழியே சென்ற போது கூட வந்த நண்பர் இந்த ஊரில் ஒரு ஹோட்டல் இருக்கிறது.நான்வெஜ் ரொம்ப நல்லாயிருக்கும் என்றும், திருப்பத்தூரில் இருந்து வந்து  இங்கு சாப்பிட்டுவிட்டு செல்வோம் என சொல்லவும், அடுத்த நிமிடத்தில் அந்த ஹோட்டலில் ஆஜரானோம்.
                      ரோட்டு ஓரத்திலேயே இருக்கிறது இந்த நியூ ஷோபா ஹோட்டல்.சின்ன கடைதான்.பத்துக்கு பத்து ரூம் அளவு கொண்ட இரு கடைகள் ஒன்று சேர்ந்து ஒரு ஹோட்டலாக இருக்கிறது.ஒரு ரூம் சமையல் அறையாக இருக்கிறது.ஹோட்டல் வெளியே கூண்டுக்குள் அடைபட்ட காடைகள், என்னிக்கு ரோஸ்ட் ஆவோம் என்று தெரியாமலே கீச் கீச் என கத்திக்கொண்டிருந்தன.ஹோட்டலுக்குள்ளே நுழையும் முன்பே வரவேற்கிறது, அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த மட்டன் குழம்பின் வாசனையும்,  அடுத்து அந்த ஹோட்டல் உரிமையாளரும்....கடைக்கு வெளியே தயாரான குஸ்கா பெரிய பாத்திரத்தில் இருக்கிறது.அதன் வாசம் நம்மை உள்ளிழுக்கிறது.... 

                      உள்ளே ஒரு செல்ப் இருக்கிறது..அதில் ஏகப்பட்ட குண்டாக்கள்...எல்லாம் இலை போட்டு மூடப்பட்டு இருக்க அதை ஒரு பார்வை பார்த்துவிட்டு டேபிளில் அமர்ந்தவுடன், கடைக்காரர் வாழையிலையை போட்டுவிட்டு ஒப்பிக்க ஆரம்பித்தார்......
          சிக்கன் பிரியாணி, குஸ்கா, சிக்கன் வருவல், மட்டன் வருவல், காடை ரோஸ்ட், இரத்தப்பொரியல், தலைக்கறி, குடல்கறி, ஈரல் ஃப்ரை, மீன் ஃப்ரை, முட்டைக்குழம்பு என வரிசையாய் சொல்ல, அவரது வாயையே பார்த்துக்கொண்டிருந்தோம்... என்னது......இந்த ஊரில் இருக்கிற இந்த சின்னக்கடையில் இவ்ளோ வெரைட்டியா ...என ஆச்சர்யப்பட்டபடியே, குஸ்காவும், சைடுக்கு மீனும், குடல் கறியும் சொன்னோம்...நாமும் எவ்வளவு அயிட்டம் தான் டெய்லியும் சாப்பிடுவது....(டேஸ்ட்க்காக எல்லாவற்றிலும் கொஞ்சம் கொஞ்சம் சாப்பிடத்தான் முடிகிறது...)
           
            நண்பர் சாதம் வாங்கிக்கொள்ள, நான் குஸ்கா வாங்கிக்கொண்டு குடல்ஃப்ரையை டேஸ்ட் பண்ண ஆரம்பித்தேன்...குடல் ஃப்ரை நன்றாகவே இருக்கிறது.சாதத்தோடு குழம்பினை பிசைந்து சாப்பிட செம டேஸ்டாக இருக்கிறது.குஸ்காவும் பிரியாணி மணத்துடன், நன்கு சுவையாக இருக்கிறது.அரிசியும் நன்கு வெந்து பொலபொலவென்று பிரியாணி போல் உதிரி உதிரியாக இருக்கிறது.தனியாய் வேகவைத்த சிக்கன் அல்லது மட்டன் இதனோடு சேர்த்தால் சுவைமிகுந்த சிக்கன்/மட்டன் பிரியாணி ரெடி....
ரத்தப்பொரியல் சின்ன வெங்காயம் சேர்த்து மிக சுவையாக இருந்தது.
                   குஸ்காவுக்கு தொட்டுக்கொள்ள அவ்வப்பொழுது சிக்கன் குழம்பும், மட்டன் குழம்பும் வாங்கி சாப்பிட ஆரம்பித்தேன்..இரண்டும் நல்ல சுவை...குஸ்காவுக்கு செம காம்பினேசன்...
அப்புறம் மீன்...பொரித்தது....சுவை எப்பவும் போல ஓகே...
சாப்பிட்டு முடித்து வெளிவர, இன்னும் நான்கு பேர் உள்ளே நுழைந்தனர்....
விலை மிகக்குறைவாகத்தான் இருக்கிறது..
           ஒரு சின்ன ஊர் தான்..அதில் இவ்வளவு வெரைட்டி இருப்பது ஆச்சர்யம்தான்...மிலிட்டரி ஹோட்டல் போல அவ்வளவு மெனுக்கள்.....கிட்டத்தட்ட பலவருடங்களாக நல்ல சுவையுடன் இந்த ஹோட்டலை நடத்தி வருகின்றனர்......உண்ட திருப்தியுடன் அங்கிருந்து கிளம்பினோம்.... அந்தப்பக்கம் போனிங்கன்னா ஒரு வாய் சாப்பிட்டு விட்டு வாங்க...

