Friday, July 31, 2015

கோவை மெஸ் - மங்களவிலாஸ், புதிய பேருந்து நிலையம் எதிரில், சேலம் - 4

                              திருப்பத்தூரில் இருந்து சேலம் வந்தபோது சாப்பிடலாம்னு வண்டியை ஓரம் கட்டின இடம் சேலம் பஸ் ஸ்டாண்ட்.பஸ் ஸ்டாண்டுக்கு எதிர்க்க ஒவ்வொரு சந்துலயும் ஏதாவது ஹோட்டல் இருக்கும்.ஒரு சில ஹோட்டல்களில் தான் நல்ல காரஞ் சாரமா இருக்கும்.ஏற்கனவே சேலம் கொஞ்சம் ஹாட்டான இடம்..அடிக்கிற வெயிலுக்கு நல்லா காரஞ்சாரமா சாப்பிட்டா மூக்குல தண்ணீ வரும்.....அப்படிப்பட்ட காரஞ்சாரமான ஹோட்டல் தான் இந்த மங்களவிலாஸ்.சேலத்துல மொத்தம் ஐந்து கிளைகள் வச்சிருக்காங்க... நாங்க போனது செல்வி மெஸ் இருக்கிற சந்தில்...செல்வி மெஸ்ஸில் ஏற்கனவே சாப்பிட்ட அனுபவம் இருப்பதாலும், மங்களவிலாஸில் டேஸ்ட் கொஞ்சம் கூடுதலாய் இருப்பதாலும் மீண்டும் மங்களவிலாஸ் கடைக்கே சென்றோம்....
ஒரே ஒரு ஒத்த போஸ்ட்..அதுல ஏகப்பட்ட போர்டு போட்ட மங்களவிலாஸ் ஹோட்டல் நம்மை வரவேற்கிறது.
                     உள்ளே நுழைந்ததும் சாம்பிராணி மணம் மணக்க மணக்க சாப்பிடும் ஹால் இருக்க, ஒரு ஒரமாய் டேபிளை தேர்ந்தெடுத்து அமர்ந்தோம்.சர்வர் வாழை இலை போடவும், பிரியாணியும், நாட்டுக்கோழி சுக்கா வருவலும், ஏற்கனவே இந்த ஹோட்டலில் மிக டேஸ்டாக குடல் ஃப்ரை சாப்பிட்ட அனுபவம் இருப்பதால் குடல் ஃப்ரையும் சொல்ல, ஒவ்வொன்றாய் வந்து சேர்ந்தது.
                        பிரியாணி எப்பவும் போலதான்.சீரகசம்பா அரிசியில் மட்டன் துண்டுகள் நன்றாக பஞ்சு போல மென்மையாக வெந்து இருக்க, சாப்பிடவும் சுவையாக இருந்தது.சுக்கா குழம்பினை கொஞ்சம் தொட்டு பிரியாணியோடு சாப்பிட செம டேஸ்ட் தான்..என்ன திண்டுக்கல்லில் தருவது போல் கத்திரிக்காய், மட்டன் எலும்பு துண்டுகள் போட்ட தாழ்ச்சா தருவதில்லை. வெறும் தயிர் வெங்காயம் மட்டும்தான்..ஆனால் சுக்கா குழம்போடு பிரட்டி சாப்பிட பிரியாணி ஏகத்திற்கும் இறங்குகிறது உள்ளே...
நாட்டுக்கோழி சுக்கா...நன்கு கெட்டியான மசாலா சேர்த்த குழம்புடன் சுக்கா செம டேஸ்ட்...பிரியாணிக்கு தொட்டுக்கொள்ள சூப்பரோ சூப்பர்....
அடுத்து குடல் ஃப்ரை...
                      சான்சே இல்லை....இப்படி ஒரு டேஸ்ட் இருக்குமா என்றால் அது இந்த குடல் ஃப்ரை டேஸ்ட்தான்...குடல் தோசைக்கல்லில் போட்டு நன்கு வறுத்து மசாலாவெல்லாம் சுண்டவைத்து பெப்பரும் காரமும் நன்கு கலந்து சூடாய் சாப்பிட ......செம டேஸ்ட்...கூட அந்த கறிவேப்பிலை... ஆஹா...செம பொருத்தம்...குடல் கறி என்றாலே கொஞ்சம் குடலின் ஒரு வித வாசம் வீசும்...அந்த மணம் கொஞ்சம் கூட இல்லை..நன்கு மசாலா சுண்ட வைத்தது சாப்பிட சாப்பிட ஏ..ஒன்...குடலின் ஒவ்வொரு துண்டும் செம டேஸ்ட்...நன்றாக இருக்கிறது குடல் ஃப்ரை....என்ன...அளவுதான் குறைவாக இருக்கிறது...ஆனால் டேஸ்ட்...செம...
                    இதெல்லாம் சாப்பிட்டு விட்டு கொஞ்சம் சாதம் வாங்கி ரசம் ஊற்றி சாப்பிட்டால் அமிர்தம் தான்...நன்கு ஹெவியாய் சாப்பிட்டு இருந்தால் நன்கு ஜீரணமாகும்.அதுவும் ரசம் செம டேஸ்ட்...எக்ஸ்ட்ரா ஒரு கிளாஸ் வாங்கி குடித்துவிட்டுதான் இலையை விட்டு.... இடத்தினை விட்டு..... எழுந்திரிச்சேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்...
                இந்த ஹோட்டலில் நாட்டுக்கோழி மட்டும் தான் உபயோகப்படுத்துகிறார்கள். பிராய்லர் கிடையாது.அதனால்தான் விலையும் சற்று கூடுதல்.
                    சாப்பாடு சாப்பிட்டால் விதவிதமான குழம்பு வகைகள் உண்டு..அவை அனைத்தும் ரொம்ப கெட்டியாய் மிக சுவையாய் இருக்கும்.அவ்வளவு டேஸ்ட்...

