Showing posts with label GOA. Show all posts
Showing posts with label GOA. Show all posts

Thursday, February 27, 2014

கோவை மெஸ் - பாவ் ஆம்லெட் குருமா, மட்கான்(MADGOAN), கோவா (GOA)

கோவாவின் மட்கான் நகராட்சி ஆபிஸ் பகுதியில் ஒரு சாயந்திர வேளை சுற்றிக்கொண்டிருந்த போது, கோவாவின் அம்மணிகளை அரைகுறை ஆடையில் பார்த்த ரசித்த களைப்பில் கண்கள் மட்டுமே பசியாறிக்கொண்டிருந்தது.அங்குமிங்கும் நடந்த களைப்பில் எங்காவது சாப்பிட கிடைக்குமா என்று தேடியலைந்ததில் ஒரு தள்ளுவண்டி கடை சுற்றி ஒரே கூட்டம்.எட்டிப்பார்த்ததில் ஒரே ஒரு ஆள் மிக வேக வேகமாக முட்டை உடைத்து வெங்காயம் போட்டு கலக்கி ஆம்லெட் போட்டு அதை இரண்டாக கட் பண்ணி  ஒன்றை தட்டில் வைத்து அதில் சிக்கன் குருமாவை ஆம்லெட் மூழ்குமளவுக்கு ஊற்றி வெங்காயம் தூவி கையில் ஒரு பாவ்(பன்) கொடுத்து கொண்டிருந்தார்....நிமிட நேர இடைவெளியில் பலஆம்லெட்டுகள் தட்டுக்களை நிறைத்துக்கொண்டிருந்தது கூடவே வாடிக்கையாளர்களின் வயிற்றையும் மனத்தையும்...

கூட்டத்தோடு கூட்டமாக ஐக்கியமாகி நிற்க, சுற்றுப்புறத்தினை வாசனையால் நனைத்துக்கொண்டிருந்த ஆம்லெட்டும், சிக்கன் குருமாவும் நமது மூக்கைத்துளைக்கவே நமக்கொன்று சொல்ல உடனடியாக சூடாக வந்தது.சூடான ஆம்லெட், சுவையான சிக்கன் குருமா, தூவிய வெங்காயம், தொட்டுக்கொள்ள பாவ்.....கொஞ்சம் பாவினை பிய்த்து, ஆம்லெட்டில் கொஞ்சம் எடுத்து குருமாவில் தோய்த்து சாப்பிட செம டேஸ்ட்.....இப்படியே ஒவ்வொரு விள்ளலுமாக எடுத்து தோய்த்து தோய்த்து சாப்பிட உலகம் மறந்து போனது.எங்களைப்போலவே பலரும் ரசித்து ருசித்து சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்.




கிடைத்த இடைவெளியில் இது என்னவென்று கேட்க இந்தியில் ஏதோ கடி என்று சொன்னார்..அப்புறம் திரும்ப கேட்க, ஆங்கிலத்தில் ப்ரெட் குருமா ஆம்லெட் என்று சொன்னார்.பேரு என்னமோ இருக்கட்டும்...ஆனா சுவையாக இருக்கிறது.மீண்டும் இன்னொன்றினை கேட்டு வாங்கி அதுவும் விள்ளலும் தோய்த்தலுமாக வயிற்றுக்குள் இறங்கிக்கொண்டிருந்தது.

கோவா மட்கான் பக்கம் போனிங்கன்னா, முனிசுபல் ஆபிஸ் பக்கத்துல இருக்கிற பெட்ரோல் பங்க் எதிரில் இவரைக்காணலாம்.விலை 40 ரூபாய்.தள்ளுவண்டிக்கடை என்றாலும் மிக சுத்தமாக இருக்கிறது.

கிசுகிசு : சாப்பிட்டு முடித்தவுடன் இந்தக்கடைக்கு எதிரில் இருக்கிற அழகிய பூங்காவில் அமர்ந்து கொண்டு மீண்டும் விட்ட வேலையை ஆரம்பித்தோம் சிறிது நேரம்.....(மட்கான் பஸ்ஸ்டாண்டு அருகில் இருப்பதால் அரைகுறை அம்மணிகளை ரசிக்கமுடியும்....)

நேசங்களுடன்

ஜீவானந்தம்
இன்னும் கொஞ்சம்...

Tuesday, January 28, 2014

பயணம் - கோல்வா பீச் (COLVA BEACH), கோவா (GOA) - 1

  எச்சரிக்கை
       மது உடலுக்கு தீங்கானது 
இந்த பதிவில் உள்ளவை அனைத்தும் எனது சொந்த அனுபவமே.விருப்பமுள்ளவர்கள் தொடரலாம்.இல்லையேல் 
இந்த பதிவை படிப்பதை தவிர்த்து விடுங்கள்....
இது கண்டிப்பாக  குடிமகன்களுக்கு மன்னிக்கணும் நம்ம பங்காளிகளுக்கு  மட்டும்.



