Monday, November 3, 2014

வாட்ஸ் அப் தகவல்கள் -1

இப்போ பேஸ்புக் போல வாட்ஸ் அப் ரொம்ப பிரபலமாகிட்டு வருது.இதுல லைக் மட்டும் தான் இல்லை.ஆனா உடனடி ரெஸ்பான்ஸ் கிடைக்குது.எல்லாவிதமான தகவல்கள், வீடியோ, ஆடியோ எல்லாம் பகிர்ந்து கொள்ளலாம்.நம்ம மொபைல்க்கு வந்த தகவல்கள் இனி வாரா வாரம்....

சர்க்கரையைப்பற்றி ஒரு இனிப்பான செய்தி :

           உங்கள் சட்டைக் காலரில் உள்ள அழுக்கு எந்த சோப்பைக் கொண்டு தேய்த்தாலும் போக மறுக்கிறதா? கவலைப்படாமல் கொஞ்சம் சீனியை எடுத்து தேய்த்துப் பாருங்கள். நிச்சயமாகப் போகும். ஆக, சட்டை அழுக்கைப் போக்கும் ஒரு வேதிப் பொருளைத் தான் நாம் அள்ளி அள்ளித் தின்று கொண்டிருக்கிறோம். இந்த சீனியைச் சாப்பிட்டால் நம் குடல் என்ன பாடுபடும்?
இனிப்பை விரும்பி சாப்பிடாதவர்கள் யார் தான் இருக்க முடியும்? காலையில் எழுந்தவுடன் குடிக்கும் காப்பியிருந்து இரவு படுக்கச் செல்லும் முன் குடிக்கும் பால் வரை சீனி ஒரு ஊடுபொருளாக நமக்குள் செல்கிறது. பதார்த்தத்தில்தான் என்றில்லை; சீனியை அப்படியே அள்ளியும் சாப்பிடுகிறோம்.
இந்த வெள்ளை சீனியை எப்படித் தயார் செய்கிறார்கள் என்கிற விபரத்தை நீங்கள் தெரிந்து கொண்டீர்களானால் இனி அதைத் தொடக்கூட மாட்டீர்கள்.
குறிப்பாக, வெள்ளைச் சீனியைத் தயார் செய்ய என்னென்ன ரசயானப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று பார்ப்போம்.
1. கரும்பிலிருந்து சாறு பிழியப்படும் நிலையில் பிளிச்சிங் பவுடர் அல்லது குளோரின் எனப்படும் கெமிக்கலை புளுயுடு பாக்டீரியா கண்ட்ரோலாக பயன்படுத்துகிறார்கள்.
2. பிழிந்த சாறு 60 சென்டிகிரேட் முதல் 70 சென்டிகிரெட் பாஸ்போரிக் ஆசிட் லிட்டருக்கு 200 மில்லி வீதம் கலந்து சூடுபடுத்தப்படுகிறது. இந்த இடத்தில் இந்த ஆசிட் அழுக்கு நீக்கியாக பயன்படுத்தப்படுகிறது.
3. இதன் பிறகு சுண்ணாம்பை 0.2 சதவிகிதம் என்கிற அளவில் சேர்த்து சல்பர்-டை-ஆக்சைடு வாயு செலுத்துகிறார்கள்.
4. 102 சென்டிகிரேட் கொதிகலனில் சூடுபடுத்தி நல்ல விட்டமின்களை இழந்து, செயற்கை சுண்ணாம்பு சத்து அளவுக்கு அதிகமாக சேர்ந்துவிடுகிறது.
5. அடுத்து, பாலி எலக்ட்ரோலைட்டை சேர்த்து தெளிகலனில் மண், சக்கை போன்ற பொருள்களாகப் பிரித்து எடுக்கப்பட்டு தெளிந்த சாறு கிடைக்கிறது.
6. சுடுகலனில் காஸ்டிக் சோடா, வாஷிங் சோடா சேர்த்து அடர்த்தி மிகுந்த ஜுஸ் தயாரிக்கப்படுகிறது.
7. மறுபடியும் சல்பர் டை ஆக்சைடும் சோடியம் ஹைட்ரோ சல்பேட்டும் சேர்க்க  படிகநிலைக்கு சீனியாக வருகிறது. சல்பர் டை ஆக்சைடு நஞ்சு சீனியில் கலந்துவிடுகிறது.
8. இப்படித் தயாரான சீனியில் எஞ்சி நிற்பது வெறும் கார்பன் என்னும் கரியே.
தயாரான நாளிலிருந்து ஆறு மாத காலத்துக்கும் அதிகமான சீனிகளை சாப்பிடக்கூடாது. காரணம், அதில் உள்ள சல்பர்டை ஆக்சைடு என்னும் ரசாயனம் மஞ்சள் நிறமாக மாறி வீரியுமுள்ள நஞ்சாக மாறிவிடுகிறது.
குடலில் மட்டுமல்ல, பல் வலி, பல் சூத்தை, குடல்புண், சளித்தொல்லை, உடல்பருமன், இதய நோய் மற்றும் சீனி வியாதி, இரத்த அழுத்தம் போன்ற பெரிய வியாதிகள் அனைத்துக்கும் இதுதான் பிரதான காரணியாக அமைகின்றது.
ஆலைகளில் தயாரான வெள்ளை சீனி சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, வெல்லம், பனங்கட்டி, நாட்டுச் சர்க்கரைகளை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். இதனால் உங்களுக்கு ரத்த அழுத்தமோ, இதய நோயோ, சர்க்கரை வியாதியோ வராது.


