Wednesday, February 24, 2016

மலரும் நினைவுகள் : தேர்தல் அனுபவங்கள்

தேர்தல் அனுபவங்கள்
                   என் பால்ய காலம்...அரை டிரவுசர் அணிந்து கொண்டு வெயிலில் அலைந்து திரிந்து கொண்டிருந்த காலம்.ஆரம்பப்பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலம்.தேர்தல் அறிவிப்பு வந்தாலே போதும் எங்களது கிராமம் திருவிழாக்கோலம் பூண்டுவிடும்.ஒவ்வொரு கட்சிக்காரர்களும் அவரவர் கொடிக்கம்பங்களை கட்சி பெயிண்ட் அடித்து ஒரு பொதுவான இடத்தில் நட்டு வைத்து கட்சிக்கொடி தோரணங்களை குறுக்கும் நெடுக்குமாக கட்டி தொங்க விடுவர்.கொடிக்கம்பங்களும் அருகருகே இருக்கும்.பொதுவான இடம் என்பது ரோட்டோரப்பகுதி. பிரச்சாரத்திற்கு வரும் முக்கிய தலைவர்கள் வேனில் நின்றபடியே கொடி ஏத்துவார்கள்.
            அதற்காகவே அத்தனை கட்சி கொடி மரங்களும் ஒரு இடத்தில் அருகருகே வைத்து இருப்பார்கள்.ஒரு சில இரண்டாம் கட்ட தலைவர்கள் மட்டும் இறங்கி வந்து கொடி ஏத்துவர்.எங்கள் கிராமத்திற்கு எம்ஜியார் கருணாநிதி தவிர அரசியலில் உள்ள அத்தனை பிரபலங்களும் வந்து இருக்கின்றனர். அரசியல்வாதிகளை விட நடிகர்களை பார்க்கத்தான் கூட்டம் அலைமோதும்.எப்படியும் இரவு நேரத்தில் தான் ஒவ்வொரு கிராமம் கிராமமாக பிரச்சாரம் செய்துவிட்டு வருவார்கள்.அவர்கள் வரும் வரை பிரச்சார பாடல்களுக்கு டான்ஸ் ஆடிக்கொண்டும் விளையாடிக் கொண்டும் இருப்போம்.

                  சிறுவர்களான எங்களுக்கு ஊரிலுள்ள சுவர்களில் கட்சி சின்னங்களை வரைவது தான் பொழுது போக்கு.போதாக்குறைக்கு கட்சிக்காரர்களும் சொல்லிவிடுவார்கள் ரிசர்வ் பண்ணுவதற்கு.நாங்களும் கரிக்கட்டையை எடுத்து சின்னங்களை வரைய ஆரம்பித்து விடுவோம்.எங்களுக்கு அப்புறம் தான் பக்கா ஸ்பெசலிஸ்ட் ஓவியர்கள் வந்து சின்னங்களை வரைந்து வேட்பாளர் பெயர்களை எழுதிவைப்பார்கள்.அதற்கு முன் சுவர்களில் எங்கள் கைவண்ணம்தான்.
                      இப்போது இருக்கிற மாதிரி நிறைய கட்சிகள் அப்போது இல்லை.இருந்திருந்தாலும் தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை.இரட்டை இலை, உதயசூரியன் அப்புறம் காங்கிரஸ்.இதுமட்டும் தான் தெரியும். சுயேட்சையாக ஒரு சிலர் நிற்பார்கள்.அவர்கள் அந்த தேர்தலோடு காணாமல் போய்விடுவார்கள்.சட்டமன்ற தேர்தலா இல்லை பாராளுமன்ற தேர்தலா என்று கூட தெரிந்து இருக்க மாட்டோம்.ஆனால் எலெக்சன் என்று வந்துவிட்டால் போதும் எல்லா வகையான சின்னங்களையும் வரைய ஆரம்பித்து விடுவோம்.
                         ஆங்கில எழுத்து M மாதிரி இரண்டு மலையை போட்டு ஒரு வட்டம் போட்டு கதிர்களை வரைந்து விட்டால் உதயசூரியன் ரெடி..அதே மாதிரி இரட்டை இலையும் வரைவது ஈஸிதான்.ஒரு கோடு போட்டு இரண்டு இலைகளை வரைந்துவிட்டால் எம்ஜியார் சின்னம் ரெடி.கை சின்னம் வரைவது கூட மிக எளிதுதான்.கூட இருப்பவனின் வலதுகையை சுவற்றில் வைத்து அவுட்லைன் போட்டு விட்டால் கை சின்னம் ரெடி…
                        இப்படித்தான் கிராமத்தில் இருக்கிற சுவர்களில் கிறுக்கி வைத்துக் கொண்டிருப்போம்.இதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது.வீட்டுக்காரர் எந்த கட்சியில் இருக்கிறார் என்பதை அறிந்து அந்த  கட்சியின் சின்னத்தினை வரைய வேண்டும்.இல்லையெனில் மாத்து தான்..ஒரு சில வீட்டில் சின்னத்தினை மாற்றி வரைந்து விட்டு கன்னாபின்னா பேச்சுக்களை வாங்கியதும் உண்டு.
                 தேர்தல் பிரச்சாரம் ஆரம்பித்தால் போதும் ஊரெல்லாம் கட்சி கொள்கை பாட்டுகள் ஒலிக்க ஆரம்பித்துவிடும்.அதில் முன்னாடி இருப்பது திமுகவின் நாகூர் ஹனிபாவின் வெண்கலக்குரல் தான்.

கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே.

ஓடி வருகிறான் உதயசூரியன்…

பாளையங்கோட்டை சிறையினிலே…..பாம்புகள் பல்லிகள் நடுவினிலே….