அந்தப்பக்கம் போனால் கண்டிப்பா சாப்பிட்டு பாருங்க...
குடல் ஃப்ரையும், அந்த ரசமும் சான்சே இல்ல.....

நேசங்களுடன்
ஜீவானந்தம்






இன்னும் கொஞ்சம்...

Tuesday, July 28, 2015

கண்ணீர் அஞ்சலி

மரணத்தை வென்றது யாருமில்லை...
அதற்கு நீயும் விலக்கில்லை....
பாரதத்தாயின் தவப்புதல்வனே.....
உனது ஆன்மா சாந்தியடையட்டும்......

ஆழ்ந்த இரங்கல்கள்.....
இன்னும் கொஞ்சம்...

Wednesday, July 22, 2015

கோவை மெஸ் - சேட் டீக்கடை, மூணு ரோடு,சூரமங்கலம் மெயின்ரோடு, சேலம்.

                            சேலம் மூணு ரோடு..கோவையில் இருந்து வருகிற பேருந்துகள் இந்த வழியாகத்தான் பஸ் ஸ்டாண்ட்க்குச் செல்லும்.அப்படித்தான் நானும் வந்து இறங்கினேன் இங்கு.இறங்கிய நேரம் என்னவோ மாலை நேரம்.கோவையில் இருந்து மூன்று மணி நேரம் பேருந்தில் அமர்ந்து வந்தது ஒரு மாதிரியாயிருக்க ஆதலால் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொள்ள பக்கத்திலிருந்த டீக்கடைக்கு சென்றேன்.ரொம்ப சாதாரண டீக்கடை.பெரிதாக பேக்கரி போன்று ஆடம்பரமில்லாத கடை. கடைக்குள்ளும் நுழையவில்லை.ரோட்டில் இருந்தபடியே டீ ஆர்டர் பண்ணினேன்.நமக்கு தேவை டீ தானே..கடை எப்படி இருந்தால் என்ன  என்கிற மனோ பாவத்துடன் ஒரு டீ சொன்னேன்.மாஸ்டரும் டீ தயாரிப்பதில் மும்முரமாய் இருக்க நானோ வெளியே ரோட்டை வேடிக்கைப்பார்த்தபடி இருந்தபோது, சாப்....சாய் ரெடி என குரல் கேட்க,  அட... சேட்டுக்கடை !.. என்றபடியே வாங்கி டீ சூடான டீயை பருக,  குடித்துப்பார்த்ததில் டீ செம டேஸ்ட்.ஏலக்காய் மணம் தூக்க டீயும் நல்ல திக்காக இருக்க செம டேஸ்ட்.ஒரு சாதாரண டீ தான்..இதை இவ்வளவு டேஸ்டாக போட முடியுமா என்று ஆச்சர்யப்பட்டு கடைக்குள் நுழைய, கடையின் டேபிளில் ஏகப்பட்ட வெரைட்டியான பலகாரங்கள்...

                                              எல்லாம் அவங்க ஊர் பலகாரம் போல.அத்தனையும் அந்த இடத்திலேயே செய்கிறார்கள்.கொழுக்கட்டை வடிவில் ஒரு இனிப்பு பலகாரம், அப்பளம் போன்று ஒரு மொறு மொறு கார பலகாரம், ரவா லட்டுகளில் இரண்டு வகை , மிக்சர் என தட்டுக்களில் பரப்பி வைத்து இருந்தனர்.டீயும் செம டேஸ்டாக இருக்க, சூடாய் குடித்துக்கொண்டே அப்பளம் ஒன்றை எடுத்துக்கொறிக்க, அதுவும் செம டேஸ்ட்.கொஞ்சம் கொஞ்சமாய் அப்பளம் கொறித்து, ஒவ்வொரு மிடக்காய் டீயும் கலந்து சாப்பிட ஆஹா...செம டேஸ்ட்....