இந்த தகவல்கள் குறித்து இனி ஆராய வேண்டும்.சர்க்கரை சாப்பிடுவதா வேண்டாமா என்பதையும் யோசிக்கவேண்டும்...

நேசங்களுடன் 
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Tuesday, October 28, 2014

கோவை மெஸ் - முட்டை பப்ஸ், ஸ்ரீ லட்சுமி ஐயங்கார் கேக் ஷாப், கவுண்டம்பாளையம், கோவை

நம்ம ஏரியா கவுண்டம்பாளையம்.நம்ம அக்கவுண்ட் இருக்கிற  பேங்க மேட்டுப்பாளையம் ரோட்டில் இருக்கிறது.பேங்க் பக்கத்துல ஒரு பேக்கரி இருக்கு.நமக்கு அடிக்கடி பேங்க் போற வேலை இருக்கிறதால் அந்த பேக்கரி தாண்டிதான் போக வேண்டி இருக்கும்.காலையில் 10 மணிக்கு மேல போனா அந்த பேக்கரில இருந்து செம வாசம் வரும்.பப்ஸ் சூடா வேகற வாசனை.ஆளையே தூக்கும்.ரொம்ப நாளா இப்படி வாசனை வந்து வந்து நம்ம மோனத்தை கலைத்துவிட ஒரு நாள் ஆஜராகிவிட்டேன்.
அன்னிக்கு ஆரம்பிச்சதுதான்...முட்டைபப்ஸ்க்கு அடிமை ஆயிட்டேன்.எப்பலாம் பேங்க் போறேனோ அப்பலாம் ஒரு பப்ஸ் வாங்கி சாப்பிட்டு விட்டுதான் போறது.அப்புறம் அடிக்கடி வீட்டுக்கு பார்சல் வாங்கிட்டு போறது.நண்பர்களுக்கு வாங்கித்தர்றது  என இப்படியே போயிட்டு இருந்தது.ஒரு நாள் கடைக்காரரிடம் கேட்டேன், உங்க கடை பப்ஸ் பத்தி நம்ம பிளாக்ல எழுதனுமே அப்படின்னு...அவரும் பப்ஸ் செய்யும் போது கூப்பிடறேன் வாங்க அப்படின்னார்...ஒருநாள் காலையில் பேங்க் போகும்போது கூப்பிட்டார்...வாங்க...பப்ஸ் ரெடியாக போகுதுன்னு...
கடைக்குள் நுழைந்தேன்..ஒரு சின்ன அறைதான்.10 க்கு 16 தான்.அதில் தான் முன்புறம் ஷோகேசாகவும், பின்புறம் கேக், பிஸ்கட், பப்ஸ் செய்யக்கூடிய இடமாகவும் இருக்கிறது.பேக்கிங் செய்யக்கூடிய ஓவன் மெசின் உள்ளேயே பொருத்தப்பட்டிருக்கிறது.பப்ஸ் செய்யக்கூடிய டேபிளில் மாவு சதுரம் சதுரமாக வைக்கப்பட்டு அதில் வதக்கப்பட்ட வெங்காயம் மசாலாவுடன் சேர்த்து வைக்கப்படுகிறது.அப்புறம் வேகவைத்த முட்டை பாதியாய் வெட்டப்பட்டு ஒவ்வொரு சதுர மாவில் வைக்கப்பட்டு மடிக்கப்படுகிறது. மொத்தமாய் ஒரு பிளேட்டில் வைக்கப்பட்டு ஓவனில் இருபது நிமிடம் வைக்கப்படுகிறது.பப்ஸ் வேக வேக மசாலா வாசனை நம் மூக்கினை அடையச்செய்து பசி நரம்பினை மீட்டுகிறது.