ஆட்டுக்கால் பாயா சாப்பிடனுமா...திருப்பத்தூரில்.....


நேசங்களுடன்
ஜீவானந்தம்





இன்னும் கொஞ்சம்...

Sunday, April 19, 2015

கோவை மெஸ் – ஆட்டுக்கால் பாயா, திருப்பத்தூர், வேலூர் மாவட்டம்

              திருப்பத்தூரில் ஒரு ஹோட்டலில் மட்டும் ஆட்டுக்கால் பாயா கிடைக்கும், அதுவும் ஞாயிறு மட்டும் தான், அதுவும் காலைல 7.30ல இருந்து 9.30 மணி வரைதான்…மொத்தமா ஒரு ரெண்டு மணி நேரம் தான்…இல்லேனா தீர்ந்துடும்  என சொல்ல அந்த காலை ஞாயிறுக்காக காத்திருந்த நாளும் இன்று வந்தது.
                        என் நண்பர் இங்கு வக்கீலாக இருப்பதால் அவர் தான் திருப்பத்தூரில் எல்லா இடங்களுக்கும் அழைத்துச் செல்வார்.ஒரு நாள் என் விருப்பம் அறிந்து சொன்னது தான் மேலே இருக்கிற வரிகள். மேலும் அவர் காலேஜ் படித்தபோது அதிகாலை 5 மணிக்கே ஹாஸ்டலில் இருந்து கும்பலாய் வந்து விடுவார்களாம்.பக்கத்திலுள்ள வீட்டினைத் தட்டி பல் விளக்க பேஸ்ட் கேட்டு எழுப்புவார்களாம்..காலாங்காத்தாலேயே கூட்டமும் அள்ள ஆரம்பித்துவிடுமாம்…..ஆட்டுக்கால் பாயா அம்புட்டு டேஸ்ட் ……என அப்படி அவர் சொல்ல சொல்ல எனக்கும் எச்சில் ஊறியது…சும்மா இருக்க முடியுமா...... ஞாயிறு காலை எப்பவும் போல விடிய, முதல் போன் அவருக்குத்தான்….இன்னிக்கு சண்டே….போலாம் வாங்க…என சொல்ல, 7.30 மணிக்குத்தான்பா….அதுக்குள்ள கூப்பிட்டுட்ட என்றார் வக்கீல்..இல்ல…சும்மா ரிமைண்ட் பண்ணேன்..என சொல்லிவிட்டு ஆயத்தமானேன்..

