Sunday, August 4, 2013

கோவை மெஸ் - சாந்தி கேண்டீன், (SHANTHI SOCIAL SERVICES )சிங்கா நல்லூர், கோவை

ரொம்ப நாளா போகணும்னு இருந்த சாந்தி கேண்டீன் ஆசை இப்போது நிறைவேறி விட்டது.ஒரு மதிய நேரம்...திருச்சி சாலையில் சிங்காநல்லூர் டூ ஒண்டிப்புதூர் செல்லும்  போது இருக்கிற சாந்தி பெட்ரோல் பங்க் தாண்டி இடது புறம் கேண்டீன் என்கிற போர்டினை கண்டு உள் நுழைந்தோம்.உள்ளே செல்ல செல்ல பாத சாரிகளின் கூட்டம் வெளியேறிக்கொண்டிருந்தது அவர்களின் முகத்தில் ஒரு வித திருப்தியினை காண முடிந்தது.

          காரினை பார்க் செய்து விட்டு டோக்கன் வாங்க கியூவில் நிற்க ஆரம்பித்தோம்.கிட்டத்தட்ட ஒரு பெரிய நடிகரின் முதல் நாள் சினிமாவிற்கு நிற்கும் கூட்டம் போல இருக்கிறது.தினமும் இதே போன்ற கூட்டம் இருக்கிறது.முதலிலேயே 13 வகைகளுடன் கூடிய முழு சாப்பாடு போர்டு நம்மை வரவேற்கிறது.வரிசையாக உள்ளே நுழைந்தோம்.

டிஜிட்டல் மெனுக்கள் போர்டுகள் பச்சையாய் ஒளிர்ந்து இன்றைய உணவுப்பொருட்களை  சுமந்து கொண்டிருந்தன.மொத்தம் நாலு கவுண்டர்கள் இருக்கின்றன.ஒவ்வொரு வரிசைக்கும் ஒரு கவுண்டர்.25 ரூபாய் கொடுத்து டோக்கன் வாங்கி கொண்டு முன்னேறினோம்.டோக்கன் வாங்கும் இடத்தில் பிரிந்து மீண்டும் ஒரே வரிசையாக உள் நுழைந்தோம்.



          நீண்டு செல்கிற வரிசை ஓரிடத்தில் கை கழுவி விட்டு மீண்டும் வரிசையாகவே செல்கிறது.உணவுக்கூடத்திற்குள் நுழையும் போது ஒரு கல்யாண மண்டபம் போல் விரிந்து கிடக்கிற ஒரு ஹாலுக்குள் எங்கும் மனித தலைகளே.மெல்லிசையில் புரட்சித்தலைவரின் பாடல்கள் கீதமாய் ஒலித்துக் கொண்டிருக்க ஏசி அறையினுள் ஆற அமர்ந்து மன திருப்தியுடன் சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றனர்.

              எங்களின் வரிசை உணவு கொடுக்கும் இடத்திற்கு வந்தவுடன் “Service to Humanity is Service to God.”  ஒரு என்கிற வாசகம் பொருந்திய சீருடை அணிந்த சிப்பந்தி டோக்கனை வாங்கிகொள்ள, சாப்பாட்டுக்கூடத்தில் இருக்கிற பணியாட்கள் பரபரப்பாக பம்பரமாக வேலை செய்து ஒரு பெரிய தட்டினுள் ஒவ்வொரு உணவாய் பொரியல், கூட்டு, சாம்பார், ரசம், வடை, அப்பளம், சப்பாத்தி, குருமா, சாதம், தயிர் பாயசம், வாழைப்பழம் என எல்லாம் வைக்க தட்டினை நகர்த்திக்கொண்டே ஒவ்வொன்றாய் வாங்கிக்கொண்டு இடம் தேடி அமர்ந்தோம்.சாப்பிட்டவர்கள் வெளியேற அந்த இடம் புதியவர்களின் வருகையால் நிரம்பிக்கொண்டிருந்தது.

                   முருங்கை சாம்பாரின் மணம் மூக்கைத்துளைத்தது.சாப்பிட்டு பார்த்ததில் அருமையோ அருமை.அதுபோலவே மிருதுவான சப்பாத்தி அதற்கேற்றார் போல குருமா, ரசம் சான்சே இல்லை..அவ்ளோ சுவையுடன் இருக்கிறது.பொறுமையுடன் சாப்பிட்டுவிட்டு வாழைப்பழத்தினை கடைசியாக எடுத்துக்கொண்டு பின் பாயசம் சாப்பிட ஆகா...என்ன ருசி...

