Monday, August 11, 2014

கோவை மெஸ் - பப்ஸ், கண்ணன் உணவகம், கட்டப்பெட்டு, கோத்தகிரி, ஊட்டி மாவட்டம் ( Kattabettu, Otty)

           கடந்த சனியன்று வேலை விசயமாக ஊட்டி சென்றிருந்தேன்.ஊட்டிக்கு ரெண்டு வழில போலாம்.ஒண்ணு கோத்தகிரி, இன்னொரு வழி குன்னூர்.குன்னூர் வழியா போனா ரோடு ரொம்ப மோசம்..அதிலில்லாம டிராபிக் படு பயங்கரமா இருக்கும்.முன்னால் போற வண்டியோட வாலைப்பிடிச்சிகிட்டே போகனும்.ஹேர்பின் பெண்டுகள் வேற அதிகம்.
             ஆனா கோத்தகிரி வழியா போனா ரோடு அம்சமா இருக்கும்.ஏன்னா கொடநாடுக்கு போற வழி.குண்டு குழியில்லாம ரோடு சும்மா கும்னு இருக்கும்.அதிக டிராபிக் இருக்காது, ஹேர்பின் பெண்டுகளும் கம்மி.வண்டியை அழுத்தி பிடிச்சிட்டு நாம பாட்டுக்கு போலாம்..
              அப்படித்தான் அன்னிக்கு கோத்தகிரி வழியில் சென்றோம்.இருபுறமும் தேயிலைத்தோட்டங்கள்...அடர்ந்த மரங்கள், சில்லென குளிர் காற்று, என ரம்மியமாக இருக்க, ரசித்துக்கொண்டே மலை ஏறிக்கொண்டிருந்தோம். ஓரிடத்தில் நண்பர் பப்ஸ் டீ சாப்பிட்டுவிட்டு போலாம் என சொல்ல, குளிருக்கு இதமாக இருக்கட்டுமே என்று வண்டியினை ஓரங்கட்டினோம்.


                அது கட்டபெட்டு என்கிற ஊர்.கோத்தகிரி தாண்டி ஒரு பிரிவு வருகிறது.குன்னூர்க்கும் உதகைக்கும் தனித்தனியே பாதை பிரிகிறது. அங்கிருந்து உதகை செல்லும் வழியில் ஒரு சில மீட்டர்களில் கட்டபெட்டு ஊர் நம்மை வரவேற்கிறது.அங்கே இருக்கிறது இந்த கண்ணன் உணவகம்.
 
            காரை நிறுத்திவிட்டு சுற்றும்முற்றும் பார்த்தால் அந்த ஹோட்டலுக்கு எதிரில் ஒரு மலை முகடு கண்ணுக்கெட்டிய தூரத்தில் பசுமையாய் காட்சியளிக்கிறது.சில்லென சாரலில் சிறுதூறலில் நனைந்து கொண்டே கடைக்குள் காலடி வைத்தோம்.
    உள்ளே நுழைகையில் பப்ஸின் வாசம் நம்மை கட்டிப்போடுகிறது.ஓரமாய் ஓரிடத்தில் அமர, கடந்து சென்ற தட்டு நிறைய பப்ஸ்கள் நம்மை கூடவே இழுத்து செல்கின்றன.சூடாய் பப்ஸ் கடையின் காலி ஷோகேஸிற்கு காட்சிப்பொருளாய் வந்து அமர, சில கணங்களில் காலியாகி மீண்டும் பழைய நிலையை அடைகிறது ஷோகேஸ்.இப்படி சில நிமிடங்களுக்கொரு முறை மறுசுழற்சி நிலையை அடைகிறது ஷோகேஸ்.

              பப்ஸினை முக்கோண வடிவத்தில், செவ்வக வடிவத்தில் தான் பார்த்திருக்கிறேன்..ஆனால் இங்கோ தோற்றத்தில் கொளுக்கட்டை போல் இருக்க, ஒரு புறம் நெளி நெளியாய் சுருட்டப்பட்டு பார்க்கவே அழகாய் இருக்கிறது.
                  எங்களிருவருக்கும் ஆளுக்கொரு பப்ஸ் கிடைத்து சாப்பிட ஆரம்பிக்க, பஞ்சு போன்ற மென்மையாய் மெத்தென்று இருக்க, இரு விரல்களால் கொஞ்சம் பிய்க்க, உள்ளேயிருந்து இளஞ்சூடாய் ஆவி வெளியேற, இலகுவாய் விரல்களில் குடியேறி வாய்க்கு வந்து சேர்ந்தது.சுவையோ அபாரமாய் இருக்க, வாசம் சுற்றுப்புறத்தினை நனைக்க ஆரம்பித்தது.உருளைக்கிழங்கு மசாலாவுடன் சூடும் சேர்ந்து நம் வாயினை சேர சுவை நரம்புகள் புதியதாய் ஒரு உணர்வினை உணர்ந்து கொண்டிருந்தன.

                    இளஞ்சூட்டுடன் கொஞ்சம் கொஞ்சமாய் பிய்த்து சாப்பிட சாப்பிட வாய்க்கு வலிக்காமல் உள்ளே இறங்கிக் கொண்டிருந்தது.மீண்டும் இன்னொரு பப்ஸ் ஆர்டர் செய்து அந்த அனுபவத்தினை ர(ரு)சிக்க ஆரம்பித்தோம்.கூட டீ யும் சேர்ந்து கொண்டதில் மாலை வேளையில் மழைப்பொழுதில் மிக சுவையாய் இருக்க ஆரம்பித்தது.
                     பப்ஸ் பக்கத்திலிருந்த சமையலறையில் இருந்து வெளிவர எட்டிப்பார்த்ததில் ஒரு குருப்பே தீயாய் வேலை செய்து கொண்டிருந்தது.மைதா மாவினை உருட்டி பிசைந்து நெவிட்டி, அதில் உருளைக்கிழங்கு மசாலாவினை சேர்த்து கலை நயத்தினை அதில் பொறித்து எண்ணையில் போட, பப்ஸ் வெந்து வெளியேற காத்துக்கொண்டிருந்தது.
             பப்ஸ்கள் உடனுக்குடன் வெளியாகி தீர்ந்து கொண்டிருந்தது.வருபவர்கள் சாப்பிட்டு பார்சல் வாங்கிக்கொண்டு செல்கின்றனர்.நாங்களும் எங்கள் பங்குக்கு வாங்கிக் கொண்டோம்..விலை ரொம்ப குறைவுதான்.சுவையோ அதிகம்.
அந்தப்பக்கமாக போனா கண்டிப்பா சாப்பிட்டு பாருங்க, உங்களுக்கே பிடிக்கும்.
இடம் – கோத்தகிரி தாண்டி, உதகை, குன்னூர் பிரிவு ரோடு வருகிறது.அதில் உதகை ரோட்டில் சில மீட்டர்களில் கண்ணன் உணவகம் இருக்கிறது.