இப்படி ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கும்.அதிகம் முணுமுணுத்துக் கொண்டிருப்பது திமுகவின் பிரச்சார பாடல்களைத்தான்.ஆனால் எம்ஜிஆர் கட்சியைப் பொறுத்தளவு அவரது திரைப்பட பாடல்கள் தான் பிரச்சார பாடல்கள்.எம்ஜிஆரின் பாடல்கள் அது ஒரு தனி ரகம்.நாகூர் ஹனிபா குரல் ஈர்த்த அளவுக்கு எம்ஜிஆரின் பாடல்கள் ஈர்க்கவில்லை.மிகவும் கருத்து செறிந்த பாடல்கள் என்றாலும் அதென்னவோ பிடித்ததில்லை. எம்ஜிஆர் படம் மட்டும் விரும்பி பார்ப்போம்.கத்திச்சண்டை மட்டும் எங்களை இரு நாட்டு அரசர்களைப் விளையாட வைத்துக் கொண்டிருக்கும்.எம்ஜிஆர் சினிமாப் பாடல்கள் ஒலித்தாலும் விரும்பிக் கேட்டதில்லை.ஆனாலும் எம்ஜிஆரின் தனிப்பட்ட செல்வாக்கே அவரை தொடர்ந்து முதலமைச்சர் ஆக்கியது.
                  தேர்தல் நாள் அன்று ஊரே திருவிழாக்கோலம் தான்.ஆங்காங்கே கட்சிகளின் தற்காலிக பந்தல், கொடி மற்றும் தோரணைகளால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும்.அவரவர் கட்சியின் பிரமுகர்கள் வாக்காளர் லிஸ்ட்டை வைத்துக்கொண்டு பூத் சிலிப் தந்து கொண்டிருப்பர்.நாங்களும் எங்கள் பங்குக்கு நாங்களும் பூத் சிலிப்பில் பேர் எழுதிக் கொடுத்துக்கொண்டு இருப்போம்.எப்பவும் போல ரேடியோ அலறிக்கொண்டிருக்கும்.பாதுகாப்புக்கு ஒரு சில காவல் அதிகாரிகள். வாக்குச்சாவடியை நாங்கள் படித்த பள்ளியிலேயே அமைத்து இருப்பார்கள்.பள்ளிக்கூட பென்ச் நாற்காலிகள் போட்டு நான்கைந்து அரசுப்பணியாளர்கள் அமர்ந்து வரிசையாய் வாக்காளர்களுக்கு சின்னங்களை கொடுத்து உள்ளே ஓட்டுப் போட அனுப்புவர்.விரலில் மை வைத்து ஓட்டு போட்ட பெருமிதத்துடன் வெளியில் வருபவர்களை குத்துமதிப்பாக விசாரித்து கொள்வோம்.
              வீட்டில் உள்ள வயசானவர்கள், நடக்க முடியாதவர்களை தூக்கிக்கொண்டு வாக்குச்சாவடிக்கு கொண்டு வரும் பழக்கம் அன்று முதல் இன்றும் தொடர்ந்து கொண்டு வருகிறது.பக்கத்து ஊர்களுக்கும் சேர்த்து எங்களது ஊரிலேயே வாக்குசாவடி அமைத்து இருப்பார்கள்.அதனால் அந்த ஊர்க்காரர்கள் வேன் வைத்து வாக்காளர்களை கூட்டி வந்து கேன்வாஸ் செய்வார்கள்.வாக்கு தினத்தன்று கூட வாக்குச்சாவடி முன் நின்று வாக்காளர்களிடம் ஓட்டு கேட்டுக் கொண்டிருப்பர் உள்ளூர் கட்சிக்காரர்கள்.உள்ளூரிலேயே ஒரு சில வீடுகளில் பந்தி பரிமாறிக்கொண்டு இருப்பார்கள்.ஓட்டு போட வருபவர்கள் மூக்கு பிடிக்க தின்றுவிட்டு தான் ஓட்டு சாவடிக்கு செல்வார்கள்.
                    வாக்கு போட்டவுடனோ அல்லது போடுவதற்கு முன்போ பதுக்கி வைத்து இருக்கும் சாராயங்கள் வெளிவரும் இவர்கள் போடுவதற்காக.எப்படியோ எதோ ஒரு வகையில் கேன்வாஸ் செய்துகொண்டே இருப்பார்கள்.கொஞ்சம் லேட்டாகிப் போகிறவர்களின் ஓட்டு இன்னும் இருக்குமா என்றால் அது சந்தேகமே….அதற்குள் கள்ள ஓட்டினை குத்தி இருப்பார்கள்.
              சிறுவர்களான எங்களுக்கு வேறு வேலை இல்லை.அங்குமிங்கும் அலைந்து கொண்டே இருப்போம்.எங்களுக்கு பிடித்த கட்சியின் பிட் நோட்டிஸை ஓட்டு போட வருபவர்களிடம் கொடுத்துக் கொண்டிருப்போம்.தேர்தல் முடியும் வரை எங்களுக்கு ஒரே ஜாலியாக இருக்கும்.தேர்தல் முடிந்தவுடன் யார் ஜெயிப்பார் என்று பந்தயம் கட்டுவோம்.என்ன இருந்தாலும் எம்ஜிஆர் தான் ஜெயிப்பார் என்று சொல்கிற அளவுக்கு எங்களுக்கு அவரைப்பிடித்து இருந்தது.அவர் நாட்டு மக்களுக்கு என்ன செய்தார் என்பெதெல்லாம் தெரியாது,ஆனால் எம்ஜிஆரை பிடிக்கும்.
              தேர்தல் முடிந்து ரிசல்ட் வந்தவுடன் அன்று எம்ஜிஆரின் திரைப்படங்கள் எங்கள் ஊர் மைதானத்தில் திரை கட்டி போடுவர்.பாயை எடுத்துக்கொண்டு முன்கூட்டியே இடம்பிடிக்க சென்றுவிடுவோம்.