சூடாய் மொறு மொறுவென வெளிவருகிறது முட்டை பப்ஸ்.லேயர் லேயராய் உதிர்கிறது வெந்த பப்ஸ்.கொஞ்சமாய் பிய்த்து வாயில் வைக்க செம டேஸ்ட்.முட்டை பப்ஸ், காளான் பப்ஸ், வெஜ் பப்ஸ் என எல்லாம் ஒரே நேரத்தில் ரெடியாகிறது.
பப்ஸ் மட்டுமின்றி பன், பிஸ்கட், கேக் என அனைத்தும் இங்கேயே தயார் ஆகிறது.சூடான பப்ஸ் வெளிவந்து ஷோகேஸில் இடம்பிடித்து சீக்கிரம் விற்றுத்தீர்ந்து விடுகிறது.விலை பத்து ரூபாய் தான்.சாப்பிட செம டேஸ்டாக இருக்கிறது...இந்தப்பக்கம் வந்தீங்கன்னா கண்டிப்பா சாப்பிட்டு பாருங்க...செமயா இருக்கும்...
கவுண்டம்பாளையம் பயர் சர்வீஸ் எதிரில், கனரா பேங்க் அருகில்...

நேசங்களுடன்
ஜீவானந்தம் 
இன்னும் கொஞ்சம்...

Friday, October 10, 2014

தானம்

சமீபத்தில் ஜோலார்பேட்டை வரை  செல்லவேண்டியிருந்ததால் நடுநிசியில் பயணப்பட்டு காலை வேளையில் ஜோலார்ப்பேட்டை ஜங்சனில் கால் பதித்தேன்.எப்பவும் போல அந்த காலை வேளையில் ரயில் நிலையம் மிகவும் பரபரப்பாக இருந்தது.ஏறுவதும் இறங்குவதுமாக பயணிகள்... தூக்க கலக்கத்துடனும் எந்த ஸ்டேசன் என்று எட்டிப்பார்த்து மீண்டும் தன் தூக்கத்தினை தொடர்கின்ற பயணிகள், இருக்கின்ற மிச்ச மீதி தூக்கத்தினையும் கலைக்கும் விதமாக காபி....டீ....காபி...டீ  என ஒவ்வொரு கம்பார்ட்மெண்டாக சூடான டீ காபி வாளியினை தூக்கிக்கொண்டு சேவலுக்குப்பதிலாய் கூவி கூவி எழுப்பி தங்கள் விற்பனையை ஆரம்பித்துக்கொண்டிருந்தனர்...
வழி அனுப்புவர்களும், வரவேற்க வந்தவர்களுமாய் ஒரு கூட்டம் அலைந்து திரிந்து கொண்டிருந்தது.எனக்கான பிளாட்பார்மில் இறங்கி ஸ்டேசனை விட்டு வெளியேற ஆரம்பித்தேன்.காலைப்பொழுது நல்ல இதமானதாக இருக்கவே நடந்து சென்றால் ஒரு சில கலோரிகளை இழந்து கொஞ்சம் அழகுறலாமே என்ற எண்ணத்தில் நடை போட ஆரம்பித்தேன்...இழுத்துப்போர்த்தியபடி கடைகளும், கடை ஓரங்களில் ஆதரவற்றவர்களும் தூங்கிக்கொண்டிருந்தனர்.