இதுக்கு முன்னாடி போனது எமரால்டு எஸ்டேட்

நேசங்களுடன்
ஜீவானந்தம்



இன்னும் கொஞ்சம்...

Wednesday, July 23, 2014

சமையல் - அசைவம் - மீன் முட்டைப் பொரியல்

மீன் முட்டைப் பொரியல்
             இந்த வார ஞாயிற்றுக்கிழமை எனது பால்ய கால நினைவுகளோடு கரூரில் நிஜமாகவே கழிந்தது.நண்பகல் நேரம் மீன் பிடிப்பதற்காக புஞ்சைப்புகளூர் காவிரி ஆற்றுக்கு சென்றோம்.தண்ணீர் வரத்து குறைவாக இருப்பதால் ஆற்றின் ஒரு சில இடங்களில் மட்டுமே தண்ணீர் தேங்கி ஓடிக் கொண்டிருக்கிறது.மற்ற இடங்கள் சகாரா பாலைவனம் போல இருக்கிறது.தண்ணீர் தேங்கிய இடங்கள் கொஞ்சம் ஆழத்துடன் இருக்கவும் கவனமாய் இறங்கினோம்.



மீனவர்களின் வலைக்கு தப்பிய ஒரு சில மீன்கள் எங்கள் கைகளில் அகப்பட காத்துக்கொண்டிருந்தன.தண்ணீரில் வலையை சுற்றிக்கட்டிவிட்டு புதர்களில் கைகளால் மீன்களை பிடிக்க ஆரம்பித்தோம்.எங்களின் கைகளில் சில மீன்கள் மாட்டின.தப்பிச்சென்ற பல மீன்கள் வலையில் மாட்டின.இரண்டு தண்ணீர் பாம்புகள் கூட அகப்பட்டு பரிதாபமாய் உயிர்விட்டன.

பிடிபட்டவை அனைத்தும் கெண்டை மற்றும் ஜிலேபி மீன்களே...அதில் கெண்டை மீன்கள் மட்டுமே கொழுத்துக்கிடந்தன.இப்படியாய் நான்கு கிலோவுக்கும் மேலே பிடித்துவிட்டு கிளிஞ்சல்கள் உதவியால் செதில்களை நீக்கி குடல் அசுத்தங்களை எடுக்கும்போது தான் கெண்டை மீன்கள் அனைத்தும் செனை பிடித்திருப்பது தெரிந்தது.கவனமாய் மீன்முட்டைகளை பாத்திரத்தில் எடுத்துக்கொண்டோம் பொரியல் செய்வதற்காக…..



கிட்டத்தட்ட அரைக் கிலோவிற்கும் மேலாக மீன் மூட்டை இருக்கும்.அதை பத்திரப் படுத்தியவுடன் மீன்களை அலசி எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தோம்.
இனி மீன் முட்டைப்பொரியல் செய்வதைப் பார்ப்போம்
தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம் – 200 கிராம் - பொடியாய் நறுக்கியது
பூண்டு –  10 பற்கள் - பொடியாய் நறுக்கியது
மஞ்சள்தூள் – சிறிதளவு
பச்சைமிளகாய் – இரண்டு மட்டும்
எண்ணைய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
தேங்காய் துருவல் - சிறிதளவு
செய்முறை :
முதலில் எண்ணைய் விட்டு வெங்காயம், பூண்டு பச்சை மிளகாய் போட்டு நன்கு வதக்கவேண்டும்.சிறிது மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கிளறவேண்டும்.பின் மீன் முட்டையை போட்டு அடிபிடிக்காமல் கிளறவேண்டும்.நன்கு வெந்து உதிரி உதிரியாக ஆகும் வரை கிளறவேண்டும்.பின் தேங்காய் துருவலை தூவி ஒரு கிளறு கிளறிவிட்டு இறக்கி வைக்க வேண்டும்.கொத்தமல்லி. புதினா தழை இருந்தால் தூவிவிடலாம்.சாப்பிட மிக டேஸ்டாக இருக்கும்




இந்த மீன் சினை கடைகளில் எங்குமே கிடைக்காது,ஆற்றிலோ கடலிலோ ஃபிரஷாக பிடிக்கப்படும் மீன்கள் கருவுற்றிருந்தால் மட்டுமே மீன் சினை கிடைக்கும்.அதை மேற்சொன்ன வகையில் செய்து சாப்பிட்டால் செம டேஸ்டாக இருக்கும்

நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Monday, July 14, 2014

பு(து)த்தகம் - சயாம் மரண ரயில்

சயாம் மரண ரயில்:
சொல்லப்படாத மெளன மொழிகளின் கண்ணீர்

               சமீபத்தில் படித்த மனதை உலுக்கிய ஒரு நாவல்.இரண்டாம் உலகப்போர் நடக்கும் போது இந்தியாவை கைப்பற்ற ஜப்பான் தரைவழியாக தன் படைகளை அனுப்ப சயாமிலிருந்து (தாய்லாந்து) பர்மா வரை இருப்புப்பாதை அமைக்க திட்டமிட்டு அதை செயல்படுத்தியது.இந்த இருப்புப்பாதையை அமைக்க போர்க்கைதிகளைப் பயன்படுத்தியது ஜப்பான் ராணுவம்.போர்க்கைதிகளான ஆங்கிலேயர்களை தொழில்நுட்பவேலைக்கு அமர்த்திக்கொண்டது.சுரங்கம் வெட்டுதல், மண் அள்ளுதல் போன்ற கடுமையான வேலைகளுக்கு ஆசியத் தொழிலாளர்களை பயன்படுத்தியது.அதில் பெரும்பான்மையோர் மலேசிய தேயிலைத் தோட்டங்களில் கொத்தடிமைகளாக இருந்த தமிழர்கள்.
அவர்களை ஏமாற்றியும், நகரங்களில் வாழ்ந்து வந்த மற்ற தொழிலாளர்கள், தெருவில் வருவோர் போவோர் என எல்லாரையும் வலுக்கட்டாயமாக பிடித்து சயாம் ரயில்பாதையை அமைக்க கொண்டு செல்லப்பட்டனர்.
              ரயில்பாதை அமைக்கும் போது சரியாக வேலை செய்யவில்லை எனில் ஜப்பானியர்களால் கொல்லப்படுவதும், மருத்துவ வசதிகள் இல்லாமல் உயிரிழப்பதும், பிரிட்டிஷ் படையினரின் குண்டுவீச்சுக்கு பலியாவதும், பலவித நோய்களுக்கு ஆளாகி இறப்பதும் என தமிழர்கள் கொத்துக்கொத்தாய் இறந்தனர்.ஜப்பானின் அடக்குமுறையினால் பணியிலேயே இறந்தவர்களும், தற்கொலை செய்துகொண்டவர்களும், தப்பித்துச்செல்ல முயன்று ஜப்பான் ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டவர்களும் இதில் அடக்கம்.

            அவ்வாறு சிக்கிக்கொண்ட ஒரு தமிழ் இளைஞனின் அனுபவங்கள்தான் இந்த நாவலில் சொல்லப்பட்டிருக்கிறது.கதைக்களனாக ரத்தம் வடியும் மரணப்பாதையில் நடந்த கொடுமைகள் விவரிக்கப்பட்டு இருக்கின்றன.போர்முடிவில் தான் தமிழர்களுக்கு விமோசனம் கிடைத்து அவர்கள் சுதந்திரகாற்றை சுவாசித்தனர்.ஆனால் அதற்குமுன் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை லட்சத்திற்கும் மேல்.ஆனாலும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் சின்னாபின்னமாகின, நிர்க்கதியாகிவிட்ட குடும்பம், பெற்றோர்களை இழந்த பிள்ளைகள், கணவனை இழந்த பெண்கள் என இவர்களின் வேதனைகள் வெகுகாலம் நீடித்தது.
              மலேசிய எழுத்தாளர் சண்முகம் அவர்கள் சயாம் மரண ரயில் பாதை அமைத்த ஜப்பானியர்களால் தமிழர்கள் அடைந்த கொடுமைகளை நாவல் வடிவில் ஆவணப்படுத்தியுள்ளார்.படிக்க சுவாரசியமாக அதே சமயம் நம் தமிழர்கள் எதிர்கொண்ட துயரங்களை நாமும் அறிந்து கொள்ளும் ஒரு வரலாறாக இந்த புத்தகம் இருக்கிறது.தமிழர்கள் அனைவரும் வாசிக்க வேண்டிய நூல்.
இந்த நூலை தமிழோசை பதிப்பகம் வெளியிட்டு இருக்கிறது.
பக்கம் – 304
விலை – 150.00

இந்த சயாம் மரண ரயில் புத்தகத்தை வெளியிட்ட திரு விஜயகுமார் அவர்களுக்கு நன்றி.
இன்னும் கொஞ்சம்...

Monday, July 7, 2014

ஏர்கன் (AIR GUN) துப்பாக்கி - மாஸ்டர் ஐ ( Dominant or Master Eye )

குறிப்பு : ஏர்கன் துப்பாக்கிக்கும் எனக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை.ஒரு துப்பாக்கி வாங்க போனதோடு அந்த கடையின் சகவாசம் முடிந்தது,துப்பாக்கி வேண்டுபவர்கள் பதிவின் கீழே கொடுத்திருக்கும் எண்ணை தொடர்பு கொண்டு விசாரித்து கொள்ளலாம்.பதிவு எழுதிய எனக்கு போன் செய்ய வேண்டாம்.நன்றி.                