            மறு சாதம் எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம்.ஆனால் முதல் தடவை வைக்கிற சாதமே வயிற்றினை நிரப்பி விடுகிறது.இந்த சாப்பாட்டினை வெளியில் எங்காவது ஹோட்டலில் சாப்பிட்டால் எப்படியும் 85 ரூபாய் இருக்கும்.ஆனால் விலை குறைவாக மக்களின் சேவைக்காக வெறும் 25 ரூபாய்க்கு வழங்குகின்றனர்.சுத்தமான சுகாதாரமான உணவினை இந்த விலைக்கு கொடுக்கின்றனர்.

          மேலும் கண்காணிக்க சீருடை அணிந்த ஆட்கள் நல்ல உபசரிப்புடன் அவ்வப்போது வழிகாட்டுகின்றனர்.மேலும் சாப்பிட்ட இடங்களை உடனடியாக சுத்தப்படுத்தி விடுகின்றனர் மற்றவர்கள் அமர்வதற்காக.சுத்தமான குடிநீரினை அவ்வப்போது சாப்பாட்டு டேபிளில் இருக்கிற ஜக்கினுள் நிரப்பிவிடுகின்றனர்.சாப்பிட்ட தட்டுக்களை உடனுக்குடன் வாங்கி கழுவதற்காக எடுத்துச்செல்லப்படுகின்றன.அதற்கென தனி இடம் வைத்திருக்கின்றனர்.
      பல்லாயிரக்கணக்கில் வரும் மக்களின் பசியினை தீர்க்கும் அட்சயபாத்திரமாக இருக்கிறது இந்த சாந்தி கேண்டீன்.மூன்று வேளையும் இங்கு உணவு குறைந்த விலையில் கிடைக்கிறது.மேலும் ஆதரவற்றோர் எளிய ஏழை மக்களுக்கு இலவச உணவு வழங்கும் இடமும் இருக்கிறது.கார் நிறுத்த பரந்து விரிந்த இடம், குழந்தைகள் விளையாட பார்க் ஏரியா என வசதிகள் அதிகமாக இருக்கின்றன.



இந்த உணவகம் மட்டுமல்லாமல், ரத்த தானம், மருந்துகள், மருத்துவ சேவை, மின்மயானம், ஆம்புலன்ஸ்  என பலவிதங்களில் மக்களுக்கு சேவை செய்கின்றனர்.எல்லாம் மிகக்குறைந்த விலையிலேயே சேவையினை வழங்குகின்றனர்.வெளி நபர்களிடம் இருந்து எந்த ஒரு நன்கொடையும் பெறாமல் இந்த அரும்பெரும் சேவையை நடத்திவரும் திரு சுப்ரமணியன் அவர்களும், அவர் தம் குடும்பத்தினரும் மென்மேலும் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.
       சாப்பிட்டு முடித்து கை கழுவிவிட்டு வெளியேறும் வாயிலில் ஆலோசனைப்பெட்டி இருக்கிறது.உங்களின் ஆலோசனைகளை எழுத ஒரு படிவமும் இருக்கிறது.மேலும் ரத்த தானம் செய்ய விரும்புவர்கள் நிரப்ப ஒரு படிவமும் இருக்கிறது.எங்கள் பங்கிற்கு நல்ல ஒரு நாலு வார்த்தைகளை வாழ்த்துக்களாய் எழுதிவிட்டு வந்தோம்.


சாந்தி கேண்டீன் மற்றும் இன்ன பிற சேவைகள் அனைத்தும் கோவைக்கு ஒரு வரப்பிரசாதம்.இது திருச்சி சாலை சிங்காநல்லூரில் இருக்கிறது.

வேலை நேரம் : 
காலை 7.00 மணி முதல் 11 மணி வரை
மதியம் 12.00 மணி முதல் 2.30 வரை
மாலை 5.00 மணி முதல் 9.30 வரை


கிசுகிசு : இதுவும் ஹோட்டல்தானே அப்படின்னு  போய் உட்கார்ந்து மணிக்கணக்கா கடலை போடலாம்னு நினைக்கிற ஜோடிகள் வேறெங்காவது போயிடுங்க...பிளீஸ் நல்ல நோக்கத்தினை பாழ் பண்ணாதீங்க..அப்புறம் இங்க அம்மணிகள் இருந்தாலும் நானும் எதுவும் சொல்லாமல் அமைதியாகிறேன்.(நல்லவேளை ...அம்மணிகள் இல்லையே இந்த பதிவில் அப்படின்னு யாரும் சொல்றதுக்குள்ள நானே சொல்லிட்டேன்..ஹிஹிஹி )

பதிவர் சந்திப்பு -  நாள் -1.9.2013, இடம் - சென்னை  - அனைவரும் வாரீர்


நேசங்களுடன்
ஜீவானந்தம்



இன்னும் கொஞ்சம்...