                         டீ சாப்பிட்டு முடித்தவுடன் அந்த கொழுக்கட்டை இனிப்பு பலகாரத்தினை சாப்பிட்டு பார்க்க, உள்ளே தேங்காய் சேர்த்து சுவையாக செய்திருந்தனர்.நன்றாக இருக்கிறது சாப்பிட.டீயும் பலகாரமும் சாப்பிட்டுவிட்டு, அடுத்த தெருவில் இருக்கும் நாங்கள் பணி செய்து கொண்டிருக்கும் அலுவலகத்திற்கு சென்று அங்குள்ளவர்களிடம் இந்த கடையைப்பத்தி சொன்ன போது, அவர்களும் நாங்களும் அங்கு தான் டீ குடித்துக்கொண்டிருக்கிறோம் என்று ஒரே கோரஸாய் சொன்னார்கள்..ஒரு வாரம் அங்கு நம் ஆட்கள் வேலை செய்தபோது அந்த கடையில் தான் காலை மாலை இருவேளையும் டீ சாப்பிட்டுக்கொண்டிருந்தனர் என்பது எக்ஸ்ட்ரா தகவல்..
டீ அவ்ளோ அருமை.ஏலக்காய் மணம் வீச மிடக்கு மிடக்காய் குடிக்க ஆஹா...அருமை...
இந்தக்கடைக்கு போர்டெல்லாம் இல்லை.கடை பேரு என்னவென்று எழுதட்டும் என கேட்க, சேட்டான்கடை என்று எழுதுங்கள் என்று சொன்னார் கடைக்காரர்.போட்டோவில் இருப்பவர்கள் தான் டீக்கடைக்கு சொந்தக்காரர்கள்...
மூணுரோட்டில் இருக்கிறது இந்த போர்டில்லாத சேட்டான் கடை...(கடைக்கு பக்கத்திலேயே டாஸ்மாக் வேற இருக்கு...அங்க கூட போயிருக்கலாம் தான்..ஆனா வேலை முக்கியமாச்சே.....வேலை முடித்துவிட்டு திரும்பி வரும் போது அந்த டாஸ்மாக்கில் தான் நம்ம பகார்டி வாங்கினேன் என்பது வேற விசயம் )

நேசங்களுடன் 
ஜீவானந்தம்



இன்னும் கொஞ்சம்...

Thursday, July 2, 2015

கோவை மெஸ் - திருமூர்த்தி டீ ஸ்டால், இட்லி கடை, அவினாசி

                கோவையில் இருந்து சேலம் சென்று கொண்டிருந்த ஒரு காலைப்பொழுதில், என்னுடன் பயணித்த நண்பர் ஒருவருடன் பொதுவாய் அரசியல் முதல் சாப்பாடு வரை அலசியபடி வந்து கொண்டிருக்க லேசாய்ப்பசி எடுக்க ஆரம்பித்தது.அப்போது தான் அவர் சொன்னார், அவினாசியில் ஒரு ஹோட்டல் இருக்கிறது ஆனால் சைவம் மட்டும் தான்...இட்லி, தோசை இது மட்டும் தான் கிடைக்கும்.இட்லி குருமா அவ்வளவு டேஸ்டாக இருக்கும் என சொல்ல, காலை நேர உணவை இங்கு முடித்து கொள்ளலாம் என பைபாஸில் வந்து கொண்டு இருந்த நாங்கள் அவினாசிக்கு வண்டியை ஓரங்கட்ட ஆரம்பித்தோம்.
                    அவினாசியில் இன்னும் பரபரப்படையாத காலைப்பொழுது..மணி எட்டை நெருங்கிக்கொண்டிருந்தது.பி.எஸ் என் எல் ஆபிஸ் எதிரில் வண்டியை நிறுத்திவிட்டு ரோட்டை கடந்து அந்த ஹோட்டலுக்கு வந்தோம். ஹோட்டல் என்கிற அமைப்பே இல்லை.ஒரு டீக்கடை தான்.ஓடு போட்ட சின்ன வீடு...முன்புறம் டீ பாய்லர்...ஆனால் அந்த ஹோட்டல் முன்பு வித விதமான கார்களின் வரிசை.

ஆச்சர்யமாகி கடைக்குள் பார்த்தால் உள்ளே நான்கு பெஞ்ச் போடப்பட்டிருக்கிறது. காலையிலிலேயே ஒரு குடும்பம் அமர்ந்திருந்தது. இரண்டு சீட் மட்டும் காலியாக இருக்க, நாங்கள் அமர்ந்து கொண்டோம்...ஒரு பத்து நிமிட்த்திற்குள்....வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க, கடையின் ஓனர் இலை அனைவருக்கும் வைத்தார்.பின் தண்ணீர்.பின் ஆளுக்கு இரண்டிரண்டு இட்லி.பின் சட்னி , சாம்பார்..அதாவது குருமா...


