Saturday, September 6, 2025

மாலை மங்கிய நேரம்...

செல்வபுரத்தில் நண்பரொருவரிடம் பேசிட்டு இருக்கும் போது அருகில் உள்ள சூப் கடையை காட்டி வாங்க சூப் குடிக்கலாம்னு கேட்ட போது அவரு வேறு ஒரு கடையை பத்தி சொன்னாரு.பேரூர் செட்டிபாளையம் பஸ் நிறுத்தம் அருகே விக்கிற சூப் பத்தியும், தலைக்கறி பத்தியும் அவரு சொல்ல சொல்ல அவருக்கே உமிழ்நீர் அதிகம் சுரக்குது...அந்த கடைக்காரரை பத்தியும் அதிகம் சொல்ல சொல்ல நமக்கும் ஒரு டெம்ப்ட் ஏறியது...சரி..போற வழிதானே..ஒரு எட்டு பார்த்திடுவோம்னு சொல்லிட்டு அவர்கிட்ட விடைபெற்றுவிட்டு பூண்டி தேசத்திற்கு பயணமானேன்..பேரூரை தாண்டி அவர் சொன்ன லொகேசனில் வண்டியை ஓரங்கட்டிவிட்டு, சூப் கடையில் தஞ்சமானேன்...

அவரிடம் பேச்சுக்கொடுத்தவாறே செல்வபுரத்து நண்பர் சொன்னதை எல்லாம் அவரிடம் கேட்டபடியே சூப் சொல்ல, சுடச்சுட சூப் வந்தது.நல்ல சுவை...

அளவான சூட்டில் ஆவி பறக்க, உள்ளே ஆட்டுக்கால் மிதக்க, வெந்த வெங்காயத்தோடு ஒரு ஸ்பூன் எடுத்து வாய்க்கு கொண்டு வர சூப்பின் மணத்தினை நாசி உணர, பசி நரம்புகள் ஆட்டம்போட, மெதுவாய் ஊதி ஊதி சூப்பினை  சுவைக்க ஆரம்பிக்க,  மென் மிளகு காரத்துடன் ஜிவ்வென்று இளஞ்சூட்டில் உள்ளிறங்கியது..நாவின் மொட்டுகள் நடனமாட, கை மறுபடியும் அடுத்த ரவுண்டினை ஆரம்பித்தது.நற்

சுவை..அளவான காரம்..ஆவி பறக்கும் சூடு, நன்கு வெந்த ஆட்டுக்கால் மாவு போல் கரைய, அதன் சவ்வுகள் மென்மையாய் கடிவாங்கி உள்ளிறங்கியது..அப்பொழுது தான் செல்வபுரத்து நண்பர் சொன்ன விசயம் புரிந்தது.எந்த ஒரு கடை மசாலாவும் இல்லாமல் அவர்களே அரைத்து பயன்படுத்தும் மசாலாதான் இந்த சுவைக்கு காரணம் என சொன்னது ஞாபகம் வந்தது.

கடைக்காரர் ஒரு முதியவர் தான். அடுத்து தலைக்கறியை ஒரு துண்டு டேஸ்ட் பார்த்ததில் அது இன்னும் சுவையோ சுவை...தலையை பொசுக்கின வாடை இல்லாமல் தலைக்கறியின் சுவை இன்னும் அதீதமாக இருந்தது.








பார்சல் போடச் சொல்லி வாங்கி வந்து வீட்டில் பிரித்து உட்கார்ந்தால் நல்ல மணம் கமழ ஆரம்பித்தது.மட்டன் சுவை அதன் வாசத்தில் தெரிய, ஒரு துண்டினை எடுத்து சாப்பிட, வாவ்..கறி நன்கு மென்மையாய் வெந்திருக்க, உப்பும் காரமும் அளவாய் இருக்க சுவை அள்ளியது...எலும்புகள் அதிகம் இருக்காது என சொன்ன செல்வபுரத்துகாரருக்கு ஒரு ஓ போட்டு விட்டு அடுத்த துண்டினை பதம் பார்க்க ஆரம்பித்தேன்.நல்ல சுவை, நல்ல மணம், அளவான காரம், பஞ்சு போல் மென்மையாக வெந்து எளிதாய் மெல்ல நன்றாக இருக்கிறது...வீட்டில் தலைக்கறியே வேண்டாம் என்று சொல்பவர்கள் கூட டேஸ்ட் செய்து விட்டு நன்றாக இருக்கிறதே ஏன் ஒரு பார்சலோடு வந்தீர்கள் என கேட்டு விட்டு ஒவ்வொரு துண்டாய் காலி செய்தனர். நல்ல சுவை. அவர்களின் வீட்டு மசாலாவிற்கு தனி சுவை தான்.

தள்ளுவண்டி கடை கூட இல்லை. சின்ன மர பெஞ்ச். அதில் ஒரு மண்ணெண்ணெய் ஸ்டவ்..அதில் சூப் பாத்திரம்.ஒரு சம்படத்தில் தலைக்கறி.வெளிச்சம் வேண்டி ஒரு நீண்ட குச்சியில் எல்ஈடி பல்ப்...அவ்வளவுதான் கடை..ஆனால் ஒரு பால் கேனில் 30 லிட்டர் இருக்கலாம்.

அதில் தான் வீட்டில் தயாரித்த சூப்பினை கொண்டுவருகிறார்கள்.இங்கே ஸ்டவ்வில் வைத்து சுடச்சுட தருகின்றனர்.

சூப்பின் விலை ரூ.40/  எலும்பில்லா தலைக்கறி ரூ.200/ 

விலை அதிகமாய் தோணலாம்..கால்கிலோவிற்கும் மேலே தருகிறார்கள்..நல்ல சுவை வேறு...ஒர்த் தான்..

பேரூர் செட்டிபாளையம் பஸ்நிறுத்தம் அருகில் முதல் கடை...

அங்கே இரண்டு கடைகள் இருக்கின்றன..அதில் முதலாவது கடை. மாதம்பட்டியில் இருந்து வரும் போது முதல் கடை..பேரூரில் இருந்து போகும் போது கடைசி கடை.

தெலுங்குபாளையத்து காரர் கடை.அந்த பக்கமா போனீங்கன்னா

நம்பி போங்க..

டேஸ்டுக்கு நானும் கேரண்டி..மென் மழைக்காலம் என்பதால் இதமாய் இருக்கும்.உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது இந்த ஆட்டுக்கால் சூப்.அப்படியே அந்த தலைக்கறியும் சாப்பிட்டு பாருங்க..

அட அட ன்னு சொல்வீங்க..


#ஆட்டுக்கால்சூப் #மட்டன்வறுவல் #தலைக்கறிவறுவல் #கோவைநேரம் #அசைவம் #பேரூர் #nonveg #nonvegetarian #mutton #soup #muttonlover #goats #foodie #foodblogger #foodlover #food #foodphotography

இன்னும் கொஞ்சம்...

Friday, September 5, 2025

தள்ளுவண்டி இட்லி கடை , சூலூர், கோவை

இன்னொரு தள்ளுவண்டி கடையை பார்க்கலாம்..

சூலூர் பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல ஒரு தள்ளுவண்டி கடை இருக்கு.கரூர் போறப்ப எதேச்சையாய் ஆவி பறக்கும் இட்லி குண்டாவினை பார்க்கும் போது அப்படியே வண்டியை ஓரங்கட்டினேன்.

சுடச்சுட இட்லி, அதுக்கு சிக்கன் சேர்வா..செம காம்பினேஷன்...இட்லி போட்டு சேர்வாவை ஊற்றி இட்லியை மூழ்கடிக்கிறாங்க..சூடான இட்லி சேர்வாவில் ஊறி அப்படியே பஞ்சு மாதிரி ஆயிருது.அப்படியே வழுக்கிகிட்டு உள்ள போகுது..அப்பவே இந்த கடையைப்பத்தி எழுதலாம்னு நினைச்சேன்..டைம் இல்ல..இப்ப இன்னிக்கு வர்ற வழியில் சாப்பிடலாம்னு நினைக்க, சூலூர் வந்திருந்தது..அந்த கடைய பார்க்கும் போது அப்பதான் முதல் ஈடு எடுத்துட்டு இருந்தாங்க..ஏழு ஏழரை இருக்கும் மணி...சுடச்சுட இட்லியை பார்த்ததுமே பசி எடுக்க ஆரம்பித்தது..மூணு இட்லி வச்சி சேர்வையை ஊற்றி சட்னியை ஊற்றி தர, இட்லி மிதக்குது சேர்வா கூட்டணியில்..இட்லி நனைந்து நன்கு ஊறி பிய்த்து சாப்பிட கொழ கொழன்னு வருது..சுடச்சுட வாயில போட, இட்லியில் இருக்கும் ஆவி வாயில் வர ஆரம்பிக்குது...நல்ல டேஸ்ட்..அன்னிக்கு சாப்பிட்ட அதே டேஸ்ட் தான்...மூணு இட்லி, நிறைய சிக்கன் சேர்வை, வயிறு புல் ஆகிடுது..கடைசியா டச்சப்புக்கு ஒரு ஆஃபாயில் உள்ள தள்ளிட்டு வண்டியை எடுத்தா இரண்டு மணி நேரத்துல கரூர் வந்திருச்சு...


அந்தப்பக்கமா இரவு நேரம் வந்தீங்கன்னா இட்லி சேர்வையை டேஸ்ட் பண்ணி பாருங்க...டேஸ்ட் நல்லாவே இருக்கும்.என் வாரிசுவுக்கும் இட்லி ரொம்ப பிடிச்சது. அதுவும் தண்ணி மாதிரியான சிக்கன் சேர்வாவை ரொம்ப விரும்பி சாப்பிட்டான்..


சூலூருல இருந்து திருச்சி ரோட்டில் கண்ணன் டிபார்ட்மென்ட் ஸ்டோர்  பூர்விகா மொபைல் கடைக்கு எதிரில் ஒரு மஞ்சள் கலர் தள்ளுவண்டி...


#இட்லி


கடை #தள்ளுவண்டி #idli #sulur #கோவைநேரம் #kovaineram

இன்னும் கொஞ்சம்...

Thursday, September 4, 2025

ஆன்லைன் ரம்மி

 ஆன்லைன் ரம்மி மொத்தமா இழுத்து மூடினதால அதுல இருந்த தொகை எல்லாம் ரீபண்ட்பண்ணிட்டாங்க...

கஷ்டப்பட்டு குருவி சேர்க்குற மாதிரி ஒரு ரூபாய்,2 ரூபாய்னு ஃபிரீ கேம்லாம் ஆடி சேர்த்துவச்ச அமெளண்ட்... அதிகமில்லை ஜெண்டில்மேன் 58 ரூபாய் தான்..வந்து விட்டது.அதே போல் இன்னொரு ரம்மி ஆப்பில் இருந்து 3.58 ரூபாய் கிரடிட் ஆகி இருக்கிறது.