காலையில் இருந்து கடலில் குளித்த டயர்டில் எங்காவது ஒதுங்கலாமே என்று ஒரு கடையில் ஒதுங்கி சில்லென தொண்டையை நனைத்தோம்...கூட என்ன சாப்பிடலாம் என்று யோசித்ததில் கிங் ஃபிஷ் ஞாபகத்திற்கு வந்தது..அது ஆர்டர் செய்யவும் பீர் தீர்வதற்குள் வந்து சேர்ந்தது.சாப்பிட்டு பார்த்ததில் சுவையோ சுவை....கிங் ஃபிஷருக்கும் கிங் ஃபிஷ் க்கும் பொருத்தமோ பொருத்தம்.....


நேரம் ஆக ஆக கடற்கரையில் கூட்டம் கூட ஆரம்பித்தது.வாட்டர் ஸ்போர்ட்ஸ் படகுகள் மும்முரமாய் வாடிக்கையாளர்களை வசப்படுத்தி கொண்டிருந்தன.பாரா செயிலிங் எனப்படும் பாராசூட் அனுபவத்தில் பங்கு கொள்ள மனம் ஆசைப்பட்டாலும் அவ்ளோ உயரத்தில் செல்ல கொஞ்சம் பயமாகவே இருந்தது.அதனால் அந்த ஆசையை நிராகரித்து விட்டு உயரே செல்லும் பாராசூட்டை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன்...



வெயில் சுள்ளென பட்டாலும் கடற்கரை மணலில் கடற்காற்று வாங்கிக்கொண்டிருப்பது சுகமாகவே பட்டது.என்னதான் வெயில் அடித்தாலும் சில்லென இருந்தது கடல் நீரும் அவ்வப்போது கடந்து செல்லும் அரை குறை அம்மணிகளும்.... சாய்வு நாற்காலிகளில் ஓய்வெடுத்துக்கொண்டு அவ்வப்பொழுது உடலினை சூரியனின் சுட்டெரிப்பால் திருப்பி திருப்பி போட்டபடி காய்ந்து கொண்டிருந்த வெளிநாட்டு வெள்ளைத்தோல் அம்மணிகள்.அவர்கள் வெயிலில் காய்ந்து கொண்டிருந்ததை காணுகையில் நம் உள்ளம் என்னவோ குளிர்ச்சியால் நிறைந்து கொண்டிருந்தது.

வேடிக்கை பார்த்து பார்த்து கண்களும் சோர்வடைந்ததால் கால்கள் தன்னிச்சையாக கடையை நோக்கி பயணித்தன.கோவாவின் புகழ்பெற்ற மதுவான ஃபென்னி எனப்படும் சரக்கினை ருசி பார்ப்போமே என்று.... கோகனட் ஃபென்னி, முந்திரி ஃபென்னி என்கிற இரு வகையில் முந்திரியினை தேர்ந்தெடுத்து ஓரமாய் அமர்ந்தோம்.நம்மூர் பட்டை சாராயம் போல காய்ச்சின வகை என்று கடைக்காரர் சொல்லவும் ஆஹா என மனம் குதூகலித்தது.இதற்கு கலந்து கொள்ள எது சூப்பராக இருக்கும் என்று கேட்க, லிம்கா தான் பெஸ்ட் என சொல்ல அதையும் வாங்கி இரண்டையும் மிக்ஸ் பண்ணி சாப்பிட்டதில் செம டேஸ்ட்..அங்கும் மீன் சாப்பிடலாமே என்று நம்மூர் ஜிலேபியின் பெரிய வகையினை ஆர்டர் செய்ய அது மசாலா மணத்தோடு செம தூக்கலாக வந்தது.காரமும், இனிப்பும் கலந்த கலவையுடன் மீனின் சுவை செம டேஸ்டாக இருந்தது.ஃபென்னியுடன் மீனும் நம்ம மனமும் சேர்ந்து நீச்சலடிக்க ஆரம்பித்தது.....

கொஞ்ச நேரம் இளைப்பாறிவிட்டு மீண்டும் கடற்கரை நோக்கி பயணமானோம்.இப்பொழுது கொஞ்சம் கூட்டம் அதிகமாகவே இருந்தது.மாலை நேர சூரியனின் மறைவினைக் காண கூடியிருந்தனர்..குடும்பம் குடும்பமாக கூட்டங்கள், அரை குறை ஆடையுடன் ஆடவர்கள் மற்றும் வெளிநாட்டு அம்மணிகள்..முழு உடை தரித்திருந்தாலும் அங்கங்கள் அனைத்தும் நனைந்தபடி நம்மூர் அம்மணிகள் என மிக ரம்மியமான மாலைப்பொழுதாக ஆகிக்கொண்டிருந்தது கடற்கரை.