சிறிது தூரம் சென்றவுடன் கிளைமேட் கொஞ்சம் மங்கலாக இருக்க, குளிர் காற்று வீசத்தொடங்கியது.குளிருக்கு இதமாக இருக்குமே என்று அருகிலிருந்த ஒரு ஹோட்டலோடு இணைந்த டீக்கடை கண்ணுக்கு தெரிய ஒதுங்கினேன்.நம்பார்வையை படித்த டீமாஸ்டர், காபியா டீயா ? என கேட்க, டீதான் என சொல்ல சூடாய் டீ வந்தது.கண்ணுக்கெட்டும் தூரத்தில் இருந்த ஏலகிரி மலையில் தவழ்ந்து சென்ற மேகங்களை ரசித்தபடி சுற்றிலும் திரும்ப, டீக்கடையில் ஏகப்பட்ட பிளக்ஸ் போர்டுகள், சிலேட்டு அறிவுப்புகள் என என் கவனத்தினை ஈர்த்தது...




ஆச்சர்யத்தில் கண்கள் விரிந்தன.கடை ஓனரை கண்டிப்பாக பாராட்ட வேண்டுமே என்று டீ மாஸ்டரை கேட்டதில் அருகில் காலை விற்பனைக்காக மும்முரத்தில் இருந்த ஒரு நடுத்தர வயது மனிதரை  கை காட்டினார்.முண்டாசு பனியனுடன் தீவிரமாக இருந்த அவரை பார்த்து வாழ்த்து சொல்லிவிட்டு குடித்த டீக்காக பணத்தினை கொடுத்துவிட்டு மனநிறைவோடு கொஞ்ச தூரம் நடக்க ஆரம்பித்தேன்...சில அடி தூரம் தான்..மெல்லமாய் தூறல்கள் எட்டிப்பார்த்தன...பிறகு கொட்டென கொட்டித் தீர்த்தது மழை....

நல்லோர் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை

நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Friday, September 19, 2014

கரம் - 15 (19.9.2014)

மேயர் தேர்தல் 


நேற்று கோவையில் மேயருக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது.நாம தான் ஜனநாயக கடமையை செவ்வனே செய்வதில் வல்லவர்கள் ஆயிற்றே..அதனால் ரொம்ப சீக்கிரமா பத்து மணிக்கு போனா ஓட்டுச்சாவடி இப்ப இருக்கிற தியேட்டர்கள் போல காத்து வாங்கிட்டு இருக்கு...மக்கள் யாருக்கும் இண்ட்ரஸ்ட் இல்ல போல...சீக்கிரம் ஓட்டு போட்டுட்டு வந்துட்டேன்...போன தேர்தலில் ஒவ்வொரு ஓட்டுச்சாவடியும் திருவிழா போல இருந்துச்சு..ஆனா நேற்று சுத்தம்...கட்சிக்காரங்களே ஒரு ஈடுபாடு இல்லாம தான் இருந்தாங்க....ஆளுங்கட்சியில் பணப்பட்டுவாடா பக்காவா நடத்திட்டதா ஒரு நியூஸ் வேற....இந்த மாதிரி இடைத்தேர்தல் நடத்தி ஏன் மக்கள் வரிப்பணத்தினை வீணாக்கணும்....பேசாமா ஆளுங்கட்சியே அன்னபோஸ்டா வந்திடலாமே.....கோவையில் இருக்கிற வாக்காளர் எண்ணிக்கையில் பாதிக்கும் மேல் வாக்களிக்க செல்லவில்லையாம்...அப்புறம் எதுக்கு எலக்சன்..?