கரூர் அருகே புகழூரில்  EID PARRY INDIA  லிமிடெட்டின் சர்க்கரை ஆலை இருக்கிறது.அருகிலிருக்கும் ஒரு ஊரின் பெயர் செம்படாபாளையம்.கிராமம்.என் அன்னையின் பிறந்த ஊர்.அங்கு என் தாத்தாவின் தோட்டம் இருக்கிறது.பால்யகால வயதில் எங்களது பள்ளி விடுமுறைகள் அனைத்தும் அங்கு தான் கழிந்திருக்கின்றன.சுற்றிலும் வேலியிடப்பட்ட தோட்டத்தின் அருகிலேயே ஓடும் வாங்கல் வாய்க்கால், தோட்டத்தில் இருக்கிற பெரிய கிணறும் ஒரு சில மீட்டர் தூரத்தில் பாய்கின்ற காவிரி ஆறும் எங்களுடைய மீன்பிடி வேட்கையை தணித்து கொண்டிருக்கும்.தோட்டத்தில் பறக்கிற பறவையினங்கள் எங்களின் கவட்டை வில்லுக்கு பலியாகி எங்களுக்கு விருந்தாகி இருக்கும். தென்னையில் கட்டப்பட்டிருக்கும் கள்ளு எங்களின் தாகத்தினை தீர்த்துக் கொண்டிருக்கும்.நெல் வயல் எலிகள் கள்ளுக்கு மேட்சாய் வறுக்கப்பட்டு தொட்டுக்கொள்ளப்பட்டிருக்கும்.அவ்வப்போது வயலுக்கு நீர்பாய்ச்சுவது, களை எடுப்பது, ஆடு மேய்ப்பது வேலிகளில் ஓணான் பிடிப்பது, மரம் ஏறுவது என சிறுவயதின் விடுமுறைக்காலங்களில் தோட்டமே சொர்க்கலோகமாக இருந்தது.
             காலம் உருண்டோட தொடர்புகள் சிறிது சிறிதாக விலகி எப்பவாவது விசேசங்களுக்கு மட்டும் அங்கு செல்வது வாடிக்கையாகிப் போனது.காலப்போக்கில் தாத்தா, அம்மாச்சி இருவரும் காலமாகிவிட தாய்மாமாவின் பராமரிப்பில் தோட்டம் இருந்து வந்தது.சமீபத்தில் அவரும் இறந்துவிட பொறுப்புகள் மாமனின் பையனிடம் வந்து சேர, சிறுவயதிலேயே வேட்டையில் ஈடுபட்டிருந்த என் மாப்பிள்ளை இப்போது முழு நேர விவசாயி ஆகிவிட்டான்.மேலும் தோட்டத்தில் புறா, கோழி, ஆடு, மாடு என வளர்த்தி ஒரு லாபமிக்க விவசாயியாக மாறிவிட்டான். சமீபத்தில் கோவை வந்திருந்தான்.எதற்காக என்றால் ஏர்கன் (AIRGUN) வாங்குவதற்காகவாம்.தோட்டத்தில் வளர்கிற புறாக்கள் அடிக்கடி கம்பி நீட்டிவிடுவதால் அதை அடிப்பதற்கு தேவைப்படும் என்பதற்காக.
             கோவை வந்த அவனை சுந்தராபுரத்தில் இருக்கிற FIRE ARMS என்கிற கடைக்கு கூட்டிச்சென்றேன்.கடையின் தோற்றமே மிக அழகாய் இருந்தது.அடுக்கி வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகள் பில்லா படத்தினை ஞாபகப்படுத்தின.பழைய காலத்து துப்பாக்கிகள் பளபளப்புடன் போட்டோ பிரேமில் அழகாய் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.துப்பாக்கி குண்டுகள் ரகம் ரகமாய் ஷோகேஸில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.



              அப்போது ஒரு கனத்த நீண்டகுழல் துப்பாக்கியை தூக்கி வந்த ஒரு வாடிக்கையாளர் டேபிளின் மீது வைக்க எங்கள் முன்னால் அது பிரம்மாண்டமாய் இருந்தது.சின்ன பேட்டரி போன்ற குண்டினை போடக்கூடிய ரகம் அது.ராஜேஷ்குமார் நாவல்களிலும், சினிமாக்களிலும் மட்டுமே துப்பாக்கிகளை பார்த்து இருக்கிறேன்.மிக அருகில் இருக்க எடுத்து தூக்கிப்பார்க்கிறேன்...செம கனம்....தற்பாதுகாப்புக்காகவும் வேட்டைக்காகவும் வாங்கிய அதரபழசு வகையை சார்ந்தது.ஆனாலும் துப்பாக்கி அது.
              அதே போல் இன்னொருவர்...நூறாண்டு பழமை வாய்ந்த ரிவால்வர் அது.ஐந்து புல்லட் சேம்பர் கொண்ட ரகம்.சின்னது தான்.ஆனால் கனமோ அதிகம்.அதை வாங்கி ஒரு போட்டோ எடுத்துக்கொண்டேன்.
              இப்பொழுது அரசாங்கம் துப்பாக்கிகளுக்கு லைசென்ஸ் வழங்குவதற்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறது. சாமானியன் எவரும் அதை வாங்கிட முடியாது.பெரும் கோடிஸ்வரர் கூட வாங்க விருப்பப்பட்டால் அதிக பிரயத்தனம் செய்யவேண்டி இருக்கும். அதனால்தான் இந்தக்கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் அனைவரும் அரை நூற்றாண்டுகளுக்கும் மேலான துப்பாக்கிகளை கொண்டு வருகிறார்கள்.
              ஏர்கன் துப்பாக்கிகள் ஆபத்தில்லாத லைசன்ஸ் தேவைப்படாத வகையைச் சேர்ந்தவை.துப்பாக்கி சுடும் பயிற்சி பெற இந்த வகை துப்பாக்கிகள் பயன்படுகின்றன.ஆனாலும் நம்ம ஆட்கள் வேட்டைக்காக இதனை பயன்படுத்த ஆரம்பித்திருக்கின்றனர்.மரம் மற்றும் ஃபைபரினால் ஆன துப்பாக்கிகள் தான் இருக்கின்றன.ஏர்கன் துப்பாக்கியை வாங்க முடிவு செய்து அதை பரிட்சித்துப்பார்க்க ஆரம்பித்தோம்.
              கடையின் உரிமையாளரான திரு வெங்கடேஷ் அவர்கள் துப்பாக்கியின் குண்டு செல்லும் தூரம், எவ்விதம் குண்டு போடுவது, எப்படி பராமரிப்பது போன்ற வழிமுறைகளையும் துப்பாக்கியை எவ்வாறு பிடிப்பது, பார்வையை எப்படி பொருளின் மீது குவிப்பது என்று சொல்லிவிட்டு துப்பாக்கியில் புல்லட்டை (pellet) நிரப்பி டர்ட்(DART) போர்டினை குறி பார்த்து சுட்டார்.ஒரு சில அட்ஜஸ்மெண்ட்கள் செய்து விட்டு மீண்டும் சுட்டார்.சரியான இடத்தினை துளைத்தது.
          அடுத்து எங்களின் முறை…. இதுவரைக்கும் துப்பாக்கியை தொட்டது கூட இல்லை. (ஏர்கன்னாக இருந்தாலும்) நரிக்குறவர் துப்பாக்கியில் குண்டு போடும் போது அருகில் இருந்து பார்த்தது. இப்போது தான் தூக்கி தோளில் வைக்கிறேன்.ஆப்ஜெக்டை(OBJECT) பாருங்கள் துப்பாக்கி குழல் வழியே என்கிறார்.நானும் பார்க்கிறேன் ஒன்றும் புலப்படவில்லை.எப்பவும் போல இடது கண்ணை மூடிவிட்டு குறி பார்க்கிறேன்.அந்த குழலில் பொருத்தப்பட்ட துளையில் ஆப்ஜெக்ட் அகப்படவே இல்லை.சார்...போர்ட் தெரியுது...ஆனா இலக்கு ஒண்ணுமே தெரியலை என்கிறேன்.