  
மயங்குகின்ற மாலை வேளையில் சைக்கிளில் ஒய்யாரமாய் வரும் அம்மணிகள், பாய்ந்து வரும் அலைக்கு பயந்து கடற்கரையில் வெறும் பார்வையோடு நிறுத்திக்கொண்ட நிறைய பேர், கடற்கரையில் கிடக்கும் சிப்பிகள், கிளிஞ்சல்கள் என அனைத்தையும் பொறுக்கிகொண்டு கடலோரமாய் நடந்து செல்லும் பல பேர், அவ்வப்போது மக்களின் பாதுகாப்புக்காக குறுக்கும் நெடுக்குமாய் சென்ற கோஸ்டல் ஜீப், கடலில் குளிப்பவர்களின் ஆர்வமிகுதியால் கடலில் வெகு தூரம் செல்பவர்களை திரும்பி வரவைக்கும் விசில் சத்தம் என பரபரப்பாக இருந்த கடற்கரை சூரியனின் மறைவினால் கொஞ்சம் பொலிவிழக்க ஆரம்பித்தது.


கொஞ்சம் கொஞ்சமாக தன் உயரத்தை இழந்து, சுடும் வெப்பத்தினையும் குறைத்து பொன்னிற கதிர்களால் கடற்கரையினை மிக ரம்மியமாய் மாற்றிக்கொண்டிருந்த சூரியன் கடலோடு அஸ்தமிக்கும் அந்த நொடிகள் மிக அழகாய் இருந்தது.அனைத்தையும் ரசித்தபடி இரவின் சுவடுகள் ஆரம்பித்த சமயத்தில் கடலுடன் விடை பெற்றுக்கொண்டு கிளம்பினோம்.

இதுக்கு முன்னாடி கோவா

நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Sunday, January 19, 2014

பயணம் - கோல்வா பீச் ( COLVA BEACH ), கோவா (GOA)

கோல்வா பீச், கோவா...
கோவாவில் மட்கான் (MADGOAN) என்றழைக்கப்படும் ஊரின் ரயில்வே ஸ்டேசனில் வந்து வலது காலை வைத்து இறங்கிய போது மணி அதிகாலை மூன்றாகியிருந்தது.அந்த நேரத்திலும் ரயில்வே ஸ்டேசன் ஆட்கள் நடமாட்டத்தால் மிகவும் பிஸியாக  இருந்தது.எந்தவித முன்னேற்பாடும் இல்லாத காரணத்தினால் அதிகாலை குளிரினை தடுக்க ஏதாவது செய்யனுமே என்று யோசித்தபடியே மெதுவாய் ஸ்டேசனை விட்டு வெளியேறிய போது டூவீலர் டாக்ஸி ஓட்டி ஹிந்தியில் பாத் ஹர்த்த போது கோல்வா பீச் என்றதும் மறுப்பேதும் சொல்லாமல் எங்களை டிரிபிள்ஸ் ஆக்கி இரவு நேரத்தில் பீச்சினை நோக்கி பயணித்தோம்..
பனி படரும் குளிரில் டூவீலரின் சத்தம் மட்டுமே கேட்க எந்த வித வாகன்ங்களும் எங்களுடன் போட்டிக்கு வராமல் தனித்தே பயணித்தோம்...இருட்டிய சாலைகளில் இரவினை துணையாகக் கொண்டு பதுங்கிக்கிடக்கின்ற தெருநாய்கள் எங்களுடன் போட்டிக்கு வந்து இயந்திர சக்திக்கு முன்னால் தோற்றுப்போனதை தாங்கமுடியாமல் வெறியுடன் குலைத்த அவைகளின் முன் எங்களின் புறமுதுகை காண்பித்து பயணித்தோம்....அனாதையாய் வெறிச்சோடிக்கிடந்த ரோட்டில் வேகமாய் பயணித்து வெகு சீக்கிரமே கோல்வா பீச் வந்தடைந்தோம்....