                  ஆக மொத்தத்தில் சிறுவயதில் தேர்தல் என்பது ஒரு மகிழ்ச்சிகரமான விசயமாகவே எங்களுக்கு தெரிந்தது.அப்படிப்பட்ட தேர்தல் நிகழ்வுகள் இன்று ஒரு சடங்காக ஆகி இருக்கிறது.எங்களை பால்ய காலத்தில் மகிழ்வித்த தேர்தல் இன்று சுத்தமாய் இல்லை.தேர்தல் என்றாலே பணம் கொடுத்து ஓட்டை விலைக்கு வாங்கும் நிலைமைக்கு ஆட்சியாளர்கள் வந்துவிட்டனர்.பணத்தை எதிர்பார்த்து வாக்காளர்களும் மாறிவிட்டனர்.. எண்ணிலடங்கா கட்சிகள் பெருகிவிட்டன. வாக்குசீட்டுக்கு பதில் ஓட்டு மெசின் வந்துவிட்டது. ஆளுங்கட்சி, எதிர்கட்சி என மாறி மாறி ஆட்சியாளர்கள் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துவிட்டனர். இலவசங்கள் மட்டுமே நாட்டை ஆளுகின்றன.ஒரு சில நல்லவைகள் நடந்தாலும் நாட்டின் பொருளாதாரம் உயர்கிறதோ இல்லையோ ஆனால் மாறி மாறி ஆளுகின்ற ஆட்சியாளர்களின் பொருளாதார நிலைமை மட்டும் உயர்ந்து கொண்டே இருக்கிறது இன்றைய காலகட்டத்தில்..


நேசங்களுடன்
ஜீவானந்தம்



 


இன்னும் கொஞ்சம்...

Friday, February 12, 2016

கோவை மெஸ் - அடைபிரதமன் , பிரியா பாலடை பாயாசம்,ஜி.பி சிக்னல், கோவை

கேரளாவின் மிக பிரசித்தி பெற்ற ஒரு உணவு அடைபிரதமன்.ஓணம் திருவிழாவில் படைக்கப்படுகிற மிக சுவையான உணவு இந்த அடைபிரதமன்.நம்மூர்ல பண்ற பாயாசம் போல இருக்காது.அரிசி மாவை வேகவைத்து அடை செய்து பின் தேங்காய்பால், பால், சர்க்கரை சேர்த்து செய்யப்படுகிற மிக சுவையான பதார்த்தம் இது...குடிக்க குடிக்க தெவிட்டாத ஒரு வகை உணவு.
கேரளாவில் மட்டும் கல்யாணம் மற்றும் வீட்டு விழாக்களில் இது முக்கியமாய் இடம் பெறும்.நம்மூரில் இது கிடைப்பது அரிதே..ஏதாவது கேரள ஹோட்டல்களில் மட்டும் கிடைக்கும்.நம்மூரில் வசிக்கின்ற மலையாளிகள் வீட்டில் ஏதாவது விசேசத்திற்கு செய்வார்கள்.
                எனக்கு மிகவும் பிடித்த பாயாசம் இது.கேரள நண்பர்கள் வீட்டில் ஏதாவது விசேசம் என்றால் அங்கு ஆஜராகிவிடுவேன்.கடைசியாய் என் நண்பரின் திருமணத்தில் சுவைத்தது.அதற்கப்புறம் வாய்ப்பு கிட்டவில்லை. கடந்த ஒரு சில மாதங்களாகவே மாலை நேரத்தில் நூறடி ரோட்டில் சிக்னலுக்காக வெயிட் பண்ணிக்கொண்டிருக்கும் போது, இந்த பிரியா பாலடை பாயசம் கடை பூட்டியே இருக்கும்.ஆனால் விளம்பர போர்டு மட்டும் நம்மை வரவேற்றுக்கொண்டிருக்கும்.எப்போ திறப்பார்கள் என்கிற விவரம் எதுவும் தெரியவில்லை...இப்படியே ஒரு சில மாதங்கள் ஓடிவிட்டன..
கடைசியாய் இரு தினங்களுக்கு முன் ராமகிருஷ்ணா மருத்துவமனை ஐயப்பன் கோவில் வழியாய் ஜி.பி சிக்னல் வரும் போது அதிசயமாய் திறந்து கிடந்தது.உடனே வண்டியை ஓரங்கட்டி கடைக்குள் நுழைந்து விட்டேன்.

                மலையாள சேச்சி தான் நம்மை வரவேற்றது.அடைபிரதமன் இருக்கான்னு கேட்டதும், ஓ....இருக்கே என தமிழுமலையாளத்தில் பறைஞ்சு, ஒரு டீ கப்பில் ஊற்றிக் கொடுக்க, எடுத்து உதட்டில் வைத்து ஒரு சிப் அருந்த,  ஆஹா....ஆஹா....செம டேஸ்ட்...நாவில் அதன் சுவை பரவ பரவ என்ன ஒரு ஆனந்தம்...பால் பருக பருக, இடையிடையே வரும் அரிசி மாவின் அடை சுவையும் பாலுடன் கலந்து ஒன்றாய் இறங்க அமிர்தம்...... போங்கள்....
கெட்டியான பாலில் நன்கு வெந்திருந்த அடையின் சுவை இன்னமும் நம் நாவில் கலந்திருக்கிறது.ஒரு கப் குடித்து முடித்தவுடன், மீண்டும் இன்னொரு கப்  என ஆட்டோமேடிக்காய் கேட்க ஆரம்பித்தது நம் மனது.இன்னொரு கப் ஊற்றித்தர பொறுமையாய் ரசித்து ருசித்து கொண்டபடியே சேச்சியிடம் சம்சாரிக்க ஆரம்பித்தேன்...
ஏன்  சேச்சி,,,எப்போ பார்த்தாலும் கடை பூட்டியே கிடக்கே..என விளிக்க, இல்லை... இல்லை... காலை  10 டூ 6  தான்...பூட்டிட்டு கிளம்பிடுவேன்.ஆறு மணிக்கு மேல் ஒரு நிமிசம் கூட இருக்கமாட்டேன் என அரசாங்க உத்தியோஸ்தர் ரேஞ்சில் பறைஞ்சது சேச்சி...