உடனே ஒரு கேள்வி கேட்டார்...
உங்களோட மாஸ்டர் ஐ எது என்று ?
இருவரும் பேந்த பேந்த முழித்தோம்.பின் அவரே விளக்க ஆரம்பித்தார்.ஒவ்வொருவருக்கும் ஒரு கண் மட்டுமே மிகுந்த சக்தி வாய்ந்ததாக இருக்கும்.அப்படிப்பட்ட கண் தான் மாஸ்டர் ஐ.(Dominant eye )
         ஒரு பொருளை துல்லியமாக குறிபார்த்து சுட மாஸ்டர் ஐ உதவி செய்கிறது.இடதுகண் மாஸ்டர் ஐ ஆக இருக்கும் பட்சத்தில் அவர் இடதுகை அவருக்கு நல்ல பலமுள்ளதாக இருக்கும்.இடது கை பழக்கம் அவருக்கு நல்ல பலனைத்தரும்.அதுபோலவே வலது கண் மாஸ்டர் ஐ யாக இருந்தால் வலது கை நல்ல பலனைத்தரும்.
எப்படி கண்டறிவது?
           உங்கள் ஆட்காட்டி விரலை தூரத்தில் ஏதாவது ஒரு பொருளின்மீது மையப்படுத்துங்கள்.இரண்டு கண்களாலும் பார்க்கும் போது ஆட்காட்டிவிரல் அந்தப்பொருளின் மீது மையமாக இருக்கும்.
இப்பொழுது வலது கண்ணை மூடிவிட்டு இடதுகண்ணால் பார்க்கவும்.பின் இடது கண்ணை மூடிவிட்டு வலதுகண்ணால் பார்க்கவும்.தொடர்ந்து செய்யவும்.எப்பொழுது அந்தப்பொருளின் மீது இருக்கிற ஆட்காட்டி விரல் நகராமல் இருக்கிறதோ அந்த கண் தான் மாஸ்டர் ஐ.

தெளிவா சொல்லணும்னா Master Eye  Dominant Eye இங்க பாருங்க

                 செய்து பார்த்ததில் எனக்கு இடது கண் தான் மாஸ்டர் ஐ.மீண்டும் துப்பாக்கியை ஏந்தினேன்.குண்டினை நிரப்பினேன்.கண்களில் நம்பிக்கை ஒளி தெரிந்தது.இலக்கினை குறிபார்த்தேன்.போர்டில் இருந்த வட்டம் மட்டுமே தெரிந்தது.குழலில் இருக்கிற துளையில் இலக்கு தெளிவாக இருக்க, ட்ரிக்கரை அழுத்தினேன்.சிறு சத்தம் தான்.தோட்டா சீறிப்பாய்ந்தது.கணப்பொழுதில் இலக்கை விட்டுவிட்டு அருகில் குண்டுபாய்ந்தது.
முதல்முறைதான்...
இனி போகப்போக சரியாகிவிடும்.

ஏர்கன் வாங்க விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண் :
திரு.வெங்கடாசலம் : 0422 2674685; 2672251; 98422 22540

வாங்குறவங்க...அப்படியே நம்ம பேரை சொல்லுங்க....அப்பத்தான் நமக்கு வரவேண்டியது வந்து சேரும்.....ஹிஹிஹிஹி...

நேசங்களுடன்
ஜீவானந்தம்





இன்னும் கொஞ்சம்...

Wednesday, July 2, 2014

கோவையின் பிரபல இடங்கள் - சுற்றுலா

          கோவை தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரம்.தொழில்வளர்ச்சி அடைந்த நகரம்.(இப்போ அப்படியான்னு தெரியல..ஏகப்பட்ட பஞ்சாலை மில்கள் மூடப்பட்டு அபார்ட்மெண்ட்களாகிவிட்டன.மோட்டார் தொழில்களும் நசிவடைந்து போய்விட்டிருக்கின்றன.கோவை முழுக்க கான்கிரீட் காடுகள் உருவாகிக்கொண்டிருக்கின்றன பசுமை மறந்து.)
கோவை என்றாலே சிறுவாணி தண்ணீரும் சில்லென்ற தென்றலும் தான் ஞாபகத்திற்கு வரும்.மேற்குத்தொடர்ச்சி மலைகளினால் வருகின்ற மிதமான குளிர்ச்சி எப்பவும் கோவையில் குடிகொண்டிருக்கும். கோவில்களும், மலைகளும், அணைகளும் மற்றும் பூங்காக்களும் நிறைந்த ஊராகும்.ஒரு நாள் சுற்றுலா போக ஏற்ற இடங்கள் நிறைய இருக்கின்றன.அப்படிப்பட்ட கோவையில் இருக்கிற பிரபல இடங்களைப்பார்ப்போம்.
கோவில்கள்:
மருதமலை முருகன் கோவில்:
       கோவையின் மிக அருகில் இருக்கின்ற ஒரு பிரபல மலைக்கோவில் மருதமலை.முருகனின் ஏழாவது படைவீடாகும். மேற்குத்தொடர்ச்சி மலையின் மேல் அமைந்துள்ள இந்தக்கோவிலில் முருகன் குடிகொண்டுள்ளார்.உயரம் குறைவான மலைதான்.ஆனாலும் வளைந்து வளைந்து செல்லும் மலைப்பாதை...மலை மேலிருந்து கோவையின் அழகை ரசிக்கலாம். அடிவாரம் வரை மாநகரப்பேருந்துகள் செல்லும். கோவிலுக்கு செல்ல தனிபேருந்துகள் இயக்கப்படுகின்றன. முருகனின் விசேச தினங்களில் கூட்டம் அள்ளும்.