ஒரு பந்தியில் எப்படி பரிமாறுவார்களோ அப்படி அனைவருக்கும் வரிசையாய் பரிமாறிக்கொண்டிருந்தார்..
இட்லிக்கு அந்த குருமா செம....அரைத்துவிட்ட தேங்காயுடன் சோம்பு பட்டை வாசத்துடன் மிக மிக செம டேஸ்ட் உடன்...இட்லிக்கு ஏதுவாக அந்த குருமா...இட்லியும் சாப்டாக இருக்க, இரண்டும் ஒரு சில நொடிகளில் இலையை விட்டு காணாமல் போய்விட்டிருந்தது.அடுத்த சில நிமிடங்களில் ஆவி பறக்க தோசை ஒவ்வொன்றாய் இலையில் வைத்து விட்டு பின் சட்னி சாம்பார் என வரிசைகட்டி வர, ஒருத்தரே தான் அத்தனையும் பரிமாறுகிறார்.
தோசைக்கும் அதே குருமா தான்...இரண்டும் செம காம்பினேசன்.சாப்பிட்டுக் கொண்டிருக்க அதற்குள் வாடிக்கையாளர்கள் கூட்டம் மொய்க்கிறது.காத்திருக்க ஆரம்பிக்கின்றனர்.முதல் பந்தி முடிந்தவுடன் அடுத்த பந்தி ஆரம்பிக்கிறது.சில நிமிடங்களில் மீண்டும் நிறைகிறது அந்த நான்கு பென்ச்கள்.மீண்டும் அதே வரிசையாய் பரிமாறப்பட்டு சாப்பிட்டுக்கொண்டிருக்கின்றனர்.


நாங்கள் இரண்டு இட்லி இரண்டு தோசை சாப்பிட்டு விட்டு பொறுமையாய் வெளியேறினோம்.நல்ல சுவை, சுடச்சுட தோசை...சூடான குருமா..நன்றாக இருக்கிறது.
குருமா சாப்பிட்டவுடன் உடனே சொன்னேன்..இந்த மாதிரி தான் என் அம்மா குருமா வைப்பார்கள் என்று....
கடையை விட்டு வெளியேற வரிசையாய் நிறைய கார்கள் வருகின்றன அவர் கடைக்கு ஒரு கெளரவத்தினை அளிக்கின்றன.

நண்பர் கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களாக அங்கு சாப்பிட்டு வருகிறாராம்.டேஸ்ட் அப்படியே தான் இருக்கிறது எனவும், ஒரு சில முகூர்த்த தினங்களில் அரைமணி நேரம் கூட காத்திருந்து சாப்பிட்டுவிட்டு வருவாராம்.கார்களின் வரிசை நிறுத்தக்கூட இடம் இருக்காதாம்...

அவினாசி போனா சாப்பிட்டு பாருங்க...செம டேஸ்ட்...

பி எஸ் என் எல் ஆபிஸ் அருகில் இருக்கிறது.

நேசங்களுடன்
ஜீவானந்தம்
இன்னும் கொஞ்சம்...

Monday, June 15, 2015

கோவை மெஸ் - கறி ஃபேக்டரி, (CURRY FACTORY) சரவணம்பட்டி, கோவை

           கறி ஃபேக்டரி...பேரே வித்தியாசமா இருக்குல்ல....அப்படித்தான் நம்ம ஐடி நண்பர் இந்த ஹோட்டலைப்பத்தி சொல்லும் போது நானும் வித்தியாசமா கேட்டேன்...சரவணம்பட்டி சுத்தி நிறைய ஐடி கம்பெனிகள் இருக்கிறதால் மாதத்திற்கு ஒரு ஹோட்டல் திறக்கறாங்க....அப்புறம் காணாம போயிடறாங்க...இந்த ஹோட்டல் புதுசா திறந்திருப்பதால் செம கூட்டம் அள்ளுது...அதிலும் அம்மணிகள் கூட்டம் செம....சொல்லவே வேணாம்....ஐடி அம்மணிகள் பத்தி....அம்புட்டு அழகா இருக்காங்க....அப்புறம் ஒரு சில அம்மணிகளைப் பார்த்தா சீக்கு வந்த கோழிகள் மாதிரி இருக்காங்க(டயட்டாம்..)...ஆனா அசால்டா கோழியோ/மட்டனோ வாயில் வச்சி கொத்து புரோட்டா போடறாங்க....சரி..நம்ம கடைக்கு வருவோம்...