                7 மணி வாக்கில் இருவரும் டூவீலரில் திருப்பத்தூர் எனும் சிறு நகரத்திற்குள் பயணமானோம்.ஞாயிற்றுக்கிழமை ஆதலால் ஊரே கொஞ்சம் வெறிச்சோடிக் கிடக்க, பேக்கரி கடைகளில் மட்டும் கொஞ்சம் கூட்டமிருந்தது. உடல் எடையைக் குறைக்கவும், சர்க்கரையின் அளவை குறைக்கவும் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்த மனிதர்களை கண்டதும் இன்னும் பத்து வருசத்துல நாமும் இப்படித்தான் நடை போட வேண்டி இருக்குமோ என எண்ணிக்கொண்டே அவர்களை கடந்து சென்றோம்.
                      திருப்பத்தூரில் கச்சேரி வீதி என்ற தெருவுக்குள் நுழைந்து ராஜன் சாலையில் சென்றபோது தொட்டி எனப்படும் ஆடு வெட்டும் இடம் இருந்தது.ஞாயிறு மதிய வேளையை மட்டன் மணத்தினால் வீட்டினையும் மட்டனால் வயிற்றையும்  நிறைக்க வேண்டும் என்கிற காரணத்தினால் அங்கு மட்டும் கொஞ்சம் கூட்டம் காத்துக் கொண்டிருந்தது காலிப்பைகளை கைகளில் ஏந்தியபடி…
                              ராஜன் சாலையின் இருபுறமும் இன்னமும் கடைகள் திறக்கப்படவே இல்லை..ஒருவேளை ஞாயிறு தினமாக கூட இருக்கலாம்.ராஜன் சாலையில் இருந்து இடது பக்கம் ஒரு சின்ன சந்தினுள் நுழைந்தோம்…சிறு சிறு கடைகள் மிக அதிகமாகவும் மிக நெருக்கமாகவும் இருந்தது..அந்த சின்ன சந்தின் பெயர் குப்பையர் வீதி.தங்க வெள்ளி பட்டறைகள் அதிகம் இருக்க கூடிய ஏரியாவில் ஒரு கடை முன்பாக செம கூட்டம்….எல்லா கடைகளும் பூட்டி இருக்க, இந்த ஒரு கடையில் தான் இவ்வளவு கூட்டம்.கூட்டம் என்றால் ஒரு பத்து பதினைந்து பேர்.வருவதும் போவதும் என நிறைய பேர்.கடைக்கு பெயரில்லை.இருட்டடைந்து இருக்கிற மாதிரி தோற்றம்.வண்டியை ஓரங்கட்டிவிட்டு உள்ளே நுழைய ஆரம்பித்தோம்.

                          கடைக்கு போர்டு இல்லை.கடை பெரிதாகவும் இல்லை.ஆனால் நுழையக்கூட இடமின்றி  ஆட்களால் நிரம்பி இருந்தது ஹோட்டல்…
                மாஸ்டர் பரபரப்பாக தோசைக்கல்லில் புரோட்டா போட்டுக்கொண்டிருக்க, அவர் அருகில் ஒருவர் புரோட்டா மாவை விசிறிக் கொண்டிருந்தார்.கடைக்குள் நுழையும் முன்பே இடது புறம் ஒரு பிரியாணி குண்டா…அதில் மட்டன் மணம் முழுவதும் வெளியேறி அந்த இடத்தையே மணக்கச் செய்ய, ஒருவர் கிளறிக்கொண்டும் உள்ளே இருப்பவர்களுக்கு பிரியாணியை பிளேட்டில் போட்டும் அனுப்பிக் கொண்டிருந்தார்.கூடவே ஒருவர் பார்சலுக்கு……..உள்ளே இருந்த அத்தனை டேபிளும் ஆட்களால் நிரம்பி இருந்தது.சாப்பிட்ட ஆட்கள் வெளியேறவும், சாப்பிட ஆட்கள் உட்புகவும் ரொம்ப பிஸியாக இருந்தது.
                   எங்களுக்கு இடம் கிடைத்து அமர வக்கீல் நண்பர் உடனே அந்தக்கடையின் ஸ்பெசலான முட்டை ரொட்டியும் ஆட்டுக்கால் பாயாவும் ஆர்டர் செய்ய, கொஞ்ச நேரம் காத்திருக்க வேண்டியதாகிப் போனது.காத்திருந்த நேரத்தினை பயனுள்ளதாய் ஆக்க சுற்றும் முற்றும் பராக் பார்க்க, காலையிலேயே மட்டன் பிரியாணியையும் பாயாவையும் வெளுத்துக்கொண்டிருந்தனர் நம்மவர்கள். பார்சல் ஆர்டர்கள் பலதும் வெளியேறிக் கொண்டிருந்தது.அவ்வப்போது கேசியரிடமிருந்தும் பார்சல் கட்டிக்கொடுப்பவரிடமிருந்தும் பில்களின் பெரிய தொகை  சொல்லி சொல்லி ஏலம் போல் நீண்டு கொண்டிருந்தது.ஒவ்வொரு பில்லும் 450, 600, 800, 400 என ஏறியும் இறங்கியும் இருந்தது.குறைந்த பட்சத்தொகை என்று நூறுக்கும் கீழ் எதுவுமில்லை.எல்லா பார்சலும் பாயாவிற்குத்தான் என்பதால் எல்லாம் அதைத் தாண்டித்தான் போய்க்கொண்டிருந்தது.
                    கொஞ்ச நேரம்தான்..பிரியாணி வாசத்திலும் முட்டை ரொட்டியின் வாசத்திலும் மனம் வறுபட ஆரம்பிக்க, லேசாய் பசிக்க ஆரம்பித்தது.முதலில் சேமியா கொடுங்க, முட்டை ரொட்டியை அப்புறம் கொண்டு வாங்க….என சொல்லவும் இடியாப்பம் பாயா உடனே வந்தது.