***********************************

சமீபத்தில் பார்த்த படங்கள்:
God's Own Country - மலையாளம்.
ரொம்ப நாளைக்கப்புறம் மலையாளத்தில் வந்த நல்ல படம்.ஒரு நாளில் மூன்று பேர் வாழ்வில் நடக்கும் சம்பவம் தான் கதை.பகத், சீனிவாசன், லால் இவங்க மூணு பேரை சுற்றியே படம்.ரொம்ப உணர்வுபூர்வமான கதை.படம் பார்க்கும் போது காட்சிகள் நம்மையறியாமல் நெகிழ வைக்கிறது.அடுத்தடுத்த திருப்பங்கள் என கதை நம்மை படத்தோடு ஒன்றச்செய்கிறது.பகத்பாசில் எப்பவும் போல அட்டகாசம் தான்.எந்தவித கேரக்டர்னாலும் அசத்தலாய் செய்கிற நடிகன்..கண்டிப்பாய் பார்க்கவேண்டிய படம்..

*****************************************

சலீம் - தமிழ்
”நான்” படத்தின் தொடர்ச்சியாய் வந்திருக்கும் இந்தப்படமும் கொஞ்சம் இண்ட்ரஸ்டாக இருக்கிறது.விஜய் ஆண்டனி இரண்டாவது ஹிட் அடித்திருக்கிறார்.மஸ்காரா பாடலும், உன்னைக்கண்ட நாள் முதல் பாடலும் நன்றாக இருக்கிறது.கொஞ்சம் திரில்லர்.இரண்டாவது பாதி விறுவிறுப்பாக செல்கிறது.படம் பார்க்கலாம்.

பதிவர் சந்திப்பு
உலக தமிழ்ப்பதிவர்களின் மூன்றாம் ஆண்டு சந்திப்பு மதுரையில் வருகிற அக்டோபர் மாதம் 26ம் தேதி நடைபெற உள்ளது.வர விருப்பம் உள்ள பதிவர்கள் இந்த இணைப்புக்கு போய் பேரைப்பதிவு செய்துக்குங்க...ஜிகர்தண்டா தருவாங்களாம்...(டிவிடி இல்ல...ட்ரிங்க்...)



பதிவர் சந்திப்பு - மதுரை


நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Friday, September 5, 2014

கோவை மெஸ் - வளர்மதி மெஸ், ரேஸ்கோர்ஸ், கோவை

ஒரு மதிய நேரம்...நம் பதிவுலக படைகளோடு ( வெளிநாட்டில் இருந்து வந்திருந்த விக்கியுடனும், வெளியூரிலிருந்து வந்திருந்த ஆபிசருடனும் அப்புறம் நம்மூரின் பிரபல பதிவரும் பெண் பெயருடன் இயங்குபவருடனும் (கிசு...கிசு..) சென்றோம்.இன்னொரு புகழ்பெற்ற பதிவர் பாண்டியன் மட்டை ஊறுகாயோடு  ரூமிலேயே மட்டையானதால் அவரை விட்டுவிட்டு சென்றோம்.
அதிகாலையிலேயே அம்மணிகள் ரேஸ்கோர்ஸ் ரோட்டில் வாக்கிங் சென்று முடித்துவிட்டதால் அந்த மதிய வேளை வெறிச்சோடிக்கிடந்தது.ஆனாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலர் மனதில் பால் வார்த்தனர்.
வளர்மதி மெஸ் இருக்கும்  ரோட்டில்  படை பரிவாரங்களோடு நாங்கள் நுழைய, சாலையின் ஒருபுறம் வரிசை கட்டி வாகனங்கள் இருக்கவும், அதன் உரிமையாளர்கள் அனைவரும் ஹோட்டலில் பலவித உயிரினங்களோடு மல்லுக்கட்டிக்கொண்டிருந்தனர், அவ்வேளையில் நாங்களும் உள்ளே நுழைந்தோம்..