             சரவணம்பட்டியில் இருந்து துடியலூர் செல்லும் சாலையில் KGISL தாண்டி வலது புறம் இருக்கிறது.சீமை ஓடு போட்ட ஒரு ஹோட்டல்.. கறி ஃபேக்டரி....கார்களும், டூவீலர்களும் முன்னாடி காத்திருக்கின்றன உள்ளே போன ஓனர்களுக்காக.... உள்ளே சென்றால் நம்ம கடையில் இருக்கிற மாதிரி சிமெண்ட் ஹாலோபிளாக்ல கட்டி கடப்பா கல்லு பென்ச், அதே மாதிரி சேர்...(நம்ம கடையை ஞாபகப்படுத்துகிறது)....நன்கு காற்றோட்டமாக இருக்கிறது.டேபிள்கள் அனைத்தும் நிரம்பி வழிகிறது பலவித மெனுக்களால்...அதைச்சுற்றி குரூப் குருப்பாய் வாடிக்கையாளர்கள்... 
          பேங்கில் டோக்கன் நம்பர் சொல்வது போல அழகிய பெண்ணின் ஆட்டோமேடிக் குரல் ஒலிக்கிறது அவ்வப்போது... கவுண்ட்ர் போன்று இருக்கிறது அங்கு வரிசையாய் நின்று ஆர்டர் சொல்கிறார்கள். பணம் கட்டி டோக்கன் வாங்கிகொண்டு காத்திருக்கின்றனர். மெனு ரெடியானதும் அழைக்கிறது ஆட்டோமேடிக் வாய்ஸ்...பெற்றுக்கொண்டு டேபிளில் அமர வேண்டியதுதான். எல்லாம் செல்ப் சர்வீஸ்.
              மெனு ஒரு பெரிய போர்டில் இருக்கிறது.ஒரு சில குறிப்பிட வகைகள் மட்டுமே..ஆனால் அனைத்தும் இருக்கிறது.சைவம் கூட இருக்கிறது.போர்டு படித்துவிட்டு மட்டன் பிரியாணி இருக்கிற காம்போவும், சில்லி சிக்கன், குடல் பொரியல் ஆர்டர் கொடுத்துவிட்டு டோக்கன் வாங்கிக்கொண்டு ஒரு டேபிளில் அமர ஐந்து நிமிடத்திற்குள் நமக்கான டோக்கன் அழைப்பு வருகிறது..அது வரைக்கும் நமக்கு என்ன வேலை..சுத்தி முத்தி பார்க்கவேண்டியது தான்....
              ஒரு பெரிய தட்டில் பிரியாணி ஒரு கப், சாதம், குழம்பு, ஆனியன் பச்சடி, கெட்டித்தயிர் ஒரு கப் என ஒரு காம்போவாக தருகிறார்கள்..பிரியாணி சாப்பிடலாம்..ஆனால் பிரியாணிக் குண்டான மணம் கொஞ்சம் குறைவுதான்.மட்டன் துண்டுகள் நன்றாக வெந்து இருக்கின்றன.சிக்கன் குழம்பினை பிரியாணிக்கு தொட்டு தொட்டு சாப்பிட நன்றாக இருக்கிறது.தாழ்ச்சாவுக்கு பதிலாய் சிக்கன் குழம்பு போல...
குடல் பொரியல்....ஏ.ஒன்..தேங்காய் துருவல் எல்லாம் போட்டு காய்கறி பொரியல் மாதிரி இருக்கிறது.குடல் அப்படியே பளிச்சென்று இருக்கிறது. நன்றாக இருக்கிறது.செம டேஸ்ட்....கொஞ்சம் இரத்தமும் கூட கலந்து செய்திருக்கிறார்கள்...வதக்கிய சின்னவெங்காயத்துடன் ரத்தமும் குடலும் சேர்ந்து ஒரு சுவையை தருகின்றது.இரண்டும் சேந்து சாப்பிட நன்றாக இருக்கிறது.
         

சிக்கன் சிக்ஸ்டி ஃபைவ்....இது எப்பவும் போல....
                      அடுத்துதான் முக்கியம்...கெட்டித்தயிர்....செம கெட்டி...விரலை விட்டு வழித்து கொட்ட வேண்டும்....அவ்ளோ கெட்டி...கொஞ்சம் கூட புளிப்பு இல்லை..சாதத்துடன் பிசைந்து சாப்பிட ஆஹா...அருமை....விரல் இடுக்குகளில் எல்லாம் கெட்டித்தயிர்....ஒவ்வொரு விரலாய் சப்பி சாப்பிட செம டேஸ்ட்....ரசமும் குடிப்பதற்கு நன்றாக இருக்கிறது.
                  சாப்பிட்டு பின் தட்டினை அதற்குண்டான இடத்தில் போட்டுவிட்டு கை கழுவிவிட்டு திருப்தியாய் வெளியேறினோம்.பில் கோவைக்குண்டான ரேட் தான்...

      கறி ஃபேக்டரி...அந்தப்பக்கம் போனால் கொஞ்சம் சாப்பிட்டு விட்டு வாருங்கள்.....ஐடி அம்மணிகள் இருக்கிற ஏரியா வேற...செமயா இருக்கும்...

நேசங்களுடன்
ஜீவானந்தம்


இன்னும் கொஞ்சம்...