இடியாப்பம் பூப்போல் மென்மையாய் இருக்க, அதன் மேல் பாயாவினை ஊற்ற மெதுவாய் இறங்கியது அந்த இடியாப்ப சிக்கலுக்குள்….ஒரு விள்ளல் எடுத்து வாயில் போட அமிர்தமாய் கரைந்து ஓடியது…ஆட்டுக்கால் பாயாவின் தேங்காய் மணம் மெல்லியதாய் நம் சுவையை ஆக்கிரமித்துக் கொள்ள, இடியாப்பம் சிக்கலின்றி காலியானது.பாயாவில் மிதக்கும் காரமிகுந்த எண்ணைய் ஒரு வித சுவையைக் கொடுக்க இதமாய் பதமாய் உள்ளிறங்கியது இடியாப்பம்..
                 ஆட்டுக்கால்…..ஒரு முழுக்காலே மொத்தமாய் வெந்து இருந்தது.பிய்க்க அப்படியே உரிந்து வந்தது.மென்மையாய் கறி இருக்க, கடினமாய் மெல்லுவதற்கு வாய்ப்பின்றி உள்ளே வழுவழுவென இறங்கியது.ஐந்து இன்ச்க்கும் மேலே இருந்த ஆட்டுக்காலின் எலும்பினை கடித்து உறிஞ்சி இழுக்க, உள்ளே இருந்த ஊனும் நன்றாய் உப்பு காரம் பிடித்து செமயாக இருக்க, சூப்பராய் இருந்தது.ரப்பர் போல இருக்கும் சதைப்பகுதி சாப்பிட டேஸ்டாக இருந்தது.

                வாயில் கவ்விய எலும்போடு சற்றே திரும்ப, எல்லா டேபிள்களிலும் யாராவது ஒருத்தர் ஆட்டுக்கால் எலும்போடு போட்டியிட்டுக் கொண்டிருக்க, நமக்குத் துணையாகவும் ஆட்கள் இருக்கிறார்களே என்ற எண்ணத்தில் மனம் உற்சாகமடைந்து இன்னும் அதிகமாய் எலும்பை உறிஞ்ச ஆரம்பித்தேன்.
                    முழுக்காலையும் முடித்தபின் பெரிதாய் ஒன்றும் ஏப்பம் வரவில்லை.பின் முட்டை ரொட்டி சூடாய் தட்டில் போடவும், அதைப்பார்த்த போது ஒரு பக்கத்தில் முட்டையும் அதன் மறு பக்கத்தில் புரோட்டோவுமாக இருக்கிறது, அதன் இருபுறமும் இப்படியும் அப்படியும் திருப்பி பாயா என்று சொல்லக்கூடிய சேர்வையை ஊற்றி ஊற வைக்க, அது சிறிது நேரத்தில் ஊறி விட்டது.கொஞ்சமாய் பிய்த்து வாயில் வைக்க செம டேஸ்டாக கரைந்தது.முட்டையும் புரோட்டாவும் சேர்வையும் மூன்றும் ஒன்று சேர்ந்து ஒரு தேவாமிர்தத்தை தந்தது.ஒவ்வொன்றின் சுவையும் நாக்கின் நரம்புகளை உசுப்பேற்றிவிட்டு வயிற்றுக்குள் தள்ளிக் கொண்டிருந்தது.