நாம எழுதினது - மருதமலை
அனுவாவி சுப்ரமணியர் கோவில்:
       இந்தக்கோவிலும் மேற்குத்தொடர்ச்சி மலையில் தான் அமைந்துள்ளது.அனுமனின் தாகம் தீர்க்க வாவி( ஊற்று) ஒன்றினை முருகப்பெருமான் ஏற்படுத்திய இடம் அனுவாவி என்றழைக்கப்படுகிறது
ஆனைகட்டி செல்லும் வழியில் கணுவாய் தாண்டி இருக்கிறது இந்தக்கோவில்.மலைப்பாதைகள் இல்லை.செங்குத்தாக செல்லும் மலைப்படிகளில் தான் செல்லவேண்டும்.அடிவாரம் வரை பேருந்துகள் செல்லும். இந்த கோவிலில் இருந்து சுற்றிலும் இயற்கை சூழ்ந்த மேற்குத்தொடர்ச்சி மலைகளைக்காணலாம்.
பேரூர் பட்டீஸ்வரர் கோவில்:
       மேலைச்சிதம்பரம் என்றழைக்கப்படும் ஒரு சிவஸ்தலம்.படைப்புத்தொழில் வேண்டி புற்று வடிவில் இருந்த சிவனை நோக்கி கடும் தவம் புரிந்த காமதேனுவுக்கு, தன் கன்றின் குளம்படி பட்டு புற்று உடைந்ததால், காட்சியளித்த சிவன் தோன்றிய இடம்.தன் தலையில் குளம்படி தழும்பைக்கொண்டிருக்கும் சிவலிங்கத்தினை காணலாம். ஆனி மாதத்தில் கிருத்திகை நாள் அன்று நடைபெறும் நாற்று நடவு உற்சவம்பிரசித்தி பெற்றது.
தண்டு மாரியம்மன் கோவில்:
           கோவை மாநகரில் அவினாசி நெடுஞ்சாலையில் வடக்கு நோக்கி இந்த மாரியம்மன் திருக்கோவில் இருக்கிறது.மிகவும் பழம்பெருமை பெற்ற கோவிலாக 200 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கிறது.கோவையின் கோட்டையை முற்றுகையிட்ட ஆங்கிலேய படைகளை எதிர்த்து திப்புசுல்தான் போரிட,  போரில் உதவி செய்த மைசூர் படையில் லிங்க உருவம் ஒன்று போரிட்டது.போர் முடிந்தபின் மைசூர் செல்லாமல் இந்த லிங்க உருவம் மாரியம்மனாக எழுந்தருளியுள்ளது.படைக்கலன்களுக்கு தண்டு என்று பொருள் அதனாலேயே தண்டுமாரியம்மன் எனும் பெயர் நிலைபெயராகிவிட்டது.இந்தக்கோவிலும் கோவையின் பிரபல கோவில்களில் ஒன்றாகும்.
கோனியம்மன் கோவில்:
        கோவையின் காவல் தெய்வம் என்றழைக்கப்படுகிற இந்த கோனியம்மன் கோவையை ஆண்ட மன்னன் கோவனின் குலதெய்வம் ஆகும்.இக்கோவில்  நிறுவப்பட்டு கிட்டதட்ட 900 ஆண்டுக்களுக்கும் மேலாக ஆகிவிட்டது.கோவை நகரின் மிகச்சிறந்த விழா எதுவென்றால் அது கோனியம்மன் கோவில் திருவிழாதான். கோனியம்மன் வடக்கு நோக்கி, எட்டு கரங்களில் சூலம், உடுக்கை, வாள், சங்கம், கபாலம், அக்னி, சக்கரம், மணி ஏந்தி காட்சியளிக்கிறாள். சிவனைப் போல, இடது காதில் தோடும், வலது காதில் குண்டலமும் அணிந்திருப்பது அபூர்வமான அமைப்பு.இக்கோவில் நகரத்தின் முக்கிய இடத்தில் அமைந்திருக்கிறது.

தொடரும்.......

நேசங்களுடன்
ஜீவானந்தம்


இன்னும் கொஞ்சம்...

Saturday, June 28, 2014

கரம் - 14 ( 28.6.2014)

கரம்:
மலரும் நினைவுகள்
போன வாரம் எங்க கிராமத்துக்கு போயிருந்தேன்.வேறென்ன ...கிடாவெட்டு தான்.மாரியம்மன் திருவிழா.ரெண்டு கிராமங்களுக்கு இடையில் இருந்த தகராறினால் இந்த வருடம் ரொம்பத்தள்ளி திருவிழா கொண்டாடினார்கள். சிறுவயதில் கொண்டாடிய திருவிழா போல் இல்லை.கோவில் பக்கம் கூட எட்டிப்பார்க்கவில்லை.வீடே கதியென்று ஆகிவிட்டது.அதனால் நம்ம வீட்டு வாண்டுகளுக்கு ஏதாவது செஞ்சு தரணுமே அப்படின்னு ஒரு கிலுகிலுப்பை செஞ்சேன்.சின்ன வயதில் செய்து பார்த்தது.ஆனாலும் மறக்கவில்லை. சரியாய் செய்துவிட்டேன்.