Friday, August 2, 2013

சமையல் - அசைவம் - ஃபிஷ் ஃபிங்கர் ஃபிரை (Fish finger fry )

வாரா வாரம் ஞாயிறு அன்னிக்கு வீட்டுல நம்ம கைவண்ணம் தான். (அன்னிக்கு மட்டும் நம்ம அம்மணிக்கு ரெஸ்ட்) இந்த வாரம் கொஞ்சம் டிஃபரண்டா இருக்கட்டுமே அப்படின்னு ஃபிஷ் ஃபிங்கர் ஃபிரை பண்ணினேன்.இது ஒரு சைட் டிஷ்.குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.மீன் சாப்பிடாம இருக்கிறவங்களுக்கு இந்த மாதிரி செஞ்சு கொடுத்தா விரும்பி சாப்பிடுவாங்க...என்ன........ கொஞ்சம் வேலைதான் ஜாஸ்தி...பொதுவா வஞ்சிரம், பாறை போன்ற மீன்களில்தான் செய்வாங்க.நான் நெய்மீன் எடுத்துக்கிட்டேன்.

செய்முறை சொல்லிடறேன்.

வேண்டிய பொருட்கள்:
நெய்மீன் - 500கிராம்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - சிறிதளவு
மிளகாய்த்தூள்- கொஞ்சம்
கார்ன் மாவு- 2 டீஸ்பூன்
லெமன் சாறு - சிறிது
அரிசிமாவு - கொஞ்சம்
மைதா மாவு- கொஞ்சம்
ப்ரட்கிரம்ஸ் - தேவையான அளவு
உப்பு  - தேவையான அளவு
முட்டை - 2
எண்ணை- பொரிக்க தேவையான அளவு


முதலில் நெய் மீனை சுத்தம் செய்து வாங்கி கொண்டு அதை சுடு நீரில் கொஞ்ச நேரம் போட்டு வைக்க வேண்டும்.பின் அதில் உள்ள முட்களை நீக்கிவிட்டு ஒரு பாத்திரத்தில் போட்டு பிசைந்து கொள்ள வேண்டும்.இதனுடன் மிளகாய்த்தூள், உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட், கார்ன் மாவு. மைதா, அரிசி மாவு, லெமன் சாறு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.கைகளில் ஒட்டாத பதத்திற்கு நன்றாக கூடவோ குறைத்தோ கார்ன், அரிசி மாவினை சேர்த்துக்கொள்ளவும்.

ப்ரட் துண்டுகளை மிக்ஸியில் இட்டு நன்றாக பொடியாக அரைத்துக் கொள்ளவும்.முட்டையை உடைத்து ஒரு பாத்திரத்தில் போட்டு கலக்கி கொள்ளவும்.


பிசைந்து வைத்திருக்கும் ஃபிஷ் கலவையை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து விரல் அளவில் இருக்குமாறு உருட்டி வைத்துக்கொள்ளவும்.வாணலியில் எண்ணையை காயவைத்து அதில் இந்த பிஷ் ஃபிங்கரை முட்டையில் நனைத்து , பிரட்டில் தோய்த்து போட வேண்டும்.பொன்னிறமாக வரும் வரை வேக வைத்து பொரித்து எடுக்க வேண்டும்.இப்போது சுவையான ஃபிஷ் ஃபிங்கர் ஃபிரை ரெடி....செஞ்சு சாப்பிட்டா நல்ல டேஸ்டாக இருக்கும்.




குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்.அது போலவே பெரியவர்களும்..நமக்கு சைட் டிஷ்க்கு சரியான பதார்த்தம்.
சைவப்ப்ரியர்கள் மீன் இல்லாமல் காய்கறிகளை சேர்த்து முட்டை சேர்க்காமல் பொறிக்கலாம்.வெஜ் ஃபிங்கர் ஃபிரை.


 பதிவர் சந்திப்பு -  நாள் -1.9.2013, இடம் - சென்னை  - அனைவரும் வாரீர்



நேசங்களுடன்
ஜீவானந்தம்


இன்னும் கொஞ்சம்...

