போன வாரம் திண்டுக்கல் போயிருந்தேன்.இந்த ஊரு பூட்டுக்கு பேமஸா இருந்தாலும் இப்போ அந்த தொழிலை அவங்க செஞ்ச பூட்டாலே இழுத்து பூட்டிட்டாங்க.அதே மாதிரி தான் புகையிலை, தோல்...இதுவும் இப்போ சுத்தமா இல்ல...ஆனா.ஊரைச்சுத்தி மணக்க மணக்க பிரியாணி பண்ணும் ஹோட்டல்கள் தான் பெருகிப்போச்சு.சந்துக்கு சந்துக்கு தெருவுக்கு தெரு, ரோட்டுக்கு ரோடு இருக்கும் போல.அப்படித்தான் ஒரு ரோட்டுல சிலுவத்தூர் செல்லும் வழியில் இருக்கிற ஒரு ஹோட்டல் போர்டினைப் பார்த்தேன்.மாம்பழ நாயுடு ஹோட்டல் என்று பெயரே வித்தியாசமா இருக்க, கூட வந்த நண்பரைக்கேட்க, இங்க சுவை நன்றாக இருக்கும் என்றும், தினமலரின் அக்கம்பக்கம் எடிசனில் இவர்களின் ஹோட்டல் பத்தி வந்திருக்கு என்று சொல்லவும், நாக்கு அப்படியே கொஞ்சம் நம நமக்க, அங்கேயே நம்ம சிங்கத்தினை ஓரம் கட்டினேன்.
சின்ன கடைதான்..ஆனாலும் விஸ்தாரமாக இருக்கிறது.அந்த மதிய வேளையிலும் புரோட்டா சூடாக ரெடியாகிக்கொண்டிருந்தது.பக்கா புரடக்சனில் இருந்த மாஸ்டர் தன் கைவரிசையினை மைதா மேல் காட்டிக்கொண்டிருந்தார்.
நண்பருக்கு ஏற்கனவே அறிமுகம் போல அந்த கடை ஓனர்..சிரித்துக்கொண்டே வரவேற்றார் எங்களை..
கடையில் தோதான இடத்தினை எடுத்து ஆக்ரமித்தோம் அனைவரும்.சீக்கிரமே மட்டன் பிரியாணி தீர்ந்துவிட சிக்கன் பிரியாணியை கேட்க,உடனடியாய் கொண்டு வந்து இலையில் வைக்க மணம் நாசியைத்துளைத்தது.கொஞ்சம் எண்ணைப்பசையின்றி பிரியாணி இருந்தாலும் சுவை நன்றாக இருந்தது.சிக்கன் நன்றாக மெது மெதுவென்று இருக்கிறது.அதற்கு மேட்சாக சிக்கன் வறுத்த குழம்பினை கொண்டு வந்து ஊற்ற...அது கரண்டியில் இருந்து நாசுக்காய் வழுக்கிக்கொண்டே விழுந்தது.மிக அற்புதமான டேஸ்ட்..இரண்டும் போட்டி போட்டுக்கொண்டு உள்ளிறங்க, ஸ்பெசலால் ஒரு சிக்கன் பிரை சொல்ல. அதுவும் உடனடியாக வந்து சேர்ந்தது.மிளகு போட்டு பிரட்டிய சிக்கன் செம டேஸ்டாக இருந்தது.
பிரியாணியை சுவைத்த பின் மொறுகுன புரோட்டா கேட்கவும் சூடாய் வந்து விழுந்தது.சிக்கன் வறுவலுடன் சேர்த்து மொறு மொறுவென சாப்பிடுகையில் அருமையாய் இருக்கிறது.அந்த சூடான புரோட்டா மணம் இன்னும் நினைவில் இருக்கிறது.
இன்னும் நிறைய அயிட்டங்கள் இருந்தாலும் மனதும் வயிறும் நிறைந்து போனதால் அதிகம் சாப்பிடமுடியவில்லை.மட்டனில் சுக்கா, குடல், தலைக்கறி என இருக்கிறது.
ஒவ்வொரு தீபாவளிக்கும் இந்த கடையில் வான்கோழி பிரியாணி ஸ்பெசல் உண்டாம்.ஒரு வாரம் செம கூட்டமாக இருக்குமாம்.
விலையும் மிகக்குறைவுதான்.அந்த ஏரியாவில் இது ஒரு கடை மட்டுமே விஸ்தாரமாக இருக்கிறது.சுவையும் நன்றாக இருக்கிறது.
பழனி ரயில்வே கேட் அருகில் இந்த கடை இருக்கிறது.அந்தப்பக்கம் போனால் சாப்பிட்டுப்பார்க்கலாம்.நம்ம பங்காளிகளுக்கு ஏற்ற கடை..காரம், மணம், திடம் என எல்லாம் ஒரு சேர இருக்கிறது.
நேசங்களுடன்
ஜீவானந்தம்