      கேட்க கேட்க சேர்வையை வந்து ஊற்றுகிறார்கள்.கெட்டியாக இல்லாமல் நீர்த்துப்போய் தான் இருக்கிறது ஆனால் சுவை.
கொஞ்சம் கொஞ்சமாய் வயிறு நிறைய ஆரம்பிக்க, அடுத்த மெனுவாய் மட்டன் பிரியாணி வந்து சேர்ந்தது.அதிகமாய் சாப்பிட முடியாது என்பதால் ஆளுக்கொரு அரை பிளேட் மட்டும் சொன்னோம்.ஆனால் அதுவே புல் மீலாக இருந்தது எனலாம்.
                      சின்ன சின்ன அரிசியுடன் மட்டன் மணமும் சேர்ந்து மிக சுவையாக இருந்தது.பாசுமதி அரிசியில் தான் இந்த வேலூர் மாவட்டத்தில் பிரியாணி செய்வார்கள்.ஆனால் இங்கோ சின்ன அரிசியில் செய்திருந்தது மிக சுவையாக இருந்தது.சீரகசம்பா அரிசி இல்லை என்பது கூடுதல் தகவல்.ஆனால் அரிசியின் டேஸ்ட் சூப்பர்.சிறு சிறு துண்டுகளாக மட்டன் துண்டுகள்..நன்கு பஞ்சு போல் வெந்து இருந்தது.எலும்பும் கடிக்க மிருதுவாக இருந்தது.மட்டன் சுவையோடு பிரியாணியும் மிக அற்புதமாக இருந்தது.ஒரு பருக்கை விடாமல் சாப்பிட்டமுடித்தபின் தான் பேசாமல் புல் பிளேட் பிரியாணியே வாங்கியிருக்கலாமோ என எண்ண தோன்றியது.


                   அப்பாடா….இப்பொழுது தான் வயிறு நிறைந்த ஞாபகம் வர, கூடவே ஏப்பமும் வர திருப்தியாய் கை கழுவ வந்தோம்…இன்னமும் கூட்டம் கூடிக் கொண்டிருந்ததே தவிர குறையவில்லை..
எங்களின் பில்லாக ரூ 400 வர அதுவும் இருவர் மூலமாய் ஏலமாய் சொல்லித்தான் வாங்கி கல்லாவில் போட மீதி சில்லரையை வாங்கிவிட்டு கூட்டத்தினை ஒதுக்கிக் கொண்டு வெளியேறினோம்..



                    கடைக்கு முன் இருந்து திரும்ப ஒரு முறை பார்க்க எப்பவும் போல சலிக்காமல் புரோட்டா போட்டபடி மாஸ்டரும், உதவியாளரும் இருக்க, பெரிய குண்டாவிலே பிரியாணியை கிளறிவிட்டு பார்சல் பண்ணிக் கொண்டிருப்பவரும் தத்தம் வேலையிலே பிசியாக இருக்க, உள்ளேயிருந்து “ஆட்டுக்கால் பாயா ஒரு பிளேட்” என்ற சத்தம் வெளியேறிக்கொண்டிருந்தது.……..

கடை பற்றிய சிறு குறிப்புகள்…
இந்தக்கடை கிட்டத்தட்ட 75 வருடங்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.கடையின் ஓனர் பெயர் அன்சார்.
ஞாயிற்றுக்கிழமை மட்டும் தான் இதன் ஸ்பெசலான ஆட்டுக்கால் பாயாவும் முட்டை ரொட்டியும்..மற்றநாட்களில் இல்லை.
காலை 7 மணிக்கே பிரியாணி தயாராகிவிடும்
கடைக்கு போர்டு இல்லை
ஒரே ஒரு குறை மட்டுமே...இலைக்குப்பதில் பிளாஸ்டிக் பேப்பரை உபயோகப்படுத்தி வருகிறார்கள்.

முகவரி : குப்பையர் தெரு, ராஜன் சாலை

திருப்பத்தூர் வந்தீங்கன்னா ஒரு வாய் சாப்பிட்டுவிட்டு போங்க…..

நேசங்களுடன்
ஜீவானந்தம் 





இன்னும் கொஞ்சம்...