தேங்காய் குரும்பியில் ஈர்க்குச்சியை சொருகி அதைச் சுத்தும் போது ஒருவித சத்தம் வரும்.அது கேட்க மிக இனிமையாய் இருக்கும்.அழுகிற குழந்தை கூட தன் அழுகையை நிறுத்தி விடும்.வேக வேகமாக சுத்தும் போது இன்னும் சத்தம் நன்றாக வரும்.நம்ம வாண்டுகளுக்கு ஒரே ஆச்சர்யம்..எங்க இருந்து சத்தம் வருதுன்னு...அதை விட ஆச்சர்யம்..நம்ம அம்மணி கூட அதை இன்னும் ஆச்சர்யமா பார்த்தது தான்..
கிராமங்களில் இது போன்ற சிறு சிறு விளையாட்டுகள் எப்பவும் இருப்பதுதான்.ஆனால் அது இப்போது மாறிக்கொண்டு வருகிறது என்பது வருத்தமே.

நுங்கு வண்டி, கிலுகிலுப்பை, சைக்கிள் ரிம் வண்டி, கில்லி, கோலிக்குண்டு, பனை காத்தாடி, பொன்வண்டு, வெட்டுக்கிளி ஜோஸ்யம் இப்படி எல்லாம் போய்விட்டது. சமீபத்தில் வந்த பூவரசம் பீப்பி படத்தில் கூட பொன்வண்டு காட்டியிருப்பார்கள்.அதைப்பார்த்ததும் இன்னும் ஞாபகம் அதிகமாகவிட்டது.
பொன்வண்டினை பிடித்து அதற்கு கோணக்கா இலையை தருவது, அது போட்ட முட்டையை பத்திரமாய் வைப்பது, கயிற்றில் கட்டி சுத்தும் போது அது பறப்பது, பொன்வண்டு தலைக்கு இடையில் கை நுழைத்து வெட்டுப்பட வைப்பது என எல்லாம் சிறு வயது ஞாபகங்கள்...

கிராமங்களில் இது போன்ற சிறு சிறு சந்தோசங்கள் குழந்தைகளை மகிழ்வித்தன.இப்போதெல்லாம் கிராமங்களில் கூட தொலைந்து விட்டன பால்ய கால விளையாட்டுகள்.நகரத்துக்குழந்தைகள் போல கிராமங்களிலும் வளர்வதுதான் இன்றைய ஆச்சர்யம்.

**********************************

சமீபத்தில் பார்த்த படம்:

ஒரு சில காட்சிகள் நெகிழ வைக்கின்றன
ஒரு சில காட்சிகள் நெளிய வைக்கின்றன..
தாத்தா ராஜ்கிரணின் நடிப்பில் நாம் கண்களை குளமாக்குகிறோம்.
கிராமங்களில் வாழ்ந்தவர்களுக்கு இந்தப்படம் நிச்சயம் பிடிக்கும்.
”பாத்து பாத்து ” இந்தப்பாடல் மிகவும் பிடித்திருக்கிறது.அதிகம் கேட்கக்கூடிய பாடல்களில் இது இடம் பிடித்துவிட்டிருக்கிறது.
போன வாரம் கரூர் சென்றிருந்த போது திண்ணப்பா தியேட்டரில் ரொம்ப நாளைக்கப்புறம் செம க்யூ பார்த்தேன்...
நல்ல வசூலைத்தந்திருக்கிறது படம்..

மஞ்சப்பை ...கொஞ்சம் சாயம் போனாலும் உறுதியான தரமான பை......

பார்க்கலாம்....

******************************


நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Monday, June 16, 2014

ஃபேஸ்புக் துளிகள் - 3 - கோவை நேரம். இன்

வணக்கம்
நம்ம கோவை நேரம்.காம் இப்போது கோவை நேரம் .இன் ஆகி விட்டது.
.காம் எக்ஸ்பைரி ஆகிவிட்டதால் எவ்ளோ முயன்றும் வாங்க முடியவில்லை. கிட்டத்தட்ட ஒரு மாதம்....வேலைப்பளுவினாலும், தளம் இல்லாததாலும் எழுத இயலவில்லை.இனி ஆரம்பிக்கவேண்டும்.
கோவை நேரம்.காம் தளத்தினை எப்படியும் வாங்கிடவேண்டும் என்கிற முடிவில் தீயாய் வேலை செஞ்சு கடைசியில் அது முடியாமல் போகவே கோவை நேரம்.இன் வாங்கி அதை செயல்பட வைத்து திறம்பட உதவிய நண்பர் பிரபுகிருஷ்ணாவிற்கு நன்றி.....இனி சென்னை வந்தால் முதல்வேளையாக சந்திக்க விரும்புகிறேன்.

ஃபேஸ்புக் துளிகள் :

சமீபத்தில் சென்னை சென்றிருந்தேன்.கடும் வெயிலில் ஏகப்பட்ட ட்ராபிக்கில் சிக்கி நொந்து நூடுல்ஸ் ஆகி வந்தேன்.மெட்ரோ திட்டத்தால் நிறைய ஒன்வேக்கள்...நிறைய கால தாமதம் ஆகிவிட்டது.புதன்கிழமை என்பதால் ஆம்னி பேருந்தில் ஈஸியாக டிக்கட் என்று எண்ணியது தப்பாகிவிட்டது.பத்து மணி அளவில் கோயம்பேடு போனால் கோவைக்கு ஸ்லீப்பர் பெர்த் பஸ்கள் எதுவுமில்லை. எப்படியோ10.30க்கு கிளம்பும் ஒரு டப்பா பஸ்ஸில் இடம் கிடைத்தது.அடுத்தநாள் ரொம்ப்பப்ப்ப........சீக்கிரமாக காலை 9.30 மணிக்கு கோவை காந்திபுரத்தில் கொண்டு வந்து சேர்க்கவும், அன்றைய பகல்பொழுதும் வீணாகிவிட்டது.