பொங்கல் விடுமுறையை ஒட்டி நம்மவர்களின் கூட்டத்தால் லாட்ஜ்கள் ரிசார்ட்கள் நிரம்பி வழிந்தன.டூவீலர் ஓட்டியின் கைங்கர்யத்தால் பீச்சினை ஒட்டி அமைந்துள்ள ஒரு ரிசார்ட்டில் எங்களுக்கு ஒதுங்க இடம் கிடைத்தது.விவரங்களை பூர்த்தி செய்து கொடுத்த அந்த அதிகாலை வேளையிலும் எங்கள் கண்களுக்கு ஆபத்பாந்தவனாக தெரிந்தான் ஃபிரீசரில் இருந்த கிங் ஃபிஷர் நண்பன்.....ஒருவனை எடுத்து திறந்து தொண்டையை நனைத்தபோது சில்லென்ற குளிர்ச்சி வந்து சேர்ந்து கொண்டது அகமும் புறமும்....அங்கிருந்து நகர்ந்தபடி ரூம் வந்து சேர, மிச்சத்தினையும் காலி செய்துவிட்டு சீக்கிரம் பீச் செல்லவேண்டிய ஆயத்தங்களை மேற்கொள்ள ஆரம்பித்தோம்.....
தங்கியிருந்த இடத்திற்கும் பீச்சிற்கும் ஒரு சில மீட்டர் தூரமே இருக்க பொடிநடையாய் நடந்து பீச்சினை அடைந்தோம்....



தென்னை மரங்கள் கரையோரம் கடலுக்கு அழகு சேர்த்துக்கொண்டிருந்தது..இன்னும் தன் விடியலை ஆரம்பிக்காத பீச் வெறிச்சோடி கிடந்தது. நேற்றைய பனியால் தற்காலிக உடை உடுத்தி இருந்த பீச்சின் வெண்ணிற மணல், ஆட்கள் வருகையினால் தன் உடைகளை களைய ஆரம்பித்தது... ஆங்காங்கே ஒரு சில பேர் மட்டும் காலை விடியலை ரசிக்க வந்திருந்தனர்....படகுக்காரர்கள் தங்கள் விற்பனையைத் துவக்க ஆரம்பித்து இருந்தனர்.மணல் மேட்டில் படகுகள், வாட்டர் கேம்ஸ் படகுகள் அமைதியாய் உறங்கிக் கொண்டிருந்தன.நடுக்கடலினுள் அலைகளின் உதவியால் ஆடிக்கொண்டிருந்த சிறு படகுகள் வாடிக்கையாளர்களை கரையினில் கண்டவுடன் கரைகளை நோக்கி வர தத்தம் ஓனர்களை எதிர்பார்த்து அசைந்து கொண்டிருந்தது.பீச்சோரம் இருக்கின்ற கடைகள் தங்கள் வாடிக்கையாளர்களை வரவேற்க ஆயத்தமாகினர். ஒவ்வொரு கடைக்கு முன்னும் இருக்கிற சாய்வு நாற்காலிகள் தன் மேல் வெளிநாட்டு அம்மணிகளின் உடல் படும் சுகம் வேண்டி சோபா குஷன் போட்டு காத்துக்கொண்டிருந்தன....




காலை வேளை... சுத்தமான காற்று....மெல்லிய வெயில்...அலையடிக்கும் ஆரவாரமிக்க கடற்கரை...வெண்ணிற மணற்படுக்கைகள்..நம்மைப்போலவே ரசிக்க வந்திருக்கும் வெளிநாட்டு அம்மணிகள் என ரம்மியமாக பொழுது போனது...குளிக்க ஆரம்பித்து விடலாமென்று சில்லென்ற கடல் நீரில் கால் வைத்தபோது குளிர்ச்சி உடம்பெங்கும் பரவியது..மெதுவாய் கடலினுள் நோக்கி நகர உடல் கொஞ்சம் கொஞ்சமாக நனையவும் மூழ்கவும் ஆரம்பித்தது.....எதிர் வரும் அலைகளை தாண்டி அதில் விழுந்து, புரண்டு கடலின் அலைகளோடு விளையாட்டில் ஐக்கியமானோம்.... அவ்வப்போது கடற்பரப்பினையும் பார்த்துக்கொண்டு கடந்து செல்லும் அரைகுறை அம்மணிகளின் அழகிலும் அதிசயத்துக்கொண்டே மும்முரமாய் கடலோடு விளையாடிக்கொண்டிருந்தோம்.

 ரொம்ப நேரம் கடலில் விளையாண்டதில் சீக்கிரம் களைத்துப்போகவே தாகம் தீர்க்க கடைக்கு வந்தோம்.பிரிட்ஜில் நிறைந்து இருந்த கிங் ஃபிஷர் இரண்டை எடுத்து ஒரு ஓரமாய் அமர்ந்து கடலினையும் கடந்து செல்லும் அம்மணிகளையும் ரசித்தவாறே காலி செய்ய ஆரம்பித்தோம்.....
இன்னும் இருங்குங் சாமியோவ்.....................

நேசங்களுடன்
ஜீவானந்தம்
  
இன்னும் கொஞ்சம்...