            கடையை சுற்றி முற்றி பார்த்ததில் ஏகப்பட்ட ரெடிமேட் வகையறாக்கள்..அதில் இந்த அடைபிரதமனும் இருக்க, எப்படி செய்வது என கேட்க, 3 லிட்டர் பாலில் இந்த ரெடிமேட் அடையை போட்டு குறைந்தபட்சம் மூன்று மணி நேரம் கொதிக்க வைத்து, பாலின் நிறம் மாறினதுக்கு அப்புறம் கொஞ்சம் முந்திரி, ஏலக்காய் போட்டு இறக்கினால் அடை பிரதமன் ரெடி என்றது சேச்சி....
எல்லாம் கேட்டு முடிக்கையில் கப்பில் இருந்த அடைபிரதமனும் காலியாகி இருந்தது.காலையில் வாங்க...நல்லா சூடா இருக்கும் செம டேஸ்டா இருக்கும் என சொல்ல,  அடைபிரதமனுக்கு உண்டான காசினை கொடுத்து விட்டு, ரெடிமேட் பாக்கெட் ஒன்றும் வாங்கிகொண்டு, மீண்டும் வருவேன் என சொல்லிவிட்டு விடைபெற்றேன் சேச்சியிடம்...



வீட்டிற்கு வந்தவுடன், அந்த அடை பிரதமன் பாக்கெட்டில் அரைபாக்கெட் மட்டும் எடுத்து கொஞ்ச நேரம் சுடுநீரில் ஊறவைத்து, பின் 2 லிட்டர் பாலில் போட்டு கொதிக்க வைக்க, இரண்டு மணி நேரம் கழித்து பார்க்க பால் கெட்டியாக, அதில் அடையும் வெந்து இருந்தது.பின் முந்திரி கொஞ்சம் கலந்து பின் சூடாய் ஒரு டம்ளரில் ஊற்றி குடிக்க,, ஆஹா அதே சுவை...கொஞ்சம் கூட மாறாமல்.....பேஷ்...பேஷ்...ரொம்ப நன்னாயிருக்கு....

அடை பிரதமன் ஒரு கப் விலை.20ரூபாய்.ரெட்மேட் பாக்கெட் விலை 45 ரூபாய்.இன்ஸ்டெண்ட் பாக்கெட் விலை 120.
இன்னும் நிறைய வெரைட்டி ரெட்மேட் உணவு பொருட்கள் இருக்கின்றன  இந்த பிரியா பாலடை பாயாச கடையில்..

ஜி.பி சிக்னல் அருகில் உள்ள நியூசித்தாபுதூர் ஐயப்பன் கோவில் அருகில் இந்த கடை இருக்கிறது.கேரள உணவான அடைபிரதமனை ருசிக்கனுமா, 12 மணிக்கு மேல வாங்க...சூடா சாப்பிடலாம்....

நேசங்களுடன்
ஜீவானந்தம்





இன்னும் கொஞ்சம்...

Monday, January 25, 2016

கரம் - 20

கரம்
படித்தது :பு(து)த்தகம்
மெளனத்தின் சாட்சியங்கள் :
கோவையில் இரு அமைப்புகளுக்கு  ஏற்பட்ட மோதலே கொலை, குண்டுவெடிப்பு, கலவரம் என நீண்டு கோவையை சின்னா பின்னமாக்கிவிட்டது.இந்த குண்டுவெடிப்பு நிகழ்வினை நாவலாக காட்சிப்படுத்தி இருக்கிறார் ஆசிரியர்.சிறையிலிருந்து விடுதலையாகும் ஒரு அப்பாவி முஸ்லீம் இளைஞனின் பார்வையில் கதை விரிகிறது.இரு மதங்களின் போர்வையில் நடத்திய ஒரு பயங்கர நிகழ்வு இந்த கோவை குண்டுவெடிப்பு.இதற்கு பலியானது அப்பாவிகள்தான்.கோவைக்கு ஏற்பட்ட தீராத களங்கமும் இந்த குண்டு வெடிப்பினால்தான்.
கோவை பெரிய கடை வீதி, டவுன்ஹால், கோட்டைமேடு, உக்கடம் பகுதிகளில் உள்ள இந்து முஸ்லீம் வியாபாரிகளின் தொழில் போட்டியே இந்த கலவரத்திற்கு காரணம் என்றும் அறியப்படுகிறது..
இந்த கலவரக்காட்சிகளை கண்முன்னே நிறுத்துகிறார் எழுத்தின் வடிவில்..பதபதைக்கிறது படிக்க படிக்க....
பார்த்தது :
2015 இறுதியில் தியேட்டருக்கு சென்று பார்த்த படம் பூலோகம்...
படம் மிக அருமை..ஒரு சேனலின் அதிபருக்கும், குத்துச்சண்டை வீரருக்கும் நடக்கும் யுத்தமே இந்த பூலோகம்...படம் மிக நன்றாக இருக்கிறது...