முந்தைய இரவு கோவையிலிருந்து சென்னை பயணமானது திடீர் முடிவில்தான்.ஒரு நாள் தான் புரோகிராம்...அதனால் முன்னேற்பாடுகள் எதுவும் செய்யவில்லை.இரவு கிளம்பும் போது கூட எங்கும் ரிசர்வ் செய்திடவில்லை.கோவை ஆம்னி பேருந்து நிலையம் சென்று கிடைத்த பஸ்ஸில் ஸ்லீப்பர் பெர்த் டிக்கட் வாங்கி தூங்க ஆரம்பித்துவிட்டேன்..
அடுத்தநாள் காலைதான்..ஃபேஸ்புக்கில் மட்டுமே அப்டேட் செய்திருந்தேன்.அதைக்கண்டு தத்தம் வேலைப்பளுவினூடே என்னை அழைத்து நலம் விசாரித்த பிலாசபி பிரபாகரனுக்கும், சரிதா ஊட்டுக்காரரான பாலகணேஷ் அவர்களுக்கும் நன்றி....சந்திக்க முடியவில்லை நண்பர்களே....அடுத்தமுறை கண்டிப்பாக ...

இருள் விலக ஆரம்பித்த சென்னைப்பொழுதில் தான் கண்விழிக்க ஆரம்பித்தேன்.அப்போது என் பக்கத்து சீட்டு தேவதையின் நடவடிக்கைகளே எனது முதல் ஸ்டேட்டஸாக இருந்தது...

கொஞ்சம் தாமதமாகவே பஸ் ஏறினேன்.
குளிரூட்டப்பட்ட படுக்கை வசதி கொண்ட பேருந்து அது..
அப்பர் பெர்த்தும் லோயர் பெர்த்தும் திரைமூடி கிடந்தன..
எனக்கான பெர்த்தில் அடங்க ஆரம்பித்தேன்..
உறக்கம் விழித்து எழுகையில் சென்னைக்கு அருகில்...
ஜன்னலோரம் வேடிக்கை பார்ப்பது அலாதியான விசயம்....
நகர்ந்து செல்லும் 
மரங்கள் கட்டிடங்கள் மனிதர்கள் 
என மிகுந்த ஆச்சர்யத்தைக் கொடுக்கும்...
அப்படி மெய்மறந்த நேரத்தில் ......
எனக்கு எதிரான அப்பர் பெர்த்தில் கொலுசொலி சத்தத்துடன் ஒரு பாதம் எட்டிப்பார்க்க 
வெளியே கவனம் சிதறி உள்ளே உற்றுப்பார்க்க ஆரம்பித்தேன்..

தங்கக்கொலுசுடன் அவளது சந்தன பாதம்...
கணுக்கால் வரையே..
மெதுவாய் தரையை முத்தமிட
முயன்று கொண்டிருந்தது கால்கள்...
கொடுத்து வைத்திருந்தது உடை...ஒட்டி உறவாடுவதில்....
பேருந்தின் கம்பியை இறுகப்பற்றிருந்தது
அவளது கைகள்...
வழுவழுப்பாய்...சந்தன பேழை....
மென்மையாய் விரல்கள்...
அணிந்திருந்தன அழகான மோதிரங்கள்....
மேகக்கூட்டங்களில் ஒளிந்திருந்த
வெண்ணிலா வெளியேறியது போல்....
திரை மெதுவாய் விலக ....
அவளின் பளிங்கு முகம் பளிச்சிட ஆரம்பித்தது..

இறுக்கி அணிந்த உடையுடன் 60 கிலோ அப்சரஸ் மெதுவாய் இறங்க... 
நானோ மயங்க ஆரம்பித்தேன்..
செதுக்கி வைத்த செப்புச்சிலையாய் அவள்..
அளவுகள் அம்சமாய் இருக்க....
முழு உருவமும் மொத்தமாய் ....
முன்னே நிற்க எடைகுறைந்து போனேன்..
கலைந்த கேசத்தினை சரி செய்ய கை உயர்த்திய போது
அவளின் தாராள மனதினால் கேரளாவென தெரிந்து கொண்டேன்..
முன்னும் பின்னும் திரும்பியதில்...
குனிந்தும் நிமிர்ந்தும் எழுந்ததில்....
செழிப்புகள் செவ்வனே இருந்தன....

ரசித்து கொண்டிருந்த அந்த நொடிப்பொழுதை
கர்ண கொடூரமாய் ஒரு குரல் சிதைத்தது...
அவளாயிருக்குமோ என்ற அச்சத்திலே உற்றுப்பார்க்க....
நல்லவேளை.....
பேருந்தின் கிளீனர் பையன் கோயம்பேடு..கோயம்பேடு என கத்தித் தொலைத்துக்கொண்டிருந்தான்..
அவன் முடித்ததும் மெல்லிய சங்கீதம் ஒலித்தது.
சத்தியமாய் மொபைல் ரிங்டோன் இல்லை என்பது புரிந்தது..
ஆம்......தேவதை உச்சரித்தாள்..
உதிர்ந்தது முத்துக்கள் சொற்களாய்....
இதழ்கள்....
இசைத்தன வார்த்தைகளை......
”கிண்டி க்கு எந்த பஸ் செல்லும் “... என வினவினாள்..
அடடே.....
அவளிட்ட வினாவிற்கு விடை தெரியாத பாவியாகி விட்டேனே 
என்று மனம் வலித்தது...
இருந்தாலும் சொல்லிவிட்டேன்
தெரியாதுங்க......
என்று...
அவளின் புன்முறுவல்..
மன்னித்தது என் அறியாமையை.....
பார்வைப் பரிமாறல்கள்
பயணப்பட்டுக்கொண்டிருந்தன
அந்த கொஞ்ச நேரத்திலும்....

வெகு சீக்கிரமே 
வந்து சேர்ந்தது
பேருந்து நிலையம்....

ஒன்றாய் வந்தவர்கள்
ஒரு சேர கோயம்பேட்டில்
இருவரும் இறங்கி 
இருவேறு திசைகளில் 
பயணிக்க ஆரம்பித்தோம்.......

நேசங்களுடன்
ஜீவானந்தம்


இன்னும் கொஞ்சம்...