Wednesday, July 31, 2013

ரெடியாகிட்டோம்....பதிவர் சந்திப்பு சென்னைக்கு

ரெடியாகிட்டோம்...இன்ப சுற்றுலாவிற்கு நாங்க....அப்ப நீங்க.....
சென்னையில் நடக்கிற பதிவர் சந்திப்புக்கு வேன் சகிதம் எல்லாம் ரெடி..

காலையில கிளம்பினா சாயந்திரம் போயிடலாம்..
(மறக்காம மத்தியான சாப்பாட்டுக்கு கட்டுச்சோறு கட்டிட்டு வந்திடுங்க...எங்காவது வண்டிய நிறுத்தி சாப்பிட்டுவிட்டு போனா தெம்பா இருக்கும்.)
அப்படியே மெரினா பீச்சுல காத்து வாங்கிட்டு அப்படியே மாங்காய் பட்டாணி சுண்டல் சாப்பிட்டுவிட்டு
அங்க இருக்கிற அம்மணிகளை நோட்டம் விட்டுட்டு
கிளம்பி வந்து ரூமில தூக்கம் போட்டுட்டு 
ஞாயிற்றுக்கிழமை காலைல நல்ல ஒரு ஹோட்டலில சாப்பிட்டுட்டு (கோவை மெஸ்ஸுக்கு பதிவு தேத்தனும் வேற )


பதிவர் சந்திப்பில் கலந்து கொண்டு ஒரு அட்டணன்ஸ் போட்டுட்டு
அங்க போடற மத்தியான சாப்பாட்டை ஒரு கட்டு கட்டிட்டு (பார்சல் இல்ல...)
இருக்கிற மிச்ச சொச்ச நிகழ்ச்சிகளையும் பார்த்துட்டு
சாயங்காலம் கிளம்பினா அடுத்த நாள் காலை 5 மணிக்கு கோவை வந்திடலாம்
அப்புறம் வழக்கம் போல வேலைக்கு போக வேண்டியது தான்...
வேலைக்கு போன இடத்துல பதிவர் சந்திப்பு சுவாரசியங்களை இணையத்துல போட்டு
ஒரு மாசம் பதிவர்களை கொன்னெடுக்கலாம்...

யாரெல்லாம் வரீங்க....

கை தூக்குங்க....

கோவை மு சரளா -  உள்ளேன் ஐயா...
அகிலா -  உள்ளேன் ஐயா.
நிகழ்காலம் எழில் -  உள்ளேன் ஐயா...
கலாகுமரன் -  உள்ளேன் ஐயா...
ஆவி -  உள்ளேன் ஐயா...
உலக சினிமா ரசிகன் -  உள்ளேன் ஐயா...
கோவை சதிஸ் -  உள்ளேன் ஐயா...
நிர்மல் குமார் - உள்ளேன் ஐயா...
சுட்டி மலர்  - உள்ளேன் ஐயா...
அப்புறம்
நானும் இருக்கேனுங்க....

இன்னும் யாராவது வரணும்னு நினைச்சீங்கன்னா சீக்கிரம் அட்டனன்ஸ் போட்டுடுங்க...அப்புறம் வேன்ல தொங்கிட்டு தான் வரணும்..இல்லே டாப்ல தான் உட்கோரணும்..
அப்புறம் முக்கிய விசயமுங்க...எல்லாரும் சேர்ந்து தாங்க செலவை பிரிச்சுக்கணும்..இல்லேனா வண்டி ஓடாதுங் சாமியோவ்......

கூப்பிடுங்க எங்களை ( கோவையில இருந்து பதிவு எழுதறவங்க, பிளாக் ஆரம்பிக்கணும்னு நினைக்கிறவங்க  )

அகிலா - 94431 95561
கலாகுமரன் - 88700 25552
சரளா - 97891 89444


கிசுகிசு : 
கவிஞர்கள் நிறைய பேர் இருக்கிறதால் வண்டியில் போகும் போது யாரும் கவிதை சொல்லக்கூடாது...மீறி சொன்னா நான் வண்டியில இருந்து குதிச்சிடுவேன்..ஹிஹிஹி


நேசங்களுடன்
ஜீவானந்தம்


இன்னும் கொஞ்சம்...