2016 இல் தியேட்டருக்கு சென்று பார்த்த முதல் திரைப்படம்
தாரை தப்பட்டை...
பாலாவின் அதே டிரேட் மார்க் படம்..செம...சின்ன சின்ன ஹாஸ்யங்களுடன் நன்றாகவே இருக்கிறது.நிறைய விமர்சனங்களை படித்து தொலைத்ததினால் என்னவோ ஹீரோ எப்போ வில்லனின் குரல்வளையை கடிப்பான்......கொல்வான் என்கிற எதிர்பார்ப்பு வந்து தொலைக்கிறது.இனி சத்தியமாய் விமர்சனம் படிக்கவே கூடாது.ஒவ்வொருவருக்கும் ஒரு ரசனை இருக்கிறது.எந்த மாதிரி மனநிலையில் அவன் படம் பார்க்கிறான் என்பதை பொறுத்து படத்தின் வெற்றி தீர்மானிக்கப்படுகிறது.என்னைப் பொறுத்த வரையில் படம் நன்றாகவே இருக்கிறது.அதிக வன்முறை, ஆபாசம் என்பதெல்லாம் இல்லை.எங்கள் ஊரில் குறவன் குறத்தி ஆட்டம் ஆடுவார்கள்.அது இன்னும் மோசமாக இருக்கும்.இந்தப்படத்தில் அப்படி ஒன்றும் ஆபாசம் இல்லை.

பாலாவின் ட்ரேட்மார்க் சோடை போகவில்லை.

ருசித்தது:
பனங்கிழங்கு:
நம்ம தோட்டத்துல விளைஞ்சது....

இப்போது பனங்கிழங்கு அரிய பொருள் ஆகிக்கொண்டு வருகிறது.பனைமரம் அழிப்பு காரணமாக இது அதிகம் கிடைப்பது இல்லை...தென்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இது கிடைக்கிறது.
பனஞ்சீம்பு..
கிழங்கை தோண்டி எடுக்கும் போது அதனுடன் உள்ள கொட்டையை இரண்டாக வெட்டினால் அதில் சீம்பு கிடைக்கும்.சாப்பிட சுவையாக இருக்கும்.இதுவும் மிக அரிதான மருத்துவ குணம் வாய்ந்த பொருள்...சாப்பிட்டுப்பார்த்தால் கொஞ்சம் இனிப்பும், உப்பும் கலந்த மாதிரி இருக்கும்.ஒவ்வொரு ஊரில் ஒவ்வொரு பெயரை சொல்கிறார்கள் இதற்கு.


நேசங்களுடன்
ஜீவானந்தம்


இன்னும் கொஞ்சம்...

Thursday, January 21, 2016

கோவை மெஸ் - போஸ்ட் ஆபிஸ் கேண்டீன் (சைவம்), R.S.புரம், கோவை

ஒரு வேலை விஷயமா R.S புரத்துக்கு காலையில் கொஞ்சம் நேரத்திலேயே கிளம்பிட்டேன்.மணி 9 ஆகவும் லேசா பசிக்க ஆரம்பித்தது.இந்நேரத்துக்கு எங்கயும் நான்வெஜ் கிடைக்காது.சைவம் தான் எங்க போனாலும் கிடைக்கும்.ரொம்ப சிம்பிளா சாப்பிடலாமே அப்படின்னு நினைக்கையில் உடனடி ஞாபகம் வந்தது போஸ்ட் ஆபிஸ் கேண்டீன் தான்.பத்து வருசம் முன்னாடி சாப்பிட்டது.ஒரு கையேந்திபவனா ஆரம்பிச்ச கேண்டீன் இன்னிக்கு செல்ப் சர்வீஸ் அளவுக்கு வளர்ந்து நிக்குது...
ரொம்ப இடவசதியோட, நல்லா வச்சி இருக்காங்க....பில் போட்டவுடன் வேணுங்கிறத சூடா சாப்பிட்டுக்கலாம்...எல்லாம் சுடச்சுட கிடைக்கும்...வாளி நிறைய சாம்பார், சட்னின்னு நிறைச்சு வச்சிருக்காங்க...
விலையும் ரொம்ப குறைவாகத்தான் இருக்கு.அளவும் அதிகமாகத்தான் இருக்கு...டேஸ்ட்டும் நன்றாக இருக்கு..
நான் காலையில் ராகி தோசையும், ஒரு பொங்கலும் வாங்கிச்சாப்பிட்டேன்...சாம்பாரும், சட்னியும், கார சட்னியும் செம காம்பினேசன்.இரண்டையும் குழைச்சு அடிக்க ஆரம்பிச்சது...வயிறு நிறைந்தபோது தான் தெரிகிறது அதிகமா சாப்பிட்டு விட்டோனோ என்று....
வடை, போண்டா, தயிர்வடை, டீ, காபி, என எல்லாம் இருக்கிறது.மதியம் மினி மீல்ஸ் முதல் வெரைட்டி ரைஸ் வரை அனைத்தும் கிடைக்கிறது...





விலை மிக குறைவுதான்.ஒரு ராகி தோசை 12 மட்டுமே, பொங்கல் 20 மட்டுமே.சப்பாத்தி 5 ரூபாய்..டேஸ்ட் நன்றாக இருக்கிறது.
R.S.புரத்தில் போஸ்ட் ஆபிஸ் காம்பவுண்ட் உள்ளே இருக்கிறது.அந்தப்பக்கம் போனா சாப்பிட்டு பாருங்க....
மாலை நேரம் போனிங்கன்னாஅம்மணிகள் புடைசூழ சாப்பிடலாம்


நேசங்களுடன்
ஜீவானந்தம்


இன்னும் கொஞ்சம்...