மெல்லிய சில்லென குளிருடனும், மென் இசையுடனும் பலவித மணங்களுடன் நிரம்பியிருந்த உணவகத்தில் எங்களை வரவேற்ற உரிமையாளர் தோதான இடத்தில் அமரவைத்தார்.சோத்துக்கடை உரிமையாளர் ஏற்கனவே எங்களின் வருகையை அவரிடம் சொல்லி இருந்தபடியால் வரவேற்பு பலமாக இருந்தது...

யூனிபார்மிட்ட யுவன்களும் யுவதிகளும் நம்ம பாஷையில் அம்மணிகள்( அதுவும் நேபாள நாட்டு) அங்குமிங்கும் அலைந்து பரிமாறிக்கொண்டிருந்தனர்.
தட்டுக்களாலும், பதார்த்தங்களாலும் நிரம்பியிருந்த டேபிள்களை சுற்றியிருந்த குடும்பங்கள் உயிரினங்களை பதம் பார்த்துக்கொண்டிருந்தனர்.
அந்த ஏசி ஹாலே நிரம்பியிருந்தது பலவித உணவு வாசனைகளால்..

பசியினை ஏகத்திற்கும் எதிர்பார்க்க வைத்திருந்த அந்த நேரத்தில் மெனு கார்டோடு உரிமையாளரே வர மெனுக்கள் ஒவ்வொன்றாய் அவரின் ஆர்டரில் ஏற்றப்பட்டது...

மட்டன் பிரியாணி, இலையில் வைத்து சுடப்பட்ட மீன், பிச்சிப்போட்ட கோழி, நெத்திலி மீன் ஃப்ரை என வரிசைக்கிரமமாய் வந்து சேர்ந்தது எங்கள் முன் தண்ணீர் தெளித்து வைக்கப்பட்ட தலைவாழை இலையில்...

பிரியாணியின் மணம் நம் நாசியை துளைக்க, கொஞ்சம் எடுத்து வாயில் வைக்க சுவை மிக சூப்பராக இருக்கிறது.உதிரிஉதிரியான மசாலா சேர்த்த சீரக சம்பா அரிசி சாப்பிட சுவையாக இருக்கிறது.மட்டன் பஞ்சு போல் மென்மையானது...அடடா...முகேஷ் ஞாபகம் வருதே... மட்டன் மிக மிருதுவாக இருக்கிறது.சாப்பிட சுவையாக இருக்கிறது.

அடுத்து இலையோடு வைத்து வேகவைக்கப்பட்ட மீன் மிக சுவையாக இருந்தது.வாழையிலையின் மணத்தோடு மீனின் சுவையும் சேர்ந்து புதுவித சுவையை கொடுக்கிறது

பிச்சிப்போட்ட கோழி...இதுவும் மெனுகார்டில்ட் இருக்கிற பெயர்தான்.கோழி வறுவல்தான்..ஆனால் கோழியை பிச்சி பிச்சி போட்டு இருக்கின்றனர்.சுவை மிக சூப்பராக இருக்கிறது.காரம் மணம் சுவை திடம் என திரி ரோசஸ் போல சூப்பராக இருக்கிறது.

நெத்திலி ஃபிரை.... வட்ட வடிவ சூரியனைப்போல் அலங்காரம் செய்யப்பட்டு எங்கள் டேபிளை அலங்கரித்தது...கொஞ்ச நேரம் தான்..சீக்கிரம் எங்களது வயிற்றுப்பகுதியில் மறைந்து விட்டது.
மொறு மொறுவென ஃப்ரெஞ்ச் ப்ரை போல சுவை...

அதற்கப்புறம் சாதம்....வகை வகையான குழம்புகளை ஒவ்வொன்றாய் ஊற்றி கலந்து பிசைந்து சாப்பிடும் போது டேஸ்ட் தூள் பறக்கிறது.
எப்பவும் அரிசி சாதத்தினை தொடாத விக்கி அவர்கள் அன்று நாட்டுக்கோழி குழம்பு, மட்டன் குழம்பு, மீன் குழம்பு, ரசம் என ஒரு பிடி பிடித்து விட்டு தான் கை கழுவ போனார்...

விலை நார்மலாகத்தான் இருக்கிறது.ஆனால் சுவை நன்றாக இருக்கிறது.
நன்றாக சாப்பிட்டுவிட்டு வரலாம்.