நல்ல டைம்பாஸ் கேம் ரம்மி தான். இதுவரைக்கும் அதிகபட்சமாய் 200 ரூபாய் இன்வெஸ்ட் செய்திருப்பேன். 2009 ல் இருந்து ரம்மி சர்க்கிள் கம்ப்யூட்டரில் ஆட ஆரம்பித்தது. மொபைல் ஆப் வரவும் இன்னும் வசதியாக போனது...அதிகபட்ச கேம் தொகையே 5 ரூபாய் தான்.அப்புறம் சனி ஞாயிறுகளில் மெகா ஃபிரீ கேம்...அவ்வப்போது 10 ரூ இருவது ரூபாய் ஜெயிப்பது உண்டு...அதிக பணம் கட்டி ஆடினால் அதிகம் பணம் வரும் என்கிற பேராசை இல்லை...அது ஸ்கேம் என்பது தெரியும்.ஒரு பொழுது போக்குக்காகவே ஆடியது தான்...

நல்ல டைம்பாஸ்...

அவ்வப்போது ஆப்பினை டெலிட் செய்துவிடுவேன்.. ஆளைக்காணோம் என்று 25 ரூ 50 ரூ போட்டு கூப்பிடுவார்கள் ஆன்லைன் லாட்டரிகள்...அந்த அமெளண்டை வைத்து ஒரு மாதமோ இரண்டு மாதமோ விளையாடுவது உண்டு..

அவ்வளவுதான் இதன் ஒர்த்..ஆனாலும்இதையும் நம்பி லட்சக்கணக்கில் பணம் கட்டி ஆடி உயிரை மாய்த்தவர்கள் பல நூறு பேர்.அதிக பட்ச பேராசை காரணமாக கூட இருக்கலாம்..

மொத்தத்தில் தடை நல்லது தான். என்னைப் போன்ற டைம்பாஸ் செய்பவர்களுக்கு இது இழப்பு தான்... ஆரம்ப கால கட்டங்களில் வீட்டிலோ , மற்ற இடங்களிலோ கையில் கார்டு வைத்து விளையாடும் போது முதுகு வலி பின்னி எடுக்கும்.பந்தயம் கட்டி 7'S, ரம்மி 240/320 என ஆடுவோம். பந்தயமாய் மிட்டாய், ஆம்லெட், சினிமா டிக்கெட் என வைத்து ஆடுவோம்..

கொஞ்சம் பணம் வந்த வுடன் 50/100 என ஆட ஆரம்பித்தோம்..

அதற்கப்புறம் அந்த தொடர்பு அறுந்து போனது. நண்பர்களுடன் இருக்கும் போது ஆடுவது அப்படித்தான் போனது. ஆன்லைன் வரவும் தொடர்பு சுருங்கி போனது..வேலை பெருகிப் போனதில் ஆன்லைன் வசதியானது ஆனாலும் அது ஒரு கட்டுக்குள்ளே இருந்தது..ஏன் எனில் அது சூதாட்டம்..பணம் வருவது போல் வந்து மொத்தமாய் வாரிச்சுருட்டிப் போய் விடும்...அதனாலாயே பணத்தை இழந்தது இல்லை.

இப்பவும் ரம்மி மிகவும் பிடித்த விளையாட்டு தான். ஞாயிறுகளில் குடும்பத்தினருடன் ஆடுவது உண்டு.ஏதாவது விசேசங்களில் மட்டும்  வாய்ப்புக்கள் அமைகின்றன.

இந்த மாதிரி எப்பொழுதும்

மனமகிழ்ச்சியினை தருவது ரம்மியும் ரம்மும் தான்...


#ஆன்லைன்ரம்மி #onlinegaming #rummynew #rummy #kovaineram #rummygold 

#rummygames #சூதாட்டம்

இன்னும் கொஞ்சம்...

Tuesday, February 18, 2025

கோவை மெஸ் - EMBIRE BIRIYANI, R.S.PURAM, COIMBATORE

 EMPIRE BIRIYANI - R.S.PURAM


பாசுமதி அரிசி பிரியாணி தேடலில் இந்த ஹோட்டல் அகப்பட்டது... பர்த்டே கொண்டாட்டங்கள் இன்னும் தொடர்வதால் நண்பரின் அழைப்பிற்கேற்ப இங்கே நுழைந்தோம்.

ஹோட்டல் அட்மாஸ்பியர் பெயருக்கேற்றவாரே நல்ல இண்டீரியர் அமைப்புடன், ஏசியின் மென் குளிருடன் அழகாய் இருக்கிறது. அதிக பட்சம் 35 - 40 பேர் ஒரே நேரத்தில் உணவருந்தும் படி டேபிள்கள் நல்ல இட வசதியுடன் போட்டு இருக்கின்றனர்.வாஷ் ஏரியாதான் மிக சிறிது..

அந்தளவுக்கு கூட்டம் இல்லாததால் ஓகே தான்...  உணவுக்கு வருவோம்..

மெனு கார்டில் வெரைட்டிகள் பலதும் கண்ணை உறுத்த, நாம் எதிர்பார்த்த, மிகவும் விரும்பும் பாசுமதி பிரியாணியை ஆர்டர் செய்தோம்...அதற்கு துணையாய் இறால் சில்லி, அல்பஹாம் சிக்கன், லாலி பாப் போன்றவையும் ஆர்டரிட்டோம்.

முதலில் வந்தது இறால் சில்லி... அளவான காரம்.. குறைவான உப்பு.. குழந்தைகளுக்கு ஏற்றதாய் இருந்தது.

அளவு தான் குறைவு..

அடுத்து லாலிபாப்..

அது எப்பவும் போல ஓகே ரகம் தான்..

தொட்டுக் கொள்ள கொடுத்த சில்லி சாஸ் உடன் லாலிபாப் சுவையும் ஓகே..

அடுத்து வந்தது அல்ஃபகாம் சிக்கன். இதுவும் நன்றாகவே இருந்தது.சிக்கன் நன்கு மென்மையுடன் அளவான காரத்துடன் நல்ல டேஸ்டுடன் இருந்தது..அடுத்து நம் ஆவலை தூண்டிய பாசுமதி பிரியாணி...

ஒரு பாத்திரத்தில் பொன்னிறமாய் பிரியாணி வர, எடுத்து கொட்டியதும் உதிரி உதிரியாய் சிதறியது..நீளமான பிரியாணி அரிசி யின் நிறமும் திடமும் ஓகே.. சுவை கொஞ்சம் குறைவுதான்.அளவும் குறைவுதான் ஆனாலும் சாப்பிட நன்றாகவே இருக்கிறது.சிக்கன் துண்டுகள் நன்கு மென்மையுடன் இளம் பஞ்சு கணக்காய் வெந்திருந்தது.பாத்திரத்தில் இரண்டு பெரும் சிக்கன் துண்டுகளும், முட்டையும் இடத்தை ஆக்ரமித்துக் கொள்ள பாசுமதி பிரியாணி அளவு குறைவாக இருக்கிறது.ஒரு ஆள் நன்றாக சாப்பிடக்கூடிய அளவிற்கு இருக்கிறது.ஆனால் மற்ற பிரியாணி ஹோட்டல்களில் இரண்டு பேர் தாராளமாய் சாப்பிடக்கூடிய வகையில் வைக்கிறார்கள்.விலையும் அதே தான்.இங்கு குறைவே.. இதனோடு வந்த கத்தரி கட்டா செம அல்டிமேட்..நல்ல சுவை..பிரியாணிக்கு ஏற்ற செம காம்பினேசன்..ரொம்பவும் குழைந்து போகாத கத்தரியுடன் சிறிது புளிப்பும், காரமும் நல்ல சுவையை தந்தது. பைனல் டச்சாய் பிரட் அல்வா..இதுவும் நல்ல டேஸ்ட்..நன்றாக இருக்கிறது திகட்டாமல்...


நிறைய மெனுக்கள் இருக்கிறது.நமது ஒரே மோட்டிவ் பாசுமதி பிரியாணிதான்..இதை ருசிக்கதான் ஒவ்வொரு ஹோட்டல்களாக தேடிப் போவது..இந்த எம்பையர் ஹோட்டல் பிரியாணி ஓகே ரகம் தான்..விலை கொஞ்சம் அதிகம் தான் ஆனாலும் ஓகே தான்.

அந்தப்பக்கம் போனீங்கன்னா சாப்பிட்டுப் பாருங்க.

உங்களை ருசிக்க வைக்கும்..

RSPURAM டிவி சாமி ரோடு முடிவில் பால்கம்பெனி ரோட்டில் பெட்ரோல் பங்க் அருகில் இருக்கிறது.









நேசங்களுடன்

ஜீவானந்தம்.

#EMBIREBIRIYANI #NONVEG #KOVAINERAM #biriyani #biriyanilovers #CHICKENBIRIYANI #NONVEG #prawns #alfaham #lollypop  #foodblogger #foodie #foodlover #food #blogger #bloggerlife #bloggerstyle #KOVAINERAM  #கோவைநேரம்

இன்னும் கொஞ்சம்...

கோவை - வெள்ளியங்கிரி மலை தரிசனம் போவோர் கவனத்திற்கு

கோவை வெள்ளியங்கிரி மலை ஈசனை தரிசிக்க பிப்ரவரி ஒன்று முதல் அனுமதி அளிக்கப்பட்டு பக்தர்கள் மலை ஏறிக் கொண்டு இருக்கின்றனர்.இப்பொழுது கூட்டம் குறைவாக இருப்பதால் நிறைவாக தரிசனம் காண முடியும்.மஹா சிவராத்திரி அன்று லட்சோப லட்சம் மக்கள் ஈஷா விற்கு கூடுவார்கள். அன்றிலிருந்து பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும்.


வெள்ளியங்கிரி மலை ஏறுபவர்களுக்கு டிப்ஸ்.


1) மலையில் கடும் குளிர் இருக்கும்.

எனவே கம்பளி, ஜெர்கின், குல்லா, போர்வை தேவை.


2) மலையில் சுனை நீர் உண்டு.

இருந்தாலும் வாட்டர் பாட்டில் கொண்டு செல்வது நல்லது.


3) கடை கண்ணிகள் ஒவ்வொரு மலையிலும்  இருக்கும். தாகம் தணிக்க, டீ , சோடா வாங்க காசு வைத்துக் கொள்ள வேண்டும். 


4) செங்குத்தான மலைப்பாதை என்பதால் அடிவாரத்தில் மூங்கில் தடி வாங்கிக் கொள்ள வேண்டும்


5) தாகம் அடிக்கடி எடுக்கும் என்பதால் ஆரஞ்சு புளிப்பு மிட்டாய் வைத்துக் கொள்ளுங்கள்.