Saturday, January 9, 2016

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

வணக்கம்....
ரொம்ப நாளாகவே இந்த பக்கம் வரமுடிவதில்லை.ஓயாத வேலைப்பளு வேறு.நிறைய பதிவுகள் எழுத வேண்டும் என்று நினைப்பதோடு சரி.கால நேரம் ஒத்துழைப்பதில்லை.மற்றவர்களின் பதிவுகளையும் படிப்பது அரிதாகிவிட்டது.இனி தொடர்ந்து வாசிப்பை, எழுதுவதை அதிகரிக்க வேண்டும்.
கடந்த வருட தவறுகள் இந்த வருடத்தில் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.இந்த வருடத்தை அணு அணுவாய் ரசித்து இன்புறவேண்டும் என்கிற ஒரே ஆவல் தான் இருக்கிறது.
இந்த வருடத்தில் முதல் தொடக்கமே ஒரு சோக நிகழ்வு தான்.மிக நெருங்கிய நண்பரின் தாயார் திடீரென்று காலமாகிவிட்டார்.தாயாரின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள கள்ளக்குறிச்சி வரை பயணமானேன்.இந்த வருடத்தின் முதல் பயணம் சோகத்துடனே ஆரம்பித்து இருக்கிறது...இனி வருபவை அனைத்தும் நல்லவையாக இருக்கட்டும் என நம்புவோம்....



அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.அப்புறம் தாமதமான புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....

தை பிறந்தால் வழி பிறக்கும்...

நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Monday, November 30, 2015

கோவில் குளம் - ஏழுமலையான் வெங்கடாசலபதி திருக்கோவில், திருப்பதி, பகுதி - 1

திருப்பதி பயணக்கட்டுரை:

                   அடாது மழையிலும் விடாது பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர்.நீண்டு செல்லும் இரு கம்பிவேலிகளுக்கு இடையில் மழையின் சாரலில் நனைந்தும், நனையாமலும் சென்று கொண்டிருந்தோம்.செல்லும் வழியில் 300 ரூபாய் தரிசனம், விஐபி தரிசனம் என இரு வழிகள் பிரிக்கப்பட்டு பக்தர்கள் பிரிக்கப்படுகின்றனர்.அங்கு நமது டிக்கெட் சரிபார்க்கப்பட்டு உள்ளே அனுப்பப் படுகின்றனர்.அங்கும் நம்மை சோதனை செய்கின்றனர்.வெகு தூரம் சென்று கொண்டிருந்தோம் வளைந்தும் நெளிந்தும்.....ஓரிடத்தில் எங்களுக்கு முன்னால் சென்று கொண்டிருந்தவர்களின் எண்ணிக்கை நின்று கொண்டிருக்க, அங்கிருந்து எங்களின் பயணம் வெறும் அங்குலமாக மாறியது.நாங்கள் அங்குலம் அங்குலமாக நகர்ந்து கொண்டிருக்க, அவ்வப்போது கோவிந்தா....... கோவிந்தா என்கிற கோஷம் அதிர ஆரம்பித்தது....செல்லும் வழியில் பக்தர்களை தங்க வைப்பதற்கான அறைகள் நிறைய இருக்கின்றன.கண்காணிப்பு கேமராக்கள் அனைத்து இடங்களிலும் பொருத்தி வைத்து சோதனையை தீவிரப்படுத்தி இருக்கின்றனர்.

                                     சென்று கொண்டிருக்கும் வரிசையில் ஆங்காங்கே பாதுகாப்பு சோதனை வளையங்கள்.பக்தர்கள் இன்னும் கூடுதலாக சோதிக்கப்பட்டு உள்ளே அனுப்பப்படுகின்றனர்....கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் வரிசையில் மெதுவாய் ஊர்ந்து செல்ல ஆரம்பித்தோம்.கடைசியாய் எம்பெருமான் வீற்றிருக்கும் மண்டபத்தில் நுழைய ஆரம்பித்தோம்.பக்தர்கள் கூட்டம் நெருக்கித்தள்ள ஆரம்பிக்கிறது.அப்போது ஏற்படும் தள்ளுமுள்ளுவை சகித்துக்கொண்டு கோவிந்தா..... கோவிந்தா... என கோஷம் போட்டுக்கொண்டு திருப்பதி ஏழுமலையானை மனமுருக வேண்டிக் கொண்டோம்...அதற்குள் ஜர்கண்டி...ஜர்கண்டி ...என தெலுங்கில் உத்தரவு வர அங்கிருந்து நகர்ந்தோம்....

                   திருப்பதி ஏழுமலையானை சந்தித்த மகிழ்ச்சியில் அங்கிருந்த மண்டபம் ஒன்றில் அமர்ந்து கொண்டோம்...பின் அங்கிருக்கும் ஒரு சில தெய்வங்களை வணங்கிவிட்டு, வெளியேறினோம்.அடுத்து லட்டு கவுண்டர்.... ஒரு மண்டபத்தில் இருபுறமும் ரயில்வே கவுண்டர் மாதிரி வரிசையாய் டிக்கட் கவுண்டர்.நாம் வைத்திருக்கும் தரிசன டிக்கெட்டினை வாங்கி பார்கோட் ரீட் பண்ணி டிக்கெட்டுக்கு உண்டான லட்டினை தருகின்றனர்.லட்டினை பெற்றுக்கொண்டு வெளியே வர திருப்பதி மலையின் மழையோடு கூடிய சுதந்திர காற்றினை சுவாசிக்க ஆரம்பித்தோம்...

