Wednesday, September 21, 2016

சமையல் - அசைவம் - ஆட்டுத் தலைக்கறி குழம்பு

                  எங்க ஊர்ல ஏதாவது விசேசத்தின் போது கிடா வெட்டும் போது ஆட்டோட தலைய மட்டும் பொசுக்குற வேலை நம்மளுது.வாயில குச்சியை குத்தி தலைய நெருப்புல வாட்டி முடியை சுரண்டி கிளீன் பண்ணனும்.தலையை பொசுக்கிட்டு இருக்கும் போதே காது மடல் நல்லா வெந்து இருக்கும்.அதை பிய்த்து அப்படியே சாப்பிடுவது செம டேஸ்டாக இருக்கும்.நன்கு பொசுக்கின தலையை மஞ்சள் தடவி நன்றாக அலசி கொடுத்தால் போதும்.மிக பதுவுசாய் வெட்டி துண்டு போடுவாங்க.மூளைய மட்டும் நொங்கு வெட்டற மாதிரி சிந்தாம சிதறாம ஒரு இலைல தருவாங்க.அதை தோசைக்கல்லில் போட்டு உப்பும் மிளகும் போட்டு பிரட்டினால் சுவையான மூளை ஃப்ரை ரெடி...இப்போ தலைக்கறி குழம்பு எப்படி வைப்பது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
தலைக்கறி
சின்ன வெங்காயம் - 200 கிராம்
தக்காளி - 3
இஞ்சி பூண்டு விழுது - சிறிதளவு
தேங்காய் - ஒரு மூடி
வரமிளகாய் - 2
மஞ்சள் தூள்
மிளகாய்த்தூள் - சிறிதளவு
மல்லித்தூள் - சிறிதளவு
பட்டை, கிராம்பு, சீரகம், சோம்பு, கசகசா - சிறிதளவு
கொத்தமல்லி புதினா தழை - சிறிது
தேவையான உப்பு
கொஞ்சம் எண்ணைய்

செய்முறை :
முதலில் குக்கரில் எண்ணைய் விட்டு பட்டை கிராம்பு, சோம்பு, போட்டு பின் இஞ்சி பூண்டு போட்டு வதக்கி பின் தலைக்கறியை நன்கு வதக்கி  சிறிதளவு உப்பு சேர்த்து இரண்டு விசில் வரை விட்டு வேக வைத்துக்கொள்ளவும்

வாணலியில் கொஞ்சம் எண்ணைய் விட்டு பட்டை கிராம்பு சீரகம் போட்டு வதக்கி, சின்ன வெங்காயம், தக்காளி வரமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கி பின் அரைக்கும் போது மல்லித்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

தேங்காய்  கசகசா சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.

வாணலியில் அரைத்த வைத்த மசாலா சேர்த்து கொஞ்சம் கொதி வந்தவுடன் வெந்த தலைக்கறியை சேர்த்து சிறிது மஞ்சள் தூள் உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும், பின் தேங்காய்  விழுதினை சேர்த்து ஒரு கொதி வந்தவுடன், கொத்தமல்லி புதினா தழை தூவி இறக்கவும்.
டேஸ்ட் கூடுதலாக வேண்டுமெனில் சிறிதளவு மட்டன் மசாலா சேர்த்து கொதிக்கவிடவும்.கெட்டியாக கெட்டியாக குழம்பு டேஸ்டாக இருக்கும்.
கொதிக்கிற குழம்பில் மூளையை போட்டு எடுத்தாலே மூளை வெந்து விடும்.அதுவும் மிக சுவையாக இருக்கும்..








இட்லிக்கு தலைக்கறி குழம்பு மிக அருமையாக இருக்கும்.குடல் குழம்பை போலவே டேஸ்ட் சூப்பராக இருக்கும்.

தலைக்கறி ஃப்ரை வேண்டுமென்றால்
வாணலியில் எண்ணைய் விட்டு பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கி பின் குழம்பிலிருந்து தலைக்கறித் துண்டுகளை சேர்த்து கொஞ்சம் மிளகுப்பொடி தூவி நன்கு பிரட்டினால் போதும்.சுவையான தலைக்கறி ஃப்ரை ரெடி....

நேசங்களுடன்
ஜீவானந்தம்

2 comments:

  1. பசிய கெளப்புறீங்க பரவாயில்ல ...அது சரி அது என்ன இட்லில பொத்தல் ? வித்யாசமா இருக்கே ?

    ReplyDelete
    Replies
    1. இட்லி வெந்திருக்கா இல்லையா என தெரிவதற்காக கையால் குத்தி பார்ப்பது...

      Delete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....