6) பூஜை செய்ய விருப்பப்பட்டால் தேவையான பொருட்களை அடிவாரத்தில் வாங்கிக் கொள்ளவும்.


7) கேமரா அனுமதி இல்லை.மொபைல் எடுத்து செல்லலாம்


8) கஞ்சா, பீடி, மது, மாமிசம், அனுமதி இல்லை


9) மலையேறும் பக்தர்கள் மிகவும் குறைவான எடையுள்ள பொருட்கள், பேக் எடுத்துச் செல்வது நல்லது.


10) டார்ச்லைட், பவர் பேங்க் வைத்துக் கொள்ள வேண்டும்.


11) முடிந்தவரை பாலீதீன் பைகளை தவிர்ப்பது நல்லது. 


12) மெடிக்கல் எமர்ஜென்சிக்காக ஒரு சில மருந்துகளை கைவசம் வைத்திருப்பது நல்லது.


13) செருப்பு அணியாமல் மலை ஏற வேண்டும் என்பதால் அடிவாரத்தில் விட்டுச் செல்வது / தவிர்ப்பது நல்லது.


14) மலைகளில் குப்பை போடாமல் இருப்பது நல்லது.

பழைய துணிகள், பாட்டில்கள், பாலீதீன் பைகளை மலைகளில் விட்டுச் செல்வது தவிர்க்க வேண்டும்.


15) அடிவாரத்தில் லாக்கர் வசதி உள்ளது.விலை உயர்ந்த பொருட்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும்.


16) வயதானவர்கள், குழந்தைகள், இதய நோய் உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது.


17) மொபைல் நெட்வொர்க் வேலை செய்யாது.


18) அட்டைப்பூச்சிகள் இருக்கும்.பாதுகாப்பாய் சுனை நீர்களில் குளிப்பது நல்லது.


எல்லாம் வல்ல வெள்ளியங்கிரி ஈசனை தரிசித்து அருள் பெற வாழ்த்துகிறேன்.

ஓம் நமசிவாய


மலை அடிவாரத்தில் அன்னதானம் வழங்கப்பட்டுக் கொண்டு வருகிறது.

கோவிலுக்குச் செல்பவர்கள் வெள்ளியங்கிரி அடிவாரத்தில் சிவனை தரிசனம் செய்து விட்டு அன்னதானம் உண்டு விட்டு வாருங்கள்.

ஓம் நமசிவாய..


நேசங்களுடன்

ஜீவானந்தம்


#பூண்டிதேசம்

#வெள்ளியங்கிரி 

#சிவனேபோற்றி

#கோவை #ஈஷா #ishayoga #velliyangirihills #trekking #devotional

இன்னும் கொஞ்சம்...

Wednesday, July 19, 2023

ஐ லவ் இந்தியா - தமிழ் திரைப்பட விமர்சனம்

 ஐ லவ் இந்தியா - தமிழ்.


நான் பத்தாவது படிக்கும் போது கரூர் திண்ணப்பா தியேட்டர்ல இந்த மெகா மகா காவியத்தை பார்த்திருக்கிறேன்.நேற்று ஒரு பேஸ்புக் பதிவிற்காக இந்தப் பட போஸ்டரை தேடும் போது, சரி எப்படி இருக்கும் இப்பொழுது பார்த்தால் என தோன்றியது...

பார்த்தேன்..வெறுத்தேன். 


கோலிவுட்டில்

அப்ப ஒரு ட்ரெண்ட் போல.. காஷ்மீர், தீவிரவாதி, வெடிகுண்டு, ஹீரோகூட கவுண்டமணி.. இதெல்லாம் இருந்தால் படம் சூப்பர் டூப்பருன்னு நினைச்சிருக்காங்க போல..


சண்டைக் காட்சிகளில்

இவங்க போட்ட வெடிகுண்டுகளில் காஷ்மீரே உருகி இருக்கும் போல..

ராஜஸ்தான் பாலைவனத்துல மணல் தெறிக்க தெறிக்க பைட்டு..

பார்க்குற நம்ம தலையில் அள்ளி போடற மாதிரியே இருக்கு..ஏண்டா இப்ப போய் பார்க்கிறன்னு..


பிரம்மாண்டம் என்கிற பெயரில் வெட்டிச் செலவு...


தீவிரவாதியை தனி ஒருவனாக பிடிக்கும் ராணுவ அதிகாரியாக சரத்குமார்.கவர்ச்சிக்கு புதிய பரிணாமமாக புதுமுகம் பிரியா.

சென்டிமெண்ட்க்கு செண்பகம், காமெடிக்கு கவுண்டமணி...ஹிந்தி மட்டுமே பேசற தீவிரவாதிகிட்ட பக்கம் பக்கமா தமிழ்ல பேசுற மனோரமா..அவன் இதான் சாக்குனு அவங்க கழுத்துல கத்தி வச்சி கொல்லப் பார்க்குறான்....


இசை நம்ம இளையராஜா..

பாடல்கள் மட்டும் செம..

தேசப்பற்று, காதல்,காமெடி, சென்டிமென்ட், பிரம்மாண்டம், அதிரடி ன்னு எல்லா ஏரியாவுலயும் பூந்து விளையாடலாம்னு இயக்குநர் நினைச்சிருப்பாரு போல...அதான் தயாரிப்பாளர் கோவணத்தை உருவிட்டாரு....


காஷ்மீர் தீவிரவாதிகளை படத்துல சரத்குமார் ஒழிச்சாரு..அப்புறம் விஜயகாந்த், அர்ஜூன் லாம் வரிசை கட்டி ஒழிச்சாங்க...

ஆனா

நிஜத்துல காஷ்மீரை நம்ம  மோடிஜிதான் சுத்தம் பண்ணி இருக்காரு....


இன்னிக்கு காஷ்மீர் ஒரு ரோஜா தேசம், ஆப்பிள் நகரம், தேனிலவுக்கு ஏற்ற ஊர் னு ஆகி இருக்கு ( இந்த வசனத்தை அப்பவே எழுதியிருக்காரு இயக்குநர்)


ஐ லவ் இந்தியா ன்னு பேரை வச்சா படம் பிச்சிகிட்டு ஓடிடும்னு நினைச்சிருக்காரு இயக்குநரு...பாவம் அவரே மண்டைய பிச்சிகிட்டு இப்ப எந்த கண்காணாத தேசத்துல இருக்காரோ...


இப்ப புதுசா ஒரு கும்பல் வேற கிளம்பியிருக்கு...அது  எங்க போய் சின்னாபின்னமாகப் போகுதோ....


ஜெய்ஹிந்த்


#ஐலவ்இந்தியா #ILOVEINDIA #INDIA #sarathkumar #pavithran #tamil #tamilcinema
x

இன்னும் கொஞ்சம்...

Saturday, February 18, 2023

தள்ளுவண்டி பொரிகடலை

ஒரு சில நாட்களில் பூண்டி தேசம் போவதற்காக பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருப்பேன்.அம்மணிகள் வருகை கொஞ்சம் ஆசுவாசத்தை உண்டாக்கும்.அதனாலயே பொறுமையாக நின்றபடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பேன்.பக்கத்திலேயே தள்ளுவண்டியில் வறுகடலை, வேகவைத்த கடலை, மக்காசோளம், பனங்கிழங்கு, பொரி விற்றுக் கொண்டிருப்பர்.ரிதமாய் ஒலிக்கும் வறுகடலை கரண்டியின் சத்தமும், பொரி கலக்கும் சத்தமும் வேறு நம்மை ரசிக்க வைக்கும். அவித்த கடலையின் வாசம் மூக்கை துளைக்கும்.பசியை வேறு தூண்டும்.

அம்மணிகளின் மேல் கவனம் இருந்தாலும் நாசியானது அந்த வேர்க்கடலையின் வாசத்தை நுகர்ந்து கொண்டிருக்கும்.வாங்கி சுவைக்கலாமா என்ற யோசனையிலேயே மனம் இருக்கும்.

சுகாதாரம் பற்றிய நினைப்பும் அவ்வப்போது வந்து போகும்.கடலை வண்டியையே பார்த்துக் கொண்டிருப்பேன்..அவ்வப் பொழுது அவித்த கடலை விற்பவனின் செயல்களையும் பார்த்து கொண்டிருப்பேன்.அப்படித்தான் அன்றொரு நாள், அவித்த கடலையில் இருந்த கரண்டியை எடுத்து ரிதமாய் தட்டியபடி, அப்படியே கையின் மணிக்கட்டு பகுதியில் இருந்து முழங்கை வரை கரண்டியை வைத்து மேலும் கீழும் வறட் வறட் என சொறிந்து  விட்டு, அந்த கரண்டியை அப்படியே எடுத்து அவித்த கடலையை கலக்கி விட, பகீர் என்றது  பார்த்த உடனே...

வாங்கி சுவைக்க வேண்டிய ஆசையை அப்படியே மண்ணோடு மண்ணாக புதைத்து விட்டேன்....

இனி அம்மணிகளை மட்டும் ரசிப்பது என முடிவெடுத்து விட்டேன்.


கெட்டுப்போன பனங்கிழங்கு, பல நாட்களாய் வெந்து கொண்டிருக்கும் மக்கா சோளம், கடலை மேல் தெளிக்கும் அழுக்கு தண்ணீர் என சுத்தமும் சுகாதாரமும் போட்டி போடும்.

இதை வாங்கி ருசித்தால் இலவசமாய் வியாதிகள் வர வாய்ப்பிருக்கலாம்.

#பூண்டிதேசம் 

#காந்திபுரம் #தள்ளுவண்டி #அவித்தகடலை

இன்னும் கொஞ்சம்...

Friday, February 17, 2023

தமிழன் vs வடக்கன் சோதனைகள்

 நம்ம பெயிண்டர்களாம் வடக்கனுங்க தான்.கோவிட்ல என்னோட மெயின் மேஸ்திரி என் கூடவே 20 வருசம் ட்ராவல் பண்ணவன் இறந்துட்டான்.அவன் போனது மிகப்பெரிய இழப்பு எங்களுக்கு.

ரெண்டு மூணு டீம் வச்சி இருந்தாலும் எப்பவும் அவன் தான் செய்வான்.கோவிட் முடிஞ்சு இப்ப ஒரு ஆறு மாசமாத் தான்  வேலைகளே வந்துட்டு இருக்கு.

அவன் இல்லாம வேற டீமை வச்சி வேலை செஞ்சிட்டு இருக்கோம். இப்ப சமீபத்துல ஒரு வேலை.நம்மாளுங்க பொங்கலுக்கு போனவங்க வரல.