Sunday, March 22, 2015

கோவை மெஸ் - ராய்பூர் தர்பார் ரெஸ்டாரண்ட், திருப்பத்தூர்

              திருப்பத்தூரில் தான் கடந்த ஒரு மாதமாக மையம் கொண்டிருப்பதால் நிறைய ஹோட்டல்களில் சாப்பிடும் அனுபவம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது.
திருப்பத்தூர் அருகே பிரியாணிக்கு புகழ்பெற்ற மிக முக்கியமான சிறு குறு பெரு நகரங்களான வாணியம்பாடி, ஆம்பூர் வேலூர்  இருப்பதால் திருப்பத்தூரிலும் அதே போன்ற சுவையினை தேடி அலைந்த போது தான் கண்ணில் சிக்கிய ஹோட்டல் ராய்பூர்.
               ஹோட்டல் கொஞ்சம் விஸ்தாரமாக இருக்கிறது.உள்ளே நுழைந்ததும் பொது ஹால், ஏசி ஹால் என பிரித்து வைத்து இருக்கின்றனர். திருப்பத்தூரில் அடிக்கின்ற வெயிலுக்கு ஏசிதான் பெஸ்ட் என்றாலும் நாங்கள் போன அன்று ஏசியின் தற்காலிக சேவை நிறுத்தப்பட்டு இருந்தது.
எனவே காற்றோட்டமாக பொது ஹாலிலேயே அமர்ந்தோம்.ஹால் காற்றோட்டமாக இருந்தாலும் டேபிள்கள் மக்களால் நிரம்பியிருந்தது.


             தந்தூரி சிக்கன், சிக்கன் 65, மஞ்சூரியன், மட்டன் பிரியாணி, காடை ரோஸ்ட் என அசைவமும் மஸ்ரூம் 65, பேபிகார்ன், என ஒரு சில சைவ மெனுக்களும் விளம்பர போர்டுகளை அலங்கரித்துக் கொண்டிருந்தன. 

                    மெனு கார்டு தந்ததும் சிக்கன் பிரியாணி தான் ஆர்டர் பண்ணினோம்.. நன்கு வாசத்துடன் பிரியாணி பிளேட்டில் வந்து இறங்கியது. பொலபொலவென்று தங்க நிறத்தில் மின்னிய பாசுமதி அரிசி பார்க்கும் போதே பசியை அதிகப்படுத்திக்கொண்டிருந்தது

நீள நீளமான பாசுமதி அரிசியுடன் சிக்கன் கலந்து ஒருவித சுவையை ஏற்படுத்தி நம் பசியை தூண்டிவிட்டிருந்தது.ஒரு தட்டு நிறைய பிரியாணியுடன் சிக்கன் பீஸ்கள் நிறைந்து தட்டை நிரப்பி இருந்தது.கொஞ்சம் எடுத்து வாயில் வைக்கவும் பிரியாணியின் சுவை நம்மை உள்ளுக்குள் இழுக்கிறது.சாப்பிடுவதே தெரியவில்லை.அவ்வளவு அதிகமாக தெரிந்த பிரியாணி சீக்கிரம் காலியாகி விட்டிருந்தது.இடையே சிக்கன் பீஸ் நன்றாக வெந்து மெலிதாய் பிரிந்து விட்டிருந்தது.உப்பும் உரைப்பும் செமயாக இருந்தது.
கூடவே ஆர்டர் செய்திருந்த தந்தூரி சிக்கனும் உடனே டேபிளுக்கு வர அதுவும் காலியாக ஆரம்பித்து விட்டிருந்தது.


தந்தூரி நன்றாக மெது மெதுவென்று இருக்க வாயில் வைக்க கரைந்து ஓடியது. எலும்பு மட்டும் அவ்வப்போது வெளியே வந்து விழுந்தது வாயிலிருந்து.
கூட வந்த நண்பரின் பையனுக்காக சிக்கன் நூடூல்ஸ் ஆர்டர் செய்து இருந்தோம்.அதை கொஞ்சம் டேஸ்ட் பார்த்ததில் அதுவும் நன்றாக இருந்தது.

கடைசியாக வந்த மெனு காடை...ஜப்பான் காடை....நன்கு செக்க செவந்த நிறத்தில் கால்களை பிய்த்து தின்பதற்கு ஏற்றப்படி மல்லாந்து கிடந்தது.
நன்கு மொறு மொறு வென்று இருக்கிறது கடித்து தின்பதற்கு.சுவையும் அபாரம்.

மொத்தத்தில் அனைத்தும் சூப்பர்.
பிரியாணி செம டேஸ்ட்.உதிரி உதிரியாக மிக சுவையாக இருக்கிறது.அந்த பாசுமதி அரிசி செம டேஸ்ட்.வட மாவட்டங்களில் மட்டும் இந்த பாசுமதி அரிசி பிரியாணிக்காக  பயன்படுத்துகின்றனர்.சுவை நன்றாக இருக்கிறது.
எல்லாம் சாப்பிட்டு பில் மொத்தம் 450 தான் வந்தது.
திருப்பத்தூர் போனீங்கன்னா ஒரு கை பாருங்க….
அடுத்து ஆம்பூர் போறேன்….அங்க ஊர்ப்பட்ட பிரியாணி கடை இருக்கு.எல்லாம் டேஸ்ட் பண்ணிட்டு திரும்ப வர்றேன்..
நேசங்களுடன்
ஜீவானந்தம்.