Sunday, June 7, 2015

கோவை மெஸ் - ஸ்ரீராம்தேவ் ரெஸ்டாரண்ட், பஞ்சாபி ஹோட்டல், நீலாம்பூர், அவினாசி ரோடு, கோவை

           ஒரு நாள் நம்ம கம்பெனி விசயமா தென்னம்பாளையம் வரைக்கும் போய் இருந்தேன்.நீலாம்பூரில் இருந்து தென்னம்பாளையம் வரைக்கும் எங்க சாப்பிடலாம்னு அவினாசி பைபாஸ் ரோட்டில் இருபுறமும் பார்த்துட்டே போயிட்டு இருந்தேன்.ஒரு சில சின்ன சின்ன ஹோட்டல்கள் தான் இருந்தது.நம்ம வண்டி நிறுத்துற மாதிரி ஒரு ஹோட்டலும் காணோம்.இன்னும் கொஞ்ச தூரம் போய்ட்டு அப்படியே யூ டர்ன் போட்டுட்டு திரும்பி சிட்டிக்குள்ள வந்திடலாம்னு நினைச்சிட்டு இருக்கும் போது ஒரு பஞ்சாபி ஹோட்டல் பளிச்சின்னு கண்ணுக்குத் தெரிய ஆரம்பித்தது.
அதுவும் எதிர்ப்பக்கத்துல...வண்டியை திருப்பிட்டு வந்தா லாரிப்பேட்டையே அங்க தான் இருக்கு....தாராளாமா வண்டியை நிறுத்திட்டு உள்ளே நுழைந்தால், பஞ்சாபி ஹோட்டலுக்கே உண்டான கயிற்றுக்கட்டில்...நல்ல காற்றோட்டமா இருக்கிற மாதிரி ஷெட் இருக்கிறது. கை கழுவி விட்டு, கட்டிலில் உட்கார்ந்து மெனு பார்க்க எல்லாம் ஹிந்தியில் தான்...சப் டைட்டிலா ஆங்கிலத்தில்....(தமிழ் நாட்டுல இருந்துகிட்டு தமிழ்ல மெனு இல்லையா..அய்யகோ.......)
             வட இந்திய உணவுகள் என்றால் ரொட்டி, நான், சப்ஜி ஆலு, சென்னா, கோபி, தால், பனீர் இப்படித்தான் இருக்கும்..அதுமட்டுமல்ல இந்த ஹோட்டலில் சைவம் வேற....சரி வந்துட்டோம்...சாப்பிட்டுப் பார்ப்போம்னு
ரோட்டி, ஆலு மசாலா, டால் இதெல்லாம் சொன்னோம்..அதுக்கு முன்னாடி பஞ்சாபி லஸ்ஸி குடிச்சிப்பார்க்கலாம்னு ஆர்டர் பண்ணினோம்.நல்ல கெட்டித்தயிரில் ஏலக்காய் சர்க்கரைலாம் போட்டு செம சில்லுனு லஸ்ஸி...

              செம டேஸ்ட்...என்ன ஒரு குறை..நம்ம டாஸ்மாக் பிளாஸ்டிக் டம்ளர்ல கொடுத்திட்டான்...(பாவிப்பய.....அதை வேற ஞாபகப்படுத்திட்டான்...)
                        
          ஒரு சின்ன தட்டுல வெங்காயம் உப்பு, பச்சை மிளகாய் வைத்துவிட, ரோட்டி சாப்பிட்டுக்கொண்டே ஒரு கடி வெங்காயம், ஒரு கடி பச்சைமிளகாய் சாப்பிட சுர்னு இருக்க டேஸ்ட் செம....என்ன காம்பினேசனு தெரியல...ஆனா சும்மா செம.....ரோட்டி எப்பவும் போல சாப்ட்...வட இந்தியர்கள் சுடும் சப்பாத்தி, ரோட்டி நம்மாளுகளுக்கு செய்ய வராது....கூடவே டால்..பருப்பு செம டேஸ்ட்....அப்புறம் ஆலுகோபி மசாலா...வெறும் உருளைக்கிழங்கு தான்..அதை இம்புட்டு கெட்டியா டேஸ்டா செய்யமுடியுமா...அவ்ளோ டேஸ்ட்...நல்ல உப்பும் உரைப்பும், காரமும் ரோட்டியோட சேர்ந்து பின்னி பெடலெடுக்குது....
                      

ஒரு சின்ன குண்டால வழிய வழிய ஆலுகோபி மசாலா.....இந்த ஆலு மசாலாவுக்கே நிறைய ரோட்டி சாப்பிட வேண்டியதாகிப்போச்சு.....
அதுக்கப்புறம் சீரா ரைஸ்....சீரகம் போட்டு தாளிச்சு சாப்பாடு தர.....அதுவும் ஆலு மசாலாவுக்கு போட்டி போட்டு இறங்குது....
        எல்லாம் சாப்பிட்டு முடிச்சு கட்டிலில் இருந்து இறங்க கூட முடியல...செம ஹெவி....எவ்ளோ சாப்பிடறோம்னு தெரியல...அப்படி சாப்பிட்டு விட்டு இருக்கிறோம்...

கை கழுவி விட்டு அவங்ககிட்ட கேட்ட ஒரு கேள்வி...
ஜி.....இந்த கட்டில்லயே தூங்கிடட்டுமா....?

உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டல்லவா....
பில் ஹிந்தியில் தான்...ஒவ்வொன்னா கேட்டு தெரிஞ்சிக்கிட வேண்டியதாகிவிட்டது....