அதனால தமிழ் பெயிண்டர்களை வச்சி வேலை வாங்குனேன்.ரொம்ப மெதுவா வேலை நடக்குது.ஆனாலும் வாரா வாரம் சனிக்கிழமை ஆனா பணத்தை கொடுத்திருவேன்.மூணு வாரம் நல்லாதான் போச்சு.

நம்ம கிளையன்ட் திடீர்னு வெளியூர் போய்ட்டாரு.அதனால பணம் கிடைக்கல.

நானும் அங்க இங்கன்னு புரட்டி கொடுத்துட்டேன்.கொஞ்சம் பாக்கி வச்சேன்.

இந்த வாரம் அமெளண்ட் வந்திடும் தரேன்னு சொன்னேன்.சரின்னு போனவங்க திங்கள் கிழமை வரல.ஏன்னு கேட்டா நீங்க பணம் தரலன்னு வரல அப்படிங்குறான்.இத்தனைக்கும் ரேட் பேசி விட்டிருந்தேன்.அட்வான்ஸ் வந்ததும் தரேன்னு சொல்லி, அதுக்கு ஒத்துகிட்டு தான் வேலையை ஆரம்பிச்சான். வெள்ளி, சனி இரண்டு நாள்தான் செஞ்சானுங்க.ஞா.தி.செ மூணு நாளும் வரல..செம கடுப்பு. போனைப் போட்டு பயங்கரமா திட்டிட்டு ஏன் ஹிந்தி காரன் இங்க நல்லா பொழைக்குறான்னு தெரியுதா ன்னு சொல்லிட்டு இனி சைட் பக்கம் வந்திராத.உன் அமெளண்ட் ஜிபே பண்ணிடறேன்னு சொல்லிட்டேன்.

மீண்டும் வேலைக்கு வச்சா ஓபனிங் டேட் டுக்கு முன்னாடி ஓடினாலும் ஓடிடுவானுங்க.இது வரைக்கும் நாம கட்டிக் காத்து வந்த பேரை கெடுத்திருவானுங்க..கிளையன்ட் கிட்ட சொல்லிட்டேன் வேற டீம் இறக்குறேனுட்டு..

அவரே எங்க உங்க ஹிந்தி ஆளுங்கன்னு  கேட்க, வேற சைட்ல இருக்காங்க வந்திருவாங்க ன்னு சொல்லி மத்த வேலையை பார்த்துகிட்டு இருக்கோம்.

இந்த லட்சணத்துல வடக்கனுங்க வர்றானுங்க, தமிழனுக்கு வேலை இல்லைன்னு புலம்புறது.

10 மணிக்கு வர்றது 11 .30 க்கு டீ.கொஞ்ச நேரம் டைம்பாஸ்.

அப்புறம் 1.30 டூ 2.30 லஞ்ச் 4 மணிக்கு டீ டைம்பாஸ் அப்புறம் 5.30 எடுத்து வைக்குறேன்னு சொல்லி்ட்டு 6 மணிக்கு ரெடியாகுறது. அட்வான்ஸ் தலைக்கு 500 ரூ வாங்கிட்டு போறது. ஏரியா கவர் ஆகி இருக்குமானு பார்த்தா அதுவும் ஆகி இருக்காது.4 பேர் வேலை செஞ்சா 4000/ அட்லீஸ்ட் 1500 sft ஆவது பட்டி பார்த்திருக்கனும்..பண்ணி இருக்க மாட்டானுங்க..தினக் கூலிக்கு விட்டா நம்மளை தெருவுக்கு கொண்டு வந்திருவானுங்க.

இத்தனை வருச சர்வீஸ்ல தமிழனை வேலைக்கு வச்சு இரண்டு நாள்லயே நிப்பாட்டுனது இது தான் முதல் தடவை.

தமிழனுக்கு தமிழன்தான் எதிரின்னு சொல்லிட்டு வராதீங்க.

போங்கடா போய் டாஸ்மாக்ல விழுங்க..

#வடக்கன்ஸ்

நேசங்களுடன்

ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Wednesday, February 15, 2023

வட்டி அனுபவங்கள்

 இனி நாமளும் பைனான்ஸ் ஆரம்பிச்சிட வேண்டியது தான். நம்ம நண்பருக்காக கடன் கேட்டிருந்தேன்.

ஏதோ ஒரு அர்ஜென்ட் என்று சொன்னதால்.

நம்ம கிட்ட இல்லாததால் இன்னொரு நண்பர் மூலம் செல்வபுரத்தில் ஒருத்தரை பிடித்தேன்.

ரூல்ஸ் பார்க்கணுமே.

50000 க்கு 40000 தருவார்கள். ஒரு மாதம் டைம்.திருப்பி 50K தந்து விட வேண்டும்.தராத ஒவ்வொரு நாளுக்கும் 1000 பெனால்டி..பின் பிணயமாக வண்டி ஆர்சி புக் தர வேண்டும்.வண்டியையும் நிறுத்தி விட்டு செல்ல வேண்டும்.

இதை கேட்டவுடன் நாமளும் ஆரம்பிக்க வேண்டும் என எண்ணத் தோன்றுகிறது.காலையில் 900 / 9000 கொடுத்து மாலையில் 1000 / 10000 ஆக தரக்கூடியவர்களும் இருக்கிறார்கள்.

செல்வபுரம் பகுதி, காந்திபுரம் பகுதிகளில் மெயின் பிஸினஸ் இதான்.எந்த மதம் வட்டி ஹராம் என சொல்லி இருக்கிறதோ அவர்கள் தான் இத்தொழிலில் அதிகம் இருக்கின்றனர்.நாள்வட்டி, வார வட்டி, மாதவட்டி, 

கந்து வட்டி, மீட்டர், ராக்கெட் என எல்லாமும் இருக்கிறது.

கடைசியாய் ஒருவரிடம் கேட்ட போது பிட்டிங் வேண்டுமானால்  வைக்கலாம். உங்கள் வண்டியை தந்துவிட்டு 20000  வாங்கிச் செல்லுங்கள் என சொல்ல, அதற்கு நான் சொன்னது " பாஸ்..வெயிட் பண்ணுங்க...நீங்க பார்ட்டி மட்டும் புடிங்க.

நான் தர்றேன் பைனான்ஸ்னு சொல்லிவிட்டு வந்து விட்டோம்.வெறும் 20000 க்கு ராயல் என்பீல்ட் புல்லட்ஐ பிட்டிங் கேட்க, அப்பொழுது தான்  உதித்தது முதல்வரி...

#கந்துவட்டி #மீட்டர்வட்டி #பணம்

நேசங்களுடன்

ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Tuesday, February 14, 2023

காதலர்களுக்கு ஏற்ற இடங்கள் - கோயம்புத்தூர்

 கோவையில் காதலர்கள் சந்தித்து தங்கள் அன்பை பரிமாறிக்கொள்ள சிறந்த இடங்கள்


கோவிலுக்கு போற எண்ணம் இருப்பின்


மருதமலை

பேரூர்

அனுவாவி சுப்ரமணியர் கோவில்

பொன்னூத்தம்மன் கோவில்

சாய்பாபா கோவில்

ஈச்சனாரி கோவில்

தியானலிங்கம் ஈஷா

தென்திருப்பதி பாலாஜி கோவில்

காருண்யா தேவாலயம்

குமரகோட்டம் சூலூர்

பத்ரகாளி அம்மன் கோவில் மே.பாளையம்.


ஷாப்பிங்கோட படம் பார்க்கனும்னா 


ப்ரூக் பீல்ட்ஸ் மால்

Prozone மால்

பன் மால்.


கார்னர் சீட் வேணுங்கிறவங்களுக்கு 

 கற்பகம் காம்ப்ளக்ஸ்

கேஜி தியேட்டர்

பாபா காம்ப்ளக்ஸ்

அம்பாள் காம்ப்ளெக்ஸ்..


காத்தோட்டமா கடலை  போடறவங்களுக்கு 

உக்கடம் லேக்

ஆர்எஸ்புரம் லேக்

சுங்கம் லேக்

சூலூர் லேக்

வ.உ.சி பார்க்.

பாரதி பார்க்

காந்திபூங்கா

ரேஸ்கோர்ஸ்

பொட்டானிக்கல் கார்டன்


ப்ரைவசியா போகனும்கிறவங்களுக்கு

இருக்கவே இருக்கு நம்ம OYO


முக்கிய குறிப்பு : கலாச்சார காவலர்கிட்ட மாட்டிக்காதீங்க... வயிற்றெரிச்சல்ல சுத்திகிட்டு இருப்பானுங்க..ஜெய் காளின்னுட்டு...


#காதலர் தின ஸ்பெஷல்

இன்னும் கொஞ்சம்...

Sunday, January 1, 2023

HAPPY NEW YEAR 2023


 அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்


நேசங்களுடன்

ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Wednesday, June 1, 2022

கோவில் குளம் - அருள்மிகு தன்னாசி ஈசர் சித்தர் கோவில், புண்ணாக்கு ஈசர், பெரியநாய்க்கன்பாளையம், கோவை

அருள்மிகு தன்னாசி ஈசர் சித்தர் கோவில் 

         நம்ம நண்பர்கிட்ட பேசிட்டு இருக்கும் போது எதேச்சையா கடவுள் பக்கம் பேச்சு திசை மாறுச்சி..உங்க குரு யாருன்னு கேட்டாப்ல…எந்த சாமியை கும்பிடுவீங்கன்னு கேட்டாரு.ஒரு காலத்துல சாய்பாபாவை கும்பிட்டேன்.அப்புறம் இப்போ சிவபக்தனா ஆகிட்டேன். சிவனைத்தான் கும்பிட்டுகிட்டு இருக்கேன்னு சொன்னேன்..ஆனா அவரு குரு இல்லையே…அவரு கடவுள், அவரை கும்பிட்டு சித்தர் ஆனவங்க குரு..அவர்களை வழிபட்டால் மிகவும் நல்லது அதுவும் ஜீவ சமாதி அடைந்த சித்தர்களோட அருள் ரொம்ப பலம் நம்ம தொழில், வம்சம் விருத்திக்கு அவர்களின் ஆசிர்வாதம் நல்லா செட்டாகும் அப்படின்னு சொல்ல, பேச்சு சித்தர்களைப் பற்றி போனது.பழனி பக்கம் தான் நிறைய சித்தர்கள் ஜீவசமாதி ஆகி இருக்காங்க, ஒரு சில ஊர்களில் இன்னும் உயிருடனும் சித்தர்கள் வாழ்ந்து வருகிறார்கள். திருவண்ணாமலை பகுதி மலைகளில் சித்தர்கள் இன்னமும் இருக்கிறார்கள் 100 க்கும் மேற்பட்ட சித்தர்கள் இருக்கிறார்கள் தமிழகம் முழுக்க என பேச்சு சுவாரஸ்யமாக திரும்பியது.