இன்னும் கொஞ்சம்...

Tuesday, January 31, 2012

அருள்மிகு கொல்லா புரி அம்மன்.

தர்மபுரியில் இருந்து திருப்பத்தூர் செல்லும் வழியில் இக்கோயில் இருக்கிறது.ரொம்ப சக்தி வாய்ந்த அம்மன் என்பது அங்கு குத்தி வைக்கப்பட்டுள்ள ஈட்டிகளை, வேல்களை பார்த்தாலே தெரிகிறது.இக்கோயில் செல்லும் வழிகளில் உள்ள புளிய மரங்களில் நிறைய கோழிகள் தூக்கில் தொங்கி கொண்டு இருந்தன.வேண்டுதல் நிறைவேற அங்குள்ள மக்கள் கோழிகளை தூக்கில் தொங்க விட்டு விடுவார்களாம்.திருட்டு சம்பந்த பட்ட வேண்டுதல்கள் தான் நிறைய வருமாம்.சுற்று  வட்டார மக்கள் மற்றும் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகளின் சக்தி வாய்ந்த அம்மன் கோவில் இதுதானாம்.









இக்கோவில் தருமபுரி டு போச்சம்பள்ளி செல்லும் வழியில் இருக்கிறது.

நேசங்களுடன்
ஜீவானந்தம்
 
இன்னும் கொஞ்சம்...

Wednesday, January 25, 2012

அருள்மிகு ஸ்ரீ வெற்றிவேல் முருகன் - ஜலகாம் பாறை - ஏலகிரி - திருப்பத்தூர்

ஜலகாம் பாறை....ஏலகிரி மலையினை ஒட்டி அமைந்துள்ள ஒரு திருத்தலம்.முருகன் தம்பதி சமேதராக சிவலிங்க வடிவில் உள்ள கோவிலில் அருள் பாலிக்கிறார். இங்கு ஏலகிரி மலைகளில் இருந்து உருவாகும் சிறு அருவி திருமால் முருகன் தீர்த்தம் என்று அழைக்கபடுகிறது.திருப்பத்தூரில் இருந்து 20  கிலோ மீட்டர் தொலைவில் இந்த ஜலகாம்பாறை இருக்கிறது.மலை சூழ்ந்த இடம் ஆதலால் மிகவும் ரம்மியமாக இருக்கிறது.வெங்கடேச பெருமாளின் பாதம் பட்ட இடம் ஆதலால் அவர்க்கும் ஒரு கோவில் அமைத்து கும்பிடுகின்றனர்












அமைதி...அமைதி...அப்படி ஒரு அமைதி...சலசலக்கும் அருவி சத்தம், கோவில் மணி யோசை என மிக அருமையாக இருக்கிறது.மலையின் மேல் கோவில் இருந்தாலும் அடிவாரம் என்று ஒன்றும் இல்லை.ஆனாலும் அங்கு கடை கண்ணிகள் இருக்கிறது.சுட சுட பணியாரம் , கரும்பு ஜூஸ், என திடீர் கடைகள் நிறைய இருக்கின்றன.





அருவியில் நீர் (கொஞ்சமாக) தற்போது வந்து கொண்டிருக்கிறது.குளிக்க ஜில்ல்னு இருக்கிறது.ஒரு சில சீசன்களில் மட்டும்தான் அதிகம் வருமாம்.
ஆனால் எப்போதும் நீர் வரத்து இருக்குமாம்.அப்புறம் நம்ம முன்னோர்கள் இங்கும் வாசம் செய்கிறார்கள்.அப்புறம் எப்பவும் போல நம்ம அம்மணிகள் அவங்கங்க ஆளுகளோட...திருப்பத்தூரில் இருந்து 20  கிலோ மீட்டர் தொலைவில் இந்த ஜலகாம்பாறை இருக்கிறது

நேசங்களுடன்
ஜீவானந்தம்


இன்னும் கொஞ்சம்...