                 பின் மெதுவாய் நடக்க ஆரம்பித்து கோவிலுக்கு உள்ளே நாம் கொடுத்து வைத்திருந்த பொருட்கள் அனைத்தும் வெளியே இருக்கும் கவுண்டரில் வாங்கிக்கொண்டு எங்களின் தங்குமிடத்திற்கு சென்றோம்....
மாலை ஆறு மணிக்கு கோவில் வரிசையில் செல்ல ஆரம்பித்து, திருப்பதி ஏழுமலையானை தரிசித்து விட்டு வர இரவு 9 மணி ஆகிவிட்டது.மிக சிறப்பான தரிசனம்...என்ன கொஞ்ச நீண்ட தரிசனம்...பெருமாளை சந்திப்பது என்ன அவ்வளவு சுலபமா...?என்னதான் தள்ளு முள்ளு, நெருக்கடி இருந்தாலும் மீண்டும் அவரை சந்திக்க வேண்டி விரும்புகிறது.இனி அடுத்த முறை அவரை பார்க்க செல்லவேண்டும்...
திருப்பதி ஏழுமலையானை தரிசித்தபின், அலர்மேல்மங்கை தாயார் திருக்கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும்.திருப்பதி அடிவாரத்தில் இந்த கோவில் அமைந்திருக்கிறது.

திருப்பதி செல்ல ஒரு சில முன்னேற்பாடுகள்: 

1) திருப்பதி செல்ல திட்டமிடுபவர்கள் ஆன்லைனில் தரிசன நேரம் புக் செய்து கொள்ளலாம்.செல்லும் நாள், நேரம் ஆகியவற்றை உங்கள் புகைப்படத்தோடு பதிவு செய்து கொள்ளலாம்.லட்டுகள் கூட எத்தனை வேண்டும் என்பதை தேர்வு செய்துகொள்ளலாம்.
2) திருப்பதி தேவஸ்தான அறைகளில் தங்குவதற்கும் ஆன்லைனில் புக் செய்து கொள்ளவேண்டும்.இல்லையேல் திருப்பதியில் தங்கிக்கொண்டு பின் மேல் திருப்பதிக்கு செல்லலாம்.

3) தங்குவதற்கு அறை கிடைக்க வில்லை எனில் திருப்பதி மலையில் இலவச அறைகள் இருக்கின்றன.லாக்கர் வசதிகள் உள்ளன.அங்கு தம் பொருட்களை வைத்துவிட்டு தரிசனம் செய்ய கிளம்பலாம்.

4)தங்களின் உடைமைகள், செல்போன், காலணிகள் இவைகளை லாக்கரிலேயே விட்டு செல்வது நல்லது.

5)செல்போன், உடைகள் மறந்து எடுத்துச் சென்றால் தரிசனம் செல்லும் வழியில் லாக்கர் வசதி இருக்கின்றன.அங்கு ஒப்படைத்து விட்டு, தரிசனம் முடிந்தபின் கோவிலுக்கு வெளியே வந்து பெற்றுக்கொள்ளலாம்.கையோடு ஏதாவது துணிப்பை இருப்பின் நல்லது.

6)லட்டு வாங்க கவர் அங்கேயே பணம் கொடுத்து வாங்கிக் கொள்ளலாம். இல்லையேல் கையில் பை இருந்தால் நல்லது.

7)மாதவா இல்லம் என்கிற தங்குமிடத்தில் பாய், போர்வை வாங்கிக்கொண்டு இரவு தூங்கிக்கொள்ளமுடியும்.இல்லையேல் வெளியே வாடகைக்கு பாய் போர்வை கிடைக்கும்,அதை வாங்கிக்கொண்டு இரவை கழித்துக்கொள்ளலாம்.

8)தங்குமிடங்கள் அனைத்தும் அத்தனை சுத்தம்..24 மணி நேரமும் பணியாளர்கள் சுத்தப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

9) பொது தரிசனம் என்கிற இலவச தரிசனத்தில் போனால் எப்படியும் ஒரு நாள் அல்லது இரு நாள் ஆகிவிடும்.ஆனாலும் சாப்பாடு, குடிநீர் வசதிகள், கழிவறை போன்ற வசதிகள் இருக்கின்றன.

பத்திரமாய் பாதுகாப்பாய் திருப்பதி செல்ல வாழ்த்துக்கள்.

நேசங்களுடன்
ஜீவானந்தம்



இன்னும் கொஞ்சம்...

Thursday, November 26, 2015

கோவில் குளம் - ஏழுமலையான் வெங்கடாசலபதி திருக்கோவில், திருப்பதி

                      திருப்பதி வெங்கடாசலபதியை தரிசிக்கவேண்டி கடந்த வாரம் பயணப்பட்டேன்.அதிகாலை கோவை ரயில் நிலையத்தில் கோவை திருப்பதி எக்ஸ்பிரஸ் ட்ரெயினில் கிளம்பினோம்.எங்களை மழை வாழ்த்தி வழியனுப்பியது.கோவையில் ஆரம்பித்த மழை திருப்பதி செல்லும் வரை நீண்டு கொண்டிருந்தது.பத்து நிமிடம் மழை நிற்பதுவும் பின் தொடர்வதுமாய் எங்களுடனே பயணித்தது மழை.திருப்பதி ரயில் நிலையத்தினை மதியம் 2 மணிக்கு அடைந்தோம்.ஸ்டேசனை விட்டு வெளியே வர, தூறலாய் பெய்து கொண்டிருந்த மழை எங்களை வரவேற்க கொஞ்சம் கனமாய் சட சடவென பொழிய ஆரம்பித்தது.கொட்டும் மழையில் கொஞ்சம் நனைந்தும் நனையாமலும் அருகில் இருந்த ஒரு கட்டிடத்தின் ஓரம் ஒதுங்கி நின்றோம்.
  