        நம்மூர்ல பக்கத்துல யார் இருக்கானு கேட்க, தன்னாசி ஈசர்னு ஒரு சித்தர் இருக்கார்,அவரு ஜீவ சமாதி அடைந்த இடம் பாலமலை பக்கத்துல செல்வபுரம் என்கிற ஊரில்.அவருக்கு பெரிய கோவிலே இருக்கு.1000 வருடம் பழமை வாய்ந்த ஆலமரமும் காராட்சி மரமும் இருக்கு என சொல்லி என் ஆர்வத்தினை தூண்டினார்..அதுமட்டுமல்ல அவரது சமாதியில் நீங்கள் வேண்டிய பலனை நினைத்து, இரு கைகளை தள்ளி வைத்து, சித்தரை மனமுருக வேண்டினால் உங்கள் கை தானாக நெருங்கி வரும் அப்படி வந்தால் நீங்கள் வேண்டிக்கொண்ட காரியங்கள் கண்டிப்பாய் நிறைவேறும் என கூறி ஆச்சரியமூட்டினார்.

              இது குறித்து கூகுளில் தேடினால் ஒரு சில வீடியோ பதிவுகள், தினமலர் ஆன்மீகம் போன்றவைகளில் இந்த கோவிலை பற்றி இருக்கிறது,

              நாமும் அந்த சித்தரின் ஆசியைப் பெறுவோம் இன்று கிளம்பி விட்டேன். பெரியநாயக்கன் பாளையத்தில் இருந்து பாலமலை செல்லும் வழியில் இருபுறமும் பசுமை கண்களை ஈர்க்க, மேற்குத் தொடர்ச்சி மலைகள் சிறு தொலைவில் பசுமையாக காட்சியளிக்க, செல்வபுரம் என்கிற ஊரில் ஆலமரம் சூழ்ந்த கோவிலில் ஜீவசமாதி அடைந்த தன்னாசி ஈசர் என்று அழைக்கப் படும் புண்ணாக்கீசர் இங்கே அருள்பாலிக்கிறார்.




  கோவிலில் உள்ளே ப்ரவேசித்தவுடன் அப்படி ஒரு அமைதி நிலவுகிறது.பரந்து விரிந்த ஆலமரத்தின் பிரமாண்ட விழுதுகள் கோவிலின் பின்புறத்தில் தூண்களை போல் கிளைகளைத் தாங்கி நிற்கிறது.காராட்சி மரமும், ஆலமரமும் பின்னிப் பிணைந்து கிளிகள், மயில்கள், குருவிகளின் புகலிடமாய் ஆகி, அவைகளின் ரீங்காரம் ஒலிக்க மிக ரம்யமாக இருக்கிறது.



கொடிமரத்துடன் கூடிய கோவிலின் கருவறையில் தன்னாசி ஈசர் அருள்பாலிக்கிறார்.ஆஞ்சனேயர் சன்னதி, முருகன் சன்னதி, விநாயகர் சன்னதி, மாரியம்மன் சன்னதி, நவக்கிரக சன்னதி என தனித்தனியாக இருக்கிறது,தியானம் செய்வதற்கென்றே தனி மண்டபம் இருக்கிறது. இவை அனைத்தும் பக்தர்களின் நன்கொடையில் மண்டபம், கருவறை, கொடிமரம், கோபுரம் என எல்லாம் புதிதாய் கட்டப்பட்டிருக்கிறது.சிவலிங்கமும் நந்தியும் ஆலமரத்தின் அடியில் வீற்றிருப்பது அழகு..


இதற்குமுன் பலவருடங்களுக்கு முன்னால் ஆள் அரவமற்ற இந்த மலைப்பகுதியில், ஒரு ஆலமரத்தின் அடியில் தவம் புரிந்து கொண்டிருந்த இந்த சித்தர் வருவோர் போவோர்க்கு நோய்களை நீக்கி, அருள்பாலித்துக் கொண்டிருந்தாராம்.ஒரு நாள் அங்கிருக்கும் குகையில் அப்படியே ஜீவசமாதி ஆகிவிட்டாராம்.அவரை வணங்கியவர்கள் அந்த ஆலமரத்தின் அடியில் அவரது சிலையை வைத்து வணங்கி வழிபட ஆரம்பித்து இன்று பெரும் கோவிலாக ஆகி இருக்கிறது.

      சித்தர்களுக்கு என்று தனி சன்னதி அமைக்கப்பட்டு அதில் அகஸ்தியர், திருமழிசை சிவவாக்கிய சித்தர், அழகண்ணர் சித்தர், கோரக்கர் சித்தர், சுந்தரானந்தர் சித்தர், புலிப்பாணி சித்தர், மச்சமுனி சித்தர், கருவூரார் சித்தர், போகர் சித்தர், தன்னாசி ஈசர் சித்தர், பாம்பாட்டி சித்தர், சட்டைநாதர் சித்தர், கொங்கணர் சித்தர், இடைக்காடர் சித்தர், திருமூலர் சித்தர், காளாங்கி சித்தர், குதம்பை சித்தர், கமலமுனி சித்தர் என அனைவருக்கும் தனித்தனியாய் பிரதிஷ்டை செய்யப்பட்டு தினமும் பூஜை நடக்கிறது.


        
     இந்த கோவிலின் அதிசயம் என்னவெனில் நீங்கள் நினைத்த காரியம் வெற்றியடைய வேண்டிக்கொண்டு, ஆலமரத்தின் அடியில் ஜீவசமாதி அடைந்த தன்னாசி ஈசரின் அருளை பெற, அவரது சிலைக்கு முன் அமர்ந்து தியானித்து, இரு கைகளை தூரமாக வைத்து வேண்டிக்கொள்ளும் போது, இரு கைகளும் இணையும்.அப்படி இணைந்தால் நீங்கள் நினைத்த காரியம் கைகூடும் என்பது உண்மை.

                             

   
இந்த கோவிலில் ஒரு சில வியாதிகளுக்கு சிகிச்சை இலவசமாக அளிக்கின்றனர்,அங்கேயே தங்கி சிகிச்சை பெறும் வசதியும் இருக்கிறது.

                             

தன்னாசி ஈசரின் அருளைப் பெற ஒரு தடவையாவது அங்கே செல்லுங்கள்.

பெரியநாயக்கன் பாளையத்தில் இருந்து பாலமலை செல்லும் வழியில் செல்வபுரம் என்கிற ஊரில் அமைந்திருக்கிறது இந்த கோவில்.

கோவிலின் அருகே யுனைட்டடு இஞ்சினியரிங் கல்லூரியும், அதன் பள்ளியும் இருக்கிறது,

நடை திறக்கும் நேரம் – காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை, பேருந்து வசதி இல்லை.கோவையில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது இந்த தன்னாசி ஈசர் சித்தர் கோவில்.

ஓம் நமச்சிவாய…...


நேசங்களுடன்

ஜீவானந்தம்

 

 

இன்னும் கொஞ்சம்...

Wednesday, September 22, 2021

மீன்குறிப்புகள்

     

            நான் எப்பொழுதும் கோவையில் மீன் வாங்குவதில்லை.பல வருடங்களுக்கே முன்பே வாங்குவதை நிறுத்திவிட்டேன்.எப்பொழுதாவது உறவினர்கள் நண்பர்கள் வருகையின் போது அவர்களின் விருப்பத்திற்கேற்ப மீன் வாங்குவது வருடத்திற்கு ஓரிரு முறை மட்டுமே.அதுவும் தமிழ்நாடு மீன் வளர்ச்சி துறையில் சனிக்கிழமை அன்று பிரஷ்ஷாக ( அதுவும் ஓரிரு நாட்கள் பழையது தான் சாத்தனூர் அணையில் இருந்து வருவது ) வரும் டேம் பாறை மீன் மட்டுமே வாங்குவது.அது கொஞ்சம் நன்றாக இருக்கும்.ஆனால் கேரளா மற்றும் தூத்துக்குடியில் இருந்து வருபவை பெரும்பாலும் பத்து பதினைந்து நாட்களுக்கு முன்னர் பிடிபட்டவை.கேரள மத்தி மீன் மட்டும் ஒரு சில நாட்களில் கொஞ்சம் பிரஷ்ஷானது போல வரும்.அதுவும் பெரும்பாலான நாட்களில் சொதப்பி விடும்.

        குளிரூட்டப்பட்ட வண்டிகளில் ஐஸ்பெட்டியில் மீன்களை வைத்து இருப்பதினால் நன்கு கெட்டியாக இருக்கும்.அது கோவை வந்து மார்க்கெட்டில் தரம் பிரித்து சில்லறை விற்பனைக்கு வரும் போது கொஞ்சம் இளகி இருக்கும்.அதுவரையில் ஐஸ்கட்டிகளோடு இருக்கும். மீன்கடையில் எடை போட்டு வெட்டி வீட்டிற்கு வந்து தண்ணீரில் கழுவினால் போதும் மீன் சதை அப்படியே உடையும்.கடையில் வெட்டும் போதே கொஞ்சம் நேக்காக வெட்டி அனுப்பி விடுவர்.

        இங்கு மீன் வெட்டுபவர்களும் சரியில்லை.விண்வெளிக்கு ராக்கெட் விடுவதை போல் மீனை வெட்டித் தருவர்.வாங்கும் ஒரு கிலோ மீனில் 400 கிராம் காலி ஆகிவிடும்.மீன் தலையை கன்னா பின்னா வென்று வெட்டுபவர்களை கண்டால் கோபம் தலைக்கேறும்.விதியே என்று நொந்து கொண்டு வீட்டிற்கு வந்து சுத்தம் செய்ய கழுவினால் மீன் சதை வேறு தானாக உதிரும்.மீனின் நாற்றமும் பாசான் நாற்றத்தைப் போல ஒரு மாதிரி வாடை அடிக்கும்.வட்டவடிவ துண்டுகள் போடப்பட்ட மீன்களில் முட்கள் தனியாய் வரும்.