Friday, July 26, 2013

கோவை நேரம் - தி நியூ இண்டியன் எக்பிரஸ்,(The New Indian Express ), கோவை

வணக்கமுங்க...
தி நியூ இண்டியன் எக்பிரஸ்ல நம்ம கோவை நேரம் பேட்டி இன்னிக்கு வந்திருக்குங்க...இந்த பேட்டியில் நம்ம போட்டோ போடறதுக்காக என்னை வ உ சி பார்க் வரச்சொன்னாங்க.அங்க என்னை வளைச்சி வளைச்சி போட்டோ எடுத்தாங்க.பார்க் வந்திருந்த ஒரு சில பல நல்ல ஜோடிகளும் கள்ள ஜோடிகளும் வெறிக்க வெறிக்க பார்த்தாங்க.அப்புறம் அங்க இருந்து எஸ்கேப் ஆகி ரேஸ்கோர்ஸ் வர........ எடையை குறைக்க வாக்கிங் போன அம்மணிகளால் நம்ம மனசு ரொம்ப பாரமாகி போனதுங்க.....ஏக்கப் பெருமூச்சுடன் கிளம்பிட்டேனுங்க....
என்னை பேட்டி எடுத்த மீனாட்சி சுந்தரம் அவர்களுக்கும் என்னை புகைப்படம் எடுத்த கமலக்கண்ணன் அவர்களுக்கும் நன்றி...

இந்தியன் எக்ஸ்பிரஸ் லிங்க்  இங்க போனா படிக்கலாம்





என்னை பதிலுக்கு பதில் ...பழிக்குப்பழி வாங்க பேப்பரில் வந்த விவரத்தினை தன் பதிவில் போட்ட கவிதாயினி க்கு நன்றி

கிசுகிசு : யாராவது இதை ட்ரான்ஸ்லேட் பண்ணினா ரொம்ப புண்ணியமாக போகும்..ஹிஹிஹி...


நேசங்களுடன் 
ஜீவானந்தம்



இன்னும் கொஞ்சம்...

Thursday, July 25, 2013

கோவை மெஸ் - மைக்கேல் & சன்ஸ், ஐஸ்கிரீம், மலைக்கோட்டை, திருச்சி

                  சமீபத்தில திருச்சி போயிருந்தேன்.சாயந்திர நேரம் ஊர் சுத்தி பார்க்கலாமே அப்படின்னு கிளம்பி போன இடம் மலைக்கோட்டை பஜார் வீதி.வண்டியை ஓரமா ஓரங்கட்டிட்டு பொடி நடையா நடந்து போனதுல எவ்ளோ கலோரிகள் மனசுக்கும் உடம்புக்கும் கம்மியாகி போனது.பஜாரின் இருபுறங்களிலும் பேன்சி ஸ்டோர்கள் மற்றும் இன்ன பிற கடைகள்.கடையில் இருக்கிற பொருட்களை விட அதை வாங்க குவியும் அம்மணிகள் அதிகமாக இருக்கிறார்கள்.ஒட்டு மொத்த திருச்சியுமே இங்குதான் குவியும் போல அவ்ளோ கூட்டம்.

              ஒவ்வொரு கடைகளிலும் கூட்டம் இருந்தாலும் சாரதாஸ் துணிக்கடையில் அம்புட்டு கூட்டம்.ஒரு பொதுக்கூட்டமே நடத்தலாம் போல...அவ்ளோ மக்கள்.பரந்து விரிந்த கடையினுள் எங்கும் மனித தலைகளே.அதிலும் அம்மணிகள் அதிகம்...குடும்பத்தோடு மூட்டை மூட்டையாய் வாங்கி வெளியேறிக்கொண்டிருந்தனர்.பார்த்து பிரமித்து போய் ஒரு டிரஸ் கூட எடுக்காமல் வெளியேறினேன்.(துணி எடுக்கவா உள்ளே போனது...?ஹிஹிஹி..).மனம் அடைந்த அயர்ச்சியில் உடல் கொண்ட தளர்ச்சியில் எதாவது உள்ளே தள்ளியாக வேண்டும் என்கிற ஆவலில் போன இடம் தான் நம்ம மைக்கேல் அண்ட் சன்ஸ்.
சின்ன கடைதான்.ஆடம்பரம் எதுவும் இல்லை.பழங்கால கட்டிடம் போலத்தான் இருக்கிறது.ஆனால் எப்பவும் போல உள்ளே கூட்டம் நிறைந்து இருக்கிறது.காத்திருந்து ஒரு டேபிளை ஆக்ரமித்தேன்.சுற்றும் முற்றும் பார்த்ததில் அம்மணிகள் அதிகமாகவே இருக்கின்றனர்.மனம் லேசானதை உணர்ந்த போது பேரர் வந்து நிற்க கடையின் பிரபலமான புரூட் சாலட் ஐஸ்கிரிமினை ஆர்டர் செய்தேன்.ஒரு சில்வர் கப்பினுள் சிவந்திருந்த புரூட்ஸ்களுடன் வெண்ணிலா ஐஸ்கிரிம் சேர்ந்து வர மிக சுவையாக இருந்தது.புரூட் சாலட்டில் நிறைய பழவகைகள் இருந்தாலும் அதிகம் தென்படுவது வாழைப்பழம் தான்.