மிகத்திருப்தியாக சாப்பிட்டுவிட்டு கை கழுவ போன போது வேக வேகமாக ஓடி வந்தார் உரிமையாளர்..என்ன..அதற்குள் சாப்பிட்டு முடித்துவிட்டீர்கள் என்ற கேள்விக்கணையோடும், உங்களுக்காக ஒரு புதுவித குழம்பினை செய்து கொண்டிருந்தேன் அதற்குள் வந்துவிட்டீர்களே என கடிந்து கொண்டார்..அடுத்த முறை வரும்போது கண்டிப்பாய் இன்னொரு வகையினை ருசி பார்த்துவிடுகிறோம் என சொல்லிவிட்டு விடைபெற்றோம்..

வளர்மதி மெஸ் - ரேஸ்கோர்ஸ் ரோட்டில் போட்டோ செண்ட்ருக்கு எதிரில் உள்ள ரோட்டில் வலது புறம் இருக்கிறது

முன்னாடியே டேபிள் புக் பண்ணனும்னா 98434 11190

நேசங்களுடன்
ஜீவானந்தம்


இன்னும் கொஞ்சம்...

Wednesday, August 13, 2014

கோவை மெஸ் - அவ்வா இட்லி கடை, பூ மார்க்கெட், (செளடேஸ்வரி கோவில் பின்புறம்), கோவை.

ஒரு இரவு நேரம்..மணி ஒன்பதை தாண்டிக்கொண்டிருக்க, நண்பரோடு பேசிக்கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை.பசி வயிற்றைக் கிள்ள ஆரம்பிக்கும் போதுதான் சாப்பிடும் எண்ணம் வர,  எங்கு செல்வது கடை இழுத்து மூடும் நேரமாச்சே, கையேந்தி பவனில் தான் சாப்பிட வேண்டி இருக்குமோ என நண்பரைக் கேட்க அவரோ ஒரு கடை இருக்கு ரொம்ப லேட்டாத்தான் ஆரம்பிப்பாங்க, நான்வெஜ்லாம் இருக்காது, ஒன்லி சைவம் தான்…ஆனா ஆம்லேட், ஆப்பாயில் கிடைக்கும் என  சொல்லி நெஞ்சிலே பால் வார்த்தார்.
அடுத்த பத்தாவது நிமிடம் அந்த கடை இருக்கும் சந்தில் நுழைந்திருந்தோம்.கொஞ்ச தூரம்தான் சென்றிருப்போம், இட்லியின் மணம் நம் நாசியை துளைத்தது.பக்கத்திலேயே பிரம்மாண்டமான கோவில் மதில் சுவர் இருக்க ஒரு ஓரமாய் வண்டியை பார்க் செய்தோம்.ஒரு ஓட்டு வீடு தான்.வாசல் முன்பு கும்பலாய் நின்று கொண்டிருந்தனர்.
இட்லி அவிக்கும் வாசமும், பட்டர் உருகும் வாசமும் வெளியே வந்து கொண்டிருந்தது.உள்ளே எட்டிப்பார்த்ததில் நான்கு பேர் மட்டுமே அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருக்க, ஒரு வயதான பாட்டி இட்லி சுடும் வேளையிலும், இன்னொரு வயதான பாட்டி தோசை சுடுவதிலும், ஒரே ஒரு வயதான ஆண் அவ்வப்போது பரிமாறிக்கொண்டிருக்க, அந்த ரூமே நிறைந்து கொண்டிருந்தது ஆட்களிலாலும் வாசத்தினாலும்…சிறு அறைதான்.பத்துக்கு பத்து கூட இருக்காது.இடவசதி என்பது குறைவுதான். அதிகபட்சம் நான்குபேர் தான் உட்கார முடியும். அப்படியிருந்தும் ஒவ்வொருத்தராய் சாப்பிட்டு வெளியேறிக்கொண்டிருக்க, வாசலில் நின்றவர்கள் உள்ளே புகுந்து கொண்டிருந்தனர்.