        நெத்திலி சங்கரா போன்ற மீன்களில் முட்கள் வேறு தனியாய் பிரிந்து பூரான் போன்று இருக்கும். எத்தனை நாள் பழசான மீனோ என்று எண்ணியபடியே மீனில் மசாலாக்கள் சேர்த்து குழம்பும் பொரிச்சதுமாக சாப்பிட்டு விடுவது.துணைக்கு வேறு தமிழக அரசு சப்போர்ட் செய்வதால் பசி ருசி அறியாது என்பதை போல காலி ஆகி விடும்.காசு கொடுத்து வாங்கிய பண்டம் அல்லவா.நீண்ட நாட்கள் ஆன மீனை ஏன் சாப்பிட வேண்டும் என்பதற்காகவே இங்கு வாங்குவதை தவிர்த்து விடுகிறேன்.அதுமட்டுமல்ல நமது ஊரில் காவிரி ஆற்றில் பிடிக்கப்பட்டு துள்ள துள்ள வரும் ஜிலேபி, கெண்டை, அவுரி மீன்களையே சாப்பிட்டு வளர்ந்தவனுக்கு இங்கிருக்கும் மீன்கள் ஏனோ பிடிப்பதில்லை.நாங்களே ஆற்றில் தூண்டில் போட்டோ, வலை விரித்தோ, கைகளிலோ மற்றும் இரவு நேரத்தில் மீன் வேட்டைக்கு சென்று பிடித்து விட்டு வரும் மீன்கள் எப்போதும் ருசியாகவே இருந்திருக்கின்றன.

            இறந்த மீனின் செவுளை பார்த்தால் ரத்தச்சிகப்பில் இருக்கும்.ஆனால் இங்கு வரும் மீன்களோ நிறமற்ற செவுள்களாக இருக்கிறது.அந்த அளவுக்கு நாட்பட்டதாக இருக்கிறது.கடல் மற்றும் ஆறு இருக்கும் ஊரில் இருப்பவர்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள்.மிகவும் பிரெஷ்ஷான மீன்களை உண்டு வாழ்கின்றனர்.

            மற்ற ஊர்களில் உள்ளவர்கள் எங்கிருந்தோ வரும் மீன்களை சாப்பிட்டு கொண்டிருக்கின்றனர்.பார்மலின் எனும் ஒரு திரவத்தை வேறு தெளித்து விடுகிறார்கள்.சமீபத்தில் கேரளாவுக்கு சென்ற ஏழு டன் மீனில் பார்மலின் தெளித்திருப்பதை கண்ட அதிகாரிகள் அதை கண்டுபிடித்து அழித்திருக்கின்றனர்.இங்கேயும் அது இருக்கலாம்.உண்ணும் உணவில் கலப்படம் செய்பவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.மீனில் தான் அதிக சத்துக்கள் இருக்கின்றன.அதற்கு ஆசைப்பட்டு உடலுக்கு தீங்கு தரும் பழைய மீன்களை சாப்பிட்டு வருகிறோம்.

#மீன்குறிப்புகள்    


இன்னும் கொஞ்சம்...

Monday, January 4, 2021

கரம் – 40

ஆச்சரியம்:

        சமீபத்தில் நாமக்கல்லில் இருந்து கோவைக்கு வந்து கொண்டிருந்தபோது வரும் வழியில் திருச்செங்கோட்டில் நம்ம வண்டி மக்கர் செய்ய ஆரம்பித்து விட்டது.பேட்டரிக்கு திடீரென்று பவர் செல்லாததால் பேட்டரி சார்ஜ் தீர்ந்து விட்டது.கரெக்டாக திருச்செங்கோடு சங்ககிரி ரோட்டில் பேட்டரி கடைக்கு அருகிலேயே நின்றுவிட்டது.நல்லவேளை.பக்கத்திலேயே இருந்ததால் கவனிக்க வசதியாக இருந்தது.மெக்கானிக்கிடம் சொல்லி பேட்டரியை சரி பண்ண சொல்லி விட்டு அருகில் இருந்த கார் பட்டறையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம்.அப்பொழுது டாடா நானோ கார் ஒன்று சர்வீஸுக்காக நின்று கொண்டிருந்தது.எதேச்சையாய் பார்த்ததில் அதன் பின்பக்க கதவில் தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது.பார்த்ததில் ஆச்சர்யமும் கொஞ்சம் அதிர்ச்சியும் ஆனோம்.வீட்டு கதவுக்கு தாழ்ப்பாள் மாட்டி பார்த்திருப்போம்.ஆனா காருக்கு தாழ்ப்பாள் போட்டதை இப்போதான் பார்க்கிறோம்.நல்லவேளை டாடா ஓனர் பார்க்கல…பார்த்து இருந்தா இந்நேரம் இந்த கார் தயாரிக்கிற பிசினஸையே விட்டுட்டு ஓடி இருப்பார்.


         நம்மூர்ல தான் இப்படி பட்ட அறிவாளிங்க இருக்காங்க.எதையாவது எடக்கு மடக்கா செய்யுறது, ஒரு பொருளோட மதிப்பு தெரியாம அதை சேதாரம் பண்றது இப்படி….இப்படி பட்ட ஆளுங்க இருக்கிறதால தான் நமக்கும் நல்ல கண்டெண்ட் கிடைக்குது.

வாவ்…..வாட் எ ஐடியா சேட்ஜி…..

அதிசயம் :

கோவை  கவுண்டம்பாளையத்தில் புதிதாக பாலம் கட்டும் பணி நடந்து கொண்டிருக்கிறது.ஹவுசிங் யூனிட்டில் ஆரம்பித்து கிருஷ்ணா ஸ்வீட்ஸ் வரைக்கும் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.

கொரோனா காலத்தில் பாலம் பணி கொஞ்சம் ஆமை வேகத்தில் நடந்தது.இப்பொழுது மிகவும் துரிதமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.தூண்கள் அமைக்கும்  பணி அனைத்தும் முடிந்து இப்பொழுது இரு தூண்களுக்கு இடையில் செண்ட்ரிங்க் அடித்து உத்திரம் (BEAM ) அமைப்பதற்காக கான்கீரீட் வேலை நடக்கிறது.இப்பொழுது வரை 6 பில்லர்கள் வரை பீம் வேலை முடிந்து விட்டது.மற்றவை ஒவ்வொன்றாக போய்க்கொண்டிருக்கிறது.பாலம் கட்டுமான பணி முடிய எப்படியும் இன்னும் ஆறு மாதங்கள் ஆகிவிடும்.அதற்குள் ஏதாவது ஒரு கட்சி ஆட்சியில் அமர்ந்து விடும்.அதனால் தான் என்னவோ சீக்கிரம் பில் பாசாக வேண்டி கட்டிக்கொண்டிருக்கும் பாலத்திற்கு அம்மா பெயிண்ட் ...சாரி...பச்சை கலர் பெயிண்ட் அடித்து கொண்டிருக்கின்றனர்.




பாலமே இன்னும் முடியாத நிலையில் அவசர அவசரமாக பெயிண்ட் அடித்து அரசாங்கத்திடம் பணம் பெறும் முயற்சியில் இருக்கின்றனர் காண்ட்டிராக்ட் காரர்கள்.பாலம் கான்கிரீட் போட்டு சரியான நாட்கள் வரை கியூரிங் விடுகிறார்களா என்பதே சந்தேகமாக இருக்கிறது.அதற்குள் பெயிண்ட் அடித்துக் கொண்டிருக்கின்றனர்

நடப்பு ஆட்சி முடிய இன்னும் ஒரு சில மாதங்களே இருக்கும் நிலையில் உடனடியாக காந்திபுரம் முதல் ஏர்போர்ட் வரை மேம்பாலம் கட்ட அனுமதி அளித்து இப்பொழுது அங்கும் வேலை பிசியாக போய்க்கொண்டிருக்கிறது.

கோவையில் ஏகப்பட்ட பாலங்கள் முடிவுறாமல் இன்னமும் இழுத்துகொண்டிருக்கிறது.கவுண்டர்மில்ஸ் பாலம் இன்னும் தொடங்காமல் இருக்கிறது.இத்தனைக்கும் கவுண்டம்பாளையம், கவுண்டர்மில்ஸ் இரண்டும் ஒரே சமயத்தில் ஆரம்பித்தனர்.கவுண்டம்பாளையம் பகுதியில் 30% பணிகள் முடித்து விட்டனர்.ஆனால் அங்கோ போட்டது போட்டபடி இருக்கின்றது.உக்கடம் மற்றும் ராமநாதபுரம் பாலமும் இன்னமும் முடிவுறாமல் இருக்கிறது.

முழுதாய் ஒவ்வொரு பாலத்தையும் முடித்துவிட்டு பின் புதிய பாலங்களை ஆரம்பிக்கலாம்.ஆனால் எதையும் முடிக்காமல் கோவை முழுவதும் தோண்டி வைத்து நகருக்குள் மாபெரும் வாகன நெரிசலை உருவாக்கிவிட்டிருக்கின்றனர்.

அரசியல்வாதிகள் தங்கள் சுயலாபத்திற்காக மக்களை வாட்டி வதைக்கின்றனர்.இன்னும் மெட்ரோ ஆரம்பிக்க வில்லை.அது வந்தால் இன்னும் கந்தரகோலம் தான் கோவை....

சீக்கிரம் அனைத்து பாலங்களும் முடிந்து அழகான கோவையை பார்க்க வேண்டும்.

அனுபவம் :

                      கரூர் செல்லும் போது வெள்ளக்கோவில் பகுதியில் ஒரு டீக்கடையில் டீ குடிக்க வண்டியை நிறுத்தினோம்.கடைக்காரரிடம் டீ சொல்லிவிட்டு திரும்பி பார்த்தால் கோலி சோடா..உடனே டீ யை கேன்சல் செய்து விட்டு கோலி சோடாவினை எடுத்து பெருவிரலை உள்ளே விட்டு ஒரு அழுத்து அழுத்தினால் கேஸ் பீச்சி அடிக்க,கோலி குண்டு உள்ளே போக, பாட்டிலில் இருந்த கலரின் வாசம் வெளிவந்து மூக்கை துளைக்க, எடுத்து வாயில் வைத்து குடிக்க, சிறுவயதில் கோலி சோடா குடித்த ஞாபகங்கள் வந்து போனது.கலரின் இனிப்பும், கேஸ் நிறைந்த தண்ணீரும் நாவினை நனைத்து சுவை நரம்புகளை நடனமாட வைத்து தொண்டைக்குள் இறங்கி வயிற்றினை நிரப்பியது.சிறிது நேரத்திலேயே கலரின் வாசத்தோடு பெரிய ஏப்பத்தினை கொடுக்க மனம் ஆனந்தமானது.கோலி சோடா குடிக்கும் போது சீக்கிரம் தீராமல் இருக்க பாட்டிலை திருப்பி, கோலிக்குண்டினை பாட்டிலில் உள்ள அந்த அடைப்பினில் குண்டினை வைக்காது, குண்டுடன் கலரை உறிஞ்சி குடிக்கும் போது இருக்கிற ஆனந்தம் இருக்கே  அதை அனுபவித்தால் தான் தெரியும்.அவ்வப்போது கோலி குண்டு பாட்டிலில் உரசி உரசி ஒரு சத்தம் வரும் பாருங்க...கேட்க அது அவ்வளவு ரம்மியமாக இருக்கும்.