ஆனால் மிக சுவையாக இருக்கிறது.மற்ற முண்ணனி பிராண்டுகளில் இருக்கிற சுவை இருக்காது.ஆனால் எப்பவும் போல ஒரே சுவையுடன் கிட்டதட்ட 30 வருடங்களுக்கும் மேலாக நடத்திக்கொண்டிருக்கிற ஒரே கடை இதுதான்.மிக குறைந்த விலையில் இன்னமும் தந்து கொண்டிருக்கின்றனர்.அவ்வப்போது ஒரு ரூபாய் ஏற்றுவார்கள் போல.1995 யில் 2.50 இருந்த புரூட் சாலட் இப்போது 7.00 யாக இருக்கிறது.ஆனால் அதே சுவை.வேறு எந்த பிராண்ட் ஐஸ்கிரீம்களும் இங்கு கிடைக்காது.அனைத்தும் சொந்த தயாரிப்பே..

         இந்த கடை அருகிலேயே நிறைய கடைகள் இருக்கின்றன.ஆனால் இங்கு மட்டுமே சுவையும் அதிகம்.கூட்டமும் அதிகம்.திருச்சி போனால் மறக்காமல் இங்கு ஒரு வருகையை போடுவது வாடிக்கையாகிவிட்டது.மலைக்கோட்டை பஜார் வாயில் எதிரே உள்ள போஸ்ட் ஆபிஸ் அருகில் இந்த கடை இருக்கிறது.பஜாரில் பர்ச்சேஸ்களை முடித்துவிட்டு களைத்து வரும் நபர்கள் அதிலும் அம்மணிகள் அதிகமாய் கூடும் இடமாக இருக்கிறது.

நேசங்களுடன்
ஜீவானந்தம்



இன்னும் கொஞ்சம்...

Monday, July 22, 2013

கரம் - 8 - 22.7.2013 - ஆ(வி)பத்து - மினி பதிவர் சந்திப்பு

          எனது கல்லூரி நண்பனும், ஆவிப்பா எழுதி நம்மை கதிகலங்க வைக்கும் நண்பரும், பதிவுலகில் பேய், பிசாசு என அழைக்கும் கோவை ஆவியுமான, கோவை மாவட்ட நஸ்ரியா ரசிகர் மன்ற தலைவரும், உடல் பொருள் ஆவி என அனைத்தும் நஸ்ரியாவிற்கே என எழுதிக்கொடுத்திருக்கும் கோவை ஆவிஎன்கிற ஆனந்த் போன சனிக்கிழமை அன்னிக்கு பொள்ளாச்சி போகும் போது ஏதோ காத்து கருப்பு (ஆவிக்கேவா....) அடிச்சிருக்கும் போல....(அனேகமா மரியான் ன்னு நினைக்கிறேன் ) திடீர்னு பிரேக் பிடிச்சதால் வண்டியில இருந்து பறந்து போய் கீழே விழுந்து தன் இரண்டு கைகளிலும் விழுப்புண்ணை (விழுந்து + புண்ணை ) ஏந்தியிருக்கிறார்.நல்லவேளை ஹெல்மெட் அணிந்திருக்கிறார் இல்லை எனில்  மொட்டைத்தலை சிதறு(தலை)தேங்காய் ஆகிருக்கும்.(தயவு செய்து வண்டியில் செல்பவர்கள் ஹெல்மெட் அணியுங்கள்).அதனால் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகி உடல் நலமின்றி இருக்கிறார்.
அவர் உடல் நலம் தேறி மீண்டும் ஆவிப்பா எழுத வர வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.மச்சி சீக்கிரம் வா ...உனக்கு சத்ரியன், பரதன், குமரன் S/o மஹாலட்சுமி, விஜய் நடிச்ச பத்ரி, இந்த படங்களில் இருந்து ஒரு பாட்டு அனுப்பறேன். அதை கேட்டு சீக்கிரம் குணமாகு..