கோவை அவினாசி பைபாஸ் ரோட்டில் சாந்தி கியர்ஸ் பக்கத்தில் நீலாம்பூரில் இருக்கிறது.
அந்தப்பக்கம் வண்டியில் போனா சாப்பிட்டு பாருங்க..கயிற்றுக்கட்டில் அனுபவம் ஏகாந்த உணர்வைத்தரும்.....

நேசங்களுடன்
ஜீவானந்தம்



இன்னும் கொஞ்சம்...

Thursday, June 4, 2015

கோவை மெஸ் – அருள் வாத்துகடை & ஹோட்டல், வேலாயுதம்பாளையம், கரூர்

வாத்து...
     சிறுவயதில் இருந்தே வாத்துக்கும் நமக்கும் நிறைய பொருத்தம் இருக்கிறது.எனது பாட்டன் முப்பாட்டன் காலத்தில் வாத்து வளர்ப்பதுதான் குலத்தொழிலாக இருந்திருக்கிறது.எனது தந்தையும் சிறு வயதில் இருந்து அவர் ஆசிரியப்பணிக்கு சென்று சேர்வது வரைக்கும் இந்த தொழிலில் இருந்திருக்கிறார்.குலத்தொழில் அல்லவா....ஆனால் இப்போது இல்லை. எங்கள் ஊர்ப்பகுதியில் விவசாயம் செழித்து இருப்பதால் வாத்துக்கள் வளர்ப்பதும் அதிகமாக இருக்கும்.நீர் நிலைகள் வேறு இருக்கிற ஊர்.காவிரி கரையோரத்தில் வாழ்கின்ற மக்கள் மட்டும் அதுவும் குறிப்பிட்ட ஒரு இனத்தவர் மட்டும் இந்த வாத்து வளர்க்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
               தற்போது எங்கள் ஊரில் ஒரே ஒரு குடும்பம் மட்டும் வாத்து வளர்க்கும் தொழிலில் இன்னமும் ஈடுபட்டிருக்கிறது. ஊருக்குள் வந்து வாத்துக்காரங்க வீடு எது என்று கேட்டால் உடனே சொல்லி விடுவார்கள்....கிராமங்களில் இப்படித்தான் செய்கின்ற தொழிலை வைத்துத்தான் முகவரியே கேட்பார்கள்...ஊரில் நெல் அறுவடை முடிந்த வயற்காட்டில் தண்ணீர் பாய்ச்சப்பட்டு இருக்கும் அதில் வாத்துக்களை மேயவிடுவர்.வாத்துக்களுக்கென்று பண்ணை எதுவும் இருக்காது. ஒவ்வொரு வயற்காடாக, ஆறு குளம் குட்டைகளில் மேய விடுவர்.நன்கு மேய்ந்தவுடன் பட்டியில் போட்டு அடைத்து விடுவர்...பட்டி என்று பார்த்தால் கெட்டியான நாணல் புல்லில் வரிசையாக கட்டி ஒரு தடுப்பு போல மூன்றடி உயரத்திற்கு நட்டு வைத்து அதில் வாத்துக்களை அடைத்து விடுவார்கள்..
          வாத்துக்கள் மேயும் விதம் பார்க்க மிக பரவசமாக இருக்கும்.நீருக்குள் மூழ்கி அவ்வப்போது தலையை வெளியே நீட்டியும், உள்ளே முழுகியும், தலையைச் சிலுப்பிக்கொண்டு, அவ்வப்போது மண்ணைக்கிளறி புழு பூச்சிகளை கொத்தி திங்கிற காட்சி நன்றாக இருக்கும். நத்தை, தவளை முதல் சிறு பாம்புகள் வரை கொத்தித்திங்கும்.வாத்துக்கள் நடக்கும் விதம் பார்க்க சுவாராஸ்யமாக இருக்கும்.தனியாய் பிரிந்து செல்லாது...கூட்டமாகத்தான் மேயும், இரண்டு இரண்டு வாத்துகளாக வரிசை கட்டி விட்டால் அப்படியே செல்லும் நீண்ட தூரத்துக்கு....அதன் நடக்கும் விதம் பார்த்தால் லேசாய் இடுப்பை ஆட்டி ஆட்டி செல்லும்.ஓடும் போது இன்னும் வேகமாக ஆட்டிச்செல்லும்.குவாக்...குவாக்...குவாக்...என கத்தும் விதமும் கேட்க பரவசமூட்டும்...
                      சிறுவயதில் வயற்காட்டில் மேய்கின்ற வாத்துக்கள் மேயும் போதே முட்டையை போட்டுவிடும்..அதை எடுத்து வந்து பொரியல் செய்தும், வேக வைத்தும் சாப்பிடுவோம்.வாத்துமுட்டை உடலுக்கு நல்லது.சளிக்கு நல்ல மருந்து.என்ன...கொஞ்சம் கவிச்சி அதிகமாக அடிக்கும்.வெறும் புழு பூச்சிகளையே தின்பதால் முட்டையில் அந்த அளவுக்கு கவிச்சி அடிக்கும்.ஆனால் உடம்புக்கு நல்லது.இரண்டு கோழி முட்டைகளின் அளவில் வாத்துமுட்டை ஒன்று இருக்கும் அவ்ளோ பெரிதாக இருக்கும்.பெரும்பாலும் இரவு நேரங்களில் தான் முட்டையிடும்.ஆனால் அடை காக்காது.