                    இப்பொழுது விலையும் ரூ 10. என இருக்கிறது.ஒரு ரூபாய் இருந்த போது குடித்தது.பன்னீர் சோடா மற்றும் ஜிஞ்சர் என வெரைட்டியாக இருந்தது.வயிற்று வலியா...ஜிஞ்சரை குடித்தால் போதும் .விருந்தாளிகள் வருகிறார்களா, கலர் இருந்தால் போதும்.இப்படித்தான் ஒருகாலத்தில் கோலோச்சியது கோலி சோடா.பன்னாட்டு கம்பெனிகளின் வருகையில் இப்போது தொலைந்து விட்டது.ஆனாலும் ஒரு சில பேர் இன்னும் இதை நடத்திக் கொண்டு வருகின்றனர்.

நேசங்களுடன்

ஜீவானந்தம்

 


இன்னும் கொஞ்சம்...

Friday, January 1, 2021

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் - 2021 HAPPY NEW YEAR

கடந்த வருடம் 2020 உலக மக்களின் வாழ்வாதாரத்தினை கேள்விக்குறியாக்கி பொருளாதாரத்தையே ஆட்டி படைத்து மிகப்பெரிய அழிவினை ஏற்படுத்திய கொரோனோ எனும் கிருமி தந்த பலத்த பாதிப்புகள்  மிக மோசமானவை.இன்னும் இந்த பாதிப்பிலிருந்து நிறைய பேர் மீளவே இல்லை.சராசரி மனிதனில் ஆரம்பித்து மிகப்பெரிய கம்பெனி வரை கடுமையான பாதிப்புகள் இதனால்.

இதற்கு நானும் விதிவிலக்கல்ல.மிகப் பெரிய பொருளாதார பாதிப்பினை தந்து விட்டு சென்றிருக்கிறது.கிட்டத்தட்ட 10 மாதங்கள் எந்த வேலையும் இல்லாமல் கிடைத்த வேலைகளை செய்து, விவசாய பணியிலும் ஈடுபட்டு, தேங்காய், எண்ணெய், போன்ற பொருட்களை விற்று எப்படியோ உயிரை தக்க வைத்து கொண்டது தான் இந்த வருடத்தின் சாதனை.

என்னால் முடிந்த வரையில் கொரோனோ காலத்தில் நிறைய பேருக்கு பசி ஆற்றி இருக்கிறேன்.உதவும் எண்ணத்தினை கொஞ்சம் அதிகரித்து வைத்திருக்கிறது கொரோனோ.

ஆனாலும் 2020 என்ற ஒரு வருடம் ஒன்று இருந்ததையே மறக்க நினைக்கிறேன்.எப்படி இந்திய வரைபடத்தில் அத்திப்பட்டி என்கிற கிராமமே தொலைந்து போனது போல, இந்த வாழ்க்கை பயணத்தில் 2020 என்கிற வருடமே இல்லை என்கிற நினைக்கிற அளவிற்கு வைத்து விட்டது.

இந்த வருடத்தில் நிறைய இழப்புகள், பொருளாதார பாதிப்புகள், நண்பர்களின் உதவி, உறவினர்களின் அலட்சியம், சில பேர்களின் துரோகம், கந்துவட்டி காரர்களின் கொடுமை என அனைத்தையும் இந்த கொரோனோ காட்டிவிட்டது.

இருந்தாலும் ஒரு சில பேர் பொருளாதார பாதிப்பில் இருந்து கொஞ்சம் மீள கை கொடுத்தார்கள்.ஆபிஸ், குடோன், வீட்டு உரிமையாளர்கள், கடைக்காரர்கள் மற்றும் எனது பணியாட்கள் என அனைவரும் கொஞ்சம் தளர்த்திக் கொண்டு, என்னை கொஞ்சம் சுவாசிக்க வைத்தனர்.அவர்களுக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள்.மீண்டும் இயல்பு நிலைக்கு வந்தவுடன் அவர்களுக்கு உரியதை செய்து விடவேண்டும்.



இனி வரும் இந்த 2021 புத்தாண்டில் அனைத்து பொருளாதார சரிவுகளையும் மீட்டெடுத்து புதிதாய் வாழ்க்கையினை ஆரம்பிக்க வேண்டும்.

ஜீரோவில் இருந்து ஆரம்பித்தேன்.இருவது வருடங்களுக்கு பின் மீண்டும் ஜீரோவில் இருந்து ஆரம்பிக்கிறேன்.இனி உழைப்பதற்கு ஏற்ற காலம் குறைவு என்றாலும் மிகவும் நல்ல ஆயுளையும், ஆரோக்கியத்தையும் குறைவில்லாமல் தரக்கூடிய ஆண்டாய் இந்த 2021 இருக்க வேண்டும் என எல்லாம் வல்ல ஆண்டவனை கேட்டுக்கொள்கிறேன்.


என் தளம் வந்து வாசிக்கும் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

அனைவரும் ஆரோக்கியமும் நல்ல வளமும் பெற்று நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்.


நேசங்களுடன்

ஜீவானந்தம்








இன்னும் கொஞ்சம்...

Monday, December 21, 2020

பயணம் - கொச்சின், கேரளா TRAVEL - COCHIN, KERALA

கொச்சின் – பயணம்

              கொரோனோ என்கிற நோய் உலக மக்களை எல்லாம் வாட்டி வதைத்து பின் இந்தியாவிற்குள் நுழைந்தபோது அதை முதன்முதலில் வரவேற்றது கேரளம் தான்.நோய்த் தொற்றினை தடுக்க மிகுந்த கட்டுபாடுகளை விதித்து கேரள மாநிலம் முன்மாதிரி மாநிலமாக இருந்தது.ஆனால் போக போக கேரளாவிலும் நோய் பீடித்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாகி போனது.அதனால் மாநிலம் முழுக்க பலத்த கட்டுப்பாடுகள்.கேரளா எப்பவும் சுற்றுலாவை நம்பியே இருக்கிறது.இந்த கொரோனோவினால் சுற்றுலாத்துறை மிகுந்த பாதிப்புக்குள்ளாகி விட்டிருக்கிறது.

            சுற்றுலாவினை நம்பி இருந்த அத்தனை தொழில்களும் முடங்கி விட்டன.இப்பொழுது தான் கொஞ்சம் கொஞ்சமாய் தளர்வுகள் விடப்படுகின்றன.இருந்தாலும் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை இல்லாமல் வெறிச்சோடி கிடக்கின்றது கேரள கடற்கரையோர தங்குமிடங்கள், ஹோட்டல்கள் அனைத்தும்.

            ஒரு வேலை விசயமாக கொச்சின் வரை சென்றிருந்தேன்.ரயில் பயணம் தான்.(கொரோனோவினால் நாமளும் தான் பாதிக்கப்பட்டு இருக்கோம்.கார்ல போனா பர்ஸ் பழுத்திரும்.அதனால் ரயில் பயணம்.) எப்பவும் ரயில் நிலையங்களில் கூட்டம் அள்ளும்.ஆனால் எர்ணாகுளம் ஸ்டேசன் மிகுந்த பாதுகாப்புடன் ஆள் அரவமின்றி வெறிச்சோடி இருக்கிறது.காவல்துறையும் ரயில்வே துறையும் பலத்த பாதுகாப்பில் பயணிகளை வரவேற்கின்றனர்.


            ரயிலில் பயணித்து வருபவர்களில் உள் மாநில மக்கள் என்றால் விட்டு விடுகிறார்கள்.வெளிமாநிலம் என்றால் ஏதாவது ஐடி காண்பித்து, மொபைல் எண் கேட்டு, எங்கு செல்கிறீர்கள் என்கிற விவரம் வரை வாங்கி கொண்டுதான் ஸ்டேசனை விட்டு அனுப்புகிறார்கள்.கட்டாயம் மாஸ்க் அணிந்து இருக்கவேண்டும்.கேரளாவில் எங்கு சென்றாலும் மாஸ்க்கோடு தான் திரியவேண்டும்.

           ஸ்டேசனை விட்டு வெளியே வந்தால் ரோடும் வெறிச்சோடியே இருக்கிறது.ஆட்டோக்கள் குறைந்தளவே இருக்கிறது.முன்பெல்லாம் ஆட்டோவில் ஏறினாலே மீட்டர் போட்டு மீட்டருக்கு உண்டான காசை வாங்குவார்கள்.இப்பொழுது அவர்கள் இஷ்டத்திற்கு ரேட் வாங்குகிறார்கள்.எல்லாம் ரவுண்ட் ஃபிகர் தொகைதான்.சில்லறை என்பதே இல்லை.ஆட்டோ மற்றும் கார்களில் டிரைவர் சீட் பின்னாடி பாலீதீன் கவர்களால் பார்ட்டிசன் பண்ணி வைத்திருக்கிறார்கள்.காரில் ஏசி போடும் போது பின்னாடி இருப்பவர்களுக்கு ஏசி காற்றே வருவதில்லை.கொச்சின் வேறு கடும் வெயிலில் சிக்கித் தவிக்கிறது,கொச்சின் முழுக்க கான்கீரிட் காடுகளாக ஆகிவிட்டதால் வெய்யில் சற்றே தூக்கலாகவே இருக்கிறது.

            கொச்சினில் இருந்து ஃபோர்ட் கொச்சின் சென்று மாலை நேர சூரியன் மறையும் அஸ்தமன காட்சியை காணலாம் என்று அங்கு போனால் ஆட்கள் ஆரவாரமின்றி இருக்கிறது.கண்குளிர சூரிய அஸ்தமனத்தை மட்டும் கண்டேன்.அந்த பகுதி எப்பவும் மக்கள் நெருக்கமாக இருக்கும்.கடை கண்ணிகள் நிறைய இருக்கும்.இப்பொழுது மருந்துக்கு கூட கடை இல்லை.நிறைய பிளாட்பார கடைகள் இருக்கும்.அவை அனைத்தும் காணாமல் இருக்கின்றன.


            கடற்கரையை ஒட்டி மீன்கடைகளும் நிறைய இருக்கும்.உயிரோடு மீன்களை பிடித்து வைத்து விற்பனை செய்து கொண்டிருப்பார்கள்.அதன் அருகிலேயே மீன் சமைத்து தரும் இடங்களும் நிறைய இருக்கும்.இப்போது அவைகளும் இல்லை.

        ஒன்றிரண்டு உப்பு மாங்காய் கடைகள், பட்டம் விற்பனையாளர்கள் மட்டும் இருக்கின்றனர்.கூட்டம் மிகக்குறைவாகவே இருக்கிறது.அந்த மாலை வேளையில் சூரியன் எப்படி தனித்து இருக்கிறதோ அதேபோல் மக்கள் கூட்டமும் இருக்கிறது. எப்பவும் வழி நெடுக நிறைய பிளாட்பார கடைகள் இருந்த சுவட்டையே காணவில்லை.