மச்சி...ஆப்ரேஷன் லாம் பண்ற...எப்போ ட்ரீட்...ஹிஹிஹி  

*********************************
மினி பதிவர் சந்திப்பு..

நெல்லையின் ஆபிசர் என அழைக்கப்படும் நண்பர் சங்கரலிங்கம் அவர்கள் போன மாதம் கோவைக்கு வந்திருந்தார்.அவரின் உடன்பிறப்புகளும் வந்திருந்தனர். ஆபிசர் பார்க்க இளைஞனாக இருக்கிறார்.(ஹேர்டை, டீ ஷர்ட் போட்டு ஒரு யூத்தாகவே இருக்கிறார் இன்னும் )அவரை அழைத்துக்கொண்டு ப்ரூக் பீல்ட்ஸ் மால் சென்றேன். அம்மணிகளின் வருகை குறைவாக இருந்தாலும் அவர் மிக மகிழ்ச்சியாக இருந்ததை கண்டு கொண்டேன்...அதற்குள் நண்பர் உலக சினிமா ரசிகனுக்கு ஒரு போன் போட அவரும்.ஜோதியில் ஐக்கியமானார். இந்த சந்திப்பில் நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டோம்.நன்றி பதிவுலகம்..

*****************************

அது போலவே இன்னொரு திருநாளில் பெங்களூரில் இருந்து நண்பர் கடல்பயணங்கள் சுரேஷ் கோவை வருவதாக சொல்லி இருந்தார்.அவரை சந்திக்க ப்ளான் பண்ணியிருந்தோம்.ப்ரூக்பீல்ட்ஸ் மாலிற்கு முன்னதாகவே ஆவியும் உலக சினிமா ரசிகனும் வந்திருக்க அவர்களுடன் கலந்து கொண்டேன்.சுரேஷ் வரும்வரை என்ன செய்வது என யோசித்துக் கொண்டிருக்கையில் கேஎஃப்சி யில்  கூட்டம் பின்னி எடுக்க அங்கே நகர்ந்தோம்.கோவை ஆவியின் கைங்கர்யத்தில் சிக்கன் பீஸ்களோடு அருகே இருந்த அம்மணிகளையும் விழுங்கிகொண்டிருக்க சுரேஷ் வந்து விட்டதாக சொல்ல வாஸ்துக்காக அருகில் இருந்த இட்லி கடைக்கு ஷிஃப்ட் ஆனோம்..சுரேஷ் பைஜாமா போட்டு சிக்கென வந்திருந்தார்.அவரிடம் ஊர் ஞானம், உலக ஞானம் லாம் பேசிக்கொண்டே காபி குடித்தோம்.அதற்குள் எழில் மேடமும் வர அனைவரும் நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டோம்.நல்ல நண்பரை கொடுத்த பதிவுலகத்திற்கு நன்றி.


**************************


அதே மாதிரி இன்னொரு சந்திப்பு....இதை படிக்க
 உலகசினிமா ரசிகன், கவியாழி கண்ணதாசன், கோவை ஆவி மற்றும் நான்.