              வாத்துக்கறி....வெறும் எலும்பும் சதையுமாகத்தான் இருக்கும்.ஆனால் டேஸ்ட்டில் இதை அடித்துக்கொள்ள முடியாது.நன்கு வறுக்கப்பட்ட வாத்துக்கறி செம டேஸ்டாக இருக்கும்.இட்லிக்கு செம காம்பினேசன்.இட்லியை பிய்த்து கொஞ்சம் குழம்பில் தொட்டு சாப்பிட்டால் தேவாமிர்தம் தான்...
                   கரூர் மாவட்டம், திருச்சி மாவட்டத்தில் பாய்கின்ற காவிரி கரையோரம் உள்ள இடங்களில் வாத்து விற்பனை அமோகமாக நடக்கிறது.அதில் முக்கிய இடம் வேலாயுதம் பாளையம்.கரூரில் இருந்து வேலூர் செல்லும் வழியில் இருக்கிறது இந்த ஊர்.ஆற்றங்கரை ஓரமாக இருக்கிற ஊர் இது.வாய்க்காலும் ஆறும் பாய்ந்து வயல்வெளிகளை பாசனப் பகுதியாக மாற்றிக் கொண்டிருக்கிறது இன்னமும்.அதனால் என்னவோ இங்கு வாத்துக்கறி பேமஸ்...பைபாஸ் ரோட்டு ஓரங்களில் இருபுறமும் நிறைய கடைகள் இருக்கின்றன.அங்கு இருக்கிற அத்தனை கடைகளிலும் சாப்பிட்டு இருக்கின்றேன்.ஆரம்பத்தில் கதிர்வேலு கடை ருசியில் நன்றாக இருந்தது.இப்போது சரியில்லை.வெறும் மல்லித்தூள் போட்டு கெட்டியாய் வைத்து வாத்துக் குழம்பிற்கு உண்டான டேஸ்ட்டை கெடுத்து விட்டனர்..
               இப்போது அதிகம் விரும்பி சாப்பிடும் கடையாய் மாறியிருக்கிறது அருள் வாத்துக்கறி உணவகம்.
                 கரூரில் இருந்து நாமக்கல் செல்லும் போதெல்லாம் இங்கு இரண்டு இட்லியும் அரைபிளேட் வாத்துக்கறியும் சாப்பிட்டு விட்டு செல்வது வாடிக்கையாய் இருக்கிறது.பஞ்சு போன்ற இட்லியை பிய்த்து கெட்டியான வறுவலில் தோய்த்து சாப்பிட செம டேஸ்ட்....
கறித்துண்டுகளை வாயில் போட்டு எலும்போடு மென்று சாறையும் சதையும் மட்டும் சாப்பிட என்னவொரு டேஸ்ட்....இந்த டேஸ்ட் அப்படியே இன்னும் ஆளை அமுக்கும்...இன்னும் இரண்டு இட்லி ஆட்டோமேட்டிக்காய் உள்ளே இறங்கும்...சாப்பிட சாப்பிட சொர்க்கமே பக்கத்தில் வந்தது போல் இருக்கும்..அவ்வளவு சுவை வாத்துக்கறியுடன் கூடிய இட்லியில்....
அது போலவே ஆம்லெட்...செமயாக இருக்கும்.....
அந்தப்பக்கம் வந்தீங்கன்னா கண்டிப்பா சாப்பிட்டு பாருங்க....செமயா இருக்கும்....
              பைபாஸ் ரோட்டில் இந்தப்பக்கம் கதிர்வேலு கடை...அந்தப்பக்கம் அருள் கடை...எல்லாம் சொந்தக்காரங்க தான்......

நம்ம குறிப்பு :
ஊருக்கு வந்தால் இங்கு நண்பர்களோடு மற்றும் நம்ம சொந்தங்களோடு வரும்போது ஒரு கிலோ வாத்தும் பத்து பதினைந்து இட்லியும் பார்சல் வாங்கிக்கொண்டு (கூடவே பகார்டியையும்) காவிரி ஆற்றுக்கு சென்று விடுவோம்..நடு ஆற்றில் உட்கார்ந்து கொண்டு சாப்பிட ஆஹா....என்ன சுவை....சாப்பிட்டு முடித்தவுடன் ஆற்றில் ஒரு குளியலைப்போட்டு விட்டு வர....

” சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா.....

நேசங்களுடன்
ஜீவானந்தம்





இன்னும் கொஞ்சம்...