            களையிழந்து பொலிவிழந்து காணப்படுகிறது கடற்கரை பீச்.தாராள மனம் கொண்ட கேரள அம்மணிகளும் அதிகம் காணமுடிவதில்லை.முன்பெல்லாம் சென்றால் திரும்ப மனமின்றி வருவோம்.இப்பொழுதோ ஏன் தான் இங்கே வந்தோம் என்றிருக்கிறது.

        கொச்சினில் புதிதாய் ஓட ஆரம்பித்து இருக்கும் மெட்ரோ ட்ரெயினிலும் ஏக கட்டுப்பாடுகள்.அங்கும் கூட்டம் குறைவாகவே இருக்கிறது.மெட்ரோ ட்ரெயினில் பயணிக்கையிலும் உள்ளே ஒரு செக்யூரிட்டி அனைவரையும் கண்காணித்து கொண்டே வருவதும் போவதுமாக இருக்கிறார்.முக்கியமாக மாஸ்க் அணிவதை கட்டாயப்படுத்துகிறார்கள்.



            மாஸ்க் அணிவது பிரச்சினை இல்லை.ஆனால் காதுகளில் மாட்டி மாட்டி காது வலி தாங்க முடிவதில்லை. அவதார் படத்தில் வரும் உயிரனங்களின் காது போல் ஆகிவிடும் போல மாஸ்க் அணிந்து அணிந்து.அதே போல் மூக்கும் சைனாக்காரன் மூக்கை போல சப்பை ஆகிவிடும் என்று நினைக்கிறேன்.

            கொச்சினின் பிரபலமான லுலு மால் சென்றால் அங்கும் இதே நிலைமைதான்.பரந்து விரிந்த மாலில் கூட்டம் மிக மிக சொற்பமே.லுலு மால் மிக பிரம்மாண்டமாய் ஜொலிஜொலிக்கிறது.இண்டீரியரில் அசத்தி இருக்கிறார்கள்.வெளிநாட்டில் உள்ள மால்களை போன்ற கட்டமைப்பு.மிக நன்றாக இருக்கிறது.என்ன….மக்கள் கூட்டம் மட்டும் இல்லை.மால்களில் அம்மணிகள் அதிகமாக இருப்பார்கள்.பொழுதும் போகும்.ஆனால் இங்கோ தலைகீழ்….




            நல்ல நான்வெஜ் சாப்பிடுவதற்கு ஏற்ற இடம் கேரளா தான்.கடல் உணவுகள் தாராளமாக கிடைக்கும்.அதே போல் கேரளாவின் பாரம்பரிய உணவுகளும் நிறைய கிடைக்கும்,ஆனால் இந்த முறை ஒவ்வொன்றையும் ருசித்துப்பார்க்க பகீரத முயற்சிகள் எடுக்க வேண்டி இருக்கிறது.நிறைய கடைகள் கொரோனோவினால் பூட்டியே கிடக்கின்றன.மேலும் நான் சென்ற தினமன்று உள்ளூர் பஞ்சாயத்து தேர்தல் நடப்பதால் அன்றும் நிறைய கடைகள் மூடப்பட்டு இருந்தன.

            முக்கியமாய் நம்ம கள்ளுகடை ஷாப்பும், பெவரேஜ் கடைகளும் நான்கு நாளைக்கு மூடப்பட்டிருக்கிறதாம்.அதிசயமாய் திறந்து வைத்திருந்த ஹோட்டல்களில் கிடைத்த உணவினை சாப்பிட்டுவிட்டு வந்தேன்.பீஃப் கறியும் புரோட்டாவும் சிக்கவில்லை கண்ணுக்கு.ஒரு கடையில் மலபார் பிரியாணி கிடைத்தது.ஆனால் அதிக சுவையில்லை.அப்பம் செம்மீன் கறி ஒரு கடையில் கிடைத்தது.இப்படி தேடி தேடி சாப்பிட வேண்டியதாகி இருந்தது.சோடா, கொளுக்கட்டை உருண்டை இப்படி ஒவ்வொன்றும் ஒவ்வொரு இடமாக தேட வேண்டியதாகிப்போனது.




            இந்த கொரோனாவினால் நிறைய பேர் வேலைகளை இழந்து இருக்கின்றனர் என்பது கண்கூடாக தெரிகிறது.லாட்டரி சீட்டு விற்பவர்கள் எண்ணிக்கை மிக அதிகமாக ஆகி இருக்கிறது.எங்கு பார்த்தாலும் அவர்கள் தான்.கொரொனாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கேரள அரசாங்கம் நல்ல முறையில் சிகிச்சை அளிக்கிறது.தமிழகத்தினை போல் தட்டி அடித்து வீட்டை தனிமை படுத்துவதில்லை.நோயாளிகள் பெயரைச் சொல்லி சம்பாதிப்பதில்லை.கொரோனோவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச ரேசன் பொருட்களை தந்துவருகிறது.தனியார் மருத்துவமனைக்கு யாரும் செல்வதில்லை.முழுக்க முழுக்க அரசாங்கமே நல்ல மருத்துவ சிகிச்சையை அளிக்கிறது.

            தமிழக பாலங்களைப் போலவே கேரளாவிலும் பாலங்கள் கட்டுமானப்பணி நடக்கிறது.இங்கு அம்மா ஆட்சி என்பதால் பச்சை கலர் தான் பாலங்கள் முழுக்க.அதே போல் அங்கே சிவப்பு வர்ணங்களை நீல கலரோடு சேர்த்து கம்யூனிஸ்ட் கலர் என்பது தெரியாத அளவுக்கு வர்ணம் பூசி இருக்கின்றனர்.

            இந்த பயணத்தினை பொறுத்தவரை முழுமையான திருப்தி இப்பொழுது கிடைக்கவே இல்லை.100 சதவீதம் கடைகளும், மக்களும் எப்பொழுது இயல்புநிலைக்கு திரும்புகிறார்களோ அப்பொழுது தான் கேரளா பழைய நிலைமைக்கு மாறும்.

இயல்பு நிலை அடைந்தவுடன் மீண்டும் கேரளா பயணப்படவேண்டும்.கேரள உணவுவகைகளை ஒரு பிடி பிடிக்க வேண்டும்.

எண்டே கேரளா....இப்போல் நன்னாயிட்டு இல்லா...

நேசங்களுடன்

ஜீவானந்தம்


 

 

 

 

இன்னும் கொஞ்சம்...

Friday, December 11, 2020

இரங்கல் - சாந்தி சோசியல் சர்வீஸ் நிறுவனர் உயர்திரு.சுப்பிரமணி

 கோவையின் அன்னதான பிரபு சாந்தி கேண்டின்  உயர்திரு.சுப்பிரமணியன் அவர்கள் இன்று இயற்கை எய்தினார்.

சாந்தி சோசியல் சர்வீஸஸ் என்கிற பெயரில் இவர் ஆற்றிய பணிகள் அளப்பரியவை.முகம் காட்டாது பல லட்ச மக்களுக்கு

பசியாற்றிய இவர் கோவை மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம்.அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.


இன்னும் கொஞ்சம்...

Saturday, November 14, 2020

தீபாவளி நல்வாழ்த்துக்கள்

 இந்த தீப ஒளித்திருநாளில் வாழ்வின் எல்லா வளங்களையும் நலங்களையும் பெற்று இனிதாய் வாழ வாழ்த்துக்கள்.


நேசங்களுடன்

ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Friday, September 18, 2020

கோவை மெஸ் - ஹோட்டல் கர்ணா, சின்னமனூர், தேனி

 ஹோட்டல் கர்ணா, சின்னமனூர், தேனி

        ஒரு வேலை விசயமா தேனியில் இருந்து சின்னமனூர் வந்தோம்.நேரத்துலயே போனதால் காலை சாப்பாடு சாப்பிடாம போய்ட்டோம்.பத்துமணி வேற ஆயிடுச்சி.சரி. ஏதாவது இருப்பதை சாப்பிடுவோம்னு பிரபல ஹோட்டலான கர்ணா வுக்கு போய் கேட்டா, பிரியாணியே ரெடியா இருக்குண்ணே..அப்படின்னு சொல்ல, சரி மதிய சாப்பாட்டையே இப்பவே ஆரம்பிப்போம்னு கை கழுவிவிட்டு டேபிளில் அமர்ந்தோம்.


                    பளபளன்னு ஃப்ரஷான வாழை இலை போட, பிரியாணி வெண்கல சிறு குண்டாவில் கொண்டு வைத்து வைக்க, பிரியாணி அதன் நிறத்தோடு மிக்க வாசனையோடு, சீரகசம்பா அரிசியோடு மட்டன் துண்டுகளோடு, இலையில் சூடாய் வைக்க, ஆவி பறக்கும் வாசனையில் மூக்கை துளைத்தது பிரியாணியின் மணம்.ஆஹா..இதுவல்லவோ பிரியாணி...ஒரு விள்ளல் எடுத்து சுவைத்ததும் நாக்கின் நரம்பு மண்டலங்கள் இயந்திரகதியில் இயங்க ஆரம்பித்தன..
நல்ல சுவை.மணம்.நிறம் என அனைத்தும்.





மட்டன் துண்டுகள் அதன் வாசனையில் நன்கு வெந்திருக்கிறது..சாப்பிட சுவையுமாக இருக்கிறது.அரிசியும் நல்ல உதிரி உதிரியாக, பிரியாணிக்கே உண்டான நிறத்துடன் சூப்பராக இருக்கிறது.

ஆரம்ப காலத்தில் இந்த ஹோட்டல் பத்துக்கு பத்து ரூம் சைசில் இருந்ததாம்.இன்று பிரம்மிக்கத் தக்க வளர்ச்சி என்பதன் காரணம் அதன் ருசியே..

                        மட்டன் சுக்கா அடுத்த ஆர்டராய் இருக்க, அது ஏனோ என்னை கவரவில்லை.இன்னும் கொஞ்சம் பதமாக வெந்திருக்க வேண்டிய நிலையில் அது இருக்கிறது.ஒருவேளை நாங்கள் நேரத்திலேயே சென்றுவிட்டதால், வெந்து கொண்டிருக்கும் போதே எடுத்து வந்து விட்டார்களோ என நினைக்கிறேன்.



பிரியாணி நல்ல சுவை.மணம், சுவை, திடம் திரீ ரோசஸ் போல பிரியாணி சூப்பரோ சூப்பர்.

                சின்னமனூர் போனீங்கன்னா தாராளமாக சுவைக்கலாம்..பத்து மணிக்கே தயாராகிவிடுகிறது பிரியாணி..ஆற அமர ருசிக்கலாம்.

நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...