                 ரயில் நிலையத்திற்கு வெளியே திருப்பதி தேவஸ்தான பஸ் அந்த மழையிலும் பக்தர்களை ஏற்றிக்கொண்டிருந்தது.ஒரு பஸ் நிரம்பி கிளம்பியதும் உடனடியாக அடுத்த பஸ் நிரம்பிக்கொண்டிருந்தது.நாங்களும் அடுத்து வந்த ஒரு பேருந்தில் ஏறிக்கொள்ள பஸ் கிளம்பியது.கிளம்பி இரண்டு நிமிடம் கூட இருக்காது, அருகில் உள்ள பஸ்ஸ்டாண்டில் ஓரங்கட்டினர். வெளியே இருக்கும்  டிக்கெட் கவுண்டரில் டிக்கெட் வாங்கிக்கொள்ள தெலுங்கில் மாட்லாடினார் அந்த பேருந்தின் ஓட்டுனர். குடும்பம் குடும்பமாக வந்திருப்பதால் யாராவது ஒருத்தர் போய் வாங்கினால் போதும் என சொல்ல, நானும் என் பங்குங்கு டிக்கெட் வாங்கினேன்.போக மட்டும் 50 ரூபாய். போக வர சேர்த்து வாங்கிக்கொண்டால் 90 ரூபாய்.மூன்று நாட்கள் வரை இந்த பயணச்சீட்டை உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

                          அனைவரும் டிக்கெட் வாங்கி வந்தவுடன் பஸ் கிளம்பியது.ஒரு பத்து நிமிட பயணம்.மீண்டும் வண்டி நின்றது.பார்த்தால் செக் போஸ்ட். மலைக்கு மேல் செல்பவர்களை சோதனை செய்வதற்காக அமைக்கப்பட்டிருக்கும் ஒரு செக்போஸ்ட்.ஏர்போர்ட்டில் இருப்பது போன்று மின்னணு சோதனை.நமது அத்தனை உடைமைகள், லக்கேஜ், பிறகு நம்மையும் செக் செய்துவிட்டு மீண்டும் பஸ்ஸில் ஏற்றுகின்றனர்.ஒரு மணி நேர பயணம்.மலைப்பாதையில் கொட்டும் மழையினூடே பயணிக்கிறது பேருந்து.இருபுறமும் மழையைத்தவிர வேறு எதுவும் கண்ணுக்குத் தெரிவதில்லை.பேருந்து மேல் திருப்பதியை அடைந்த நேரம் மதியம் மூன்று மணி தான் இருக்கும் ஆனால் இருட்டுவதற்குண்டான அறிகுறியில் சாலைகளில் மழையுடன் மேகம் தவழ்ந்து கொண்டிருக்கின்றன.இருட்டை பகலாக்கும் முயற்சியில் தெருவிளக்குகள் ஒளிர்ந்து கொண்டிருக்கின்றன. சாலைகளில் திருப்பதி வெங்கடாசலபதியை தரிசித்தவர்கள், தரிசிக்க போகிறவர்கள் என பக்தர்கள் மழையை பொருட்படுத்தாமல் நகர்ந்து கொண்டிருந்தனர்.
                           

         

                  நாங்களும் பேருந்தை விட்டு இறங்கி குடை பிடித்துக்கொண்டு மழையில் நடக்க ஆரம்பித்தோம்.பஜார் போன்ற கடைவீதிகளில் மழையையும் மீறி கூட்டம் மொய்த்துக்கொண்டு இருந்தது.கார்கள்,ஜீப்கள், பேருந்துகள், என எல்லாம் பக்தர்களை சுமந்து கொண்டு இயங்கிக்கொண்டிருந்தன.பேருந்து நிலையத்திற்கு பக்கத்திலேயே உள்ள மாதவா இல்லம் என்கிற தங்குமிடத்திற்கு சென்றோம்.அங்குதான் லாக்கர் வசதியும், மொட்டை போடுவதற்கான இடமும் இருப்பதால் அங்கு சென்றோம்.முதலில் லாக்கர் வசதியை பெற்றுக்கொண்டு ஈர துணிகளை மாற்றிக்கொண்டு மொட்டை போட சென்றோம்.
                           மொட்டை போட இலவச டோக்கன் தான்.டோக்கனோடு அரை பிளேடு ஒன்றும் தருகிறார்கள்.மொட்டை போடும் இடத்தில் வரிசையாய் அமர்ந்திருக்கின்றனர் நாவிதர்கள்.அவர்களுக்கு முன்னால் தலைகுனிந்தபடி இழந்து கொண்டிருக்கின்றனர் பக்தர்கள், தங்களின் வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக வெங்கடாசலபதிக்காக நேர்ந்து விட்ட தத்தம் முடிகளை.... பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என அறையில் பலரும் வேண்டுதலை நிறைவேற்றிக் கொண்டிருந்தனர்.ஆங்காங்கே சிதறிக்கொண்டிருந்த முடிகளை வாக்குவம் கிளினர் வைத்து சுத்தம் செய்து கொண்டிருந்தனர் கோவில் பணியாளர்கள்.டோக்கனில் உள்ள நம்பர் படி நாங்களும் தலைகுனிந்தபடி ஆஜரானோம். கண நிமிட நேரம் தான்.வழித்து தள்ளியது நாவிதரின் கத்தி.ஏழுமலையானுக்கான மொட்டையுடன் வெளியேறினோம்.
              குளித்து முடித்து புத்தாடை அணிந்து ஏழுமலையானை தரிசிக்க கிளம்பினோம்...ஏற்கனவே ஆன்லைனில் தரிசன நேரம் புக் செய்துவிட்டபடியால் அந்த நேரத்திற்கு முன்கூட்டியே சென்றுவிட்டோம். வளைந்தும் நெளிந்துமாய் வரிசை ஓடுகிறது.வெளியே மழை பெய்தாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாகிறது.

தொடரும் போடனும் போல இருக்கு....போட்டுடறேன்

நேசங்களுடன்
ஜீவானந்தம்





இன்னும் கொஞ்சம்...