நிறைய நண்பர்களை கொடுக்கும் பதிவுலகிற்கு நன்றி

நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Thursday, July 18, 2013

கோவை மெஸ் – பர்மா பாய் கடை, நேரு ஸ்டேடியம், கோவை

நேத்து காந்திபுரத்துல இருந்த போது நஸ்ரியாவின் தீவிர ரசிகரும், கோவை மாவட்ட ரசிகர் மன்ற தலைவரும், அவ்வப்போது ஆவிப்பா எழுதி அடுத்தவங்களை குளிர் காய்ச்சல் பட வைக்கிறவருமான கோவை ஆவி அவர்களிடமிருந்து போன்.சென்னையில் இருந்து கவியாழி கண்ணதாசன் அவர்கள் வர்றார் அப்படின்னு...சரி எங்காவது மீட் பண்ணலாம் அப்படின்னு ப்ளான் போட்டு உலக சினிமாரசிகன் அவர்களையும் வரச்சொல்லி அழைப்பு விடுத்தேன்....அவரும் அனுஷ்காவில் பறந்தோடி வந்தார்.அதற்குள் ஆவியும் கவியும் வந்து விட கோவை வ.உ.சி பார்க்கில் சந்தித்தோம்.  
அவர் வந்திறங்கிய நேரம் பசி நேரம் ஆதலால் சாப்பிட்டுக்கொண்டே பேசலாமே என்று முடிவெடுத்து போன இடம் பர்மா பாய் கடை..இந்த கடை புரோட்டாவிற்கும் பிரியாணிக்கும் பேமசான கடை...எந்த நேரத்தில் போனாலும் சூடான புரோட்டா கிடைக்கும்...(அதுக்குன்னு நடுராத்திரி போயிடாதீங்க).அதுக்கு மேட்சான குருமா கிடைக்கும்..
கடையில் தற்போது வாஸ்து படி ஒரு சில மாற்றங்களை செய்து இருக்கிறார்கள்..முன்பு கடைக்குள் நுழையும் முன்பே சுட சுட புரோட்டா போட்டு கொண்டு இருப்பார்கள்.ஆவி அடிக்கும்...இது புரோட்டா ஆவி..அப்புறம் சூடான கல்லு ஆவி.....இப்போது அந்த இடத்தினை ஒரு சின்ன ரூமாக பார்டிசன் பண்ணி உள்ளே தீயா வேலை செய்து கொண்டிருக்கின்றனர் புரோட்டா மாஸ்டர்கள்...புரோட்டா சுடும் காட்சி தெய்வ தரிசனமாக ஆகிவிட்டது இப்போ...
சரி விசயத்திற்கு வருவோம்...நாங்கள் உள்ளே நுழைந்தவுடன் சாப்பிட்டுக்கொண்டிருந்த ஓரிரு அம்மணிகளும் வெளியேறியது மிக வருத்தமாக இருந்தது.எனினும் மனதை சாந்தப்படுத்திக்கொண்டு தோதான இடம் பார்த்து அமர்ந்து கொண்டோம்...
புரோட்டா மற்றும் பெப்பர் சிக்கன் ஆர்டர் பண்ணினோம்..ஒரு சில நிமிடங்களிலேயே ஆவி பறக்க புரோட்டா வந்தது..எடுத்து இலையில் வைக்க பூப்போல இருந்தது.மிக மிருதுவாக..பொல பொலவென்று...தட்டில் வைத்து குருமாவை ஊற்றி ஊறவைத்து கொஞ்சம் கொஞ்சமாக பிய்த்து சாப்பிட...ஆகா...செம டேஸ்ட்...குருமாவும் புரோட்டாவும் உள்ளே போனதே தெரியவில்லை..ஒரு தட்டு முழுக்க வைத்திருந்த புரோட்டா சீக்கிரம் காலியாக, இன்னொரு பிளேட் ஆர்டர் செய்யப்பட்டது நஸ்ரியாவின் தங்க தலைவனால்.


அதற்குள் பெப்பர் சிக்கன் வரவே அதையும் ஒரு கை.... சாரி ....ஒரு வாய் பார்த்தோம். அதுவும் செம டேஸ்ட்..உதிர்த்து விடப்பட்ட சிக்கன் துண்டுகள் எலும்பில்லாமல் பெப்பர் மணத்துடன் நன்கு சுவையாக இருந்தது.டிரையாக இருந்தாலும் மிக நன்றாக இருந்தது..நான் இந்த பதிவு தேத்த போட்டோ எடுப்பதற்குள் பெப்பர் சிக்கன் காலியானதே தெரியவில்லை..
புரோட்டா பிரியர்கள் நிறைய குவியும் இடம்.அதுபோலவே அம்மணிகளும்.சனி ஞாயிறு கூட்டம் அள்ளும்.அருகிலேயே வ.உ.சி.பார்க் இருப்பதால் எப்பவும் ரஷ் ஆக இருக்கும்.புரோட்டா விலை 10 மற்றும் பெப்பர் சிக்கன் விலை 110.
குருமாவுக்கு பதில் இன்னும் நிறைய வெரைட்டி இருக்கிறது.அது எல்லாம் காசு...பணம் துட்டு மணி.மணி...குருமா மட்டும் புரோட்டாவிற்கு இலவசம்..சாரி விலையில்லா குருமா....
சாப்பிட்டு முடித்துவிட்டு வெளியேறி வளைச்சி வளைச்சி போட்டோ எடுத்து ஒரு மினி பதிவர் சந்திப்பினை அரங்கேற்றினோம்.அப்புறம் கைகுலுக்கலுடன் விடை பெற்றோம்.
பர்மா பாய் கடை என்பதால் என்னவோ அயல்நாட்டு பேரிச்சை பழம் வகைகள் கடை கவுண்டரில் கிடைக்கிறது.கடை இருக்கிற ஏரியா வ.உ.சி பார்க் ஸ்டேடியம்.இதுக்கு பக்கத்துலயே பூமாராங் ஐஸ்கிரீம் கடை இருக்கு..அங்க போனா சும்மா...ஜில்லுனு இருக்கும்.


நேசங்களுடன்
ஜீவானந்தம்




இன்னும் கொஞ்சம்...