எங்களுக்கும் அரைமணி நேரம் காத்திருந்தது.ஒருவழியாக 10.20க்கு அமர இடம் கிடைத்தது.பொறுமையும் சகிப்புத்தன்மையும் இருப்பவர்களால் மட்டும் தான் அங்கு செல்ல வேண்டும் என்கிற நிலை உருவாகியிருந்தது.ஆனால் இலை போட்டு இரண்டு இட்லியை வைத்து மிளகாய்ச்சட்டினியும், தேங்காய் சட்டினியும், கத்தரிக்காய் தொக்கும் வைத்து அதை தொட்டு வாயில் வைக்கும் வரை தான்….இந்த சுவைக்காக எவ்ளோ நேரமானாலும் காத்திருக்கலாம் என்று எண்ண தோன்றியது.
ஒரு பாட்டியின் வேலை என்னவெனில் அமர்ந்த இடத்திலேயே இட்லி மாவு ஊத்துவது தான் வேலை…சுட சுட இட்லி வெளியேறிக்கொண்டிருக்கிறது.உடனேயும் தீர்ந்து விடுகிறது.இட்லியை மிளகாய் சட்னியில் தொட்டு வாயில் வைக்கும் போது சுள்ளென இறங்குகிறது காரமும் சுவையும்…கத்தரிக்காய் தொக்கு சொல்லவே வேண்டாம்…செம டேஸ்ட். நாங்களோ இட்லியை தேங்காய்ச்சட்னியில் தொட்டு சாப்பிட பக்கத்தில் இருந்தவரோ பிசைந்து சாப்பிட்டு கொண்டிருந்தார்.
அதுவும் செம டேஸ்ட்…இட்லி மட்டும் கிட்டத்தட்ட 12க்கும் மேல் பாஸாகியது வயிற்றின் உள்ளே..அதற்கப்புறம் பட்டர் தோசை ஆர்டர் செய்ய கெட்டி தோசைக்கல்லில் நீர் தெளித்து இரண்டு கரண்டி மாவினை ஊற்றி தட்டு அகலத்துக்கு வட்டமிட்டு பின் திருப்பி போட்டு தோசையில் பட்டரை தடவி மீண்டும் ஒரு முறை திருப்பி, தோசை வெந்தவுடன் வாசத்துடன் எங்கள் இலையை தேடி வந்தது.மீண்டும் அதே சட்னி வகைகள்…தோசைக்கு ஏற்றதாய் இருக்க, மீண்டும் அதே சுவை…..தோசையில் தேங்காய் சட்னி ஊறி, பிய்த்து பிய்த்து சாப்பிட சீக்கிரம் காலியானது.
அதற்கப்புறம், கலக்கியும், ஆம்லேட்டும் எங்கள் இலையை அலங்கரித்தன…அனைத்தையும் சாப்பிட்டு வெளியேற உடனே எங்கள் இடத்தினை இன்னொரு குழு கைப்பற்றி ஆரம்பிக்க ஆயத்தமானது.
இந்த இடைவெளியில் அவ்வப்போது பார்சலும் பகிரங்கமாய் வெளியேறிக் கொண்டிருந்தன.
இந்தக்கடைக்கு பெயர் எதுவுமில்லை.இரண்டு பாட்டிகள் தெலுங்குல அவ்வாக்கள் நடத்துவதால் அவ்வா இட்லிகடை என்றே அழைக்கின்றனர்.
ஒரு தடவை போனாலே வயிறு முட்ட சாப்பிட்டுவிட்டு வருவீர்கள்...அவ்வளவு சுவை இருக்கிறது.
இந்தக்கடை இரவு நேரம் மட்டுமே செயல்படும் 9 மணியிலிருந்து 12 வரை செயல்படும்
போன் - 9952259831
விலை குறைவு தான்.இட்லி 6 தோசை 15, பட்டர் 20 என இருக்கிறது.கண்டிப்பா கார் பார்க்கிங் இல்லை.


நேசங்களுடன்
ஜீவானந்தம்


இன்னும் கொஞ்சம்...